
ஆராய்ச்சிக் கட்டுரை: – லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:— 1203; தேதி ஜூலை 30, 2014.
ஐம்பெரும் தமிழ் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் பல சுவையான காட்சிகள் இருக்கின்றன. 2000 ஆண்டுகளுக்கு முன் நாம் தமிழ் நாட்டில் பிறந்திருந்தால் பார்த்திருக்கக் கூடிய ஒரு காட்சியை மட்டும் காண்போம்.
கண்ணகி, பாண்டிய அரசன் அவைக்குள் நுழைவதற்கு முன் பாண்டிய மஹாராணி கோப்பெருந்தேவிக்கு தீய கனவு வந்தது. பாண்டிய ராஜனிடம் இதைச் சொல்ல வேண்டும் என்று கவலையுடன் வருகிறாள் மஹாராணி. அப்போது அவளுடன்…………………..
சில அழகிகள் முகம் பார்க்கும் கண்ணாடி ஏந்தி வந்தனர்
சிலர் அவளுடைய நகைகளக் கொண்டுவந்தனர்
சிலர் அரசியைப் பார்க்க அல்லவா போகிறோம் என்று நல்ல நகைகளைப் போட்டுக் கொண்டு வந்தனர்!

சிலர் பருத்தி ஆடை, பட்டு ஆடைகளை தட்டுகளில் கொண்டுவந்தனர்.
வெற்றிலைப் பெட்டிகளைக் கொண்டுவந்தனர்
இன்னும் சிலர் வர்ணங்கள், வாசனைப் பொடிகள், கஸ்தூரிக் குழம்பு கொண்டுவந்தனர்.
((இவை இந்தக் கால பெண்கள் கைப்பையில் கொண்டு போகும் லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ், பவுடர், பெர்Fயூம், கன்னத்துக்கான கலர் பூச்சு, மருதானி இவைகளுக்குச் சமமானவை. பெண்கள் அன்றும் இப்படிதான்!! இன்றும் அதே மாதிரிதான்!!))
(கஸ்தூரி என்பது ஒரு வகை மானிலிருந்து கிடைக்கும் வாசனைப் பொருள்)
சிலர் மாலை, கண்ணி, பிணையல் ஏந்தி வந்தனர் (மாலை, மலர் வளையம், பூச்செண்டு என்று கொள்ளலாம்)
பெண்கள் இரு பக்கங்களிலும் கவரி (விசிறி) வீசி வந்தனர்.
இன்னும் சிலர் சாம்பிராணி போடுவதுபோல அகில் புகையை எழுப்பி வந்தனர்.
அரசிக்குச் சேவகம் செய்ய கூன் முதுகு — (ராமாயணக் கூனி) — குள்ளப் பெண்கள், ஊமைகள் ஆகியோரும் வந்தனர். அந்தக் காலத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசவையில் எளிதில் வேலை கிடைத்தது. இவர்கள் மூலம் ரகசியம் வெளியாகும் வேகத்தைக் கட்டுப்படுத்தலாம். ஊமையோ, முடவனோ, கூனியோ வெளியே ஓடிப் போய் ரகசியத்தை வெளியிட முடியாது. மேலும் இத்தகையோருக்கு பாதுகாப்பு தருவது அரசாங்கத்தின் கடமை என்பதால் வட இமயம் முதல் தென் குமரி ஈறாக இந்த வழக்கம் இருந்ததை இதிஹாச புராணங்கள், நீதி நூல்கள் மூலம் அறிய முடிகிறது.
நரை முடி உடைய பல வயதான பெண்கள் வாழ்க! வாழ்க!! பாண்டிய மஹாராணி வாழ்க! கோப்பெருந்தேவி வாழ்க!!! என்று கோஷம் போட்டுக் கொண்டே வந்தனர்.
(இன்றைய அரசியல் தலைவர்கள் பின்னால் இப்படி ஒரு கூட்டம் வருவதற்கு முன் மாதிரி இது)

பாண்டிய மன்னன் இருந்த அவைக்குச் சென்று அவனிடம் தான் கண்ட தீய கனவைச் சொல்லத் துவங்கினாள்! அவன் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தான்.
அந்த நேரத்தில், அரண்மனை வாசலில் பெரிய சப்தம்! தலை விரி கோலமாக கண்ணகி வந்து சத்தம் போடத் துவங்கினாள்.

ஆடி ஏந்தினர், கலன் ஏந்தினர்,
அவிர்ந்து விளங்கும் அணி இழயினர்
கோடி ஏந்தினர், பட்டு ஏந்தினர்,
கொழுந்திரையலின் பட்டு ஏந்தினர்,
மான் மதத்தின் சாந்து ஏந்தினர்,
கண்ணி ஏந்தினர், பிணையல் ஏந்தினர்,
கவரி ஏந்தினர், தூபம் ஏந்தினர்,
கூனும் குறளும், ஊமும் கூடிய
குறுந்தொழில் இளைஞர் செறிந்து சூழ்தர;
நரை விரை இய நறுங்கூந்தலர்,
உரை விரை இய பலர் வாழ்த்திட;
ஈண்டு நீர் வையம் காக்கும்
பாண்டியன் பெருந்தேவி வாழ்க! என,
ஆயமும் காவலும் சென்று
அடியீடு பரசி ஏத்தக;
கோப்பெருந்தேவி சென்று, தன்
தீக்கனாத் திறம் உரைப்ப —
அரிமான் ஏந்திய அமளிமிசை இருந்தனன்,
திருவீழ் மார்பின் தென்னவர் கோவே – இப்பால்
(வழக்குரை காதை, சிலப்பதிகாரம்)

–சுபம்—
You must be logged in to post a comment.