பாரதி பற்றி வ.ரா. எழுதிய முக்கிய நூல்

IMG_5774

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

WRITTEN BY S.NAGARAJAN

Date : 11 September  2015

Post No. 2146

Time uploaded in London: –   8-50 am

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்! – 7

ச.நாகராஜன்

மகாகவி பாரதியார்

.ரா எழுதிய முக்கியமான நூல் இது. பாரதி ஆர்வலர்கள் பிள்ளையார் சுழி போட்டுச் சேர்க்க வேண்டிய பாரதி சம்பந்தமான நூல்களில் முதலாவது நூலாக இது அமைகிறது.

பாரதி பக்தர்களுள் முதலானவர் மட்டுமல்ல முக்கியமானவராகவும் அமைகிறார் .ரா.

 

பாரதியாரின் புகழைப் பரப்புவேன்; பரப்புவதில் வெற்றியும் பெறுவேன் என்ற ஆவேசத்துடன் முனைந்து இவர் ஈடுபட்டதால் பாரதியாரின் பெருமையை முதலில் தமிழகம் உணர்ந்தது; பின்னர் உலகளாவிய அளவில் அவர் புகழ் விரிந்தது.

இதில் எல்லாப் பெருமையும் .ராவுக்கே.

 

1935இல் எழுதப்பட்ட இந்த நூல் சக்தி காரியாலயம் வெளியீடாக 1944ஆம் ஆண்டு தான் பிரசுரமானது. பாரதியாரின் வாழ்க்கையின் முக்கிய அம்சங்களை இது சுருக்கமாக உரைக்கிறது.135 பக்கங்கள் அடங்கிய இந்த நூல் 27 அத்தியாயங்கள் கொண்டுள்ளது. இப்போது இது சுலபமாகக் கிடைக்கிறது.

 

1889 செப்டம்பர் 17ஆம் தேதி திருவையாறுக்கு அருகில் உள்ள திங்களூரில் பிறந்த .ரா (ராமசாமி ஐயங்கார்) வைஷ்ணவ பிராமணர். ஆனால் பிராமண குலத்தில் அதிசயமானவர். 1951, ஆகஸ்ட் 23ஆம் தேதி மறையும் வரை அவர் தமிழில் சாதித்தது அதிகம். அதில் பாரதியைப் பற்றி சிந்தனை செய்து செயலாற்றியதே முக்கியமானதாக அமைந்தது.

 

 

பாரதியாருடன் .ராவின் சந்திப்பு

 

.ரா புதுச்சேரி சென்று பாரதியாரைச் சந்தித்ததே சுவையான அனுபவம். பாரதியாரைச் சந்தித்து தனது நோக்கமான அரவிந்த பாபுவைச் சந்திக்கும் விருப்பத்தை அவர் சொன்னார். பாரதியார் அவருக்கு தனது பாடலைப் பாடிக் காட்டினார். இந்த அற்புத ஆகர்ஷணம் .ரா.வை இறுதி வரை விடவில்லை.

அரவிந்தர் தனது குறிப்புகளில் .ரா.வின் தோற்றம் தன் மனக்கண்ணில் தெரிந்ததைக் குறிப்பிடுகிறார்.

புதுவை வாழ்க்கையில் அரவிந்தர், .வே.சு. ஐயர் ஆகியோருடனான பாரதியாரின் வாழ்க்கை அதிகாரபூர்வமாக .ரா.வால் இந்த வாழ்க்கை வரலாற்று நூலில் தரப்பட்டுள்ளது தமிழ் மக்களின் அதிர்ஷ்டம்.

 

 

பாரதியார் பற்றிய .ராவின் கணிப்பு

பாரதியாரைப் பற்றிய தனது கணிப்பாக நூலின் கடைசி அத்தியாயத்தில் .ரா. கூறுவது இது:-

பாரதியார் பிறந்த காலத்தில் தமிழ் மொழியும் ஜனசமூகமும் அவ்வளவாக நல்ல நிலைமையில் இல்லை. ஏங்கிக் கிடந்த தமிழர்கள், தூங்கிக் கிடந்த தமிழ் மொழிஇது தான் பாரதியார் கண்டது. இந்த நிலையிலிருந்த தமிழர்களை மாற்றி, ஊக்கமும் உள்வலியும் ஏற்படும்படியாகச் செய்வது மிகவும் அசாத்தியமான வேலையாகும். ஆனால் இந்த வேலையைப் பாரதியார் வெற்றிகரமாகச் செய்து முடித்தார். …..

 

 

இப்பொழுது மனித வர்க்கம் மாறிக் கொண்டு போவதைப் பார்த்தால், பாரதி சகாப்தம் என்பதற்கு ஐந்நூறு வருஷத்திற்குக் குறையாமல் ஆயுள் காலத்தை நிரணயிக்கலாம்.”

.ரா.வின் மதிப்பீட்டையும் தாண்டி பாரதியார் இன்னும் அதிக காலம் தனது தாக்கத்தையும் உத்வேகத்தையும் உலகிற்கு அளிப்பார் என்பதை காலத்தை வென்ற கவிஞன் என்ற நோக்கில் இன்று திடமுடன் கூற முடியும்.

