
WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN
Post No. 9209
Date uploaded in London – –31 January 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ் முழக்கம் நிகழ்ச்சியில் 31-1-2021 அன்று ஒளிபரப்பாகிய உரை.
ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

“செடியாய உடல் தீர்ப்பான் தீ வினைக்கு ஓர் மருந்தாவான்
பொடி ஆடிக்கு அடிமை செய்த புள்ளிருக்கு வேளூரைக்
கடி ஆர்ந்த பொழில் காழிக் கவுணியன் சம்பந்தன் சொல்
மடியாது சொல்ல வல்லார்க்கு இல்லையாம் மறுபிறப்பே”
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது
வைத்தீஸ்வரன் கோவில் என்று இன்று அழைக்கப்படும் திருப்புள்ளிருக்கு வேளூர் ஆகும். இது சென்னையிலிருந்து 246 கிலோமீட்டர் தூரத்திலும் மாயவரத்திலிருந்து 12 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது.
இத்தலம் கிருத யுகத்தில் கதம்ப வனம் என்றும் திரேதா யுகத்தில் வில்வ வனம் என்றும் துவாபர யுகத்தில் வகுள வனம் என்றும் கலியுகத்தில் நிம்ப வனம் என்றும் அழைக்கப்படுகிறது. இதனால் யுகம் கடந்த பல்லாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவில் இது என்பதை அறியலாம். இங்குள்ள வைத்யநாதர் ஸ்வயம்பு லிங்கமாகத் தோன்றி அருள் பாலிக்கிறார். அம்மன் பெயர் தையல் நாயகி. திருப்புள்ளிருக்கு வேளூர் என்று இது அழைக்கப்படுவதன் காரணம் முன்பு புள் எனப்படும் ஜடாயுவும் இருக்கு எனப்படும் ரிக் வேதமும் வேள் எனப்படும் முருகப்பிரானும் ஊர் எனப்படும் சூரியனும் இங்கு சிவனை பூஜித்ததால் இது அப்படி அழைக்கப்படுகிறது.
ஜடாயு பூஜித்ததால் ஜடாயு புரி என்றும் ரிக் வேதம் பூஜித்ததால் வேதபுரி என்றும் கந்தன் பூஜித்ததால் கந்தபுரி என்றும் சூரியன் பூஜித்ததால் சூரியபுரி என்றும் அங்காரகன் பூஜித்ததால் அங்காரகபுரி என்றும் அம்பிகை பூஜித்ததால் அம்பிகாபுரி என்றும் பல்வேறு பெயர்களைக் கொண்டிருக்கிறது.வினைதீர்த்தான் கோயில், தையல்நாயகி கோயில் என்ற பெயர்களும் இதற்கு உண்டு.
ஸ்ரீ வைத்யநாத ஸ்வாமி மேற்கு பார்த்து அருள் பாலிக்க வாலாம்பிகா எனப்படும் தையல்நாயகி தெற்கு நோக்கி அருள் பாலிக்கும் தலம் இது.
கீழ் புறமும் மேல் புறமும் இராஜகோபுரங்கள் அமைந்திருக்க, பின்பக்கம் கட்டை கோபுரம் உள்ளது. ஆலயத்தின் கீழ் திசையில் வீ ரபத்திரரும், மேல் திசையில் வைரவரும், தென் திசையில் கற்பக விநாயகரும் வடதிசையில் காளியும் அமர்ந்து காவல் புரிகின்றனர்.
இங்குள்ள முருகப்பெருமானின் நாமம் ஸ்ரீ செல்வமுத்துக்குமரர். குமரகுருபரருக்கு ‘பொன் பூத்த குடுமி’ என்று அடி எடுத்துக் கொடுத்த பிரான் இவர். முருகன் சூரனின் மார்பைப் பிளக்க வேல் வாங்கியது இந்தத் தலத்தில் தான்.
இராமர் ஜடாயுவைத் தகனம் செய்த இடம் இது தான். ஜடாயு குண்டம் என்ற குண்டத்தை இங்கு காணலாம்.

