ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதர்! – 2 (Post No.10,180)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,180

Date uploaded in London – 6 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதர்! – 2

பின்னர் தெற்கு நோக்கி வந்த தீக்ஷிதர் திருத்தணியில் முருகப் பிரானை தரிசித்தார். தனது தந்தையார் அங்கு ஒரு மண்டலம் உபவாஸம் இருந்ததைப் போலவே தானும் ஒரு மண்டலம் உபவாஸம் இருந்தார். அப்போது அங்கே அவருக்கு தெய்வீக உள்ளொளி கிட்டியது. ஸ்கந்தாக்க்ஷரியை அவர் சொல்லிக் கொண்டிருந்த போது ஒரு முதியவர் அவரிடம் வந்தார். அவர் பெயரைச் சொல்லி அழைத்தார். அவரது வாயில் ஒரு கல்கண்டுத் துட்டை இட்டார். தீக்ஷிதர் கண்ணைத் திறந்து பார்க்கும் போது அவர் முன் முதியவர் இல்லை மறைந்திருந்தார். வள்ளி தெய்வானை ஸமேத முருகப் பிரான் மயில் மீது வர முருகனின் தரிசனம் அவருக்குக் கிட்டியது. முருகனே முதியவர் உருவில் வந்து தனக்கு அருளியிருப்பதை தீக்ஷிதர் உணர்ந்தார். கல்கண்டை ஊட்டி முருகனே தனக்கு ஞானத்தை ஊட்டியதையும் அவர் உணர்ந்து கொண்டார். உடனே இசை வெள்ளம் அவர் நாவிலிருந்து வெளி வந்து கரை புரண்டோடியது.

ஸ்ரீநாதாதி குருகுஹோ ஜயதிஜயதி என்ற கீர்த்தனையை மாயாமாளவகௌள ராகத்தில் முதல் கீர்த்தனையாகப் புனைந்தார். இதைத் தொடர்ந்து அவர் பாடிய ஏராளமான கீர்த்தனைகளில் குரு குஹ என்று அவர் தனது முத்திரையைப் பதித்து வந்தார். இன்ன ராகம் என்றும் கூட கீர்த்தனைகளில் அவர் குறிப்பிடுவதுண்டு. சுமார் இருபது கீர்த்தனைகளை அவர் முருகனைப் போற்றிப் பாடியுள்ளார். ஆனந்தபைரவி ராகத்தில் உள்ள மானஸ குரு குஹ ரூபம் பஜரே, பூர்வியில் உள்ள ஸ்ரீ குரு குஹஸ்ய தாஸோஹம் உள்ளிட்ட பல கீர்த்தனைகள் பிரபலமானவை.

திருத்தணியிலிருந்து காஞ்சிபுரம் வந்த தீக்ஷிதர் காமாக்ஷியை தரிசித்தார். மனோஹரியில் அமைந்துள்ள கஞ்சதளாயதாக்ஷி என்ற கீர்த்தனை, ஹிந்தோளத்தில் அமைந்துள்ள நீரஜாக்ஷி உள்ளிட்ட பல கீர்த்தனைகளை ஆனந்தமாகப் பாடினார். பின்னர் திருவாரூரை அடைந்த அவர் அங்கேயே தங்கலானார். ஏராளமான கீர்த்தனைகளைப் புனைந்து இறைவனின் புகழைப் பாடினார். இடையிடையே தீர்த்தஸ்தல யாத்திரையை அவ்வப்பொழுது மேற்கொண்டார்.

பஞ்சலிங்க கீர்த்தனைகளாக ப்ருத்வீ, அப்பு, தேஜஸ், வாயு, ஆகாயம் ஆகியவற்றைக் குறிக்கும் ஐந்து புண்ய ஸ்தலங்களான காஞ்சி, திருவானைக்கா, திருவண்ணாமலை, காளஹஸ்தி, சிதம்பரம் ஆகிய ஸ்தலங்களில்  பைரவி ராகத்தில் சிந்தய மாகந்த மூல கந்தம், யமுனா கல்யாணி ராகத்தில் ஜம்பூபதே, ஸாரங்காவில் அருணாசல நாதம், உசேனியில் ஸ்ரீகாளஹஸ்தீசம், கேதாரத்தில் ஆனந்த நடன ப்ரகாசம் ஆகியவற்றை இயற்றி இசைத்துப் பாடினார். நவக்ரஹங்களில் ராகு கேது கிரகங்களை நீக்கி விட்டு ஏழு கிரகங்களுக்கும் ஏழு கீர்த்தனைகளை இசைத்துப் பாடினார். இவை இன்றளவும் பிரபலமாகி மேடைக் கச்சேரிகளில் இசைக்கப்படுகின்றன. மாயூரம் அடைந்த அவர் அங்கு அம்பிகையின் பேரில் ஸ்ரீ வித்யோபாஸனை முறையின் கீர்த்தனைகளை இயற்றி அருளினார்.

சம்ஸ்க்ருதத்தில் விற்பன்னர் என்பதால் அதில் உள்ள எட்டு வேற்றுமைகளுக்கும் எட்டு கீர்த்தனைகள் இயற்றினார். அவர் இயற்றியுள்ள நவாவரண கீர்த்தனை மிகவும் சக்தி வாய்ந்தது; பிரபலமானது. சாக்த, ஆகம் தந்திரங்களில் சொல்லப்பட்டுள்ள மந்திரம், யந்திரம், மூர்த்தி முதலிய ஆவரணங்களை எல்லாம் கம்பீரமான பாவங்களுடன் ஒப்பற்ற உரிய ராகங்களில் அவர் கிருதிகளாக அமைத்து  ஸ்ரீ கமலாம்பிகை மீது நவாவரண கீர்த்தனைகளாக இயற்றினார்.

இப்படி அவர் இயற்றியுள்ள ஐநூறுக்கும் மேற்பட்ட கீர்த்தனைகள், அவருக்கு மந்திர சாஸ்திரம், யோகம், ஸ்ரீ வித்யை, ஜோதிடம் உள்ளிட்ட அனைத்துக் கலைகளிலும் அவர் ஒரு அபார மேதை என்பதை விளக்குபவையாக அமைந்துள்ளன.

  • தொடரும்

tags- முத்துசாமி தீக்ஷிதர்! – 2