மரணத்தைக் கண்டு அஞ்சுகிறீரா! மஹாராணியின் கேள்வி! (Post No.4506)

Date: 17  DECEMBER 2017

 

Time uploaded in London- 6-40 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4506

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

தமிழ் இன்பம்

மரணத்தைக் கண்டு அஞ்சுகிறீரா, பாண்டியரே! மஹாராணியின் கேள்வி!

 

ச.நாகராஜன்

 

1

மாமன்னன் வரதுங்க பாண்டியன் மஹா சிவ பக்தன். மஹாராணியும் சிறந்த சிவ பக்தை. இருவருமே தமிழில் அருமையாகக் கவிதை புனையும் ஆற்றல் படைத்தவர்கள். சிவ மணமும் தமிழ் மணமும் கமழ பாண்டிய தேசம் சுபிட்சமாக இருந்தது.

 

நாட்கள், மாதங்கள் ஆகி, மாதங்கள் வருடங்கள் ஆகி வருடங்கள் உருண்டோடின.

 

மன்னன் வாழ்நாளின் இறுதியை அடைந்தான்.

மரணப்படுக்கையில் வரதுங்க பாண்டியர் படுத்திருக்க, மஹாராணி அருகில் அமர்ந்திருந்தாள்.

மன்னன் முகத்தில் சிந்தனை ஓங்கியிருந்தது. யாரையோ அவன் நினைத்துக் கொண்டிருந்தான் போலும்!

 

மன்னனைப் பார்த்த மஹாராணி மெதுவாகக் கேட்டாள்: “மன்னரே, மரணத்தைக் கண்டு பயமாக இருக்கிறதா?”

பாண்டியன் சிரித்தான். “எனக்கா, மரணத்தைக் கண்டா, பயமா. ஹஹ்ஹஹ்ஹா”

 

மன்னனின் சிரிப்பைத் தொடர்ந்து பாடல் ஒன்று பிறந்தது. தமிழில் சிவம் கலந்த பாடல் அது.

 

2

பாண்டியனின் பாடலையும், மஹாராணியின் பாடலையும் கால வெள்ளம் அழித்து விடவில்லை. இன்றும் அவை நம் முன்னே இருக்கின்றன.

பாடல்களைப் பார்ப்போமா?

 

அஞ்சலென்ற கரதலமுங் கணபண கங்கணமும்

அரைகிசைந்த புலியுடையு மம்புவிச் செஞ்சடையும்

கஞ்சமலர்ச் சேவடியுங் கனைகழலுஞ் சிலம்பும்

கருணைபொழி திருமுகமுங் கண்களொரு மூன்றும்

நஞ்சையுண்ட மணிமிடரு முந்நூலு மார்பும்

நலந்திகழ்வெண் ணீற்றொளியு மறியானு மழுவும்

பஞ்சடிச்சிற் றிடையுமையா ளொப்பனைபா கமுமாய்ப்

பால்வண்ண ருளத்திருக்கப் பயமுண்டோ யெனக்கே!

 

 

பால் வண்ணர் என் உள்ளத்தில் முழுக் கோலத்துடன் இருக்கையில் பயமா, எனக்கா என்றான் பாண்டியன்.

பாடலின் முழுப் பொருள் :

 

அஞ்சல் என்ற கரதலமும் – அஞ்சாதே என்று அபயம் கொடுக்கும் கையும்

கணபண கங்கணமும் – வட்டமாகிய படங்களையுடைய பாம்பாகிய கங்கணமும்

அரைக்கு இசைந்த புலி உடையும் – இடுப்பிற்கேற்ற புலித்தோலால் ஆன ஆடையும்

அம்புவி செஞ்சடையும் – சந்திரனை அணிந்த சிவந்த சடையும்

கஞ்சமலர் சேவடியும் – தாமரை மலரைப் போன்ற சிவந்த திருவடியும்

கனைகழலும் சிலம்பும் – ஒலிக்கின்ற வீரக்கழலும் சிலம்பும்

கருணைபொழி திருமுகம் – அருள் மழையைப் பொழிகின்ற திருமுகமும்

 

