ரிக் வேதத்தில் ஒரு பறவைப் பாட்டு!

cataka 1
Written by London Swaminathan
Post No.1059 : dated 23rd May 2014.

உலகிலேயே மிகப் பழமையான சமயப் புத்தகம் ரிக் வேதம். அது பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளாது. இரண்டாவது மண்டலத்திலுள்ள பாடல்களுக்கான ரிஷி க்ருத்சமடர். அதிகம் கேள்விப்படாத ரிஷி. இவர் இந்திரனை கபிஞ்ஜல என்ற பறவையாக உருவகித்துப் பாடிய இரண்டு பாடல்கள் (2-42. 2-43) சுவையானவை. உலகில் பறவைக்காக முதல் முதலில் ஒரு பாடல் பாடியது க்ருத்சமடர்தான். இந்தப் பறவையை சம்ஸ்கிருத இலக்கியங்கள் சாதக பட்சி (Jacobin cuckoo) என்றும் தமிழ் இலக்கியங்கள் ‘’துளி நசைப் புள்’’ என்றும் வருணிக்கும்.

முதலில் இந்தப் பறவையின் பெயரில் ஜலம்= நீர் என்ற சொல் இருப்பதைக் காணலாம். இந்தப் பறவையும் சாதக பட்சியும் மழை நீருக்காக ஏங்கிக் காத்திருக்கும் .ஏனெனில் இது மழைத் தண்ணீரை மட்டுமே பருகும். இது விஞ்ஞான ரீதியில் உண்மையா என்று ஆராயப்படவில்லை. ஆயினும் ஆதிசங்கரர், உலக மகா கவிஞன் காளிதாசன், புறநானூற்றுப் புலவர் வடமவண்ணக்கண் பேரிசாத்தனார் (பாடல் 198) மற்றும் பலர் இந்தப் பறவையைப் பாடிப் பரவியுள்ளனர்.

ஆதி சங்கரர், ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற மகான்கள் ஆன்மீக வேட்கையுடைய ஞானிக்கு இந்தப் பறவையை உவமையாகப் பயன் படுத்தினர். சுய மரியாதை, கர்வம் ஆகியவற்றின் அடையாளமாகவும் இதை வடமொழி இலக்கியங்கள் கையாண்டன.

சம்ஸ்கிருத தமிழ்ப்புலவர்களுக்கு அடுத்தபடியாக இதே போல கவிபாடியவர் ஆங்கிலப் புலவர் பி.பி.ஷெல்லி (P.B Shelley) ஆவார். அவர் வானம்பாடி பற்றிப் பாடிய (Skylark-ஸ்கைலார்க்) பாடல் மிகவும் புகழ்பெற்றது. வானம்பாடி சிறகடித்து மகிழ்ச்சியாகப் பறப்பதைப் பாடும் அவர் அந்த மகிழ்ச்சியின் ரகசியத்தைத் தனக்கும் தர வேண்டுகிறார். இவருக்கு 3500 ஆண்டுகளுக்கு முன் கபிஞ்ஜல பறவை பற்றிப் பாடிய க்ருத்சமடரும் அதே போலப் பாடியிருக்கிறார். ஆக உலகில் முதல் முதலில் பறவைக் கவி பாடிய புகழ் வேத கால ரிஷியையே சாரும். ரிக் வேதத்தின் இரண்டாம் மண்டலம் காலத்தால் பழமையான மண்டலம் என்றும் கி.மு.1700 வாக்கில் எழுதப்பட்டிருக்கலாம் என்றும் வேத அறிஞர்களின் இப்போதைய ஆய்வுகள் காட்டுகின்றன.

04-willem-jacobin-cuckoo

வேத காலத்தில் சோதிடம்: சகுனம் பார்க்கும் வழக்கம்

இந்தப் பாட்டில் இன்னும் ஒரு சுவையான விஷயமும் உண்டு; பறவைகளைக் கொண்டு சகுனம் பார்க்கும் வழக்கம் அப்போதே தோன்றிவிட்டது தெரிகிறது. நல்ல சகுனத்தைக் காட்டுவதாக கிருத்சமடர் பாடியதைக் காளிதாசனும் அவனது மேகதூதப்பாடலில் சாதகப் புள் விஷயத்தில் உறுதி செய்கிறான். இடது பக்கம் சாதகப் புள் பறப்பது சுப சகுனம் (பாடல் 9) என்பான் காளிதாசன். பறவைகளுக்கு ‘’சகுன’’ என்று வடமொழியில் பெயர். ஆகையால்தான் ‘’சகுனம் பார்ப்பது’’ என்று நாம் சொல்லுகிறோம். தமிழர்களுக்கு இதில் அபார நம்பிக்கை உண்டு என்பது சங்க இலக்கியப் பாடல்கள் முழுவதும் விரவிக்கிடக்கிறது.

