
Compiled by London swaminathan
Date: 28 FEBRUARY 2017
Time uploaded in London:- 9-31 am
Post No. 3677
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
March 11 மாசிமகம்; 13 , ஹோலி; 14 காரடையான் நோன்பு ; 29 யுகாதிTelugu New Year; 8-சர்வதேச மகளிர் தினம்;
27—அமாவாசை New Moon Day
12 – பவுர்ணமி Full Moon Day
சுபதினங்கள் Auspicious Days— 9, 15, 23, 26.
மார்ச் ((மாசி/பங்குனி)) 2017 காலண்டர்

மார்ச் 1 புதன் கிழமை
ஈஸ்வரன், வெளியிலும், வெகு தூரத்திலும் இருப்பதாகத் தோன்றும் வரையில் அஞ்ஞானம் இருக்கும்; ஆனால் உள்ளே ஈசுவரன் இருப்பதாக உணர்ந்துகொண்டதும், உண்மையான ஞானம் உண்டாகிறது.
xxx
மார்ச் 2 வியாழக்கிழமை
அம்மா எனக்குப் பசிக்கும்போது என்னை எழுப்பு என்று குழந்தை சொல்லிற்று; அதற்கு குழந்தாய்! உன் பசியே உன்னை எழுப்பிவிடும் என்று அதன் தாய் சொன்னாள்.
xxx
மார்ச் 3 வெள்ளிக்கிழமை
இந்தக் கலியுகத்தில் ஈசுவரனின் கிருபையைப் பெறுவதற்கு மூன்று நாள் தீவிரமான பக்தி செய்தால் போதுமானது.
xxx
மார்ச் 4 சனிக் கிழமை
பண ஆசை பிடித்து அலையும் லோபியைப் போல, உன் மனம் ஈசுவரன் மீது ஆசை கொண்டு அலையட்டும்.
xxx
மார்ச் 5 ஞாயிற்றுக் கிழமை
தண்ணீரில் மூழ்கிவிட்டவன், மூச்சுவிடுவதற்கு மிகவும் தவிப்பதைப்போல, ஈசுவரனைக் காண்பதற்கு முன்னால் ஒருவனுடைய மனம் அதற்காக மிகவும் ஆசைகொள்ள வேண்டும்.
xxx

மார்ச் 6 திங்கட் கிழமை
கடவுளை அடைய எத்தகைய அன்பு வேண்டும் என்று உனக்குத் தெரியுமா? தலையில் அடிபட்ட நாய் கலக்கமுற்று ஓடுவதைப் போல ஒருவன் சஞ்சலப்பட்டு அலையவேண்டும்.
xxx
மார்ச் 7 செவ்வாய்க் கிழமை
பித்தளைப் பாத்திரத்தைத் தினமும் தேய்க்காவிட்டால் களிம்பு ஏறிவிடும். அது போல தினமும் கடவுள் வழிபாடு செய்யாத மனிதனுடைய மனது மாசு அடையும்- என்று தோதாபுரி சொல்வதுண்டு. அதே பாத்திரம் , தங்கப் பாத்திரம் ஆனால் தேய்க்கத் தேவை இல்லை.
xxx
மார்ச் 8 புதன் கிழமை
பாத்திரத்தின் அடியில் நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் வரையில், அதிலுள்ள பால், கொதித்துப் பொங்கும். நெருப்பை அணைத்துவிட்டால் பொங்குதல் நின்றுவிடும். அதுபோல சாதனா மார்கத்தில் இருக்கும் வரையில்தான் புதிய ஆத்மார்த்தியின் மனம் மகிழ்ச்சியில் பொங்கும்.
xxx
மார்ச் 9 வியாழக்கிழமை
பெரிய மீனைப் பிடிக்க வேண்டுமானால், தூண்டிலில் இரையைக் கோத்து, தண்ணீரில் போட்டுவிட்டு, அவ்விரையை மீன் கவ்வும் வரை பொறுமையாகக் காத்திருப்பான். அதுபோல பொறுமையுடன் சாதன வழிகளைப் பின்பற்றும் பக்தன் கடைசியில் கடவுளைக் காண்பது நிச்சயம்.
xxx
மார்ச் 10 வெள்ளிக்கிழமை
நீந்தக் கற்றுக் கொள்பவன், கொஞ்ச நாட்களுக்கு நீச்சல் பயிற்சி செய்ய வேண்டும். ஒரே நாள் நீச்சல் கற்றுக்கொண்டவுடன், கடலில் நீந்துவதற்கு முயற்சி செய்யக்கூடாது. அது போல, பிரம்மமாகிய கடலில் நீந்தப் பிரியப்பாட்டால், பல தடவை பயிற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் அங்கு நீந்தக்கூடிய சக்தி உனக்கு உண்டாகும்.
xxx