நவகிரகங்கள் ஒரே வரிசையில் அமைந்திருக்கும் அதிசயத் தலமும் இதுவே.
முன்னொரு காலத்தில் செவ்வாய் சரும நோயால் பீடிக்கப்பட்டு வருந்த இங்குள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் 45 நாட்கள் நீராடி வைத்யநாதரை வழிபட அவர் நோய் தீர்ந்தது.
ஆகவே இந்த சித்தாமிர்த தீர்த்தம் மிகவும் விசேஷமான தீர்த்தமாக ஆகி அனைவரின் நோயையும் இன்றளவும் குணப்படுத்துகிறது. இங்கு செவ்வாய் கிரகத்திற்குத் தனி சந்நிதி உண்டு. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட இங்கு அங்காரகனை வழிபடுதல் மரபு. குளத்தைச் சுற்றி எட்டு திக்குகளிலும் எட்டு தீர்த்தங்கள் உள்ளன.ஒருமுறை சதானந்த முனிவர் என்பவர் இங்கு நீராடித் தவம் செய்து வரும்போது பாம்பால் துரத்தப்பட்ட தவளை ஒன்று அவர் மீது பாய்ந்து அவர் தவத்தைக் கலைத்தது. முனிவர் வெகுண்டு இனி இந்த தீர்த்தத்தில் எந்தக் காலமும் தவளையும் பாம்பும் இல்லாமல் போகட்டும் என்று சாபமிட, இன்று வரை இந்தக் குளத்தில் தவளையும் பாம்பும் இருப்பதில்லை!
இந்தத் தலத்தின் பெருமையில் முக்கியமானது, இங்குள்ள இறைவன் நாலாயிரத்து நானூற்று நாற்பத்தெட்டு வியாதிகளையும் தீர்க்கத் திருவுள்ளம் கொண்டு தையல்நாயகி அம்மன் தைல பாத்திரம், சஞ்சீவி, வில்வமரத்து அடிமண் ஆகியவற்றை எடுத்து வர, சிவபிரான் தானே வைத்தியராகி அடியார்களுக்கு நோய் தீர்க்க அருள் செய்யப் பெற்ற அரும் செயலாகும்.
இந்தக் குளத்தில் நோய் தீர பக்தர்கள் வெல்லத்தைக் கரைப்பது மரபு. உப்பையும் மிளகையும் கலந்து பக்தர்கள் பிரகாரத்தில் உள்ள மரப்பெட்டி ஒன்றில் கொட்டி பிரார்த்தனை செய்கின்றனர். தங்கள் தங்களின் நோயைத் தீர்க்க வைத்யநாதரிடமிருந்து சிறிய திருச்சாந்துருண்டையைப் பெற்று சித்தாமிர்த தீர்த்தத்துடன் அதை உண்ண தீராத நோய்களும் தீர்கின்றன.
மேற்குத் திசை கோபுர வாயிலாகச் சென்றால் வெள்ளியாலும் தங்கத்தாலும் உள்ள இரு துவஜ ஸ்தம்பங்களைக் காணலாம்.

பிரம்மாண்டமான பிரகாரங்கள் இந்த ஆலயத்தில் உள்ளன. உட்பிரகாரத்தில் சுவாமி சந்நிதிக்கு மேற்புறம் ஸ்ரீ செல்வ முத்துகுமாரசாமி உற்சவர், வள்ளி, தெய்வானையோடும் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். துர்க்கை, தன்வந்திரி உள்ளிட்ட ஏராளமான விக்ரஹங்களை இங்கு தரிசித்து வழிபடலாம். அற்புதமான சிற்பங்களும், கல்வெட்டுக்களும் இந்த ஆலயத்தில் உள்ளன.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகத்தையும் திருநாவுக்கரசர் இரு பதிகங்களையும் அருளியுள்ள தலம் இது. இங்கு அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் பாடல்கள் 14. வடுகநாத தேசிகர், குமர குருபரர், சிவஞான தேசிகர், சிதம்பரநாத முனிவர், வடலூர் வள்ளலார், படிக்காசுத் தம்பிரான், காளமேகப் புலவர் உள்ளிட்ட ஏராளமானோர் இங்கு இறைவனைத் துதித்துப் பாடல்களைப் பாடியுள்ளனர்.
காலம் காலமாக கோடானு கோடி பக்தர்கள் வழிபடும் வாலாம்பிகா சமேத வைத்யநாதஸ்வாமி அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திகிறோம்.
அப்பரின் அருள் வாக்கு:-
குற்றமில்லியைக் கோலச் சிலையினால், செற்றவர் புரம் செந்தழல் ஆக்கியை
புற்று அரவணைப் புள்ளிருக்கு வேளூர், பற்ற வல்லவர் பாவம் பறையுமே!
நன்றி வணக்கம்.

tags — வைத்தீஸ்வரன் கோவில், ஆலயம் அறிவோம்