வானில் ஒரு மாபெரும் மஹாபாரதப் போர்!

 

வேத வியாஸர் தான் இயற்றியுள்ள மஹாபாரதத்தில் நடக்கும் மாபெரும் போரை வானில் பார்த்துத் தான் எழுதினாரா? வியாஸரின் மஹாபாரதத்திற்கு பல அர்த்தங்கள் உண்டு என்று சொல்வதை நிரூபிக்கும் வகையில் அர்ஜுனனின் நட்சத்திரமும் பீஷ்மரின் நட்சத்திரமும் அமைந்துள்ளது எவ்வளவு அற்புதமான விஷயம்!நட்சத்திர அதிசயங்கள் வரிசையில் இந்த மர்மத்தைப் பார்க்கலாம்!

நட்சத்திர அதிசயங்கள்!

வானில் ஒரு மாபெரும் மஹாபாரதப் போர்!

ச.நாகராஜன்

விநாயகரின் நிபந்தனை

வேத வியாஸர் எழுதியுள்ள தலை சிறந்த இதிஹாஸமான மஹாபாரதத்தை எழுத அவர் விநாயகரின் உதவியை நாடினார். விநாயகர் தன் எழுத்தாணி இடைவிடாமல் செயல்படும்படி அவர் சுலோகம் சொல்ல வேண்டும் என்றார். அதற்கு ஒப்புக் கொண்ட வியாஸர் ஆனால் பொருள் புரிந்து கொண்டே சுலோகங்களை எழுத வேண்டும் என்று எதிர் நிபந்தனை விதித்தார். அதற்கு ஒப்புக் கொண்ட விநாயகருக்கு வந்தது சங்கடம். மிகவும் கடினமான சாதாரணமாக எளிதில் அர்த்தம் புரியாத சிலேடைகளுடன் நிறைந்த சுலோகங்களை வியாஸர் அவ்வப்பொழுது சொல்ல ஆரம்பித்தார். விநாயகர் இதன் உண்மைப் பொருள் என்ன என்று யோசிக்க வேண்டி இருந்தது. அதற்குள் வியாஸர் பல சுலோகங்களை மனதில் கவனம் செய்து கொண்டார். இப்படிப்பட்ட சுலோகங்களுக்கு குட்டு சுலோகங்கள் என்று பெயர். சுமார் 8000 குட்டு சுலோகங்கள் மஹாபாரதத்தில் உள்ளன.

வியக்க வைக்கும் புதிர் சுலோகம்

இவற்றில் ஒரு சுவாரசியமான சுலோகம் பீஷ்ம அர்ஜுன யுத்தத்தின் மர்மத்தையும் வானில் நடக்கும் மஹாபாரதப் பெரும் போரையும் விளக்குகிறது.

அர்ஜுனஸ்ய இமே பாணா நேமே பாணா: சிகண்டின:I        க்ருதந்தி மம காத்ராணி மாக மாஸே கவாமிவII – மஹாபாரதம் பீஷ்ம பர்வம்

சிகண்டியை முன்னே வைத்து அர்ஜுனன் விடும் இந்த பாணங்கள் மாசி மாதத்தில் பசுக்கள் எப்படி துன்பம் அடைகின்றனவோ அது போல என்னைத் துன்பம் அடையச் செய்கின்றன.

இந்த சிலேடை செய்யுளின் இன்னொரு அர்த்தம் : சிகண்டியை முன்னே வைத்து அர்ஜுனன் விடும் இந்த பாணங்கள் தாய் நண்டு குஞ்சு நண்டை பிரசவிக்கும் போது, தன் மரணத்தால் அடையும் துன்பத்தைப் போல என்னைத் துன்பப்படுத்துகிறது.

எத்தனை அற்புதமான ஆழ்ந்த பொருளுடைய செய்யுளாக இது அமைந்துள்ளது! ‘மாக மாஸே கவாமிவ’ என்ற சொற்றொடருக்கு மாசி மாதத்தில் பசுக்கள் அடையும் துன்பம் போல எனப் பொருள் கொள்ளலாம். அதையே மாகமா என்றால் தாய் நண்டு என்றும்  ஸேசுவா என்றால் குஞ்சு நண்டு என்று பிரித்தும் இன்னொரு பொருள் கொள்ளலாம். தாய் நண்டு பிரசவிக்கும் போது அது மரணமடைகிறது. குஞ்சு நண்டு பிறக்கிறது.அது போல என் வேதனை உள்ளது என்று பீஷ்மர் கூறுவதாக உள்ள சுலோகம் அவர் ஒரு மிருக இயல் நிபுணர் என்பதை மட்டும் உணர்த்தவில்லை. அவர் ஒரு வானவியல் நிபுணர் என்பதையும் நிரூபிக்கிறது.

