டயபடீஸை புரிந்து கொள்ளுங்கள்; தீர்க்கும் வழிகள் தெரியும்! (Post No.10,655)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,655
Date uploaded in London – – 13 FEBRUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

பிப்ரவரி 2022 ஹெல்த்கேர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

டயபடீஸை புரிந்து கொள்ளுங்கள்; அதைத் தீர்க்கும் வழிகள் தெரியும்!
ச.நாகராஜன்

வள்ளுவர் கூறுகிறார் : நோய் நாட வேண்டும், நோய் முதல் நாட வேண்டும் – என்று.

உண்மை தான், முதலில் நோய் என்ன என்று புரிந்து கொண்டு அது ஏன் வந்தது என்று ஆராய்ந்து அதைத் தீர்க்கும் வழிகளைக் கண்டு அவற்றைக் கடைப்பிடித்து நோயைத் தீர்க்க வேண்டும்.
இந்த வகையில் டயபடீஸ் பற்றிய அடிப்படைச் செய்திகளை முதலில் புரிந்து கொள்வது அவசியம்.
முதலில் அதைப் பார்ப்போம்:

டயபடீஸ் என்றவுடனேயே ‘சர்க்கரையைக் குறை’ என்று அனைவரும் கூறுவதைப் பார்க்கிறோம். ஆனால் முதலில் இரத்த சர்க்கரை அளவு (Blood Sugar Level) அதிகமாக என்ன காரணங்கள் என்பதைப் பார்க்க வேண்டும். பல காரணங்களால் அது அதிகரிக்கிறது. உடல் எடை கூடி மிகவும் பருமனாக இருப்பது, நிறைவுற்ற கொழுப்புகள் (Saturated Fats), வெஜிடபிள் எண்ணெயிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருள்களில் உள்ள கொழுப்புகள் (Trans fats), ரிபைன்ட் கார்போ ஹைட்ரேட்ஸ் ஆகிய இவற்றினாலும் முறையற்ற உணவுப் பழக்கங்களினாலும் வாழ்க்கை முறையினாலும் டயபடீஸ் உருவாகிறது. உங்கள் இல்லத்தில் இன்னும் பலருக்கு டயபடீஸ் இருந்தால் அதுவும் ஒரு காரணம் தான்! ஆகவே மொத்தப் பழியையும் சர்க்கரை மேல் போடக் கூடாது என்பது தான் முதல் அடிப்படை உண்மை

டயபடீஸ் என்பது இரண்டு மூன்று நாட்கள் இருந்து விட்டுப் போகும் ஜூரம் போன்ற வியாதி அல்ல. வாழ்நாள் முழுவதும் நீடித்து இருக்கும் ஒன்று அது. முழுவதுமாக அதைக் குணப்படுத்த முடியாவிட்டாலும் கூட தொந்தரவு தராத படி அதைக் கட்டுக்குள் வைக்க முடியும். சரியான வழி முறைகளைக் கையாண்டால் அது கூடவே இருந்தாலும் அது நம்மை பாதிக்காதபடி வாழ முடியும்.

03) வயதானவர்களுக்குத் தான் டயபடீஸ் வரும் என்பது தவறான செய்தி. வேலை பார்க்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கூட எந்த வயதிலும் கூட அது வரலாம்.
04) டயபடீஸ் இரு பிரிவாக – டயபடீஸ் 1 டயபடீஸ் 2 என்று – பிரிக்கப் படுகிறது. இதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் விட்டு விட்டால் கண் பார்வை போகலாம், சிறுநீரகம் பாதிக்கப் படலாம், இன்னும் உடலின் பல பாகங்கள் பாதிக்கப்படலாம்.

