Post No. 9986
Date uploaded in London – 17 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 16-8-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.
எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். (இந்த உரை மூன்று பகுதிகளாக வெளியிடப்படுகிறது.)
மந்த்ராலய மஹான் ஸ்ரீ ராகவேந்திரர்! – 1
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம். மந்த்ராலயத்தில் இன்றும் ஜீவ சமாதியில் இருந்து கொண்டு அனைவருக்கும் அருள் பாலிக்கும் பெரும் மஹானான ஸ்ரீ ராகவேந்திரரைப் பற்றி இன்று காணப் போகிறோம். லக்ஷக்கணக்கான மக்களை இன்று வரை மந்த்ராலயத்திற்கு ஈர்த்து அருள் பாலித்து வரும் இவரது சரிதம் அற்புதமான ஒன்று.
கி.பி.1595ஆம் ஆண்டு பால்குண மாதம், சுக்லபக்ஷ, சப்தமி திதியில் தமிழகத்தில் சிதம்பரத்திலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புவனகிரியில் மத்வ சம்ப்ரதாய பிராமண குலத்தில் கௌதம கோத்திரத்தில் திம்மண்ண பட்டர் – கோபிகாம்பாள் தம்பதியருக்கு மூன்றாவது மகனாக அவதரித்தார் ஸ்ரீ ராகவேந்திரர். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வேங்கடநாதன். உரிய வயதில் குருகுலத்தில் சேர்ந்து அனைத்துக் கலைகளிலும் அவர் தேர்ச்சி பெற்றார். குடும்பமோ வறுமை சூழ்நிலையில் இருந்தது. செய்வதறியாது திகைத்த பட்டர் கும்பகோணத்திற்கு குடும்பத்துடன் சென்றார். அங்கே வித்யாமடத்தின் பீடாதிபதியாக இருந்த ஸ்ரீ சுதீந்திரர் அந்தக் குடும்பத்தை அன்போடு வரவேற்றார். வேங்கடநாதனைப் பார்த்தவுடன் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லாமல் போயிற்று. நமது மடத்தின் அடுத்த பீடாதிபதி வேங்கடநாதனே என்று அவர் மனதில் தீர்மானம் உருவாயிற்று. ஸ்ரீ மடத்தில் மூலராமருக்கு தினமும் சுதீந்திரர் செய்யும் பூஜையை லயிப்புடன் கவனித்து வந்தார் வேங்கடநாதன். உரிய வயதிலே சரஸ்வதி என்ற மங்கையை அவருக்கு மணம் முடித்து வைத்தனர் பெற்றோர். வறுமை நீங்காத நிலையில் தன் மனைவியுடன் ஸ்ரீ மடத்தில் அடைக்கலம் புகுந்தார் வேங்கடநாதன்.
வேங்கடநாதனின் பக்தியையும் இறைத்தன்மையையும், அவர் பாடங்களை கிரகித்து உள்வாங்கிக் கொண்ட பான்மையையும் அவரது மேதைத் தன்மையையும் கவனித்து வந்த சுதீந்திரர் அவரின் மீது தனிப்பட்ட அன்பு கொண்டார். இதனால் சுதீந்திரரரிடம் அவருடன் பயின்று வந்த மற்ற சிஷ்யர்கள் அவர் மீது பொறாமை கொண்டனர். ஒரு நாள் மத்வாசாரியரின் பிரம்ம சூத்ரத்தின் பாஷ்யத்தைப் பற்றி சுதீந்திரர் விளக்க ஆரம்பித்தார். இந்த பாஷ்யத்தின் விளக்க உரையாக ஸ்ரீ ஜயதீர்த்தர் என்பவர் நியாயசுதா என்ற நூலை இயற்றினார். ஸ்ரீ ஜயதீர்த்தரின் நியாயசுதாவின் பெருமையை விளக்க ஆரம்பித்த சுதீந்திரர் திடீரென்று தனது உரையை நிறுத்தினார். அவரால் மேலே தொடரமுடியவில்லை. ‘இன்றைய பாடத்தை இத்துடன் முடித்துக் கொள்ளலாம்’ என்று கூறி அருளினார் சுதீந்திரர். அன்றிரவு சுதீந்திரர் தன்னால் எளிய விதத்தில் விளக்கவுரையை ஆற்ற முடியவில்லையே என்று எண்ணி வருத்தத்தில் ஆழ்ந்திருந்தார். சிந்தனையில் ஆழ்ந்தவாறே வெளியில் சற்று சென்று வரலாம் என்று எண்ணிய அவர் சிஷ்யர்கள் உறங்கிக் கொண்டிருந்த இடத்திற்குச் சென்றார். அங்கு அனைவரும் உறங்கிக் கொண்டிருக்க வேங்கடநாதனை மட்டும் காணோம். அவர் தன் பார்வையை எல்லா திசைகளிலும் செலுத்த அங்கு தூரத்தில் வேங்கடநாதன் படுத்து தூங்கிக் கொண்டிருந்ததையும் அவர் அருகில் ஓலைச்சுவடிகள் பல இருந்ததையும் அவர் கண்டார். மெதுவாக அந்த ஓலைச் சுவடிகளை எடுத்துப் பார்த்தவர்,. திகைத்துப் போனார். அன்று அவரால் விளக்க உரை செய்ய முடியாமல் இருந்த நியாய சுதா ஸ்லோகங்களுக்கான விளக்கத்தை மிக அருமையாக எளிமையாக எழுதி இருந்தார் வேங்கடநாதர். அந்த சுவடிகளை எடுத்துக் கொண்டு தன் இருப்பிடம் மீண்டார் சுதீந்திரர்.மறுநாள் காலையில் வகுப்பு ஆரம்பமானது. அனைவரும் குழுமிய போது சுதீந்திரர் வேங்கடநாதன் எழுதிய ஓலைச் சுவடிகளைக் காண்பித்து தன்னால் விளக்க முடியாமல் இருந்த ஸ்லோகங்களுக்கு வேங்கடநாதன் எழுதிய உரையை விவரித்தார். அனைத்து சக மாணவர்களும் அதிசயித்துப் போயினர். இப்படிப்பட்ட பரிமள சுகந்தம் வீசும் இந்த உரைக்கு ‘ஸுதா பரிமளம்’ என்ற பெயரைச் சூட்டுகிறேன். இதை இயற்றிய வேங்கடநாதனுக்கு ‘பரிமளாச்சாரியார்’ என்ற பட்டத்தையும் வழங்குகிறேன் என்றார். அனைவருக்கும் வேங்கடநாதனின் பெருமை புரிய வந்தது.
