
Post No. 9662
Date uploaded in London – –29 May 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ரிக் வேதத்தின் ஆயிரத்துக்கும் மேலான கவிதைகளில் ஒன்றை மட்டுமே நாம் படித்து ரசித்து, சுவைத்து வருகிறோம். அந்தக் கவிதை 1-112 (RV. 1-112) அதாவது முதல் மண்டலத்தில் 112 ஆவது பாடல்/ துதி. குத்ச ஆங்கீரசன் என்ற ரிஷி இந்தப் பாடலைக் ‘கண்டுபிடித்தார்’. அதாவது ரேடியோ அலைகள் போல அவர் காதில் விழுந்தது. அதில் அவர் பல அற்புத சம்பவங்களையும் வரலாற்றுத் துணுக்குகளையும் நம் முன் வைக்கிறார். ரிக் வேதத்தை மொழிபெயர்த்த அல்லது விமர்சித்த 20க்கும் மேற்பட்ட கோமாளிகளுக்கு அர்த்தம் புரியாமல் பேந்தப் பேந்த முழிக்கின்றனர். கிரிப்பித் (Ralph T H Griffith) போன்றோர் எனக்குப் புரியவில்லை என்கின்றனர். மாக்ஸ்முல்லர் (Max Muller gang) கும்பலைச் சேர்ந்தோர் ஆரிய- திராவிட இன வெறியைத் தூண்டிவிடுகின்றனர் . இப்படி மாக்ஸ் முல்லர் தூபம் போட்டதால் அதே நாட்டைச் சேர்ந்த அடால்ப் ஹிட்லர் (Adolph Hitler) நானும் ஆரியனே , ஆரியரல்லாத அத்தனை போரையும் ஒழிப்பேன், ஒடுக்குவேன் என்று புறப்பட்டு மெயின் கெம்ப் (Mein Kampf) என்ற தனது சுயசரிதையில் அப்பட்டமாக எழுதினான். அப்படிப்பட்ட கொடுங்கோலனை உருவாக்கியது மாக்ஸ் முல்லர் கும்பல்.
****
இந்தத் துதியில் உள்ள 25 மந்திரங்களில் மீதமுள்ளதைக் காண்போம்
மந்திரம் 16 (1-112-16)
சாயு, அத்ரி, மநு , ஸ்யூம ரச்மி என்ற நால்வர் பெயர்கள் இந்த மந்திரத்தில் வருகிறது.
மநுவை ராஜ ரிஷி என்றும் அவருக்கு தனியங்களைப் பயிரிடும் முறையை அஸ்வினி தேவர்கள் எனப்படும் இரட்டையர் கற்பித்ததாகவும் சாயனர் சொல்கிறார்.
ஸ்யூம ரஸ்மியின் பகைவர்கள் மீது அஸ்வினியர் அம்பு மழை பெய்து அவரைக் காப்பாற்றியதாக மந்திரம் செப்புகிறது. இவரையும் ராஜா ரிஷி என்கிறார் சாயனர். அவர் பாடிய/ ‘கேட்ட’ கவிதையும் ரிக் வேதத்தில் உளது. சாயு என்பவரின் வறட்டுப் பசுவை அஸ்வினி தேவர்கள் பால் சுரக்க வைத்ததாக இதே கவிதையின் மூன்றாவது மந்திர விளக்கத்தில் கண்டோம்.
எனது கருத்து
மநு என்பவருக்கு அஸ்வினியர் விவசாய, சாகுபடி முறைகளைக் கற்பித்ததாக சாயனர் உரைக்கிறார். வேத கால இந்துக்களை நாடோடிகள் என்று சொல்லி 25 வெள்ளைக்கார பயல்கள் ஜோக் அடித்திருக்கிறான். நூற்றுக் கணக்கான விவசாய குறிப்புகள் வேதத்தில் உளது.
பல்வேறு மனுக்களின் பெயர்கள் ரிக் வேதத்தின் பத்து புஸ்தகங்களில்/மண்டலங்களில் காணக்கிடக்கிறது. மனு ஸ்ம்ருதிக்கும் இவர்களுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை எவரும் பிரஸ்தாபிப்பது இல்லை. உண்மையில் முதல் மநு ஸ்ம்ருதி ரிக் வேத காலத்தைச் சேர்ந்ததாக இருக்கவேண்டும். ஏனெனில் அதில் பெருகி ஓடும் சரஸ்வதி நதி பற்றிய குறிப்பு வருகிறது. மனுதான் உலகை பெரு வெள்ளம் (Deluge) , அதாவது பிரளயம் ஏற்பட்டபோது காப்பாற்றினார் என்பதும் பின்னொரு பாடலில் வருகிறது. ஆக இது உலகிலுள்ள எல்லா இலக்கியங்களிலும் வருவதால், இது முக்கியக் குறிப்பு ஆகும். இவர்களில் இருவரை ராஜ ரிஷிகள் என்று உரைகாரர்கள் செப்புவதால் அக்கால அரசர்கள் என்பதும் தெளிவாகிறது. மனுவின் பெயர் சத்ய விரதன், அவன் திராவிட தேச அரசன் என்று பிற்கால புராணங்களில் (மச்ச புராணம்) வருவதால் , தமிழர்களுக்கும் இக்குறிப்பு உதவும். “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடி” என்பதை உண்மையென நிரூபிக்க உதவலாம்.
