மஹரிஷி ஜாபாலி! -3 (Post No.7848)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7848

Date uploaded in London – – 19 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

மஹரிஷி ஜாபாலி பற்றிய மூன்று கட்டுரைகளில் இது கடைசிக் கட்டுரை

மஹரிஷி ஜாபாலி! -3

(ஜாபாலியின் நாத்திக வாதத்திற்கு ராமரின் பதில்!)

ச.நாகராஜன்

ஜாபாலி ராமரைப் பார்த்துக் கூறிய நாத்திக வாதத்தை, ராமர் வெறுத்து ஒதுக்குவதை வால்மீகி ராமாயணம் அயோத்யா காண்டம் 109வது ஸர்க்கம் விரிவாகச் சொல்கிறது. இந்த ஸர்க்கம் 40 ஸ்லோகங்களைக் கொண்டது.

அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்.

ஜாபாலியின் நாத்திக வாதத்தைக் கேட்ட ராமபிரான் தனது சுபுத்தியாலேயே இப்படிச் சொல்ல ஆரம்பித்தார் என்று முதல் ஸ்லோகம் கூறி இயல்பாகவே ராமர் ஆத்திகர் என்பதைக் கூறுகிறது. (இறைவன் ஒரு ஆத்திகன்!)

நீர் சொல்வது செய்யக் கூடாதது (அகார்யம்!), இதமளிக்காதது (அபத்யம்).

ஒருவன் சுசியா அல்லது அசுசியா என்பதை ஒழுக்கம் ஒன்றே உரைக்கின்றது. (சாரித்ரம் ஏவ வ்யாக்யாதி)

ராஜானுஷ்டானம் சத்யம் மட்டுமே தான்! (ராஜவிருத்தம் சத்யம் ஏவ!)

சத்யம் ஏவ பஜேத்! (ஒவ்வொருவனும் சத்யத்தையே சர்வமுமாகக் கொள்ள வேண்டும். சத்யத்தை  மேற்கொண்ட நான் அதன்படியே நடப்பேன்!)

பரலோக நம்பிக்கை கொண்டவனாக இருந்து கொண்டு உலக வாழ்வை நடத்துவேன். (ச்ரத்ததான: சன் லோகயாத்ராம் ப்ரவர்த்தயே)

ஒரு புத்திமானானவன் ஜனங்களுக்கு நாத்திகவாதத்தால் சந்தேகப்படுபவனாக எவன் ஒருவன் இருக்கிறானோ அவனுக்கு முகமே கொடுக்க மாட்டான். (நாத்திகவாதியை முகத்தாலும் பார்க்க மாட்டான்!)

     கோபத்துடன் (சரோஷம்) இப்படிக் கூறிய ராமரைப் பார்த்து தணிந்த குரலில் ஜாபாலி கூறினார் இப்படி : நான் நாத்திகர்களுடைய வசனத்தைச் சொல்லவில்லை. (அஹம் நாஸ்திகானாம் வசனம் வ்ரவீமி ந). நான் நாத்திகனும் இல்லை. (அஹம் நாஸ்திக: ச ந) எதுவும் இல்லை என்பதும் இல்லை (கிஞ்சன ந அஸ்தி ந). சமயத்திற்கேற்றபடி ஆத்திகனாய் இருப்பேன். (காலம் சமீக்ஷய ஆஸ்திக: பவேய). இச்சமயத்தில் சமயத்திற்கேற்றபடி நாஸ்திகனாய் இருந்தேன். (காலே புன: ஏவ நாஸ்திக: அபவம்)

இப்படி  ஒரேயடியாக மாறிய (பல்டி அடித்த) மஹரிஷி ஜாபாலி ராமரை திருப்பி அழைத்துப் போவதன் பொருட்டே தனது வார்த்தைகள் சொல்லப்பட்டது என்பதை ஒப்புக் கொள்கிறார்.

இப்படியாக ஜாபாலியின் போலி வாதம் ஒரு முடிவுக்கு வந்தது.

*

இனி பல முனிவர்கள் ஜாபாலி என்ற பெயருடன் இருந்ததால் ராமாயணத்தில் வரும் ஜாபாலி முனிவர் பற்றிய விஷயங்களை மட்டுமே இது வரை பார்த்தோம்.

ஜாபால உபநிடதம் போன்றவற்றை இங்கு நாம் சொல்லவில்லை.

அடுத்து ஜபல்பூர் நகரமே ஜாபாலி மஹரிஷியின் பெயரால் அமைந்தது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நர்மதை நதிக் கரையில் ஜாபாலி வெகு காலம் தவம் புரிந்ததாகவும் நாம் காண்கிறோம்.

*

திருப்பதியில், கோவிலிலிருந்து சுமார் இரண்டு மைல் தூரத்தில் ஜாபாலி தீர்த்தம் என்று ஒரு அழகிய தீர்த்தம் உள்ளது. இந்த இடத்தில் தான் மஹரிஷி ஜாபாலி தவம் செய்து முக்தி அடைந்தார் என்று சொல்லப்படுகிறது.

இங்கு ஒரு ஆஞ்சனேயர் ஆலயமும் அஞ்சனா தேவி தீரத்தமும் உள்ளன.

திருப்பதியில் உள்ள இன்னொரு பிரசித்தி பெற்ற தீர்த்தமான பாபவினாசன தீர்த்தமும் கூட ஜாபாலி மஹரிஷியுடன் தொடர்பு படுத்தப்பட்டு இங்கு ஜாபாலி தவம் புரிந்ததாகக் கூறப்படுகிறது.

*

சென்னையிலிருந்து சுமார் எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள தலம் சிங்கப்பெருமாள் கோவில். முன்னொரு காலத்தில் இது காடாக இருந்தது. அப்போது ஜாபாலி மஹரிஷி விஷ்ணு எடுத்த நரசிம்ம கோலத்தை இங்கு காண விரும்பியதாகவும்  அதன்படி விஷ்ணு அவருக்கு அருள் பாலித்து தன் நரசிம்ம கோலத்தைக் காண்பித்ததாகவும் இந்தத் தலத்தின் தல வரலாறு கூறுகிறது.

 இதே போல வட நாட்டிலும் ஜாபாலி மஹரிஷியை தொடர்பு படுத்திக் கூறப்படும் தலங்களும் உள்ளன.

மஹரிஷி ஜாபாலி விஷ்ணு பக்தர் என்பதையும் ராமரின் அரசவையில் இடம் பெற்றவர் என்பதையும் இராமாயணம் மற்றும் புராணங்கள், தல வரலாறுகள் ஆகியவற்றால் அறிந்து கொள்ள முடிகிறது.

பெரும் மஹரிஷிகளில் இடம் பெறும் ஜாபாலி வித்தியாசமான ஒரு மஹ ரிஷி!

***

ஜாபாலி மஹரிஷியைப் பற்றிய இந்தத் தொடர் நிறைவு பெறுகிறது.

tags — ஜாபாலி! -3 ,ராமரின் பதில்