
Post No. 8039
Date uploaded in London – 25 May 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
தொல்காப்பியம் பற்றிய 2 வினோத புஸ்தகங்கள்
பழைய புஸ்தகங்களையும் பேப்பர் கட்டிங் (Paper Cuttings) குகளையும் வெகு வேகமாகக் களைந்து வருகிறேன். சில, நண்பர்கள் கைகளிலும் , பல, குப்பைத் தொட்டிகளிலும் விழுந்து வருகின்றன . தொல்காப்பியம் பற்றிய இரண்டு வினோத புஸ்தகங்களைப் பற்றி எழுதிவிட்டு நண்பர்களிடம் கொடுக்க ஆசை. ‘பிளாக்’குகள் வந்தவுடன் தமிழில் 10,000 பிளாக்குகளுக்கு மேல் உதயமாயின; இப்போது இன்னும் அதிகரித்திருக்கும். புஸ்தகம் வெளியிடும் பதிப்பகம் வந்தவுடன் எல்லோரும் எழுதி புஸ்தகம் வெளியிடத் துவங்கினர். பழங்கலத்திலேயே ஒரு நூலுக்குப் பல உரைகாரர்கள் இருந்தனர். திருக்குறளுக்கே அந்தக் காலத்தில் பத்து உரைகள் ! நல்ல வேளையாக நமக்கு 5 உரை மட்டுமே கிட்டின. அதற்கென்ன நாங்கள் எழுதுகிறோம் என்று திராவிடங்களும் எழுதத் துவங்கின. நல்ல வேளை ! அவைகளைப் பார்த்து ரத்தக் கண்ணீர் விட வள்ளுவனும் இல்லை. பரிமேல் அழகர் போன்ற உரைகாரர்களும் இல்லை.
இதே போல தொல்காப்பியத்துக்கும் உச்சிமேற் புலவர் நச்சினார்க்கு இனியர் உள்பட குறைந்தது ஐந்து உரைகள் உண்டு. நச்சி எழுதியதை பிச்சி எறிய புது உரைகள் வந்தன. இரண்டு பற்றி மட்டும் பார்ப்போம்.
ஒன்று வள்ளலார் கருத்துக்கள், சைவ நூல் கருத்துக்களை நம்புவோர் எழுதியது.. ஆராய்ச்சியாளர்கள் மு.இராமலிங்கம், பகீரதன் எழுதியது. முதற்பதிப்பு 1994. வெளியிட்டது -இராமலிங்க பணி மன்றம் , சென்னை.
உலகில் எந்த மொழியிலும் கிடைத்த முதல் நூல் இலக்கண நூல் இல்லை. ஆனால் தமிழன் மட்டும் தங்களுக்கு கிடைத்த நூல்களில் முதல் நூல் இலக்கண நூல் தான். அதுதான் தொல்காப்பியம் என்கிறான். போகட்டும் நம்புவோமாக.
பல நூறு நூல்கள் எங்களிடம் இருந்தன; அவை அழிந்ததால் இந்த நிலை என்று தமிழர்கள் சப்பைக்கட்டு கட்டுவர். இது பசையுள்ள வாதம் இல்லை என்பது கிரேக்க, சம்ஸ்க்ருத மொழிகளில் அ ழிந்த நூல்களின் எண்ணிக்கையைப் பார்ப்பவருக்குத் தெரியும்.
இந்த நூலில் தொல்காப்பியம் ஓம் என்ற பிரணவ மந்திரத்தில் தோன்றிய யந்திர நூல் என்கின்றனர் ஆசிரியர்கள். குமரிக்கண்டத்தில் கி.மு.8756-ல் ஒரு கடல்கோள் ஏற்பட்டது . அதில் இறந்தவர்களைத் தான் வள்ளுவர் தென்புலத்தார் என்று கூறுகிறார் என்ற புரட்சிக் கருத்தும் உளது. தொல்காப்பியத்தில் இடைச் செருகல்கள் உண்டு (எ .கா.வைசிகன் பெருமை வாணிக வாழ்க்கை) என்று முன்னுரையிலேயே கூறிவிடுகின்றனர்.
தொல்காப்பியத்தை எழுதியது அகத்தியர் என்றும் மொத்தம் 7 அகத்தியர் இருந்ததாகவும் முதல் அகத்தியர் 10, 000 ஆண்டுகளுக்கு முன்னர் இதை இயற்றியதாகவும் சொல்கின்றனர் .தமிழில் எத்தனை எழுத்துக்கள், ஆய்த எழுத்து ஏன்? என்பதற்கெல்லாம் புது செய்திகளை அளிக்கின்றனர்.
தொல் . செய்யுளின் தவறான வைப்பு முறையை மாற்றி எழுதியுள்ளதாகச் சொல்லி புது எண்களும் கொடுக்கின்றனர் தொல்காப்பியத்தின் காலம் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் என்று காட்டும் இவர்கள் பிற மொழிகளின் வரலாற்றை அறியாதவர்கள் என்பதைக் காட்டிக் கொடுத்து விடுகிறது..
போகிறபோக்கில் ஆங்கிலம் உள்பட எல்லா மொழிகளுக்கும் 33 எழுத்துக்களே (ஒலி வடிவம்) என்றும் செப்பிவிடுகின்றனர்.