 

 IMG_5775

பாரதியார்மகாத்மா காந்திஜி சந்திப்பு

நூலில் சுவையான ஒரு அத்தியாயத்தைச் சொல்லாமல் இருக்க முடியாது. பாரதியார் காந்திஜியைச் சந்தித்த சம்பவம்:

1919ஆம் வருடம் பிப்ரவரி மாதம் சென்னை வந்த மகாத்மா காந்திஜி ராஜாஜி குடியிருந்த கத்தீட்ரல் ரோடு இரண்டாம் நம்பர் பங்களாவில் வந்து தங்கினார்.

வாயில் காப்போன் .ரா. யாரையும் உள்ளே விடக் கூடாது என்று உத்தரவு.

 

.ராவின் சொற்களிலேயே நடந்த சம்பவத்தைப் பார்க்கலாம்:-

 

நான் காவல் புரிந்த லட்சணத்தைக் கண்டு சிரிக்காதீர்கள். அறைக்குள்ளே பேச்சு நடந்து கொண்டிருக்கிற சமயத்தில் பாரதியார் மடமடவென்று வந்தார்; “என்ன ஓய்!” என்று சொல்லிக் கொண்டே, அறைக்குள்ளே நுழைந்து விட்டார். என் காவல் கட்டுக்குலைந்து போய் விட்டது.

 

உள்ளே சென்ற பாரதியாரோடு நானும் போனேன். பாரதியார் காந்தியை வணங்கி விட்டு, அவர் பக்கத்தில் மெத்தையில் உட்கார்ந்து கொண்டார். அப்புறம் பேச்சு வார்த்தை ஆரம்பித்தது:

 

பாரதியார்: மிஸ்டர் காந்தி!இன்றைக்குச் சாயங்காலம் ஐந்தரை மணிக்கு நான் திருவல்லிக்கேணிக் கடற்கரையில் ஒரு கூட்டத்தில் பேசப் போகிறேன். அந்தக் கூட்டத்துக்குத் தாங்கள் தலைமை வகிக்க முடியுமா?

 

காந்தி: மகாதேவபாய்! இன்றைக்கு மாலையில் நமது அலுவல்கள் என்ன?

மகாதேவ்: இன்றைக்கு மாலை ஐந்தரை மணிக்கு, நாம் வேறோர் இடத்தில் இருக்க வேண்டும்.

காந்தி: அப்படியானால், இன்றைக்குத் தோதுப்படாது. தங்களுடைய கூட்டத்தை நாளைக்கு ஒத்திப் போட முடியுமா?

 

பாரதியார்: முடியாது! நான் போய் வருகிறேன். மிஸ்டர் காந்தி! தாங்கள் ஆரம்பிக்கப் போகும் இயக்கத்தை நான் ஆசீர்வதிக்கிறேன்.

பாரதியார் போய் விட்டார். நானும் வாயில்படிக்குப் போய்விட்டேன். பாரதியார் வெளியே போனதும், ‘இவர் யார்?’ என்று காந்தி கேட்டார். தாம் ஆதரித்து வரும் பாரதியாரைப் புகழ்ந்து சொல்வது நாகரிகம் அல்ல என்று நினைத்தோ என்னவோ, ரங்கசாமி அய்யங்கார் பதில் சொல்லவில்லை. காந்தியின் மெத்தையில் மரியாதை தெரியாமல் பாரதியார் உட்கார்ந்து கொண்டார் என்று கோபங்கொண்டோ என்னவோ சத்தியமூர்த்தி வாய் திறக்கவில்லை. ராஜாஜி தான், “அவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவிஎன்று சொன்னார்.

 

அதைக் கேட்டதும், “இவரைப் பத்திரம்மாகப் பாதுகாக்க வேண்டும்.இதற்குத் தமிழ்நாட்டில் ஒருவரும் இல்லையா?” என்றார் காந்தி. எல்லோரும் மௌனமாக இருந்து விட்டார்கள்.

.ரா.வின் இந்த ஆவணக் குறிப்பு மிகவும் முக்கியமானது; பொருள் பொதிந்தது.

 

 

.ராவின் முக்கிய நூல்

 

உரைநடைக்கு .ரா. என்று பாரதியார் பாராட்டி இருக்கிறார்அரவிந்தரிடமே.

அந்த .ரா. தன் உரை நடையால் உலக மகாகவியை ஒப்பற்ற விதத்தில் சித்தரித்து வைத்துள்ளார். பாரதியாரின் கவிதா சக்தி, தேச பக்தி, அனைவரையும் ஆவேசப்பட வைக்கும் பாடல் மற்றும் பேச்சு, எளிய வாழ்க்கை, கம்பீரமான சிந்தனை என இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்அத்தனையையும் சொற்சித்திரமாக வடித்துள்ளார் .ரா.

பாரதியார் பற்றி அறிய விரும்புவோர் வாங்க வேண்டிய அருமையான நூல் இது!

*****************