நட்சத்திர விளக்கம் – விதி விளக்கம் – 4 (Post No.3903)

Written by S NAGARAJAN

 

Date: 13 May 2017

 

Time uploaded in London:-  5-54 am

 

 

Post No.3903

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

ஜோதிடமே துணையாகும்

மிட்டா முனிசாமி செட்டி (1897)யின் விதி விளக்கம் நூலிலிருந்து சில பகுதிகள் தொகுக்கப்பட்டு தரப்படுகிறது. நூலின் பகுதிகள் படிப்பதற்கு ஏதுவாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

முதல் 3 அத்தியாயங்களைப் படித்து விட்டு இதைத் தொடரவும்

1934ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்டுள்ள் இந்த நூலை எனக்கு அனுப்பி உதவிய எனது சம்பந்தி திரு ஆர்.சேஷாத்திரிநாதன் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

 

நட்சத்திர விளக்கம் – விதி விளக்கம் – 4

ச.நாகராஜன்

 

  1. இனி நட்சத்திரங்களைப் பற்றிச் சிறிது விரிவாகப் பார்ப்போம்.

 

சூரிய பகவான் பன்னிரண்டு ராசிகளில் சஞ்சரிப்பதனால் பன்னிரண்டு மாதங்கள் உருவாகின்றன.

இப்படி, சித்திரை மாதம் முதல் பங்குனி வரை சஞ்சரித்து உத்தராயணம், தக்ஷிணாயனம், ருதுக்கள், கோடைக்காலம், மழைக்காலம் முதலானவற்றை அவர் உருவாக்குகிறார்.

ஆனால் சந்திரனோ சுமார் ஒரு மாதத்திற்குள் பன்னிரண்டு ராசிகளையும் சுற்றி வருகிறார்.

 

இப் பன்னிரண்டு ராசிகளிலும் 27 நட்சத்திரங்கள் உள்ளன.

ஆகையால் ஒரு ராசியில் இரண்டே கால் நள் சஞ்சரிக்கிறார் என்று ஆகிறது.

 

இப்படி இரண்டேகால் நாளுக்கு ஒரு முறை இடம் மாறுவ்தினாலேயே பஞ்சாங்கத்தில் இதர கிரகங்களின் நிலை ஒவ்வொரு  மாதமும் அது அது நிற்கும் வீட்டில் குறிப்பிடப்பட்டிருக்க சந்திரனின் நிலை மட்டும் குறிப்பிடப்படுவதில்லை.சந்திரனைப் போல் அடிக்கடி மாறாதிருப்பதனால் இதர கிரகங்களின் நிலைகள் குறிப்பிடப்படுகின்றன.

 

ஒரு தினத்தில் சந்திரன் எங்கு சஞ்சரிக்கிறான் என்று அவனுடைய நிலையை அறிய வேண்டுமெனில், அன்றைய தினத்து நட்சத்திரத்தைக் கொண்டு நிர்ணயிக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக பஞ்சாங்கத்தில் வைகாசி மாதம் 27ஆம் தேதி விசாகம் 23-20 என்று குறிப்பிட்ப்பட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இதன் பொருள் என்ன?

 

 

அன்றைய தினம் உதயம் முதல் 23-20 நாழிகை வரையில் சந்திரன் துலா ராசியில், விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார் என்றும் 24ஆம் நாழிகையில் அனுஷ நட்சத்திரத்தில் பிரவேசிக்கிறார் என்றும் அர்த்தம். (இரண்டரை நாழிகை ஒரு மணி நேரம்; ஒரு நாளைக்கு 60 நாழிகைகள் உண்டு என்பது பால பாடம்)

 

இப்படி சந்திரனின் கதியைத் தெரிந்து விதி விளக்கத்தின் உண்மையை அறிதல் வேண்டும்.

 

27 நட்சத்திரங்களின் பட்டியல் :

அசுவனி, பரணி, கார்த்திகை,

ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை

புனர்பூசம், பூசம், ஆயில்யம்

மகம், பூரம், உத்திரம்

ஹஸ்தம், சித்திரை, ஸ்வாதி

விசாகம், அனுஷம், கேட்டை

மூலம், பூராடம், உத்திராடம்

திருவோணம், அவிட்டம், சதயம்

பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி

 

 

பன்னிரண்டு ராசிகளிலும் சந்திரன் வியாபிக்கும் நிலை கீழே உள்ள பட்டியலில் காணலாம். இது மனப்பாடமாய் இருத்தல் நலம்.

 

மேஷ ராசி :- அசுவனி (1), பரணி(1), கார்த்திகை ¼),

ரிஷப ராசி – கார்த்திகை ¾ ரோகிணி (1), மிருகசீரிஷம் ½,

மிதுன ராசி – மிருகசீரிஷம் ½ ,திருவாதிரை (1), புனர்பூசம் ¾.

