
Written by S NAGARAJAN
Date:24 April 2017
Time uploaded in London:- 5-59 am
Post No.3845
Pictures are taken from different sources; thanks.
contact: swami_48@yahoo.com
ரமண சாரல்
பகவான் ரமணர் முன்னுரை மாற்றிய ஒரே ஒரு வார்த்தை!
ச.நாகராஜன்
1927ஆம் ஆண்டு. ‘நூல் திரட்டு’ என்ற பெயரில் பகவான் ரமணரின் நூல் தயாராகி விட்ட தருணம். ஆசிரமத்தில், ஹாலில் பகவானின் பக்தர்கள் குழுமி இருந்தனர். அங்கு இருந்த பண்டிதர்களுக்கு நூல் முடிந்து விட்ட ஆனந்தம். அந்த நூலுக்கு ஒரு முன்னுரை இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்பினார்.
ஆனால் மஹரிஷியின் நூலுக்கு முன்னுரை எழுதக் கூடிய அளவுக்கு தகுதி வாய்ந்தவர் யார்? ஒருவர் இன்னொருவரைச் சுட்டிக் காட்டினார். ஆனால் அவரோ இன்னொருவரைச் சுட்டிக் காட்டினார். எல்லோருக்கும் முன்னுரை வேண்டுமென்ற ஆசை. ஆனால் அதைத் தான் எழுதத் தயக்கம். ஆகவே இப்படி ஒருவரை ஒருவர் சுட்டிக் காட்டும் இந்த ‘விளையாட்டு’ பல மணி நேரம் பகவானின் முன்னிலையில் நடந்து கொண்டே இருந்தது. பகவான் இதை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். யாரும் தயாராகாததால் ஒரு முடிவுக்கும் வர இயலாத நிலையில் பண்டிதர்கள் கலைந்தனர்.
இரவு மணி 10.30. பகவானின் அணுக்க பக்தரான டி.கே.சுந்தரேச ஐயர் ஹால் பக்கமாக நடந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்த மஹரிஷி, “இந்த முன்னுரையை நீயே ஏன் எழுதக் கூடாது?” என்று கேட்டார். இதைக் கேட்ட சுந்தரேச ஐயருக்குத் தூக்கிவாரிப் போட்டது.
“பகவானின் ஆசீர்வாதம் இருந்தால் மட்டுமே இதை என்னால் செய்ய முடியும்” என்றார் சுந்தரேச ஐயர்.
“எழுது! நன்றாக வரும்” என்று தன் ஆசீர்வாதத்தைத் தந்தார் மஹரிஷி.
ஆகவே அந்த இரவு நேரத்தில் முன்னுரையை எழுதத் தொடங்கினார் அவர். என்ன ஆச்சரியம். ஏதோ ஒரு தெய்வீக சக்தி தூண்ட, முக்கால் மணி நேரத்திற்குள் முன்னுரையை எழுதி முடித்தார் அவர். அது அருமையாக அமைந்து விட்டது தான் எழுதிய டிராப்ட் (draft) முன்னுரையை ஒரு கமா (comma) கூட மாற்றாமல் அப்படியே மஹரிஷியின் முன்னால் கொண்டு போய் வைத்தார் அவர். அப்போது மணி இரவு இரண்டு.
அந்த முன்னுரையைப் படித்துப் பார்த்த பகவானுக்கு ஒரே சந்தோஷம். எல்லாம் நன்றாக குறிப்பிடப்பட்டிருந்ததோடு எளிய நடையில் இருந்தது முன்னுரை.
அது சரியாக இருக்கிறது என்று கூறி அதை அப்படியே வைத்துக் கொள்ள அனுமதி அளித்தார் பகவான்.
முன்னுரை எழுதிய தனது பேப்பர்களை எடுத்துக் கொண்டு சுந்தரேச ஐயர் சில அடிகள் தான் எடுத்து வைத்திருப்பார். அவரை பகவான் அழைத்தார். அதை மீண்டும் பார்க்க வேண்டுமென்று கேட்டார்.
முன்னுரையை முடிக்கும் போது மெய் சத்தியத்தை அறிய விரும்பும் அனைவருக்கும் துன்பங்களை நீக்கி மேலான ஆனந்தமாம் முக்தியை, பகவானின் அருள் வடிவமாக விளங்கும் இந்த நூலின் மூலமாக அடைய முடியு நம்புகிறேன்” என்று அவர் எழுதியிருந்தார்.
‘நம்புகிறேன்” என்று ஏன் போட்டிருக்கிறாய். அதை ‘திண்ணம்’ என்று ஏன் சொல்லவில்லை? என்று கேட்டு விட்டு அந்த முன்னுரையில் தன் கைப்பட நம்புகிறேனை திண்ணம் என்று மாற்றினார் பகவான்.
தனது உபதேசம் முக்தியை நிச்சயமாகத் தரும் என்பதை மிக அபூர்வமாக அவரே உணர்த்திய சம்பவம் இது.
வெறும் வாய்மொழிக்காகச் சொல்லப்பட்டவை அல்ல அவரது அருள் மொழிகள். அது உயரிய சத்தியத்தைச் சுட்டிக் காட்டும் வலிமை வாய்ந்த சத்திய வார்த்தைகள் என்பதை அவர் வாயாலேயே சொன்ன சம்ப்வம் இது.
ரமண மஹரிஷியின் அருளுரைகள், பாக்கள் முதலியவை அப்படியே நமக்குக் கிடைத்துள்ளன.
அவற்றைப் பயன் படுத்திக் கொள்ளும் போது அதன் அடிப்படையில் அவர் அளித்துள்ள சத்தியமும் கூடவே இருக்கிறது எவ்வளவு பெரிய ஆனந்தத்தை நமக்குக் தருகிறது.
ரமணரின் பாதம் போற்றி!
ஆதாரம்: பகவானின் அணுக்க பக்தர் T.K.Sundaresa Iyer எழுதிய At the Feet of Bhagavan’ நூல்
****