
Written by S NAGARAJAN
Date: 3 September 2016
Time uploaded in London: 5-28 AM
Post No.3116
Pictures are taken from various sources; thanks.
26-8-16 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை
விண்வெளியில் ஒரு சிறைச்சாலை?!
ச.நாகராஜன்
குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும் -லெமனி ஸ்னிக்கட்

விண்வெளியில் சுற்றுலாப் பயணம் என்பது நிச்சயமாகி விட்ட நிலையில் பல்வேறு விஷயங்களைப் பற்றி இப்போதே கவலைப் படுகின்றனர் விண்வெளி ஆர்வலர்கள்.
குறிப்பான ஒன்று விண்வெளிச் சட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி!
அறிவியல் புனைகதை என்றே வைத்துக் கொண்டாலும் கூட, விண்வெளியில் பறக்கும் போது விண்கலத்தில் இருக்கும் ஒருவர் பணத்திற்காகவோ அல்லது புகழுக்காகவோ தன்னுடன் கூடப் பறக்கும் ஒருவருக்குத் தீங்கை இழைத்து விட்டால்? குற்றவாளி எப்படி எந்த நாட்டுச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவார், தண்டிக்கப்படுவார்?
கிறிஸ்டோபர் ஜே நியூமேன் என்பவர் இந்த விஷயத்தைக் குறித்து மிகத் தீவிரமாக ஆராய்ந்து தனது யோசனைகளைத் தெரிவித்துள்ளார். இவர் பிரிட்டனில் உள்ள சண்டர்லேண்ட் பல்கலைக்கழகத்தில் பொதுச் சட்டம் பற்றிப் போதிக்கும் பேராசிரியர்.
விண்வெளிச் சுற்றுலா பெரிய அளவில் நடக்கும் போது அனைவருமே நல்லவர்களாகத் தான் இருப்பார்கள் என்று சொல்ல முடியாதல்லவா என்பது அவரது கேள்வி.
விண்வெளி வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் போது பின்பற்றப்படும் கடுமையான விதிகளை சுற்றுலாப் பயணிகளின் மீது பின்பற்ற முடியாதல்லவா?
வர்ஜின் காலக்டிக் என்ற நிறுவனம் இப்போதே பயணிகளை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்து விட்டது.
இப்படிப்பட நிறுவனங்கள் பெருகி விடும் போது தங்களின் லாபத்திற்காக அனைத்துத் தரப்பு மக்களையும் அதிகமாக ஈர்த்து விண்வெளிப் பயணத்தில் ஈடுபட வைப்பதிலே தான் அவைகள் குறியாக இருக்கும்.
சட்டம் ஒழுங்கை யார் விண்வெளியில் பராமரிப்பது?
ஐக்கிய நாடுகள் சபையின் மூலமாக ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் அவுடர் ஸ்பேஸ் ட்ரியடி (Outer Space Treaty) என்ற ஒரு ஒப்பந்தத்தில் நூறு நாடுகள் கையெழுத்திட்டன. இதன்படி விண்வெளியில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டது. அத்துடன் அந்தந்த நாட்டின் விண்கலம் சேதம் அடைந்தால் அதுவே மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.

இத்துடன் சரி. குற்றங்களைப் பற்றி அந்த ஒப்பந்தத்தில் ஒன்றுமே இல்லை. 1991இல் மனிதனால் இயக்கப்படும் விண்கலத்தில் பின்பற்றப்பட வேண்டிய விதிகள் என்று ஒரு வரைவு விதிமுறை உருவாக்கப்பட்டது,
அதில் விண்கலத்தின் காப்டன் யாரோ அவருக்கு அதில் பயணிக்கும் அனைவரும் கட்டுப்பட்டவர்கள் என்பது நிர்ணயிக்கப்பட்டது. விண்கலத்தின் இதர பணியாளர்கள் விண்பயண பணிகளைக் கண்காணிக்கும் டைரக்டருக்கு கீழ்ப்படிய வேண்டும் என்பதும் நிர்ணயிக்கப்படது.
1963ஆம் ஆண்டு டோக்கியோ கன்வென்ஷன் விதிமுறைகள் என்ற சட்டம் விமானத்தின் பைலட் அதில் பயணம் செய்யும் பயணிகளின் மீது அவர்கள் ஒழுங்காக நடக்காத பட்சத்தில் எந்த ஒரு நடவடிக்கையையும் உசிதம் போல எடுக்கலாம் என்று அனுமதி தந்துள்ளது.
ஆனால் இந்த விமானப் பயணச் சட்ட விதிகள் மட்டும் விண்வெளியில் பறக்கும் போது போதாது என்கிறார் நியூமேன்.
ஒரு விண்கலத்தில் பல தேசத்து பயணிகள் பறக்கிறார்கள். அந்தக் கலம் ரஷிய கலம் என்று வைத்துக் கொள்வோம். அதில் பறக்கும் ஜெர்மானியர் ஒருவர் ஒரு இத்தாலியரின் மீது ஒரு குற்றத்தை இழைத்து விட்டார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது ஜெர்மானிய தேசத்தின் சட்டமே பொருந்தும் – இப்போதுள்ள பன்னாட்டு விமானப் பயண சட்ட விதிகளின் படி!
இந்தச் சட்டம் போதாது, விண்வெளியில் இழைக்கப்படும் குற்றங்கள் பற்றி பன்னாட்டு விண்வெளி நிலையம் ஒரு வழிகாட்டுதலைத் தரலாம் என்பது நியூமேனின் யோசனை.
பன்னாட்டு விண்வெளி நிலையக் கமாண்டரே அவரது கலத்தில் உள்ள அனைவருக்கும் பொறுப்பு. அவரில் ஆரம்பித்து ஒரு சங்கிலித் தொடர் போல ஆணைத் தொடர் நிர்ணயிக்கப்பட வேண்டும். விண்வெளிப் பயணிகளுக்கென ஒரு தனியான சட்டம் உடனடியாக இயற்றப்பட வேண்டும். இவை போன்ற யோசனைகளை நியூமேன் முன் வைக்கிறார்
குறுகிய காலப் பயணத்திற்கு இந்தச் சட்டங்கள் பொருந்தலாம். ஆனால் மிக நீண்ட காலப் பயணங்களுக்கு?
குற்றம் இழைத்தவர்களை என்ன செய்வது. இதற்கும் நியூமேன் ஒரு தீர்வை முன் வைக்கிறார்.
விண்வெளியில் ஒரு சிறைச்சாலை அமைக்கப்பட வேண்டும். குற்றம் இழைத்தவரை அதில் அடைத்து விட வேண்டும். அனைவரும் ஒப்புக் கொள்ளும் வகையில் அவருக்குத் தண்டனை விதிக்கப்பட வேண்டும்.
ஆனால் இந்த நெடுந்தொலைவுப் பயணங்கள் எல்லாம் சமீபத்தில் நடைபெற வாய்ப்புகள் இருக்கிறதா? இல்லை. அப்படிப்பட்ட பயணங்களை மேற்கொள்ளப் போகிறவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மிகவும் அரிதான சில வீரர்களே
ஆகவே குறுகிய காலப் பயணங்களுக்கான குற்றச் சட்ட விதிகளை உடனே உருவாக்க வேண்டும் என்பது தான் இன்றைய பரபரப்பான வேண்டுகோள்!
பூமியில் சிறைச்சாலைகள் இருப்பது போதாது என்று விண்வெளியில் ஒரு சிறைச்சாலையா?! விண்வெளி க்ரைம், விண்வெளி சிறைச்சாலை என்பதெல்லாம் கேட்பதற்கே வியப்பாக இருக்கிறதல்லவா?

