2.சர்ச்சிலுக்கு சாந்தி தந்த புத்தர்

14 Main Image, at the Mahabodhi Temple, Bodhgaya

by ச.நாகராஜன்

இரண்டாம் உலக மகா யுத்தம்  

உலக சரித்திரத்திலேயே மிக பயங்கரமான ஒரு ஏடு இரண்டாம் உலக மகா யுத்தம். பழைய புராண கால ராட்சஸர்களை நினைவு படுத்துவது போலத் தோன்றிய ஹிட்லர் உலக மக்களை நடுநடுங்க வைத்தான். நாளை என்ன நடக்குமோ என்பது சாமான்யனின் கவலையாக ஆனது. பிரிட்டனின் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் தலைமை தாங்கி பிரிட்டிஷ் மக்களை தைரியத்துடன் இருக்குமாறு அறைகூவல் விடுத்தார். நேச நாட்டுப் படைகள் பெரும் வீரத்துடன் போரில் ஈடுபட்டன.

 

 

பங்கரில் அமைதி இழந்து இருந்த சர்ச்சில்

 

நாளாக நாளாக போர் உக்கிரமானது. சர்ச்சில் பங்கர் எனப்படும் பாதாள அறையிலேயே தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அங்கேயே படுத்து காலையில் எழுந்து யுத்த கள நிலவரங்களை பகுத்துப் பார்த்து அன்றாட உத்தரவுகளை பங்கரிலிருந்தே பிறப்பித்தார் அவர். மதியம் ஒரு குட்டித் தூக்கமும் அங்கே தான். பின்னர் தான் வெளியே வருவார்.

 

 

எல்லையற்ற மன அழுத்தத்தைத் தந்து அவரது முழு சக்தியையும் உறிஞ்சியது உலகப் போர். அமைதியிழந்த அவர் மனம் தவித்தது.

இந்த நிலையில் தான் அவருக்கு ஒரு ஆச்சரியமான சம்பவம் நிகழ்ந்தது,

 

bodhgaya in Bihar

Picture of Bodhgaya Temple in Bihar.

ஹாமில்டன் அனுப்பிய புத்தர் சிலை

 

ஜெனரல் ஐயான் ஹாமில்டன் பர்மாவில் சிதிலமடைந்த விஹாரத்திலிருந்து ஒரு புத்தர் சிலையைக் கண்டெடுத்தார். அதை சர்ச்சிலுக்கு அனுப்பி “ நீங்கள் கவலைப்படும் போதெல்லாம் சாந்தி தவழும் இந்த முகத்தைப் பாருங்கள். உங்கள் கவலைகளைப் பார்த்து சிரியுங்கள்” என்று எழுதியிருந்தார்.

 

 

சர்ச்சில் அதைத் தன் படுக்கை அறையிலேயே யுத்த காலம் முழுவதும் வைத்திருந்தார். கவலைப்படும் போதெல்லாம் அந்த அற்புத புத்தர் அவருக்கு ஆறுதல் தந்தார்.போரை பிரமாதமாக வழி நடத்தி வெற்றிக்கு வழி வகுத்தார்.அஹிம்சையை வலியுறுத்தி கொலையை அறவே ஒதுக்கிய புத்தபிரான் உலகளாவிய கொலைகளை விரும்பாமல் சர்ச்சிலை தெளிவுற சிந்திக்க வைத்து யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார் என்றே எண்ண வைக்கிறது இந்தச் சம்பவம்!

 

 

புத்தரின் உருவத்தைப் பற்றி பாரத பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு,”அவரது கண்கள் மூடி உள்ளன. என்றாலும் ஏதோ ஒரு சக்தி அதிலிருந்து வெளிப்படுகிறது. ஒரு அபார சக்தி அந்த சிலை முழுவதும் இருக்கிறது. காலங்கள் உருண்டோடினாலும் கூட புத்தர் ஏனோ தொலைவில் இருப்பது போலவே தோன்றவில்லை.அவரது குரல் நம்  காதுகளில் முணுமுணுத்து, “போராட்டத்திலிருந்து ஓடாதே! அமைதி பொழியும் கண்களுடன் எதிர்த்து நில்! வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்குமான பிரம்மாண்டமான வாய்ப்புகளை வாழ்க்கையில் பார் என்று சொல்கிறது” என்கிறார்.

 

 

உண்மை தான், உலகெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான புத்தரின் விக்ரஹங்கள் லட்சக்கணக்கானோரை கணம் தோறும் ஊக்குவித்து வருகின்றன.

 

 

உயிருடன் இருக்கும் போது சிலை அமைக்கலாமா?

 

புத்தரின் பிரதம சீடரான ஆனந்தர் புத்தரிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்: “நீங்கள் உயிருடன் இருக்கும் போது உங்களுக்கு ஒரு பகோடா அமைத்து (கோவில் கட்டி சிலை வைத்து அதை) வணங்கலாமா”

 

 

புத்தர் பதிலளித்தார் இப்படி : “ஆனந்தா! அது கூடாது. உயிருடன் இருக்கும் போது சிலை வைக்கக் கூடாது. நான் மறைந்த பிறகு வழிபடும் தலத்தை அமைக்கலாம்”

 

garlands in bodhgaya

பாஹியான் தரும் சுவையான வரலாறு

 

புத்தரின் முதல் விக்ரஹம் அமைந்தது பற்றி சீன யாத்ரீகரான பாஹியான் தனது நூலில் ஒரு சம்பவத்தைச் சித்தரித்துள்ளார்.

ஒரு சமயம் புத்தர் சுவர்க்கத்திற்கு மூன்று மாதம் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் அவரைப் பார்க்காமல் யாராலும் இருக்க முடியவில்லை. துடித்துப் போயினர். இதை அவரது பிரதான சீடரான சரிபுத்தர் புத்தரிடம் சொன்னார்.