கண்கள்  மூன்றும் – ஒப்பற்ற மூன்று கண்களும்

நஞ்சையுண்ட மணிமிடறும் – விஷத்தை உண்ட நீலமணி போலும் கழுத்தும்

முந்நூலும் மார்பும் – மூன்று இழைகளைக் கொண்ட பூணூலும் மார்பும்

 

நலம் திகழ் வெண்ணீற்று ஒளியும் – அழகு விளங்க நிற்கும் திருவெண்ணீற்றின் ஒளியும்

மறிமானும் – மான் கன்றும்

மழுவும் – மழு ஆயுதமும்

 

பஞ்சு அடி சிற்றிடை உமையாள் – பஞ்சு போன்ற பாதத்தையும் சிற்றிடையையும் கொண்ட உமாதேவி

ஒப்பனை பாகமும் ஆய்  – ஒப்பனையம்மை பாகமும் ஆகி

பால்வண்ணன் உள்ளத்து இருக்க – பால்வண்ண நாதர் எம்முளத்தில் இருக்கும் போது

எனக்குப் பயமும் உண்டோ – எனக்குப் பயமும் உண்டோ?

நிச்சயமாக இல்லை

Picture posted by Lalgudi Veda

இதைக் கேட்டு மனம் உருகிய பாண்டிமாதேவி பாடினாள் இப்படி:

யாக்கையெனும்  புழுக்குரம்பை யணைந்தனையாப் பொருளை

அருளொளியைப் பராபரத்துக் கப்புறவா மறிவை

நீக்கமற மயிர்முனைக்கு மிடமறவெங் கெங்கும்

நிறைந்து நின்ற முழுமுதலை நினவிலெழுஞ் சுடரைப்

பாக்கியங்கள் செய்தனந்தத் தவக்குறைகண் முடிக்கும்

பழவடியார் தமக்குதவும் பசுந்துணர்க்கற் பகத்தை

வாக்குமன விகற்பாத்தா லளவுபடா வொன்றை

மாசற்ற வெறுவெளியை மனவெளியி லடைப்பாம்

 

 

இதன் பொருள் ;

ஆக்கை என்னும் புழுக்குரம்பை அணைந்து அணையா பொருளை – உடம்பென்கிற புழுக்கூட்டைச் சேர்ந்தும் சேராத பரம்பொருளை

 

அருள் ஒளியை – அருள் பிரகாசத்தை

பராபரத்துக்கு அப்புறம் ஆம் அறிவை –  பரம், அபரம் என்பவைகளுக்கு அப்பாற்பட்ட அறிவை (பரம் – ஆதி; அபரம் – அந்தம்)

நீக்கம் அற –  நீங்குதலின்றி

மயிர் முனைக்கும் இடம் அற – மயிர் முனையை ஊன்றுதற்கும் இடமில்லாமல்

 

எங்கெங்கும் நிறைந்து நின்ற முழுமுதலை –  எவ்விடத்தும் நிறைந்து நிற்கின்ற முதற்பொருளை

நினைவில் எழும் சுடரை – நினைப்பில் உண்டாகின்ற ஒளியை

பாக்கியங்கள் செய்து – அதிர்ஷ்டங்களைச் செய்து

அநந்தம் தவக்குறைகள் முடிக்கும் – அளவற்ற தவக்குறைகளை நிறையச் செய்கின்ற

பழ அடியார் தமக்கு உதவும் – பழ அடியார்க்கு வேண்டும் பொருளைக் கொடுக்கின்ற

 

பசுதுணர் கற்பகத்தை – பசுமையாகிய பூங்கொத்துகளை உடைய கற்பக விருட்சத்தை

வாக்குமன விகற்பத்தால் – வாக்கு மனங்களின் வேறுபாட்டால்

அளவுபடா ஒன்றை – அளவிடப்படாத ஒரு பொருளை

மாசு அற்ற வெறுவெளியை – களங்கமற்ற வெட்ட வெளியை

மனவெளியில் அடைப்பாம் – மனமாகிய ஆகாயத்தில் அடைத்து வைப்போம்

Picture posted by Lalgudi Veda

மஹாராணி, “பாண்டியரே! ஆம்! எங்கும் நிறைகின்ற பொருளை நம் மனதில் எப்போதும் வைத்திருப்போம்!” என்று நெஞ்சுருகச் சொன்னாள்.

