கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1332; தேதி அக்டோபர் 7, 2014.
மகா வம்சம் பற்றிய எனது கட்டுரை வரிசையில் இது 14—ஆவது கட்டுரை.
யாராவது நமக்கு கல்யாண பத்திரிக்கையோ, கிரஹப் பிரவேச பத்திரிக்கையோ அல்லது பிறந்த நாள், சஷ்டியப்தபூர்த்தி, திருமண அன்னிவெர்சரி என பத்திரிக்கைகளையோ கொடுத்தால் முதலில் வாங்கி வைத்து விடுகிறோம். நாளைக்கு நிகழ்ச்சி என்றால் இன்று அதை எடுத்து “அட, ஆண்டவா! அவர்களுக்குக் கொடுப்பதற்கு பரிசு (பிரசென் ட்) எதுவும் வாங்கவில்லையே” — என்று கவலைப் படுகிறோம். பின்னர் மணிக் கணக்கில் உடகார்ந்து சிந்தித்து மனைவி அல்லது கணவரைக் கலந்தாலோசித்து சில பொருட்களை தேர்ந்து எடுக்கிறோம். அப்போதும் நமக்கு திருப்தி ஏற்படுவதில்லை. ஏன்? இந்தப் பொருள் அவர்களுக்குப் பிடிக்குமா? பிடிக்காதா? வேறு ஒருவரும் இதையே வாங்கினால் நமக்கு மதிப்பு இருக்காதே! அவரிடம் இந்தப் பொருள் ஏற்கனவே இருந்தால் இதை என்ன செய்வார்? இப்படி சிந்தனை ஓட்டம் தடை இன்றிப் பாயும்.
ஆனால் சில நாட்களுக்கு முன்னர், தேவானாம் ப்ரிய திஸ்ஸன் (கடவுளின் நண்பன்), என்ற இலங்கை மன்னன் — தான் முன் பின் பார்த்திராத மாமன்னன் அசோகனுக்கு என்ன பரிசு அனுப்பினான் என்பதையும் உடனே அசோகன் பல அமைச்சர்களைக் கலந்தாலோசித்து என்ன என்ன அனுப்பினான் என்பதையும் கொடுத்தேன். அதற்குச் சில வாரங்களுக்கு முன்னர் கள்ளமில்லா உள்ளம் படைத்த கானக மக்கள், மன்னன் சேரன் செங்குட்டுவன் வந்ததை அறிந்து கொண்டு குவித்த பரிசுப் பொருள்களின் பட்டியலையும் கொடுத்தேன்.
இலங்கையின் வரலாற்றைக் கூறும் மகாவம்சம் என்னும் பாலி பொழி நூலிலும் பல பரிசுப்பொருட் குறிப்புகள், லஞ்சம் கொடுத்த தொகை பற்றிய குறிப்புகள் உண்டு. கி.மு. 1000 வாக்கில் யாகம் செய்த பிராமணர்களுக்கு என்ன கிடைத்தன என்ற குறிப்பு பிராமணங்கள் என்ற நூல்களில் வருகின்றன.
ஆயிரம் என்பது நமக்கு இன்றும் பெரிதாக இருக்கிறது. ஆனால் அக்காலத்தில் எதற்கெடுத்தாலும் ஆயிரம் பொற்காசுகள் கொடுத்தார்கள். (சஹஸ்ரம் என்பதன் தமிழ் வடிவம்= ஆயிரம்).
தருமி என்ற ஏழைப் பார்ப்பனப் புலவன் ஆயிரம் பொற்காசுகளுக்காக சிவ பெருமான் எழுதிக் கொடுத்த கவிதையை தனது என்று சொல்லி நக்கீரனிடம் மாட்டிய கதை நமக்குத் தெரிந்த திருவிளையாடல் புராணக் கதையே!
இப்படி எதற்கெடுத்தாலும் ஆயிரம் தங்கக் காசுகள் கொடுப்பதை யார் துவக்கிவைத்தார்? ஜனகர் என்னும் விதேக நாட்டு மன்னன் இந்த வழக்கத்தைத் துவங்கியதை பிரகதாரண்ய உபநிஷத்தில் இருந்து அறிகிறோம். (விதேக நாட்டுப் பெண் என்பதால் சீதைக்கு வைதேகி என்றும் ஒரு பெயர் )

ஜனகர் கூட்டிய அகில இந்திய ஆன்மீக மகாநாட்டுக்கு ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், சிந்து (பாகிஸ்தான்), காந்தாரம் (ஆப்கனிஸ்தான்) முதலிய பல இடங்களில் இருந்து அறிஞர் பெருமக்கள் படைபடையாக வந்தனர். இங்கேயுள்ள மிகவும் ஞானமுள்ள வேத பண்டிதர் ஒருவருக்கு ஆயிரம் பசுக்களும் அவற்றின் கொம்பில் சுற்றப்பட்ட தங்கமும் பரிசு என்று அறிவித்தார். இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நடந்தது. யாக்ஞவல்கிய மஹரிஷி ஆயிரம் பொற்காசுகளுடன் பசுக்கலை ஓட்டிச் சென்றுவிட்டார். மாமேதையான கார்க்கி என்ற பெண்மணியும் அந்த அசெம்பிளியில் உட்கார்ந்திருந்தாள். அவள் அதிகம் கேள்விகள் கேட்டாள். பிரம்மத்தைப் பற்றி அதிகம் பேசக்கூடாது என்று அவளது வாயை மூடிவிட்டார்.
