WRITTEN BY S NAGARAJAN
Post No. 9994
Date uploaded in London – 19 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மந்த்ராலய மஹான் ஸ்ரீ ராகவேந்திரர்! – 3
1812ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு, கோயில் உள்ள ஒரு இடத்திற்கு வாரிசுகள் யாரும் இல்லையெனில் அதை அரசே எடுத்துக் கொள்ளலாம் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இந்த புது சட்டத்திற்கு ‘Resumption of Inam Lands Regulation’ என்று பெயர் இந்தச் சட்டத்தின் படி ‘Permanent Settlement’ செய்தால் மாஞ்சாலி கிராமம் முழுவதுமே அரசு எடுத்துக் கொள்ளும். பொதுமக்களிடம் இந்த அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆகவே இது பற்றி ஆராய்ந்து முடிவெடுக்க ஒரு ஆபீஸரை நியமிக்க அரசு முடிவெடுத்தது.
சர் தாமஸ் மன்ரோ அப்போது பெல்லாரி மாவட்ட ஆட்சியாளராக இருந்தார். அவரை செட்டில்மெண்ட் ஆபீஸராக அரசு நியமித்தது. அரசு அதிகாரிகள் யாரும் எந்த வித நடவடிக்கையையும் எடுக்க முன்வராத நிலையில், ஒரு நாள் தாமஸ் மன்ரோ தானே நேரில் பிருந்தாவனம் வந்தார். அவருடன் கூட அதிகாரிகளும் வந்தனர்.
மந்த்ராலயம் வந்தவர் கோவிலின் வாயிலில் ஒரு கணம் நின்றார். தன் ஷூவைக் கழட்டினார். தொப்பியையும் எடுத்தார். யாரோ ஒருவருடன் பேச ஆரம்பித்தார். ஆங்கிலத்தில் நடந்த அந்த சம்பாஷணை வெகு நேரம் நீடித்தது. கூட வந்தவர்கள் திகைத்தனர். ஏனெனில் மன்ரோவின் முன்னால் யாருமே இல்லை. பேச்சு முடிவிற்கு வந்ததற்கு அடையாளமாக மன்ரோ தனது பாணியில் ஒரு சல்யூட் வைத்தார். அவருக்கு ஆலயத்திலிருந்து மந்த்ரா க்ஷதை கொடுக்க ஆலயத்திலுள்ளோர் வந்த போது தன் கையில் ஏற்கனவே இருந்த அக்ஷதையை அவர் காண்பித்தார். மந்த்ராலய மகானான ராகவேந்திரரே அவர் முன் தோன்றி இந்த இடம் மசூத்கானால் இனாமாக கொடுக்கப்பட்ட வரலாறு அனைத்தையும் உகந்த முறையில் தெள்ளத் தெளிவாகக் கூற மன்ரோவிற்கு அவர் கூற்றின் நியாயம் புரிந்தது. வேறு யாருக்கும அவர் தென்படவில்லை என்பதும் அவர் ஜீவ சமாதி எய்தி நெடுங்காலம் ஆயிற்று என்பதையும் உணர்ந்து கொண்ட மன்ரோவிற்கு பயபக்தி ஏற்பட்டது. சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து அங்கிருந்து புறப்பட்டார்.
அந்த நிலத்தை அரசு கையகப்படுத்த முடியாது என்பதை உரிய ஆதாரங்களுடன் மன்ரோ அரசுக்குத் தெரிவிக்க மந்த்ராலயம் உரியபடி பாதுகாக்கப்பட்டது. அவரது உத்தரவு சென்னை கெஜட்டில் முறையாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. ராகவேந்திரரை தரிசித்து அவர் அருள் பெற்ற இந்த நிலையில் சர் தாமஸ் மன்ரோவிற்கு தற்காலிக ஆளுனராக – கவர்னராக – ப்ரமோஷன் கிடைத்தது. தனது நாற்காலியில் உட்கார்ந்த அவர் கையெழுத்திட வந்த கோப்புகளைப் பார்த்தார். அதில் முதல் கோப்பாக மேலே இருந்தது மந்த்ராலயம் பற்றிய கோப்பு தான். மனமுருகிய அவர் அதில் தனது முதல் கவர்னர் கையெழுத்தைப் போட்டார்.
மன்ரோவின் சிலை சென்னையில் உள்ளதை அனைவரும் அறிவர். குதிரை மீது அவர் அமர்ந்திருக்கும் 15 அடி உயரமுள்ள சிலை 1834இல் இங்கிலாந்தில் செய்யப்பட்டது. 6 டன் எடையுள்ள இந்தப் பெரிய சிலை அங்கிருந்து சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு 23-10-1839இல் சென்னையில் தீவுத்திடல் அருகே நிறுவப்பட்டது.
இப்படி ராகவேந்திரரின் பக்தரான ஒரு வெள்ளையருக்ககு அவர் அருள் பாலித்ததையும் ஆட்சியாளராக இருந்த அவர் கவர்னராக ப்ரமோஷன் பெற்றதையும் வரலாறு குறிப்பிடுகிறது. அவரது ஆணை கெஜட்டில் வெளியிடப்பட்டதை இன்றும் காணலாம். (Madras Government Gazette in Chapter XI, page 213, with the caption “Manchali Adoni Taluka”.) இந்த அரசாணை இன்றும் ஃபோர்ட் செயிண்ட் ஜார்ஜிலும் மந்த்ராலயத்திலும் காப்பாற்றப்படு வருகிறது.
ராகவேந்திரர் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார். த்வைத தத்துவத்தை இனிமையாகவும் எளிமையாகவும் அழகுறவும் விளக்கும் திறம்படைத்தவர் அவர். ப்ரம்மசூத்ரத்திற்கு பாஷ்யமாக அவர் எழுதிய தந்த்ர தீபிகா மிகவும் புகழ் பெற்ற ஒன்றாகும். உபநிஷதங்களுக்கு அவர் அளித்துள்ள விளக்கவுரைகளும் ஜைமினி சூத்ரத்திற்கு ‘பட்ட சங்க்ரஹா’ என்ற அவரது பாஷ்யமும் மிகவும் போற்றப்படும் நூல்களாகும்.
மந்த்ராலயம் கர்நாடக ஆந்திர எல்லையில் துங்கபத்ரா நதியின் தென்கரையில்
ஆந்திராவில் உள்ள கர்நூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பங்களூரிலிருந்து இது சுமார் 380 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னையிலிருந்து சுமார் 547 கிலோமீட்டர் தொலைவிலும் ஹைதராபாத்திலிருந்து 250 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
பூஜ்யாய ஸ்ரீ ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச |
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் ஸ்ரீ காமதேனவே || ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நம:!
நன்றி, வணக்கம்!
*** முற்றும்
tag- ராகவேந்திரர்! – 3