 

வரதுங்க பாண்டியர் சிவபதத்தைச் சேர்ந்தார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?!

 

3

 

மன்னரானாலும் சரி, மஹாராணியானாலும் சரி, யோகியானாலும் சரி, சாமானிய மனிதன் என்றாலும் சரி, பண்டைய நாட்களில் தம் தம் வாழ்வை நெறியுடன் நடத்தி மனமகிழ்ச்சியுடன் அனைவரும் வாழ்ந்தனர்.

உரிய காலம் முடியும் போது சிவ சிவ என்றோ அல்லது ராம ராம என்றோ தமக்குப் பிடித்த இறைவனின் நாமத்தைக் கூறி அமைதியாக உயிரை விட்டனர்.

 

வரலாறை எடுத்துப் பார்க்கும் போது தமிழகத்தின் பெரிய மனிதர்களின் இறுதிக் கணங்களில், அவர்கள் சைவ சமயத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பின்,  திருவாசகத்தை ஓதச் செய்து கேட்பது மரபாக, பழக்கமாகவே இருந்திருக்கிறது.

அற்புதமான ஒரு பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் நாம் என்பதை அறியும் போது உளம் நெகிழ்கிறது, இல்லையா!

 

தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

****

பெண் சிரித்தாள்! படை எடுத்தான் பாண்டியன்!! (Post No.4404)

Written by London Swaminathan 

 

Date: 17 NOVEMBER 2017

 

Time uploaded in London- 17-43

 

 

Post No. 4404

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பெண்கள் சிரித்தால் போர் மூளும் என்பது மஹா பாரத காலத்திலும் உண்மை; 500 ஆண்டுகளுக்கும் முன்னரும் உண்மை!

மயன் கட்டிய மாளிகையில்,  சலவைக் கல் தரை, கண்ணாடி போல, பளபளத்தது. அதைத் தண்ணீர் என்று நினைத்த துரியோதனன், தன் பட்டாடை  நனைந்து விடப் போகிறதே என்று தூக்க, அதை மேலே மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த திரவுபதி அம்மாள் நகைக்க, துரியோதணனுக்குக் கோபம் வர, தீராப் பகை ஏற்பட்டு போராய் முடிந்ததை நாம் மஹாபாரதத்தில் படித்துள்ளோம்.

 

 

இதே போல 500 ஆண்டுகளுக்கு முன்பு, தென்னாட்டிலும் நடந்தது. ஆனால் மாபாரதப் போர் போல அழிவு ஏற்படுத்தாமல் ஒரு நூல் உதிக்கக் காரணமாய் அமைந்தது!

பாண்டியர் பரம்பரையில் வரதுங்க பாண்டியன்,  அதி வீரராம பாண்டியன் என்று இரு சஹோதரர்கள் இருந்தனர். மூத்தவனான வரதுங்கன் தன் மனைவியுடன், தவம் மேற்கொண்டு சிவனடியார்களுக்குத் தொண்டு புரிந்தான். அவன் திருக்கருவை நல்லூரில் வசித்தபோது, இளையவனான அதிவீரராம பாண்டியன், தென்காசியில் இருந்துகொண்டு அரசோச்சி வந்தான். அவன் சைவ புராணங்களின் சாரமான பிரம்மோத்தர காண்டம் என்னும் அரிய நூலை மொழி பெயர்த்தான். திருக்கருவை நல்லூரில் வீற்றிருக்கும் சிவ பெருமான் மீது வெண்பா அந்தாதி,  கலித்துறை அந்தாதி ஆகியன பாடி சிவநேசச் செல்வனாய் வாழ்ந்து வந்தான்.

