
Article Written by London swaminathan
Date: 8 November 2015
Post No:2311
Time uploaded in London :– காலை 7-14
(Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
“தான் ஆண்ட உலக்கையும், தங்கப் பூஞ்சரடும் தலைமருமகளுக்கு!”
ஒரு பெண்ணை அவளுடைய மாமியார் கொடுமைப் படுத்தி வந்தாளாம். ஒரு நாள் அவள் பொறுமை எல்லைமீறிப் போனது. அப்பொழுது கணவனும் ஊரில் இல்லை. உரலில் மாவு இடித்துக் கொண்டிருந்த போது வழக்கம்போல மாமியார் வந்து வசைமாறி பொழிந்தாள். பின்னர் மாமியார் மத்தியான வேலைத் தூக்கம் போட்டார். அதுதான் தக்க சமயம் என்று கருதி, மருமகள் உலக்கையைக் கொண்டு, மாமியாரின் மார்பில் ஒரு போடு போட்டார். அவருக்குப் பேச்சு நின்று போய் மூச்சுத் திணறல் வந்தது. மாமியார் போட்ட கூச்சலைக் கேட்டு பக்கத்து வீட்டு, எதிர் வீட்டுக் காரர்கள் எல்லாம் கூடிவிட்டனர்.
பேச்சு நின்று போன மாமியார், இறப்பதற்கு முன்னர், குற்றவாளியைக் காட்டிக் கொடுக்க எண்ணி, தனது மார்பைத் தொட்டுக் காட்டிவிட்டு, உலக்கையைக் கையால் சுட்டிக் காட்டிவிட்டு, பின்னர் மருமகளையும் சுட்டிக்கட்டினாள். அதாவது மாமியார் சொல்ல வந்தது:-
என்னை உலக்கையால் மார்பில் அடித்தது தன் மரு மகளே என்று.
ஆனால் மருமகளோ மஹா கெட்டிக்காரி. எல்லோரும், மாமியார் என்ன சொல்கிறார்? எங்களுக்குப் புரியவில்லையே? என்று கேட்டனர். அவள் சொன்னாள்:–
மாமியாருக்கு என் மீது கொள்ளை அன்பு. நான் மாவு இடிக்கப் பயன்படுத்திய உலக்கை எனக்கே சொந்தம் என்றும் அவர் மார்பில் அணிந்திருக்கும் வைர நெக்லசும் எனக்கே கிடைக்க வேண்டும் என்றும் அவர் சைகை காட்டுகிறார் ; ஏனென்றால் நான் தான் வீட்டுக்குத் தலை மருமகள் என்றாள். இதற்குள் மாமியாரின் உயிரும்பிரிந்தது. எல்லோரும் மாமியாரின் கடைசி ஆசையை நிறைவேற்றுவது நம் கடமை என்று சொல்லி, மருமகளுக்கே உலக்கையையும், வைர நெக்லசையும் அளித்தனர்!!

அடுப்பே வனவாசம்,கடுப்பே கைலாசம்
மாமியாரின் கொடுமைக்கு உள்ளான ஒரு மருமகளின் புலம்பல் இது. எனக்கு வனவாசமும், கைலசமும் போல இந்த மருமகள் பொறுப்பு இருக்கிறது
அரிசி என்று அள்ளிப் பார்ப்பாருமில்லை, உமி என்று ஊதிப் பார்ப்பருமில்லை
இது இன்னுமொரு மருமகளின் புலம்பல்: யார் என்னைக் கவனிக்கிறார்கள்? என்னை அரிசி போலவும் நடத்துவதில்லை; உமியா என்று ஆராய்வதுமில்லை; ‘உப்புக்குச் சப்பை, ஊருக்கு மாங்கொட்டை’ என்பது போல என் வாழ்வு இருக்கிறது – என்பது இதன் பொருள்.

சீரங்கத்தில் உலக்கை கொடுத்தது போல
ஸ்ரீரங்கத்தில் கோவிலில் பெண்கள், மாவு இடித்தல் போன்ற வேலைகளைச் செய்வது வழக்கம். இந்தப் பொறுப்பை ஏற்போர், நாள் முழுதும் மாவு இடிக்க வேண்டும். இதை மேற்பார்வையிட ஒரு கண்காணியும் இருப்பார். கொஞ்சதூரத்தில் அவர்களுடைய குழந்தைகளை அந்தப் பெண்கள் மரத்தில் கட்டிய தூலியில் போட்டு வைத்திருப்பர். குழந்தை திடீரென்று அழத்துவங்கினால், யாராவது அந்தப் பக்கம் வருவோர் போவோரிடம், “இந்தாருங்கள், கொஞ்சம் இந்த உலக்கையைப் பிடியுங்கள். இதோ குழந்தை அழுகிறது. என்ன என்று பார்த்துவிட்டு வருகிறேன்” — என்று சொல்லி உலக்கையைக் கை மாற்றுவார். அவ்வளவுதான். குழந்தையைக் கவனிக்கப்போன பெண், வீட்டுக்கே போய்விடுவாள். திரும்பி வரமாட்டாள். யார் உலக்கை பிடித்தார்களோ அவர்கள் சூரிய அஸ்தமனம் வரை மாவு இடித்தாக வேண்டும்!!
இதுபோன்று எங்கெங்கெல்லாம் ஒருவர் இன்னொருவர் தலையில் வேலையைச் சுமத்திவிட்டு நழுவுகிறார்களோ அங்கெல்லாம் இந்தப் பழமொழி பயன்படுதப்படும்.

திருப்பதி அம்பட்டன் கதை
இதுபோல திருப்பதி பற்றியும் ஒரு கதை உண்டு.திருவிழாக் காலங்களில் நிறைய பேர் முடி காணிக்கை கொடுத்து, மொட்டை அடித்துக்கொள்ள வருவார்கள். அவர்கள் கொடுக்கும் காசு மீது ஆசையுள்ள நாவிதர்கள் எல்லோரையும், ‘இங்கே வா, இங்கே வா’ என்று அழைத்துக் கூலியை வாங்கிக்கொண்டு, ஒவ்வொருவருக்கும் கொஞ்சம் முடியைச் சிரைத்துவிட்டு, அடுத்த மண்டபத்தில் புதிய வாடிக்கை பிடிக்கப் போய்விடுவர். பாதி முடி கொடுத்தவர்கள், வெளியே போனால் நகைப்புக்கு இடமளிக்கும். ஆகையால் அவிழ்த்த துணியோடு அவனுக்காக காத்திருப்பர்.
இப்படி ஏதேனும் ஒரு விஷயத்துக்காக அல்லது சுய லாபத்துக்காக யாராவது ஒருவர் அரைகுறை வேலை செய்தால் அதற்கு திருப்பதி அம்பட்டன் வேலை என்று பெயர்!!
–சுபம்–
You must be logged in to post a comment.