காலஞ்சென்ற பொள்ளாச்சி நா. மகாலிங்கம் தமிழுக்குச் செய்த சேவை அளப்பரியது. தமிழ் கூறு நல்லுலகம் அவருக்கு என்றும் கடமைப்பட்டுள்ளது. தமிழின் மீதுள்ள பேரன்பினால்தான் அவர் இத்தகைய புஸ்தகங்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்திருப்பார் என்பதைச் சொல்லத் தேவை இல்லை. அவர் பெயர் தமிழர்கள் உள்ளத்தில் என்றும் நிலைத்து நிற்கும் இத்தருணத்தில் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
*****
இனி இரண்டாவது நூலைக் காண்போம். தலைப்பு தொல்காப்பியத்தில் அகப்பொருள் – பொருளதிகாரம் – எளிய தெளிவுரை ; ஆசிரியர் வழக்கறிஞர் நா. விவேகானந்தன் ; விவேகானந்தா பதிப்பகம் , நாகர்கோவில், 1999.


இதில் பொருளதிகாரம் முழுவதையும் காமத்துப் பால் என்று வருணிக்கிறார். சொல்லப்போனால் அடல்ட்ஸ் ஒன்லி ADULTS ONLY நூல்; பெண்கள் படிக்கக்கூட கஷ்டப்படுவார்கள். எந்தச் செய்யுளை படித்தாலும், நீங்கள் ஜனன உறுப்புகளையும் படுக்கை அறையையும் நினைவில் வைத்துக் கொண்டு படிக்க வேண்டும்; அர்த்தம் செய்துகொள்ள வேண்டும் என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறார்.
‘பொருளதிகாரப் பூட்டைத் திறக்க இதோ என் சாவி’ என்ற முதற் பகுதியிலேயே ஒவ்வொரு சொல்லுக்கும் இவர் காணும் பொருள் என்ன என்று சொல்லிவிட்டு துவங்குகிறார். அதை இங்கு திருப்பி எழுதினாலேயே இந்தக் கட்டுரை PORNOGRAPHY போர்னோகிராபி (காமக்களியாட்ட நூல்) ஆகிவிடும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
இப்படியும் தமிழில் உரைகள் வரக்கூடும்; எதிர்காலத்தில் இதையும் விட மோசமாக வரக்கூடும் என்பதை எச்சரிக்கவே இக்கட்டுரை.
டாக்டர் இரா. நாகசாமி போன்ற பேரறிஞர்களுடன் பேசுகையில் தொல்காப்பியம் ஒரு இசை நூல் என்பர். அதை விரிவாக எழுதுங்களேன் என்று கெஞ்சசுவேன்.
ஆனால் ‘தேவர் அனையர் கயவர்’ என்ற திருக்குறள் வரியையே தேவர் ஜாதி, கள்ளர் ஜாதி என்று திரித்து உரை எழுதும் பேதைகளிடையே நல்லுரைகள் எடுபடுமா என்ற ஐயப்பாடும் அவ்வப்போது எழும். இருந்த போதிலும் இந்துக்களின் பெரிய நம்பிக்கை- உண்மையை எவராலும் மறைக்க முடியாது. அது ஆயிரம் கோடி சூரியப் பிரகாசத்துடன் கரு மேகங்களைக் கலைத்து விட்டு வெளியே வரும் என்ற நம்பிக்கையில் வாழ்வோமாக


tags — தொல்காப்பியம் , வினோத புஸ்தகங்கள்
–SUBHAM–