ராஜசூய யாகம் செய்யும் புரோகிதர்களுக்கு என்ன பரிசுகள், தட்சிணை கொடுக்க வேண்டும் என்று விதி முறைகள் உள்ளன. ஹோத்ர் (ரிக் வேதி) நிலையில் இருக்கும் வேதியர்களுக்கு வட்ட வடிவமான தங்க ஆபரணம் தரப்படும். அத்வர்யு (யஜுர் வேதி) நிலையில் இருக்கும் வேதியர்களுக்கு இரண்டு ஆபரணங்கள் கிடைக்கும். உத்காத்ர் (சாம வேதி)ஆக செயல்படு வோருக்கு மலர் மாலையும், குதிரையும் தட்சிணையும் கிடைக்கும். இவர்கள் மூவருக்கும் ஒரு ‘சூபர்வைசர்’ உண்டு. அவரை பெரியவர் அல்லது பிராமணர் என்பர்.
பெருநற்கிள்ளி என்ற சோழ மன்னன் வேட்ட ராஜசூய வேள்விக்கு சேரனும் பாண்டியனும் வந்து ஒரே மேடையில் அமர்ந்ததைக் கண்ட அவ்வையார் அகம் மகிழ்ந்து, உளம் குளிர்ந்து தமிழர் ஒற்றுமை இன்று போல் என்றும் வாழ்க என்று பாடினார். அப்போதும் இப்படி தட்சிணை கொடுத்திருப்பார்கள். சோமயாகம் செய்வோருக்கு ராஜா போல ஒரு வெண் குடையும் கிடைக்கும்.
பராசரன் என்ற வலவைப் (யாத்ரீகர்) பார்ப்பான் தான் யாகம் செய்து வெண்குடையுடன் வந்ததை இளங்கோ அடிகள் சிலப்பதிகாரக் கட்டுரைக் காதையில் விரிவாக எடுத்துரைக்கிறார். யாகம் செய்து கொண்டுவந்த தங்க நகைகளைக் கொஞ்சமும் சுயநலம் இல்லாமல் ரோட்டில் விளையாடும் பிராமணச் சிறுவனிடம் கொடுத்துவிட்டுப் போகிறார். காரணம்; ஒரு சிறு பையன் அவருக்கு இணையாக கிடுகிடு என்று வேதத்தை ஒப்புவித்தான.
இவ்வளவு நகைகள் அந்ந்தப் பையனிடம் எப்படி வரமுடியும் என்றும் அது அவன் அப்பன் அரண்மனையில் திருடியதாக இருக்கும் என்றும் பொறாமை கொண்ட பார்ப்பனர்கள் கதை கட்டவே அவரைக் கைது செய்து சிறையில் போட்டனர். பிறகு அவரது மனைவி கார்த்திகாவுக்கு கடவுளே வந்து உதவினார் என்று இயம்பும் சிலம்பு — (காண்க: கட்டுரைக் காதை — சிலம்பு). இதில் நாம் கவனிக்க வேண்டியது யாகம் செய்த பார்ப்பனருக்கு கிடைத்த அதிக அளவு ஆபரணமாகும்.
மஹாவம்சத்தில் ஆயிரம் பொற்காசு
மகா வம்ச ஆறாவது அத்தியாயத்தில் ஒரு சுவையான செய்தி இருக்கிறது. சிங்கத்தைப் பிடிப்பவருக்கு ஆயிரம் நாணயங்கள் என்று மன்னன் அறிவித்து அந்த 1000 பணத்தை ஒரு யானையின் மீது வைத்து ஊர்வலம் விட்டான். இது இந்தியாவின் வங்க மாநிலத்தில் 2500 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. இப்போது கூட பயங்கரவாதிகளைப் பிடித்து தருவோருக்கு இவ்வளவு மில்லியன் டாலர் என்று அமெரிக்கா முதலிய நாடுகள் அறிவிக்கின்றன.
மகா வம்ச ஏழாவது அத்தியாயத்தில் இதைவிட சுவையான செய்தி உள்ளது. பாண்டிய நாட்டு தமிழ்ப் பெண் கப்பலில் வந்து இறங்கியவுடன் முதல் மனைவியான யக்ஷிணி வம்ச பெண்ணிடம் மன்னன் விஜயன் கெஞ்சுகிறான். தாயே! இங்கிருந்து போய் விடு! உனக்கு ஆயிரம் பணம் செலவழித்து பூஜை போடுகிறேன் என்று. இதுவும் 2500 ஆண்டுகளுக்கு முன் நடந்தது!