பசுக்களுடன் தொடர்பு கொண்டுள்ள அவிட்டம்

டெல்பினஸ் என்று மேலை நாட்டில் அழைக்கப்படும் ச்ரவிஷ்டா அல்லது அவிட்ட நட்சத்திரம் மகர மற்றும் கும்ப ராசிகளில் உள்ளது. இந்தத் தொகுதியில் ஏழு நட்சத்திரங்கள் இருக்கின்றன. பிரதான நட்சத்திரமாக அவிட்டம் திகழ்கிறது.இதை சீனா உள்ளிட்ட பல தேசங்களும் காளை அல்லது பசு போன்ற தோற்றமுடைய நட்சத்திர மண்டலம் என்று குறிப்பிடுகின்றன. இதில் உள்ள இரு பெரும் நட்சத்திர கணங்கள் ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் ஒளி ஆண்டுகள் தள்ளி உள்ளன என்று அறிவியல் கூறுகிறது.கற்பனைக்கும் அப்பாற்பட்ட தூரம் இது. இந்த அவிட்ட நட்சத்திரத்தின் அதி தேவதை வசுக்கள். பீஷ்மரின் பிறப்பைப் பற்றி அனைவரும் அறிவர். அஷ்ட வசுக்களான தரன், த்ருவன்,சோமன், அஹன், அநிலன்,அநலன்,பிரத்யூஷன்,ப்ரபாசன் ஆகியோர் ஒரு முறை மனைவிமார்களுடன் வசிஷ்ட ஆஸ்ரமம் சென்றனர். அங்கே இருந்த நந்தினி என்ற காமதேனுவைப் பார்த்த அவர்கள் அதை அடைய ஆசைப்பட்டனர்.ப்ரபாசன் என்றும் த்யோ என்றும் அழைக்கப்படும் வசு நந்தினியைக் கவர்ந்தான். அதை அறிந்த வசிஷ்டர் அந்த எட்டுப் பேரையும் மனிதப் பிறவி எடுக்கும்படி சபித்தார். வசுக்களின் வேண்டுகோளுக்கு இணங்க பசுவைக் கவர்ந்த தியோ மட்டும் நீண்ட நாள் பூமியில் வாழ வேண்டும் என்றும் ஏனைய ஏழு பேரும் உடனே தம் லோகம் திரும்பலாம் என்றும் சாப விமோசனமும் கொடுத்தார். பிரபாசன் அல்லது தியோ என்று அழைக்கப்பட்ட எட்டாவது வசுவே பீஷ்மர்! அவர் துரியோதனனுடன் சேர்ந்து பஞ்ச பாண்டவரை மஹாபாரத யுத்தத்தில் எதிர்த்தார். 18 நாட்கள் நடந்த யுத்தத்தில் முதல் பத்து நாட்களுக்கு பீஷ்மர் சேனாபதியாக இருந்து உக்கிரமாக போரிட்டார். பத்தாம் நாள் சிகண்டியை முன்னிலைப் படுத்தி அர்ஜுனன் விடுத்த பாணங்களால் அடிபட்டு வீழ்ந்தார். முன்பே செய்த பிரக்ஞையின் படி சிகண்டியுடன் போர் புரிய பீஷ்மர் மறுத்து விட்டார்.உத்தராயணம் வரும் வரை காத்திருந்து பின்னர் தன் உயிரை விட்டார்.

அர்ஜுனனுடன் தொடர்பு கொண்ட பல்குனி நட்சத்திரம்

அர்ஜுனனின் பத்து பெயர்களில் பல்குனன் என்ற பெயர் மிகவும் முக்கியம் வாய்ந்தது.இது அவனுடைய நட்சத்திரம். பூர்வ பல்குனி மற்றும் உத்தர பல்குனி என்று அழைக்கப்படும் பூரம் மற்றும் உத்தர நட்சத்திரங்கள் சிம்ம ராசி மற்றும் கன்யா ராசியில் உள்ளன. இவற்றுக்கு நேர் எதிரில் 180 டிகிரியில் உள்ள அவிட்ட நட்சத்திர அதிபதியான வசுவான பீஷ்மரை அர்ஜுனன் குறி பார்த்து அடித்தான். வசுக்கள் காக்கும் பசு அடையும் துன்பம் போல பீஷ்மர் துன்பம் அடைந்தார்! மாசி மாதம் என்றாலே பசுக்களுக்கு நோய் வரும் மாதம்.

நண்டைக் குறிக்கும் கடக ராசியில் உள்ள தாய் நண்டு குஞ்சு நண்டு பிறக்கும் போது தன் உயிரை விட்டு அடையும் துன்பம் போல பீஷ்மரும் உயிரை விடும் துன்பத்தை அடைந்தார்.கடகம் மற்றும் மகர ராசி 180 டிகிரியில் நேர் எதிராக உள்ளன!இந்தப் பொருள் அனைத்தையும் உள்ளடக்கித் தான் மேலே கூறிய செய்யுளை வியாஸர் இயற்றினார். அதன் உண்மைப் பொருளை விநாயகர் தேர்ந்து பின் மேலே எழுதத் தொடங்கினார்.

