கட்டுரை எண் 923 தேதி 22 மார்ச் 2014.
Hercules Statue in the Vatican Museum. It was taken during my second trip to Rome in Italy in 2012.
அரியநாயகிபுரம் ஐயரின் வடதுருவப் பயணம்-Part 2
ஜகத்குரு போப் தரிசனம்
மகாமேரு யாத்திரை என்ற புத்தகம் 1936ல் அரியநாயகிபுரம் அனந்தகிருஷ்ண சாஸ்திரிகளால் வெளியிடப்பட்டது. முதல் பகுதியில் சில சுவையான விஷயங்களைக் கண்டோம். இந்த இரண்டாவது பகுதியில் ரோமாபுரி பற்றி அவர் எழுதியதைக் கீழே படியுங்கள்:
1.உடனே அந்தக் கப்பலில் ஏறி மெடிட்டரேனியன் கடல் வழியாக வடமேற்கில் 1118 மைல் தூரத்தில் இருக்கிற இடாலி தேசத்திலுள்ள் நேபில்ஸ் பட்டணம் வந்து இறங்கினேன். நேபில்ஸ் நகரைப்பற்ரிய பழமொழி ஒன்று உண்டு. அஃதாவது ‘மரணமடையு முன் மனிதன் நேபில்ஸ் பட்டணம் பார்க்க வேண்டும்’ என்பதாம்.. அந்தப் பட்டணத்திலிருந்து 18 மைல் தூரத்தில் வஸூவியஸ் என்ற எரிமலை ஒன்று இருக்கிறது.அந்த மலையில் எரிகிற அக்னியைப் பார்க்கலாம். அங்கே மேற்பார்வைக்கென்று அமர்த்தப்பட்டிருக்கும் போலீஸ்காரன் உடன் வந்து தீ எரிகிறதைக் காண்பிக்கிறான்.
2.அந்த எரிமலைக்கு மேற்கே 25 மைல் தூரத்திலிருந்த பாம்ப்பே பட்டணமானது எரிமலைப் பிரவாகத்தினால் கி.பி.79 ஆம் ஆண்டில் அழிந்து இப்போது சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் வெட்டி எடுக்கப்பட்டது. அங்கே 176 தெருக்கள் இருந்திருக்கின்றன. பட்டணத்தின் நடுவில் சூரியன் கோவில் ஒன்று உண்டு. அதற்கு ஜூபிடர் ஆலயம் என்று பெயர். ஜூபிடர் என்பது வேதத்தில் ‘தியௌப் பிதா’ என்ற சொல்லின் சிதைவாம். நம் ஆரியர்களுடைய புராதனமான நாகரீகத்தை கிரேக்கர் பின்பற்றினர். கிறிஸ்தவ மதம் பரவ ஆரம்பித்தவுடன் இந்த வைதீகப் பூஜைச் சடங்குகள் எல்லாம் மெள்ள மெள்ள மாறிவிட்டன. பாம்ப்பே கோயிலை நீங்கள் பார்த்தால் இதை மலையாளத்திலுள்ள ஒரு கோயிலென்று சொல்லுவீர்கள்.
3.பரதகண்டத்துக் கணித சாஸ்திர வித்வான்கள் அநேகர் ரோமாபுரிக்குப் போய்ச் சில காலம் அங்கே வசித்திருக்கிறர்கள். அவர்களில் சிலர், அந்த தேசத்து வித்வான்களைத் தங்கள் குருவாகக் கொண்டாடி, தக்கள் எழுதிய சம்ஸ்கிருத கிரந்தங்களில் ரோமகாசாரியர்களுக்கு நமஸ்காரம் சொல்லியிருக்கிறார்கள். சுமார் 1500 வருஷங்களுக்கு முன் வராகமிகிரர் என்பார் தாம் எழுதிய பிரகத் ஜாதகத்தில் 12 ராசிகளில் பாதிக்கு மேல் ரோம் பாஷைப் பெயரைக் கொடுத்துவிட்டார். மேஷத்துக்கு ‘க்ரிய’ என்றும், ரிஷபத்துக்கு ‘தாவுரி’ என்றும், ஸிம்ஹத்துக்கு ‘லேய’ என்றும் இம்மாதிரி பெரும்பாலான பெயர்களைக் கணித சாஸ்திரத்திலும் ஜோதிஷ சாஸ்திரத்திலும் நாம் காணலாம்.
4. ஒன்பதாம் நூற்றாண்டில் வந்த பட்டோத்பலர் என்பவரும் தம் வியாக்கியான புஸ்தகங்களில் ‘இது ரோமகாசாரியர் அபிப்பிராயம்’, இது ‘ரோமக சித்தாந்தம்’ என்று அடிக்கடி எழுதியிருக்கிறார்.