க்டக ராசி – புனர்பூசம் ¼ , பூசம்(1), ஆயில்யம் (1)

சிம்ம ராசி – மகம் (1), பூரம் (1), உத்திரம் ¼

கன்னி ராசி – உத்திரம் ¾,  ஹஸ்தம்(1), சித்திரை ½,

துலா ராசி – சித்திரை ½, ஸ்வாதி(1), விசாகம் ¾ ,

விருச்சிக ராசி – விசாகம் ¼, அனுஷம் (1), கேட்டை (1)

தனுர் ராசி – மூலம் (1), பூராடம் (1), உத்திராடம் ¼

மகர ராசி – உத்திராடம் ¾,  திருவோணம் (1), அவிட்டம் ½

கும்ப ராசி – அவிட்டம் ½, சதயம் (1), பூரட்டாதி ¾,

மீன ராசி – பூரட்டாதி ¼, உத்திரட்டாதி (1), ரேவதி (1)

 

 

மேலே உள்ள பட்டியலைக் கவனிக்கையில், சில நட்சத்திரங்கள் கால் பாகத்தையும், சில நட்சத்திரங்கள், அரை பாகத்தையும், சில நட்சத்திரங்கள் முக்கால் பாகத்தையும் முன், பின் வரும் ராசிகளுக்குத் தந்து தங்களுடைய மொத்த வியாபகத்தை இரு ராசிகளிலும் கொண்டிருப்பதைக் காண்லாம்.

 

 

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் இவை மூன்றும் கால் பாகத்தை ஒரு ராசிக்குத் தந்து முக்கால் பாகத்தை இன்னொரு ராசிக்கு தந்திருப்பதால் இந்த மூன்று நட்சத்திரங்களும் காலற்றன என்று வழங்கப்படுகிறது.

 

இதே போல மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகியவை அரை பாகம் ஒரு ராசிக்கும் மற்ற அரை பாகம் இன்னொரு ராசிக்கும் தந்து இரு ராசிகளிலும் வியாபிக்கின்றன. ஆகவே இந்த மூன்று நட்சத்திரங்களும் உடலற்றன என்று வழங்கப்படுகிறது.

 

 

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகியவை முக்கால் பாகத்தை ஒரு ராசிக்கும் மீதி கால் பாகத்தை இன்னொரு ராசிக்கும் தந்து இரு ராசிகளிலும் வியாபிக்கின்றன. இவற்றிற்கு தலையற்றன என்று பெயர்.

 

இந்த மூன்று வித நட்சத்திரங்கள், நிஷேகத்திற்கும், மனை  முகூர்த்தத்திற்கும், யாத்திரைக்கும் கவனிக்கப்பட வேண்டியவை.

 

ஏனைய பதினெட்டு நட்சத்திரங்களில் நிற்கும் கிரகங்களுக்கு விசேஷ பலன் உண்டு. இவற்றை லக்னத்தைக் கொண்டு தீமை, நன்மை ஆகியவற்றைக் கூறலாம்.

 

ஒரு ஜாதகத்தைக் கவனித்துக் கால பலன் என்ன என்று காண்பதற்கு நம் முன்னோர்கள் நட்சத்திர ரீதியாக கிரக திசை ஏற்படுத்தி இருக்கின்றனர்.

 

ஜெனன காலத்தில் பஞ்சாங்கத்தில் காட்டி இருக்கும் நட்சத்திரத்தைக் கொண்டு ஒரு ஜாதகருக்கு பிறந்த காலம் தொட்டு ந்டக்க வேண்டிய திசையை வான சாஸ்திர முறைப்படி நம் முன்னோர் நிர்ணயித்துள்ளனர்.

ஆக, அசுவனி முதல் ஒன்பது நட்சத்திரத்திற்கும் ஒன்பது திசைகள் கிரம வரிசைப்படி ஏற்படுகின்றன.

ஒன்பது கிரகங்களில் ராகுவும் கேதுவும் நமது முறையில் உள்ளடங்குகிறது.      

                                                                          

                                          -தொடரும்                                                   குறிப்பு:- பழம் பெரும் பாடலான கீழ் வரும் பாடல் காலற்றன, தலையற்றன், உடலற்றன நட்ச்த்திரங்கள் செய்யக் கூடாதவற்றையும், அப்படிச் செய்தால் வரும் தீங்கையும் கூறுகிறது.

 

காலற்றன, உடலற்றன, தலையற்றன நாளில்

கோலக்குய ம்டவார்த் தமைக் கூடின் மலடாவார்

மாலுக் கொழு மனை மாளிகை கோலின் அது பாழாம்

ஞாலத்தவர் வழி போகினது நலமெய்திடர், அவமே!

 

தாம்பத்ய சுகம் கூடாது, மனை முகூர்த்தம என்று வீடு கட்ட ஆரம்பிக்கக் கூடாது, யாத்திரை போகக் கூடாது.

மீறிச் செய்தால் மலடாவர். வீடு பாழாகும், யாத்திரை போனவர் திரும்பி வர மாட்டார் – இதுவே இச்செய்யுளின் பொருள்.