
Post No. 9992
Date uploaded in London – 18 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com


ஆண் மகனை எழுத்தாளர் என்றால் பெண் மகளை எழுத்தாளி என்று சொல்லலாம் அல்லவா ? அவ்வகையில் பயங்கரக் கதைகளை எழுதிய பிரிட்டிஷ் பெண்மணி, எழுத்தாளி மேரி ஷெல்லி MARY SHELLEY ஆவார். அவர் உருவாக்கிய பிராங்கென்ஸ்டைன் FRANKENSTEIN பூதம் உலகப் புகழ்பெற்றாதோடு ஏராளமான டெலிவிஷன், திரைப்படக் காட்சிகளுக்கும் வழிவகுத்தது.
மேரி ஷெல்லியின் காதலர், நமது பாரதியார் புகழும் ஆங்கிலக் கவிஞர் பெர்சி பி. ஷெல்லி PERCY BYSSHE SHELLEY ஆவார். பாரதியார் ஒரு காலத்தில் ‘ஷெல்லிதாசன்’ என்ற புனைப்பெயரோடு எழுதியதுண்டு.
ஒரு நாள் மேரி , அவருடைய காதலரும், எதிர்காலக் கணவருமான பெர்சி பி. ஷெல்லி, புகழ் பெற்ற கவிஞர் பைரன் LORD BYRON ஆகியோர் காரசார உரையாடலில் ஈடுபட்டிருந்தனர். யார் அதி பயங்கரக் கதை எழுதுகிறார்கள் என்று பார்ப்போமா? என்று அவர்களுக்குள் ஒரு போட்டி ஏற்பட்டது. அதன் விளைவாக மேரி ஷெல்லி எழுதிய நாவல்தான் ‘பிராங்கென்ஸ்டைன்’ FRANKENSTEIN .
அவருடைய முழுப்பெயர் மேரி வுல்ஸ்டன்க்ராப்ட் காட்வின் MARY WOLLSTONECRAFT GODWIN . அவர் லண்டனில் கீர்த்தி வாய்ந்த குடும்பத்தில் பிறந்தார். மேரியின் தந்தை வில்லியம் காட்வின் WILLIAM GODWIN அரசியல் விமர்சகர், நாவல் ஆசிரியர். திருமணம் உள்பட பல்வேறு சமூக விஷயங்களில் புரட்சிக் கருத்துக்களை உடையவர் வில்லியம் காட்வின். அவருடைய தாயார் பெண் உரிமைப் போராளி. ஆனால் மேரி பிறந்த 11ஆவது நாளில் தாயாரின் உயிர் பிரிந்தது.
வீட்டிலேயே கல்வி கற்றார் மேரி . வீட்டிற்கு வரும் பெரும் இலக்கியப் புள்ளிகளை சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. அதில் ஒருவர் கவிஞர் பெர்சி ஷெல்லி. 16 வயதில் அவருடன் பிரான்சுக்கு ஓடிப்போனார். காதலின் வேகம்!
அவர்களுடைய முதல் குழந்தை இத்தாலியின் வெனிஸ் நகரில் இளம் வயதில் இறந்தது . இங்கிலாந்துக்குத் திரும்பிவந்தவுடன் இரண்டாவது குழந்தையான வில்லியம் பிறந்தான் .
‘பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்’ என்ற பழமொழிக்கேற்ப அவருடைய வாழ்வில் துன்பம் தொடர்ந்து வந்தது. பெர்சி ஷெல்லியின் முதல் மனைவி தற்கொலை செய்துகொண்டதால்தான் அவர் மேரியை மணந்தார். பிறந்த இரண்டாவது குழந்தை வில்லியமும் இத்தாலிக்குத் திரும்பிச் சென்றபோது இறந்தான்.
மேரிக்கு 21 வயதானபோது அவர் எழுதிய பயங்கரக் கதைதான் பிராங்கென்ஸ்டைன்.
அந்தக் காலத்தில் இருள் சூழ்ந்த, பேய் பிடித்த மாளிகைகள் , கோட்டை கொத்தளங்களை வருணித்து அந்தப் பின்னணியில் கதை எழுதுவது மரபு. அதே பாணியில் மேரியும் ஒரு பூதத்தைப் படைத்தார். அதை எதிர்கால விஞ்ஞானப் புனைக்கதைகளின் முன்னோடி என்று விளம் புவோர் பலர். ஒரு விஞ்ஞானி உயிரினங்களை உண்டாக்கும் ஆராய்ச்சி செய்கிறான். அது தவறான வழியில் போய், பிராங்கென்ஸ்டைன் என்ற பயங்கர மனிதனை- பூதத்தை உருவாக்கிவிடுகிறது. அதுவே விஞ்ஞானியையும் கொன்றுவிடுகிறது.
இதுபோன்ற புதுமைக் கதையை மக்கள் வரவேற்றனர். மக்கள் இதை வைத்து பல நாடகங்கள், திரைப்படங்களைத் தயாரித்தனர் . அவர் வாழ்வில் மேலும் ஒரு துயரம், புகழ் பெற்ற கவிஞர் ஷெல்லி அவரது 29ஆவது வயதில் படகு விபத்தில் இறந்ததாகும் . இதனால் 1822ல் மேரி இங்கிலாந்துக்குத் திரும்பிவந்தார்.
26 வயதில் இரண்டாவது நாவல் ஆன வால்பெர்க்கா VALPERGA வை பதிப்பித்தார். அவர் கவிதைகளையும் மேலும் பல நாவல்களையும் எழுதினார். தனது பயணங்கள் பற்றிய கட்டுரைகளையும் எழுதினார். மனித குலம் அழிவது பற்றிய THE LAST MAN தி லாஸ்ட் மேன் என்ற நாவலையும் வெளியிட்டார். ஆயினும் முதல் நாவலுக்குக் கிடைத்த வெற்றி இவைகளுக்குக் கிடைக்கவில்லை . இறுதிக் காலத்தில் நோய்வாய்ப்பட்டு இறந்தார்.
பிறந்த தேதி – ஆகஸ்ட் 30, 1797
இறந்த தேதி – பிப்ரவரி 1, 1851
வாழ்ந்த ஆண்டுகள் – 53
வெளியிட்ட நூல்கள் PUBLICATIONS
1817-HISTORY OF SIX WEEKS’ TOUR
1818 – FRANKENSTEIN
1828- VALPERGA
1826- THE LAST MAN
1830- THE FORTUNES OF PERKIN WARBECK
1835- LODORE
1837 – FALKNER
1844 – RAMBLES IN GERMANY AND ITALY
PUBLISED AFTER SHE DIED
1987 – THE JOURNALS OF MARY SHELEY ( 2VOLS)
–SUBHAM–






TAGS- MARY SHELLEY, FRANKENSTEIN, மேரி ஷெல்லி, பிராங்கென்ஸ்டைன்,