மகா வம்ச ஒன்பதாவது அத்தியாயத்தில், உன்மத்த சித்திரா என்ற பெண்ணுக்கு ஆண்குழந்தை பிறந்தது. இது அரசுரிமைக்குப் போட்டி போடும் என்பதால் அரசன் எல்லா ஆண் குழந்தைகளையும் — கம்சன் போல — கொல்லும் படி உத்தரவிட்டான். இந்த பாகவத புராணத்தை “பைத்தியக்காரி (உன்மத்த) சித்திரா” படித்திருக்கிறாள். ஆகவே தனக்கு ஆண் குழந்தை பிறந்ததும் அதை — தேவகி கிருஷ்ண பரமாத்மாவைச் செய்தது போல — வேறு ஒரு பெண்ணிடம் அனுப்பி அவளுக்குப் பிறந்த பெண் குழந்தையை தன்னிடம் வைத்துக் கொண்டாள். எந்தப் பெண் இப்படி உதவினாளோ அவளுக்கு ஆயிரம் பணம் பரிசு! அந்தக் குழந்தை — கிருஷ்ணன் போலவே மீண்டு வந்து — பாண்டுகாபயன் என்ற பெயரில் அரசாண்டான்.
மகா வம்ச பத்தாவது அத்தியாயத்தில், வேறு தாய் தந்தையிடம் வளரும் பாண்டுகாபயன் பற்றித் தகவல் கிடைத்தவுடன் அவன் மாமன்மார்கள் அவனைக் கொல்லத் திட்டம் போட்டனர். இதை அறிந்த தாய் வளர்ப்புத் தந்தைக்கு மேலும் ஆயிரம் பணம் அனுப்பி வேறிடத்துக்குப் போய்விடச் செய்தாள்.
மகா வம்ச 23-ஆவது அத்தியாயத்தில், ஒரு இளவரசன், சோம்பேறித் தடியன் ஒருவனுக்கு ஒரு கடினமான வேலை கொடுத்து தொலை தூரத்தில் வசிக்கும் பிராமணனைச் சந்திக்க அனுப்புகிறான். அதில் அந்த தடியன் வெற்றி பெறவே அவனுக்கு ஆயிரம் பணம் பரிசளியுங்கள் என்று உத்தரவிடுகிறான்.
மகா வம்ச 25-ஆவது அத்தியாயத்தில், பாலுகன் என்ற தமிழனைக் கொல்ல உதவிய பூச தேவனின் அம்பை தரையில் நட்டு அதை நாணயங்களால் அபிஷேகம் செய்தான் துட்ட காமனி என்னும் மன்னன். —அம்பு மறையும் வரை பண மழை பொழிந்து அத்தனையையும் பூசதேவனுக்குப் பரிசாகக் கொடுத்தான் துட்ட காமனி.
மகா வம்ச 35-ஆவது அத்தியாயத்தில், ஜோதிடருக்கு ஆயிரம் பணம் லஞ்சம் கொடுத்த செய்தி வருகிறது. வசபன் என்னும் மன்னன், ஒரு ஜோதிடரிடம் போய் — நான் இன்னும் எவ்வளவு காலம் உயிருடன் இருப்பேன்? — என்று கேட்டான். அவன் –நீ இன்னும் 12 ஆண்டுக்காலம் உயிரோடு இருப்பாய் —என்று சொன்னவுடன் இதை யாரிடமும் சொல்லிவிடாதே என்று ஆயிரம் பணம் கையூட்டு தருகிறான்.
இந்தியாவில் ரிஷி முனிவர்களுக்கு ஆயிரம் பணம் கொடுத்தான் ஜனகன்.— செண்பக பாண்டியனோ பெண்களின் கூந்தலில் இயற்கை மணம் உண்டா என்ற ஆராய்ச்சிக் கவிதைக்கு ஆயிரம் பொற்காசுகள் அறிவித்தான.—- மஹாவம்ச காலத்தில் சிங்கத்தைப் பிடிக்கக்கூட ஆயிரம் காசுகள் கொடுத்தான் வங்க மன்னன்!!!
இந்துக்கள்தான் உலகில் பெரிய எண்களையும், இப்போது நாம் எழுதும் 1, 2, 3 போன்ற எண்களையும் கண்டுபிடித்தனர். பூஜ்யம் என்னும் எழுத்தையும் தசாம்ச (டெசிமல் சிஸ்டம்) முறையையும் அவர்கள் கண்டுபிடித்ததால் இன்று நாம் கம்ப்யூட்டர்களை பயன்படுத்த முடிகிறது.
2000 ஆண்டுகளுக்கு முன்னர் மற்ற நாகரீகங்களில் 40, 120 முதலிய எண்களைப் பெரிய எண்களாகக் கருதினர். இந்துக்களோவெனில் ஆயிரம், லட்சம், கோடி, சத கோடி, சஹஸ்ர கோடி (ஆயிரம் கோடி) என்பனவற்றை சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தினர். பெரிய எண்கள அனைத்தும் சம்ஸ்கிருத மொழியில் இருக்கும். வள்ளுவரும் கூட கோடி ஆயிரம் என்ற சம்ஸ்கிருத எண்களை அடிக்கடி பயன் படுத்துவார்.
வளர்க கணிதம்! வாழ்க சஹஸ்ர கோடி யுகதாரி (விஷ்ணு) !!







You must be logged in to post a comment.