Picture of Michael S.Gazzaniga, Split Brain Research
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ,,
மைக்கேல் எஸ் கஜானிகா (Michael S. Gazzaniga தோற்றம் 12-12-1939)) என்பவர் சாண்டா பார்பாராவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் உளவியல் பேராசிரியர். உலகின் முதல் நம்பர் மூளையியல் நிபுணர். பெரிய விஞ்ஞானியும் கூட. அங்கு அவர் மனம் பற்றிய ஆராய்ச்சிக்கு ஒரு ஆய்வு மையத்தை ஏற்படுத்தியுள்ளார்.அவர் தான் முதல் முதலில் ஸ்பிளிட் ப்ரெய்ன் எனப்படும் மூளையின் இருவித செயல்பாடுகளைக் கண்டறிந்தார். இதற்காக ஏராளமான பரிசோதனைகளை அவர் நோயாளிகளின் மீது மேற்கொண்டார்.
ஏராளமான விசித்திரமான சோதனை முடிவுகளை அவர் கண்டு உலகிற்குக் கூறினார் அது அனைவரையும் பிரமிக்க வைத்தது டபிள்யூ. ஜே என்ற ஒருவர் இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது தலையில் துப்பாக்கியின் முனையினால் அடிக்கப்பட்டு காயம் அடைந்தார். அதிலிருந்து அவருக்கு அடிக்கடி வலிப்பு வர ஆரம்பித்தது. அவருக்கு ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டியிருந்தது.
அதைச் செய்வதற்கு முன்னால் கஜானிகா அவரது மூளை செயல்பாட்டை ஆராய விரும்பினார். அவர் கண்களால் காண முடியாதபடி அவர் கையில் பல பொருள்கள் கொடுக்கப்பட்டன. இடது மற்றும் வலது பக்க பார்க்கும் தளங்களை கஜானிகா சோதித்தார். அவர் மிகவும் சரியாகப் பொருள்களை இனம் கண்டார். ஆபரேஷன் பின்னர் நடத்தப்பட்டது. ஆபரேஷனுக்குப் பின்னால் அவர் மீண்டும் சோதனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்குப் பல விதமான எழுத்துக்கள் மற்றும் வர்ணங்கள் இடது பக்க மற்றும் வலது பக்க பார்க்கும் தளங்களில் காண்பிக்கப்பட்டன.

ஆச்சரியப்படும் விதமாக இடது பக்க பார்க்கும் தளமானது வலது பக்க மூளையால் செய்முறைப் படுத்தப்பட்டது. அதே போல வலது பக்க பார்க்கும் தளமானது இடது பக்க மூளையால் செய்முறைப்படுத்தப்பட்டது. இடது பக்க மூளையே மொழி பற்றிய அறிவை நல்குகிறது!
சோதனைக்கு உட்பட்டவரின் மூளைப் பகுதியான கார்பஸ் கலோஸம் பல்வேறு விதமான முரண்பாடுகளை அவரை அடையச் செய்து விட்டது. உதாரணமாக அவரது வலது கையை இடது பக்க மூளையும் இடது கையை வலது பக்க மூளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இந்த இரு மூளைகளுக்கு இடையே ஒரு வித தகவல் தொடர்பும் இல்லை.
இதனால் அவர் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல.காரின் கதவை அவரது இடது கை திறக்க முனைந்த போது அவரது வலது கையோ அதைத் தடுத்தது.
இப்படிப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் தான் ஸ்பிளிட் ப்ரெய்ன் (Split Brain) பற்றிய கண்டு பிடிப்பையும் இடது மற்றும் வலது பக்க மூளையின் செயல்பாட்டையும் கஜானிகா உலகிற்கு அறிவித்தார். மூளை பற்றிய புதிய கண்டுபிடிப்பை உலகம் அறிந்து பிரமித்தது.

**********
You must be logged in to post a comment.