தமிழர்கள் ஆங்கிலத்தில் (பேராசிரியர் மு.வரதராஜன்) மொழிபெயர்த்த போது சாதகப் புள்ளை ‘’ஸ்கைலார்க்’’ Skylark என்று மொழிபெயர்த்தனர். ஆனால் ‘’ஸ்கைலார்க்’’ என்னும் வானம்பாடி வேறு; சாதகப்பட்சி வேறு இருந்தபோதிலும் பாடும் விஷயத்தில் இரண்டுக்கும் ஒப்புமை உண்டு.

(இந்தக் கட்டுரையின் ஆங்கில வடிவில் (Ode to Sky Lark: Shelley, Kalidasa and Vedic Poet Grtsamada) எல்லாப் பாடல்களையும் விரிவாகக் கொடுத்துள்ளேன். கட்டுரையைச் சுருக்கவேண்டி தமிழ்ப் பகுதியையும் வேதப் பாடலையும் மட்டும் இதில் தருகிறேன். இந்தப் பறவை பற்றிய மர்மங்கள், இது பற்றி புத்தர் கூறிய கதை ஆகியவற்றை தனியே காண்போம்)

க்ருத்சமடர் பாடல் (இருக்கு வேதத்தின் இரண்டாம் மண்டலம், துதி 2-42)
“ஒரு படகோட்டி நீரில் படகு செலுத்துவது போல இரைச்சல் உண்டாக்கும் ஒலி எழுப்பும் ஓ, அதிர்ஷ்டம் தரும் மகிழ்ச்சியான பறவையே! பருந்து, கழுகு, வேடனின் அம்பு ஆகியவற்றில் இருந்து, உனக்கு ஒரு ஆபத்தும் நேரிடக் கூடாது.

தந்தையர் பகுதியில் இருந்துகொண்டு நீ எழுப்பும் மங்கள ஒலியை முழக்கட்டும்.
(தந்தையர் பகுதி என்பது இறந்துபோன முன்னோர்கள் வாழும் தென் திசை என்று கிரிப்பித் மொழிபெயர்த்துள்ளார். தென் திசை என்பது வலப்பக்கம். ஆனால் காளிதாசன் இடப்பக்கம் என்று மேகதுதத்தில் கூறுகிறான். சகுனப் பறவை என்பதை இருவரும் உறுதி செய்தாலும் திசையிலோ, மொழி பெயர்ப்பிலோ தடுமாற்றம் இருப்பதை அறியமுடிகிறது.)

ஓ, மங்களச் செய்தி அறிவிக்கும் பறவையே! எங்கள் வீடுகளுக்கு வலப் புறத்தில் இருந்து ஒலி எழுப்பு. திருடர்களும், பாவம் செய்வோரும் எங்களைத் தாக்காமல் இருக்கட்டும். பொதுச் சபையில் நாங்கள் உரத்த குரலில் (உன்னைப் போல) பேசுவோமாக.

01-chatakpakshi2

பாடல் 2-43
பருவ காலங்களில் உரிய பாடல் பாடும் பறவை போல வலது புறத்தில் இருந்து இசை எழுப்பு.
சாமவேதம் பாடுவோர் போல காயத்ரி, த்ருஷ்டுப் இரண்டு வகையிலும் பாடு.
சாமகானம் பாடும் வேத விற்பன்னர் போல துதி பாடு; பிரம்மனின் மகன் போல பாடு; ஆண்குதிரை பெண் குதிரையை நோக்கி வரும்போதும் நல்ல செய்திகளை அறிவி. ஓ, பறவையே, எல்லா பக்கங்களிலும் நல்லதிர்ஷ்டம் ஒலிக்கச்செய்.