 

பத்து நாட்கள் போர் மர்மம்

இத்துடன் இந்த செய்யுளின் ஆழ்ந்த பொருள் நின்று விடவில்லை.மஹாபாரதப் போரில் முதல் பத்து நாட்களுக்குத் தலைமை ஏற்று நடத்திய பீஷ்மர் ஒவ்வொரு நாளும் பத்தாயிரம் வீரர்களை அழிப்பேன் என்று வீர சபதம் செய்து அதன் படியே செய்தார்  தியோ என்ற வசுவுக்கு மார்த்தாண்டன் என்ற இன்னொரு பெயரும் உண்டு. மார்த்தாண்டன் என்றால் சூரியன் . தீபிகா என்ற ஜோதிட நூல், ‘சூர்யான் உச்சான்’ என்று தொடங்கி ‘நீசான் சுநீசான்’ என்று முடியும் நான்கு அடிகளில் சூரியனுக்கு பத்து நாட்கள் மட்டுமே அதிக வலிமை உண்டு என்று வலியுறுத்துகிறது. பத்தாயிரம் சூரிய வீரர்களான நாராயணி சேனாவுடன் பீஷ்மர் போரிட்டதை மஹாபாரதம் விளக்குகிறது ஒவ்வொரு நாளும் சூரிய அஸ்தமனத்தின் போது பத்தாயிரம் ராக்ஷஸர்கள் அழிகின்றனர் என்று ரிக் வேதம் (I-35.10)கூறுகிறது.பத்தாயிரம் கதிர்களுடன் காலை பவனி வரும் சூரியன் போல பீஷ்மர் ஓவ்வொரு நாளும் போரில் நாராயணி சேனாவுடன் புகுந்தார்.

சூரியன் வடக்கே நகரத் தொடங்கிய நாள் முதலாக ஒவ்வொரு நாளும் வலிமை பெறுகிறான். அதாவது நாள் பொழுது அதிகரிக்கிறது. இரவுப் பொழுது குறைகிறது.ஆறு மாதம் கழித்து அவன் தெற்கே செல்லும் போது அவன் வலிமை குறைகிறது. அதாவது நாள் பொழுது குறைகிறது.இரவுப் பொழுது அதிகரிக்கிறது.பாரதப் போரில் தக்ஷ¢ணாயனத்தில் சூரியன் வலிமை குன்ற மார்த்தாண்டனான பீஷ்மர் வலி குன்றுகிறார். மகாபாரத யுத்த காலத்தில் சப்த ரிஷி மண்டலத்திற்கு சமீபத்தில் மக நட்சத்திரத்தின் அருகே வான ரேகை சென்றது. இந்த நட்சத்திரத் தொகுதிக்கு சிகண்டி மண்டலம் என்று பெயர்.  சிகண்டி என்றால் மயில் என்று பொருள்!பூரம் உத்தர நட்சத்திரங்களுக்கு முன்னே சித்ர சிகண்டி மண்டலம் வருகிறது. சிகண்டியைக் கண்ட பீஷ்மர் போர் புரிய மறுத்து போர் புரிவதை நிறுத்துகிறார்.சூரியன் மக நட்சத்திரத்தில் இணையும் போது அவிட்ட நட்சத்திரம் மேற்கே மறைகிறது! வானவியல் படி 180 டிகிரி நேர் எதிரே இருப்பதால் இந்த மறைவு ஏற்படுகிறது.

ஒப்பற்ற சுலோகம்

மாசி மாதம் பசுக்களுக்கு நோய் வரும் மாதம், தாய் நண்டு பிரசவிக்கும் போது இறந்து படும் வேளையில் அடையும் துயரம், மார்த்தாண்டனான பீஷ்மர் என்னும் வசு பல்குனனால் சிகண்டி மண்டலத்தை முன்னிட்டு அடிக்கப்படும் போது வீழ்ந்து பட்டான் என்ற அனைத்தையும் உள்ளடக்கி ஒரே ஒரு செய்யுளில் வியாஸர் விளக்கும் மகாபாரதப் போரின் ஒரு பெரும் பகுதியை விளக்கும் இந்தச் செய்யுள் போல இன்னொரு செய்யுள் உலக இலக்கியத்தில் எங்கேனும் உள்ளதா? இல்லை என்பதே மறுமொழி! அறிவியலும் புராணமும் இணையும் அற்புத நட்சத்திரங்களாக பல்குன நட்சத்திரமும் அவிட்ட நட்சத்திரமும் திகழும் அதிசயத்தைப் பார்க்கும் போது நட்சத்திர மர்மம் அவிழ்கிறது. புரியாத ஆழ்ந்த பொருளும் புரிகிறது, இல்லையா!

*********************** .