5.ரோமாபுரி ஒரு அழகான பட்டணம். கிறிஸ்துவின் முக்கிய சிஷ்ய பரம்பரை மடாதிபதியினுடைய மூலஸ்தானமும் இதுவே. கிறிஸ்துவின் பிரதம சிஷ்யர் பெயர் ஸெயின் ட் பீடர். அவர் கையில் மோக்ஷ வாசற் கதவின் சாவியை குரு கொடுத்துவிட்டுப் போனதாக கிறிஸ்தவர்களிடையே ஒரு செய்தி வழங்கி வருகிறது. ஆகையால் ஸெயின் ட் பீடர் கோயிலிலும், அதை யடுத்திருக்கிற மடத்திலும் பரம்பரையாக வருகிற கிறிஸ்தவ குருக்கள் உடுத்துக்கொள்ளுகிற ஆடைகளிலும் தங்கத் திறவுகோலின் அடையாளம் இருப்பதை இப்பொழுதும் பார்க்கலாம். ஸெயின் ட் பீடர் கோயிலானது, பூலோகத்தில் உள்ள விலையுயர்ந்த உத்தமமான கட்டடங்களில் ஒன்றாகும்.
6.ஸ்ரீ கிறிஸ்து மஹாமுனிவரின் உருவச்சிலையும் அவரது 12 சிஷ்யர்களின் உருவச்சிலைகளும் உயர்ந்த வெள்ளைக் கற்களால் அமைக்கப்பட்டு மேற்கூறிய கோயிலில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கோயிலின் மத்திய பாகத்தில் ஸ்ரீ கிறிஸ்துவின் உருவச்சிலையும் அவர் மாதா மேரியின் உருவச்சிலையும் சில இடங்களில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. எப்பொழுதும் அணையாத் தீபத்துடன் வெகு விமரிசையாக பூஜயும் நடந்துவருகிறது.
7.தங்க வர்ணத்தினால் சித்திரங்கள் சுவர்களிலேயும் மேல்பாகங்களிலேயும் எழுதப்பட்டிருத்தலால் கோவிலுக்குள் நுழையும்போது மகிழ்ச்சி யுண்டாகிறது. பக்தர்கள் எப்பொழுதும் வந்து நமஸ்காரம் செய்து தமது தலைகளை ஸ்ரீ கிறிஸ்துவின் கால் கட்டைவிரலில் தொட்டுவிட்டு ஜபஞ் செய்து போகிறார்கள். சில பிம்பங்களுக்குப் பூஜை செய்கிற சில குருக்கள் உட்கார்ந்துகொண்டு ஒரு நீளப் பிரம்பினால் பக்தர்கள் தலையில் ‘உன் பாபம் போயிற்று’ என்று தட்டுவார்கள். சில பக்தர்கள் தினந்தோறும் செய்த எந்த ரகஸிய பாபங்களையும் குருவின் முன் ஒப்பித்து ஞான ஸ்நானத்துடன் மன்னிப்பு பெறுவார்கள்.
Parthenon in Rome where Romans enjoyed fights between man and lion.
8. ஸெயின் ட் பீடர் கோயிலிலுக்கு அருகிலிருப்பது ஸ்ரீகுருவின் மடம். அதற்கு ‘வெடிகன்’ என்று பெயர். இப்பொழுது அதன் தலைவராகிய ஜகத்குருவானவர் சுமார் 70 வயதுள்ளவர்; சிறந்த தபசி. இவர் மிகவும் கௌரவம் வாய்ந்தவர்.. உலக மக்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கினராகிய கிறிஸ்தவர்களுக்கு இந்த மடாதிபதி பரம்பரைக் குருவாவார்; நிறைந்த ஸம்பத்துள்ளவர். ஆதலால் இவ்வுலகில் இவர் ஒரு முக்கிய ஸ்ரீமான் ஆவார். அவருடைய தரிசனம் எளிதில் கிடைப்பது இல்லை; தவிரவும் கிறிஸ்தவர்களே யன்றி அயலார் அவரைத் தரிசிப்பதாயினும் தூரத்திலிருந்து மண்டியிட்டுக் கும்பிடவேண்டுமென்பது வழக்கத்திலிருந்து வருகிறது.