ஒரு முறை கும்பகோணத்தில் நடந்த ஒரு விருந்திற்கு வேங்கடநாதர் அழைக்கப்பட்டார். விருந்தை அளித்தவருக்கு அவரது பெருமை தெரியாது. அவரை சந்தனம் அரைத்துத் தருமாறு கூறினார். சந்தனம் அரைக்கப்பட்ட பின் அனைவருக்கும் அது தரப்பட்டது. ஆனால் அதை பூசிக் கொண்ட விருந்தினர்கள் குளிர்ச்சியை அனுபவிப்பதற்கு பதில் ‘ஆ, எரிகிறதே எரிகிறதே’ என்று உடல் எரிச்சலால் அலறினர். இதனால் ஆச்சரியப்பட்ட விருந்தை அளித்தவர், வேங்கடநாதரை அழைத்துக் காரணம் கேட்க தான் சந்தனத்தை அரைத்த போது அக்னி சூத்ரத்தை ஜபித்ததாகவும் அதன் பயனாகவே இப்படி ஏற்பட்டிருக்கிறது என்று கூறினார். உடனே வருண மந்திரத்தைக் கூறியவாறே சந்தனத்தை அரைத்து அதைத் தந்து அனைவரையும் பூசிக் கொள்ளச் சொன்னார். இப்போது அது மிக்க குளிர்ச்சியைத் தந்தது. விருந்தினர்கள் மகிழ்ந்தனர். அத்துடன் வேங்கடநாதரின் புகழ் எங்கும் பரவியது.
வேங்கடநாதரை மடத்தின் பொறுப்பை ஏற்குமாறு சுதீந்திரர் கூறியருளினார். ஆனால் அவரோ குடும்பப் பற்றால் அதை ஏற்க மறுத்தார். இதனால் சுதீந்திரர் ஸ்ரீ யாதவேந்திரர் என்பவரை பூஜை செய்ய நியமித்து தனது இளவலாக நியமித்தார். காலம் சென்றது. ஒருநாள் சுதீந்திரருக்கு உடல் நலம் குன்றியது. ஸ்ரீ யாதவேந்திரரும் அருகில் இல்லை.
அடடா, காலம் காலமாகச் செய்து வரும் மூலராமரின் பூஜைக்குத் தடை வந்து விடுமோ என்று கவலைப்பட்டார் சுதீந்திரர். அன்று இரவில் அவர் கனவில் மூலராமர் தோன்றி, “உனக்குப் பின் அர்ச்சனை செய்ய தகுதியானவர் வேங்கடநாதனே” என்று கூறியருளினார். இதனால் மகிழ்ந்த சுதீந்திரர் மறுநாள் வேங்கடநாதனிடம் தன் கனவில் மூலநாதர் அருளிச் செய்த உரையைக் கூறி பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.
வேங்கடநாதர் சற்றுத் தயங்கினார். அன்றே சரஸ்வதி தேவி அவரது கனவில் தோன்றி அவர் யார் என்பதை விளக்கியருளினாள். பிரம்ம லோகத்தில் பாகவத சேவையில் ஈடுபட்டிருந்த சங்குகர்ணனே உலக நன்மையைக் கருதி ஒரு சாபத்தினால் கிருதயுகத்தில் பிரகலாதனாகப் பிறந்து பக்தியின் பெருமையை நிலை நாட்டினார். அடுத்து துவாபர யுகத்தில் பாஹலீக மன்னனாகப் பிறந்து விஷ்ணு பக்தனாக இருந்து பக்தியின் பெருமையை உலகறியச் செய்தார். அடுத்து கலியுகத்தில் ஸ்ரீ வியாசராஜராக அவதரித்து கிருஷ்ணதேவராயரின் அரச சபையை அலங்கரித்தார். இப்போது மக்களின் துயரம் நீங்க வேங்கடநாதனாகப் பக்தியின் பெருமையை அவர் நிலை நாட்டப் பிறந்துள்ளார்.
தான் யார் என்பதை அறிந்த வேங்கடநாதர் தனது பொறுப்பை நிறைவேற்றுவதற்காக சுதீந்திரர் கூறியதற்கு உடனே ஒப்புக் கொண்டார். தன் மகனான லக்ஷ்மிநாராயணனுக்குச் செய்ய வேண்டிய உபநயனத்தை முடித்து விட்டு வருவதாக கூறி தனது கடமையை முடித்தார். மீண்டும் மடத்திற்கு வந்த அவருக்கு தஞ்சாவூரில் 1621ஆம் ஆண்டு பால்குன மாதம் சுக்கில பக்ஷம் துவிதியை திதி அன்று சுதீந்திரர் சந்யாசம் அளித்து ராகவேந்திர தீர்த்தர் என்ற திருநாமத்தையும் சூட்டினார்.
* தொடரும்
tags – மந்த்ராலய மஹான், ஸ்ரீ, ராகவேந்திரர், மந்த்ராலயம்