 

 

அதைக் கேட்ட புத்தர்,” சரி, என்னைப் போலவே அசலாக ஒரு சிலையை அமைத்து அவர்களிடம் காண்பி” என்றார். இதனால் மனம் மகிழ்ந்த சரிபுத்தர் அரசனிடம் வந்து நடந்ததைச் சொல்லி. தகுந்த நபர் ஒருவரை  ஏற்பாடு செய்ய வேண்டினார். அரசனும் ஒரு அருமையான சிற்பியை இதற்கென நியமித்தார். அந்த சிற்பி புத்தரின் உருவத்தை சந்தன மரத்தில் செதுக்கினார்.

 

 

அனைவரும் அதைப் பார்த்து ஆனந்தப்பட்டனர். இப்படித் தான் முதல் புத்த விக்ரஹம் உருவானது! நாளடைவில் உலகெங்கும்  பிரம்மாண்டமான சிலைகளோடு புத்த விஹாரங்கள் கட்டப்பட்டன.

புத்த மதம் பிறந்த தாயகமான பாரதத்தைப் போலவே சீனா, தாய்லாந்து, ஜப்பான், பர்மா உள்ளிட்ட ஏராளமான நாடுகளில் புத்த விஹாரங்கள் பெரிய அளவில் கட்டப்பட்டன.

 

great_buddha_statue

ஸ்வாமி விவேகானந்தர் பார்க்க விரும்பிய புத்த விஹாரம்

 

ஸ்வாமி விவேகானந்தர் வாழ்வில் நடந்த ஒரு சுவையான சம்பவம் இது. ஒரு முறை சீனாவில் காண்டன் நகருக்குச் சென்றிருந்த விவேகானந்தர் அங்குள்ள புத்த விஹாரம் ஒன்றைப் பார்க்க விரும்பினார். ஆனால் புத்த மதத்தினரைத் தவிர வேறு யாரும் அதற்குள் நுழையக் கூடாது என்ற கட்டுப்பாட்டைக் கூறிய மொழிபெயர்ப்பாளர் அவரை அங்கு செல்லக் கூடாது என்று கூறினார்.

ஆனால் விவேகானந்தரோ அவரைத் தன்னுடன் வருமாறு கூறி, அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று உறுதி கூறினார்.

 

 

புத்த விஹாரத்திற்குள் இருவரும் (கூட சில ஜெர்மானியப் பயணிகளும் வேறு) நுழைய இருந்த போது தூரத்தில் இருந்த புத்த பிக்ஷுக்கள் அதைப் பார்த்து தமது குண்டாந்தடியை ஆட்டியவாறே வேகமாக ஓடி வந்தனர். இதைப் பார்த்த மொழிபெயர்ப்பாளர் தனது உயிருக்கு பயந்து ஓடலானார். அவர் கையைப் பற்றிய ஸ்வாமிஜி அவரிடம் “ இந்தியாவிலிருந்து வந்த யோகி என்பதற்கான சீன மொழி வார்த்தைகளைச் சொல்லி விட்டு ஓடிப் போகலாம்” என்றார்.

அதைச் சொல்லிவிட்டு ஓடிய அவர் சற்று தூரத்தில் நின்று என்ன நடக்கிறது என்று பார்க்கலானார்.

 

 

தடியைச் சுழற்றியவாறே வந்த புத்த பிக்ஷுக்கள் அருகில் வந்தவுடன் தான் இந்தியாவிலிருந்து வருகை புரிந்திருக்கும் யோகி என்பதை ஸ்வாமிஜி உரக்கச் சொன்னார்.

 

 

அவ்வளவு தான், அவர்கள்  அவரை நமஸ்கரித்து ‘கபச்’ (கவசம் என்ற சம்ஸ்கிருத வார்த்தையின் திரிபு – தாயத்து என்று பொருள்)தருமாறு வேண்டினர். ஸ்வாமிஜி சில துண்டுப் பேப்பர்களில் ஓம் என்று எழுதி அவர்களிடம் தந்தார். அவர்கள் ஸ்வாமிஜியை மகிழ்வுடன் உள்ளே அழைத்துச் சென்றனர்.

 

இதைப் பார்த்த மொழிபெயர்ப்பாளர் பிரமித்துப் போனார்.

இந்த சம்பவத்தை ஸ்வாமிஜி அளசிங்கருக்கு 10-7-1893 தேதியிட்ட கடிதத்தில் விரிவாக விளக்குகிறார்.

 

இந்திய யோகிகளுக்கும் சீனத் துறவிகளுக்கும் காலம் காலமாக இருந்த ஆன்மீகப் பிணைப்பை இந்தச் சம்பவம் நன்கு விளக்குகிறது.

புத்தரின் சிலைகளில் அவரது குணநலன்கள் அனைத்தையும் காண்பிக்கும் சிற்பக்கலையின் நேர்த்தியை இன்றும் கூடக் காணலாம். அதில் உத்வேகம் பெறலாம்.

 

 

சின்ன உண்மை

 48 மீட்டர் (சுமார் 156 அடி) உயரமுள்ள உலகின் மிக உயரமான புத்தரின் சிலை கிழக்கு சீனாவில் ஜியாங்ஸி மாகாணத்தில் 1610 லட்சம் டாலர் செலவில் வெண்கலத்தில் அமைக்கப்பட்டு 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் திறக்கப்பட்டது.

 

-தொடரும்

This is the second article on The Buddha by Santanam Nagarajan which is publsed in nilacharal.com recently: London Swaminathan. Contact:- swami_48@yahoo.com