அத்ரி மகரிஷி பற்றி முன்னரே ஒரு மந்திரத்தில் கண்டுவிட்டோம். பிராமணர்கள் தினமும் மூன்று முறை செய்யும் சந்தியாவந்தனத்தில் மனித குல மூதாதையர்களான ஏழு ரிஷிகளின் பெயர்களையும் சொல்லுவார்கள் . அதில் முதல் பெயர் அத்ரி. அந்த ஏழு பேரும் அதே வரிசையில் 2700 ஆண்டுகளுக்கு முன் உருவான உலகின் முதல் இலக்கண புஸ்தகத்தில் (அஷ்டாத்யாயீ) இருக்கும் அதிசயத்தை முன் ஒரு கட்டுரையில் தொட்டுக் காட்டினேன்.
***
மந்திரம் 17
இதில் இரண்டு முக்கியச் செய்திகள் வருகின்றன .
பதர்வான், சர்யாத என்ற இரண்டு பெயர்களில் வைவஸ்வத மனுவின் புதல்வன் சர்யாதா என்று உரைகாரர் செப்புவர். பிராமணர்கள் செய்யும் பூஜைகளில் சடங்குகளில் பிரம்மாண்டமான காலக் கணக்குகளைச் சொல்லி, உலகின் இந்தப் பகுதியில் இந்தச் சடங்கைச் செய்கிறேன் என்ற google map கூகுள் மேப்/ போன்ற பூகோள விஷயங்களையும் சொல்லுவார்கள். அதன்படி நாம் இப்போது பூமியில் இருப்பது வைவஸ்வத மனுவின் காலமாகும்.
இந்த மந்திரத்தில் மிகவும் சுவையான பெயர் பதர்வான் ; சாயனர் ஒன்று சொல்ல, நமது கலாசாரமே தெரியாத வெள்ளைக்கார பயல்கள் உளறு , உளறு என்று உளறிக் கொட்டியதை இம்மந்திரத்தின் விளக்க உரையில் காணலாம் .
பதர்வான் என்பது ஒரு ராஜ ரிஷியின் பெயர் என்கிறார் சாயனர்.
“இல்லை, இல்லை இது ஒரு பறக்கும் குதிரை என்கிறார் பென்பீ (Benfie)” . “இல்லை, இல்லை , இது எரியும் கோட்டையை அஸ்வினி தேவர்கள் ஐதரன் அல்லது மேகப் பொழிவு மூலம் காப்பாற்றிய சொல்” என்கிறார் லுட்விக் (Ludwig) . 4 வேதங்களிலும் இது போல வெள்ளைக்காரப் பயல்கள் ‘ஜோக்’ Joke அடித்த வண்ணம் இருக்கின்றனர். படிப்பதற்கே ஒரே தமாஷ்தான்!!!
இங்கு ஒரு முக்கிய இலக்கண விஷயம் வருகிறது. ‘ந’ இல்லை என்ற சம்ஸ்கிருதச் சொல்லில் இருந்து ‘நோ’ No என்ற ஆங்கிலச் சொல் ‘நைன், ந’ என்ற வட இந்திய மொழிச் சொற்கள் வந்ததை நாம் அறிவோம். ஆனால் வேதத்தில் ‘இல்லை’ என்ற பொருளுடன் ‘போல’ என்ற அர்த்தமும் உண்டாம். சாயனர் இங்கே ‘போல’ என்ற உவமை உருபாக ‘ந’ வை மொழி பெயர்த்து இருக்கிறார். தமிழிலும் இவ்வாறு இரு பொருள் உண்டு. ‘வாரா’ என்றால் சங்க காலத்தில் ‘வந்த’ என்று பொருள். தற்காலத்தில் ‘வராத’ என்ற பொருள். இது போல ‘நந்தா’ என்ற சொல்லுக்கும் இரு வேறு பொருள் உண்டு. 1935-ம் ஆண்டு ஆனந்த விகடன் தமிழ் அகரா தியின் 2040 பக்கங்களையும் புரட்டினால் ஒரு தமிழ்ச் சொல்லுக்கு இவ்வளவு அர்த்தமா என்று வியப்போம். நேற்று வந்த தமிழுக்கே இவ்வளவு பொருள் என்றால் அதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வந்த வேதங்களுக்கு எவ்வளவு பொருள் இருக்கும்? யாரே வேதத்துக்கு பொருள் சொல்ல முடியும்?
–to be continued

tags- முதல் வரலாற்று ஆசிரியர்-4, அடால்ப் ஹிட்லர்,