9.மடாதிபதியான போப் குருவைத் தரிசிப்பது மிகவும் எளிதன்று முன்னரே குறிப்பிட்டுள்ளோம். வாரத்தில் குறிப்பிட்ட நாட்களில் ஒரு காலம் குறிப்பிடப்படும்; அப்போது ஜனங்கள் கூட்டம்கூட்டமாக மடத்துக்குப் போய்க் காத்திருப்பார்கள். தூரத்திலிருந்தே அவருடைய தரிசனம் பெறலாம்; வித்துவான்களுக்கும் ஸம்பன்னர்களுக்கும் மாத்திரம் சமீபத்தில் தரிசனம். ராஜாக்களும் பிரஸித்தி வாய்ந்தவர்களும் அவரைத் தொடும் பாக்கியம் பெறுவார்கள்; அஃதாவது அவர் கையில் போட்டிருக்கிற குரு பரம்பரையாக வந்த மோதிரத்தை அவர்கள் முத்தமிடுவார்கள். ஆனால் எல்லோரும் மண்டியிட்டு நமஸ்காரம் செய்யவெண்டும். அதற்கு இஷ்டமில்லாத வர்களுக்கு போப்பின் தரிசனம் கிடைக்காது. தவிர, காணிக்கையும் உண்டு. இந்த காணிக்கையினால்தான் இம்மடமானது அபரிமிதமான ஸம்பத்துடன் கூடி விளங்குகிறது.
10. அவர்கள் மடத்துப் புஸ்தக சாலையில் இருந்தசில இந்திய ஏட்டுச் சுவடிகளுக்கு ஒரு ஜாப்தா (லிஸ்டு) இலவசமாகத் தயாரித்து நான் கொடுத்தபடியினாலும், ரோம் யூனிவர்ஸிடி மாணவர்களுக்கு உபந்நியாசம் செய்ய என்னைக் கேட்டபடியினாலும், யூனிவர்ஸிடி அத்யக்ஷர் (சான்ஸலர்) நேரே போப்பினிடத்தில் இருக்கிற கார்டினல் அவர்களுக்கு என் வருகையை எழுதினதினாலும் எனக்கு போப்பின் தரிசனத்துக்கு அனுமதி கிடைத்தது. தவிர நான் இந்தியாவிலிருந்து சென்ற சாஸ்திரியாகவும், வைதீகனாவும் இருந்ததனால் மேலே கூறிய நிபந்தனைகள் யாதும் இல்லாமல் எளிதில் ‘த்ரோம்ரூம்’ என்ற அறையில் சென்று அவரைத் திசித்தேன். அவரும் உபசாரத்துடன் என் கைகளைத் தொட்டு இழுத்துக்கொண்டு சுமார் 10 நிமிஷங்கள் பேசினார்
Globe inside the basilica
11. இந்தியாவிருந்து வந்த ஒரு ஏழை வைதிகப் பிராமணனை அவர் அவ்விதம் உபசரித்ததானது எல்லோருக்கும் வியப்பை யளித்தது. அவருடன் சிறிது நேரம் சம்பாஷித்ததிலிருந்து அவர் ஒரு உத்தமர் என்று உணரலானேன். ஆயிரக்கனக்கான பக்தர்கள் கீழே தரிசனத்துக்காக காத்துக் கொண்டிருந்தபடியால் விரைவில் விடைபெற்றுத் திரும்பிவிட்டேன். போப் குருவால் ஒரு இந்திய சாஸ்திரி சமமாக உபசரிக்கப்பட்டார் என்ற செய்தியை ராய்டர் தந்தி உத்தியோகஸ்தன் ஒருவன் ‘வெடிகன்’ ஆபீஸர் மூலமாகத் தெரிந்துகொண்டு எங்கும் பத்திரிக்கைகளுக்குத் தெரிவித்துவிட்டான்; அச்செய்தி ரோம் பத்திரிகைகளிலும் அன்று மாலையிலேயே வெளியாயிற்று. அதுமுதல் நான் வெளியே செல்லும் போதெல்லாம் ‘ இவர் கீழ்தேசத்து உபதேசகர்; போப்பின் உபசாரம் பெற்றவர்’, என்று ஜனங்கள் பேசிக்கொண்டார்கள். டிராம் உதலான இடங்களில் எண்ணைக் கண்டால் எழுந்து உபசாரம் செய்யலாயினார்.
தொடரும்……………………
(இது எல்லாம் 1936ஆம் ஆண்டில் எழுதப்பட்டது என்பதை நினைவில் வைத்துக் கொண்டு படிக்க வேண்டும். நான் கூட 2007, 2012 ம் ஆண்டுகளில் இரு முறை ரோம், வாட்டிகன் சென்று வந்துவிட்டேன். இப்போது இது எல்லாம் நமது இமய மலை மாதிரி புனிதத்வத்தை இழந்து சுற்றுலாத் தலங்களாக ஆகிவிட்டன!!!:– சுவாமி)
contact swami_48@yahoo.com




You must be logged in to post a comment.