(வேதகால ரிஷிகள் நாங்கள் ரகசிய (coded language) மொழியிலேயே எதையும் சொல்லுவோம் என்று இரண்டு இடங்களில் பாடி இருக்கின்றனர். ஆக இதை நேரடியாகப் பொருள் கொள்ளாமல் பாரத நாட்டு அறிஞர்கள் என்ன சொல்கிறார்களோ அதையே நாம் கேட்கவேண்டும் .ஆனால் மறை பொருளில் ஏதேனும் சொல்லவந்தாலும் அந்தக் காலத்தில் நம் கண் முன்னால் உள்ள பொருள்களைப் பயன்படுத்தியோ எல்லோரும் அறிந்த வழக்கங்களைச் சொல்லியோதான் விளக்கமுடியும். அந்த வகையில் இந்த பறவைப் பாட்டு இந்திரனைக் குறித்துப் பாடப்பட்டாலும் கவிதைச் சுவையுடையது மட்டுமின்றி ஷெல்லி முதலிய கவிஞர்களுக்கு எல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தது என்பது என் வாதம்)

சங்க இலக்கியத்தில் சாதகப் பட்சி

“நீடு வாழிய ! நெடுந்தகை ! யானும்
துளி நசைப் புள்ளின் நின் அளி நசைக்கு இரங்கி, நின்
கடுமான் மாற ! மறவாதீமே”.
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் பாடியது—புறநானூறு பாடல் 198

பொருள்: நீ நீண்ட காலம் வாழ்க! பெருந்தகுதி உடையவனே! நானும் நாள்தோறும் மழைத் துளியை விரும்பும் வானம்பாடி போல நின் கொடைத் தன்மை கருதி உன் நிழலில் வாழ்வேன். விரைவான ஓட்டத்துடைய குதிரையுடைய நன்மாறனே! நீ எனக்குச் செய்த செயலை மறவாதே!

மழைத்துளிக்காக ஏங்கும் பறவைக்கு மேகம், வாரி வழங்குவதை ரகு என்ற மன்னனின் கொடைத்தனமைக்கு உவமையாகப் பயன்படுத்துகிறான் காளிதாசன். குதிரை பற்றி பேரி சாத்தன் பாடியது போல க்ருத்சமடரின் பாடலிலும் வருகிறது. ஆக இந்திய கலாசாரம் ஆ சேது ஹிமாசலம்= இமயம் முதல் குமரி வரை ஒன்றே. ஆரிய- திராவிடப் பொய்மை வாதம் பேசுவோருக்கு பேரிசாத்தனும் காளிதாசனும் கொடுக்கும் அடி இது.

சங்க இலக்கியப் புலவர்கள், காளிதாசனின் ஆயிரத்துக்கும் மேலான உவமைகளில் 200க்கும் மேலான உவமைகளிப் பயன்படுதுவதால் காளிதாசனின் காலம் விக்ரமாதித்தன் காலமே (கி.மு.முதல் நூற்றாண்டு) என்ற எனது வாதமும் மேலும் உறுதியாகிறது.

jacobin-cuckoo_

மேலும் சில மேற்கோள்கள்:
துளிநசை வேட்கையான் மிசைபாடும் புள் (கலி. 46)

வானம்பாடி வறங்களிந்து ஆனாது
அழிதுளி தலை இய புறவு (ஐங்குறு. 418)

பொறிவரி
வானம் வாழ்த்திப் பாடவும் அருளாது
உறை துறந்து எழிலி நீங்கின் (அக. 67,நோய்பாடியார்)

தளியுணவின் புள் (பட்டின.3,உருத்திரன்கண்ணனார்)

இந்த மேற்கோள் அனைத்திலும் மேகம்- பறவை உறவு காட்டப்பட்டுள்ளது. இதே கருத்தைக் காளிதாசனும் மொழிவான்:
மேகதூதம்:–10,23,113; விக்ரம.2-3/1; சாகு:7-7; குமார:6-27; மாள.2; ருது:2-3; ரகு:5-17, 17-60
(கட்டுரையின் இரண்டாம் பகுதியில் கபிஞ்ஜலா (Jacobin cuckoo) பறவை மர்மம் குறித்துக் காண்போம்).

yaham

Please read my earlier posts
The Mysterious Vedic Homa Bird: Does it Exist? (posted on 10 December 2011)
Can Birds Predict your Future?
Hindu Eagle Mystery Deepens (Posted on 16-2-2013)
A Tamil bird in Sumerian Double headed Eagle in Sumerian
Double Headed Eagle: Sumerian- Indian Connection
Karikal Choza and Eagle Shaped Fire Altar
Bird Migration in Kalidasa and Tamil Literature
Friends of Birds
Four Birds in One Sloka
Can Parrots recite Vedas?
Gods and Birds

contact swami_48@yahoo.com