05) டயபடீஸைப் போக்க இன்சுலின் இஞ்ஜெக்‌ஷன் என்று ஒரு வார்த்தையில் சொல்லி விட்டுப் போக முடியாது. அது இதய சம்பந்தமான நோயிலும் கொண்டு விடலாம். ஆகவே இரத்த சர்க்கரை அளவை அவ்வப்பொழுது சரிபார்த்துக் கொண்டிருப்பதோடு இதர உடல் அவயவங்களும் சரியாக இருக்கின்றனவா என்றும் சரி பார்த்துக் கொள்ளல் அவசியம்.
06) சர்க்கரையை அடியோடு உணவில் ஒழிக்க வேண்டும் என்பதில்லை. சரியான சிகிச்சைகள், வாழ்க்கை வழிமுறைகளைக் கையாண்டால் சில சமயம் மட்டும் சர்க்கரைப் பொருள்களை உண்ணவும் முடியும்.

07) டயபடீஸின் கூடப் பிறந்த அக்காள் மனச்சோர்வு. எனக்கு மட்டும் ஏன் இப்படி என்ற கேள்வி கூடவே இருந்து கொண்டிருக்கும். ஆகவே வாழ்க்கையை பாஸிடிவ் நோக்கில் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு கணத்தையும் நாமே இன்பமாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
08) பார்டர் டயபடீஸ் எனும் ஜாக்கிரதையான சர்க்கரை அளவு இருப்பின் உடனடியாக எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளல் வேண்டும். ரத்த்தத்தில் குளுகோஸ் அளவை அடிக்கடி சரிபார்த்தால் போதும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

09) ரத்த ஓட்டம் குறைவதால் கால்களில் அதன் அறிகுறி தெரியும். அப்படி பாதங்களில் பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக அதை உரிய முறையில் சிகிச்சை எடுத்துத் தீர்த்துக் கொள்ளல் அவசியம். பாதங்கள் என்பது டயபடீஸைப் பொறுத்த மட்டில் மிக முக்கியமான கவனிக்கப்பட வேண்டிய ஒரு அங்கம்.

10) உடல் பயிற்சி, தகுந்த உணவுத் திட்டம், ரத்த சர்க்கரை அளவை அவ்வப்பொழுது கண்காணித்தல், தேவை எனில் டாக்டரின் அறிவுரைப்படி இன்சுலின் போட்டுக் கொள்ளல், மன அமைதி, உற்சாகமான வாழ்க்கை முறை இவையே டயபடீஸ் போக்க தகுந்த வழி முறைகள் ஆகும்.
ஒரு ஒன்பது வழி செக் அப் திட்டம் கீழே தரப்பட்டுள்ளது.
அதைப் படித்து தேவையான நடைமுறைகளை உடனடியாக மேற்கொள்ளலாம் :

1) குடிப்பழக்கம் இருந்தால் அதை நிறுத்த வேண்டும்.
2) புகை பிடித்தல் தீங்கானது. அதையும் விட வேண்டும்.
3) ரத்த சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருக்க வேண்டும்.
4) உடல் ரீதியான மெடிகல் செக் அப் இன்றியமையாத ஒன்று.
5)கண் பார்வை சரியாக இருக்கிறதா என்று கண் டாக்டரிடம் செக் அப் செய்வது நல்லது.
6) தடுப்பூசிகள் : போடப்படவேண்டியவற்றைத் தவிர்க்கக் கூடாது.

7) பற்களின் பாதுகாப்பு இன்றியமையாதது. ஈறுகள் சம்பந்தமான வீக்கம், ரத்தம் வடிதல் உள்ளிட்டவை டயபடீஸுக்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
8) பாதங்களில் ரத்த ஓட்டம் குறைவாக இருந்தால் அதில் வலி, உணர்வற்ற தன்மை இருக்கக்கூடும். சிறிய காயம், வெடிப்பு,வீக்கம் கூட பெரிய அளவு பாதிப்பைத் தரக்கூடும்.
ஆகவே பாதங்கள் பற்றிய கவனிப்பு தேவை. சரியானபடி அதை நீரினால் அலம்பி சுத்தமாக வைத்துக் கொண்டாலே போதுமே!
9) டாக்டரின் அறிவுரை, நவீன கால சோதனை முறைகள், நவீன சாதனங்களின் உபயோகிப்பு – இவை எல்லாமே இருக்கும் போது டயபடீஸைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். ஆனால் உரிய முறையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல் அவசியம் அல்லவா!
***

tags– டயபடீஸ் , வழிகள், சர்க்கரை நோய்