மார்ச் 11 சனிக் கிழமை
வெருளுகிற குதிரைக்குக் கண்மூடி போடாவிட்டால் அது நேரான வழியில் போகாது. அது போல, விவேக, வைராக்கியங்களாற்கிற தடைகளால் மறைக்கப்பட்டால் பக்தனுடைய மனம் தீய வழியில் செல்லாது.
xxx
மார்ச் 12 ஞாயிற்றுக் கிழமை
வண்ணத்துப்புழு (பட்டுப்புழு), தான் கட்டும் கூட்டுக்குள்ளேயே சிக்கிக் கொள்கிறது. ஆனால் இறக்கை முளைத்தவுடன் அந்தக் கூட்டை உடைத்துக் கொண்டு, பட்டுப்பூச்சியாக ஆனந்தம் அனுபவிக்கிறது. அதுபோல உலகப் பற்றில் உழலும் ஆன்மாவானது, அந்த மாய வலையைக் கிழித்துக்கொண்டு வைராக்கியம், விவேகம் என்ற இரண்டு சிறகுகளால் வெளியே வந்தால் பேரின்பம் அனுபவிக்கலாம்.
xxx
மார்ச் 13 திங்கட் கிழமை
பாதரசம் தடவிய கண்ணாடியில் ஒருவனுடைய முகம் பிரதிபலிக்கும். அதுபோல சக்தியையும், தூய்மையையும், பிரம்மசர்யத்தால் காப்பாற்றிக் கொண்டிருகிறவனுடைய இருதயத்தில் ஸர்வேஸ்வரனுடைய திவ்விய ரூபம் பிரதிபலிக்கும்.
xxx
மார்ச் 14 செவ்வாய்க் கிழமை
ஒருவன் எப்போதும் ஸத்தியத்தையே பேசுகிறவனாக இல்லாவிட்டால், ஸத்திய ஸ்வரூபியாகிய ஈசுவரனைக் காணமுடியாது.
xxx
மார்ச் 15 புதன் கிழமை
ஒருகுடும்பத்திலுள்ள மருமகள், தனது மாமன் மாமிக்கு மரியாதையுடன் பணி செய்து, அவர்களை இகழாது கீழ்ப்படிந்து வந்தாலும், அவள் தனது புருஷனையே பிரியமாகக் கொண்டாடுவாள். அதுபோல உனது இஷ்ட தேவதையிடம் பூரண பக்தியோடு இருந்தாலும், மற்ற கடவுளரை இகழாதே.
xxx

மார்ச் 16 வியாழக்கிழமை
இராமபிரான், இலங்கைக்குப் போய்ச் சேருவதற்கு அணை (பாலம்) கட்ட வேண்டி இருந்தது. ஆனால் அவனுடைய பரமபக்தனான ஹனுமான், ராமபிரானிடத்தில் வைத்திருந்த திட பக்தியால், சமுத்திரத்தை ஒரே தாண்டாய்த் தாண்டிவிட்டான். இங்கு எஜமானனைவிட, சேவகனே அதிகம் சாதித்தான். காரணம்- நம்பிக்கை!
xxx
மார்ச் 17 வெள்ளிக்கிழமை
சிக்கிமுக்கிக் கல், கற்பகோடி காலம் தண்ணீருக்குள் மூழ்கி இருந்தாலும் அது உள்நெருப்பை ஒருபோதும் இழப்பதில்லை. அதைத் தட்டினால் தீப்பொறி பறக்கும். அதுபோலத்தான் பக்தனும். ஈசுவரனுடைய நாமத்தைக் கேட்ட மாத்திரத்திலேயே அவன் தன்னை மறந்தவனாய் விடுகிறான்.
xxx
மார்ச் 18 சனிக் கிழமை
வீட்டின் உச்சி முகட்டுக்குப் போக, ஏணி, மாடிப்படி, மூங்கில் கம்பு, கயிறு இவைகளில் ஏதேனும் ஒன்றின் உதவியைக் கோண்டு ஏறலாம். அதுபோல ஈசுவரனை அடைவதற்கு வேறு வேறு வழிகளும் சாதனங்களும் ஏற்பட்டிருக்கின்றன. உலகத்திலுள்ள ஒவ்வொரு மதமும் அப்படிப்பட்ட வழிகளுள் ஒன்றைதான் காட்டுகிறது.
xxx
மார்ச் 19 ஞாயிற்றுக் கிழமை
வாய்விட்டு உரக்கத்தான் கடவுளைப் பிரார்த்திக்க வேண்டுமா? உனக்கு எப்படி இஷ்டமோ அப்படிப் பிரார்த்தனை செய்யலாம். அவன் எப்போதும் உன் பிரார்த்தனையைக் கேட்பான். எறும்பின் காலடி சப்தம் கூட அவனுடைய காதுகளில் கேட்கும்.
xxx
மார்ச் 20 திங்கட் கிழமை
பிரார்த்தனையால் உண்மையில் பலன் உண்டா? மனமும் வாக்கும் ஒன்று சேர்ந்து ஊக்கத்தோடு ஏதேனும் ஒரு பொருளைப் பிரார்த்தித்துக் கேட்குமானால் அந்தப் பிரார்த்தனைக்குப் பலன் கிடைக்கும்.
xxx