 

அவன் நள சரிதத்தையும் கவிதை வடிவில் யாத்தனன். பாதி நூல் வரைந்த காலையில், அதனை வரதுங்கனிடம் காட்டினன். இதென்ன அரனைத் துதிக்காமல் அரசன் துதி பாடுகிறாயே (அரன்= சிவன்; அரசன்= நள மஹாராஜா) என்று வருத்தப்பட்டனன். அண்ணன் இப்படிச் சொன்னதால், உப்பு சப்பில்லாமல் அதை ஒருவாறு பாடி முடித்தான். அதனால் அதன் பின்பகுதி சுவையற்றதாயிற்று.

 

அத்தோடு நில்லாமல், அதைத் தமையன் மனைவியிடம் போய்க் காட்டினான். அண்ணியாவது பாராட்டுவாளோ என்ற ஒரு நப்பாசை. அவளோ  கற்றுணர்ந்த பேரரசி; தமிழரசி; புன் சிரிப்புடன் அதைத் திருப்பிக் கொடுத்தாள். எதற்காக்ச் சிரிக்கிறீர்கள்? உங்கள் அபிப்ராயம் என்ன? என்று கேட்டான் அதிவீரராமன்.

 

அவள் சொன்னாள்: “வேட்டை நாய், வேட்டைக்குப் போகும்போது, வேகமாகச் செல்லும்; வேட்டை முடிந்து திரும்பும்போது ஏங்கி இளைத்து வருமன்றோ! அது போலத் தான் உமது காவியம்” என்று சொல்லி சிரித்தாள்.

இது அவன் செவியில் நாராசம் பாய்ச்சியது போல இருந்தது; கோபத்துடன் வெளியே சென்றான். நால்வகைப் படைகளைத் திரட்டிக்கொண்டு படை எடுத்து வந்தான். அண்ணனுக்குத் தூதும் அனுப்பினான். அந்த தூதன் கொண்டுவந்த செய்தியைப் பார்த்த வரதுங்கன்  , “நீ மார்த்தாண்டன் மைந்தனையும், விபீஷணனையும் பஞ்சவரிற் பார்த்தனையும் எண்ணாமல், பரத-ராகவருடைய அன்பை எண்ணுவாயாக” என்ற கருத்துப் பட ஒரு வெண்பாப் பாடலை எழுதி அனுப்பினன்.

அதைப் பார்த்தவுடன், சினம் தணிந்து, வெட்கம் மேலிட, அண்ணன் காலில் விழுந்து, வணங்கி, என் வாழ்வுக்கு வழிகாட்டுவாயாக என்று வேண்டினான் அதி வீர ராம பாண்டியன்.

உடனே அண்ணனான வரதுங்கன், “தம்பி, காசி காண்டத்தைத் தமிழில் மொழி பெயர்; உன் குற்றம் எல்லாம் மறையும்” என்றான். அதற்குப் பின்னர் அண்ணியார் காலடியிலும் விழுந்து வணங்கி ஆசி பெற்று சம்ஸ்கிருதத்தில் உள்ள காசிக் காண்டத்தைத் தமிழில் வடித்தான். நறுந்தொகை என்னும் நீதி நூலையும் இயற்றினான். அதன் மூலம் அவன் புகழ் தமிழ் கூறும் நல்லுலம் முழுதும் பரவிற்று. அதற்குப் பின்னர் கருவைப் பதிற்றுப் பத்து அந்தாதியும் பாடினன். முப்பது பாடலடங்கிய அம்பிகை மாலை, இலிங்க புராண தமிழ் மொழி பெயர்ப்பு என்று மேலும் பல நூல்களும் அவருடைய எழுதுகோல் மூலம் தமிழர்களுக்குக் கிடைத்தது.

–Subham—