மார்ச் 21 செவ்வாய்க் கிழமை
ஒரு பெரிய சக்ரவர்த்தியிடம் போக வேண்டுமானால், வாயிற் காப்போனையும் ஏனைய அதிகாரிகளையும் நயந்துகொள்ள வேண்டும். ஸர்வேசுவரனுடைய சந்நிதானத்தை அடைய வேண்டுமானால் பக்தி செய்து, அவனுடைய பக்தர்களுக்குத் தொண்டு செய்து, நீண்டகாலத்துக்கு சாதுக்களுடன் சஹவாசம் செய்யவேண்டும்.
xxx
மார்ச் 22 புதன் கிழமை
காம்பஸ் எனப்படும் திசை அறி கருவியின் முள் எப்போதும் வடதிசையையே காட்டும். அதைப் பின்பற்றிச் செல்லும் கப்பல்கள் ஆபத்துக்குள்ளாவதில்லை. மனித வாழ்க்கை என்னும் கப்பல் மனம் என்னும் திசையறி கருவியில் பரப்பிரம்மத்தை நோக்கியே சென்றால் எல்லா ஆபத்துகளையும் தாண்டலாம்.
xxx
மார்ச் 23 வியாழக்கிழமை
மந்திரித்த கடுகைப் பேய் பிடித்தவன் மீதூ தூவினால் பேய் அகன்றுவிடும். ஆனால் பேய் கடுகுக்குள்ளேயே புகுந்துகொண்டால் என்ன ஆகும்? பகவானை தியானம் செய்யும் மனத்துக்குள்ளேயே தீய எண்ணங்கள் புகுந்துவிட்டால், பின்னர் எப்படி பக்தி மார்கத்தை அனுசரிக்க முடியும்?
xxx
மார்ச் 24 வெள்ளிக்கிழமை
மிருதுவான களிமண்ணில் எந்த உருவமும் பதியும். கருங்கல்லில் பதியாது பகதனுடைய ஹிருதயத்தில் ஈசுவர ஞானம் தானே பதியும்; பந்தப்பட்ட ஜீவனுடைய இருதயத்தில் பதிவதில்லை.
xxx
மார்ச் 25 சனிக் கிழமை
முதலில் உள்ளமாகிய கோவிலில் ஈசுவரனைப் பிரதிஷ்டை செய், முதன்முதலில் அவனை உள்ளபடி அறிந்துகொள். பிரசங்கம், உபதேசம் எல்லாம் பிற்பாடு ஆகட்டும்.
xxx

மார்ச் 26 ஞாயிற்றுக் கிழமை
‘கீதா, கீதா, கீதா’ – என்று அடுத்தடுத்து பலமுறை சொன்னால் த்யாகி என்று பொருள்படும் ‘தாகி, தாகி’ என்ற ச ப்தம் வரும். உலகப் பற்றுள்ளவர்களே! துறவு கொள்ளுங்கள்; எல்லாவற்றையும் விட்டு விட்டு ஈசுவரனிடத்தில் இருதயத்தை நிலை நிறுத்துங்கள் என்று பகவத் கீதை ஒரே வார்த்தையில் போதிக்கின்றது.
xxx
மார்ச் 27 திங்கட் கிழமை
எனது திவ்ய மாதாவாகிய ஸரஸ்வதி தேவியினிடமிருந்து வரும் ஒரே ஒளிக்கிரணம், மஹா மேதாவியான பண்டிதனை நசுங்கிப் போன புழுவுக்குச் சமமானமாக அடக்கிவிடும்
xxx
மார்ச் 28 செவ்வாய்க் கிழமை
ஸ, ரி, க, ம, ப, த, நி, ஸ என்று வாயால் சொல்லுவது எளிது. ஆனால் ஒரு வாக்கியத்தில் அந்த ஸ்வராவளி வரும்படி செய்வது சிரமமானது. அதுபோல தர்மத்தைப் பற்றி பேசுவது எளிது. அதை வாழ்க்கையில் நடத்திக் காட்டுவது சிரமமானது
xxx
மார்ச் 29 புதன் கிழமை
பகவானது சந்நிதானத்தில் தர்க்கம், புத்தி, படிப்பு – இவைகளில் எதுவும் பிரயோசனப்படாது அங்கே ஊமை பேசும், குருடு காணும், செவிடு கேட்கும்.
xx
மார்ச் 30 வியாழக்கிழமை
குடத்தில் தண்ணீர் மொள்ளும்போது ‘பக், பக்’ என்ற சப்தம் உண்டாகிறது; குடம் நிரம்பியவுடன் அந்த சப்தம் நின்றுவிடுகிறது. அதுபோல ஈசுவரனைக் காணாதவன் வீண் வாதங்களில் ஈடுபடுகிறான். அவன் ஈசுவரனைக் கண்டுவிட்ட பின்னர், பேசாமால் அந்த திவ்வியானந்தத்தை அனுபவிக்கிறான்.
xxx

மார்ச் 31 வெள்ளிக்கிழமை
ஒன்றென உணர்வது ஞானம்; பலவாகக் காண்பது அஞ்ஞானம்.
Source: ராமகிருஷ்ணரின் உபதேசமொழிகள், ராமகிருஷ்ணமடம், மயிலாப்பூர், சென்னை
–Subham–