அதிசய புத்த துறவி ஸு யுன்! – 36 (Post No.3730)

Written by S NAGARAJAN

 

Date: 17 March 2017

 

Time uploaded in London:-  5-14 am

 

 

Post No.3730

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 36

ச.நாகராஜன்

 

115ஆம் வயது – (1954-1955)

ஸு யுன்னுக்கு இப்போது வயது 115. வசந்த காலம் வந்தது. மின் வம்சத்தில் இரண்டாம் வான் ஆட்சி காலத்தில் (1573-1619) வார்க்கப்பட்ட 16 அடி உயரமுள்ள வெங்க்லத்தால் ஆன வைரோகண புத்தர் சிலைக்காக பிரதான ஹாலை புனருத்தாரணம் செய்ய ஸு யுன் எண்ணினார். ஹாலின் மேற் கூரைகள் இரும்புத் தகடுகளால் ஆக்கப்பட்டிருந்தன. ஏனெனில் செங்கல் ஓடுகள் மலையுச்சியில் வீசும் காற்றில் பறந்தே போகும். ஆகவே ஸு யுன் அவற்றை இரும்பிலேயே வார்க்க எண்ணினார் கூடவே சமையல் செய்வதற்கான பாத்திரங்களையும் இரண்டு பெரிய வெங்கலத்தினாலான மணிகளையும் அமைக்க அவர் எண்ணினார்.

அப்போது அங்கு இருந்தவர்களின் எண்ணிக்கை பிக்ஷுக்கள், கலைஞர்கள், சிற்பிகள் ஆகியோர் அனைவரையும் சேர்த்து நூறைத் தாண்டியிருந்தது.

இந்த திட்டத்தைக் கேட்ட மக்கள் அனைவரும் நிதியை அனுப்பலாயினர்.

எல்லாம் ஒருங்கிணைந்து வரவே அனைவரையும் அவர் இரண்டு

பிரிவுகளாகப் பிரித்த்தார். ஒரு பிரிவு மடாலய கட்டிடங்களை புனருத்தாரணம் செய்யவும் இன்னொரு பிரிவு உழுவதற்காக நிலத்தைச் சுத்தம் செய்வதற்காகவும் அவர் ஏற்பாடு செய்தார்.

எல்லோரும் மும்முரமாகப் பணியாற்றவே ஐந்து மற்றும் ஆறாம் மாதங்களில் தர்ம ஹால் பணி நிறைவுற்றது. திரிபிடகத்திற்கான நூலகம் ஒன்றும் கூட சேர்ந்து முடிந்து விட்டது.

அதே சமயம் 10 ஏக்கர் நிலம் நெல் பயிரிடவும்  தயாரானது.

 

 

ஏழாம் மாதம்  தங்குவதற்கான 20 ஷெட்டுகள் கட்டி  முடிக்கப்பட்டன. ஆனால் மாஸ்டர் ஸு யுன்னோ அவரது வழக்கமான பசுந்தொழுவத்திலேயே தங்கியிருந்தார்.

நான் ஹுவா ம்டாலயத் தலைவர் பென் ஹுவான்,பிக்ஷுணி குவான் டிங் ஆகியோர் அங்கு வந்த போது தரையில் உடைந்து கிடந்த ஒரு மணியைப் பார்த்து அது ஏன் அப்படியே விடப்பட்டிருக்கிறது என்று வினவினர்.

அதற்கு அவர்,’தானே ஒலிக்கும் மணி’ என்று இதற்குப்

பெயர். எப்போதெல்லாம் உயரிய நிர்வாண நிலையை அடைந்த மகான்கள் இங்கு வருவார்களோ அப்போதெல்லாம் அது தானே ஒலிக்கும். ஜப்பானியப் படைகள் இங்கு வந்து மடாலயத்தைத் தகர்த்த போது அது மேலிருந்து கீழே விழுந்தது. ஆனால் அதன் விரிசல் தானே சரியாகும்” என்றார்.

அதை அவர்கள் பரிசோதித்துப் பார்த்த போது மணியின் மேற்புறம் விரிசல் சரியாகி இருந்தது.

மாஸ்டர் ஸு யுன். “அதன் விரிசல் முற்றிலும் சரியாவதற்காகக் காத்திருக்கிறேன். சரியானவுடன் அதை புதிதாகக் கட்டப்பட்டுள்ள கோபுரத்தில் தொங்க விடுவேன்” என்றார்.

பதினோராம் மாதம் பசுந்தொழுவத்தில் தீ பிடித்தது. அனைவ்ரும் ஸு யுன்னிடம் வந்து புதிய கட்டிடத்திற்கு வருமாறு அழைத்தனர்.

அவர்,” அந்தப் பழமையின் கவர்ச்சியே எனக்குப் பிடிக்கிறது” என்று கூறி அங்கேயே தங்கினார்.

அந்த வருடம் பீஜிங்கிலிருந்து வருமாறு தொடர்ந்து பல முறை தந்திகள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால் தள்ளாத வயதைச் சுட்டிக் காட்டிய ஸு யுன் அங்கு போகவில்லை.

வருட முடிவில் ஒரு வார சான் தியானப் பயிற்சி நடந்தது.

116ஆம் வயது – (1955-1956)

ஸு யுன்னுக்கு இப்போது வயது 116. வசந்த காலம் வந்தது. ஐந்து வித தியானத்திற்காக ஒரு ஹாலும், கூடுதல் கட்டிடங்களும், சமையல் அறைகளும், சரக்கு வைக்கும் அறைகளும், விருந்தினர் விடுதியும், தியான  மண்டபங்களும் ஒன்றன் பின் ஒன்றாகத் தயாராயின.

கோடை காலத்தில் பீஜிங்கில் புத்த சங்கத்தின் கூட்டம் நடந்த போது மாஸ்டர் அதிக வேலைப்பளுவுடன் இருந்ததால் அங்கு செல்லவில்லை.

இலையுதிர்காலத்தில் சீனாவின் இதர பகுதிகளிலிருந்து பல துறவிகள் வந்தனர். அவர்களில் பலர் சூத்ரங்களை இசைக்கத் தங்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க உரிய உபதேசத்தை முறைப்படி செய்யுமாறு வேண்டினர்.

ஆனால் மாஸ்டரோ தற்போதைய சூழ்நிலையில் அது உகந்ததில்லை என்று எண்ணினார். மடாலயத்தில் ஏற்கனவே தங்கி இருந்தவர்களுக்கு மட்டும் அவர் அந்த உரிமையை வழங்கினார் பீஜிங்கில் உள்ள புத்த சங்கத்திற்கும் இது தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேள்விப்பட்டவுடன் சீனாவின் இதர பகுதிகளில் இருந்த பிக்ஷுக்கள் தங்களுக்கும் அவர் சூத்ரம் இசைக்க உபதேசம் அளிக்க வேண்டி நூற்றுக் கணக்கில் வந்தனர்.

இப்படியாக ஐநூறு பேர் அங்கு சேரவே அவர்களுக்கான தங்குமிடம். உணவு ஆகியவற்றை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது.

அத்தோடு ரோமன் கத்தோலிக்க சர்ச், புத்த இளைஞர் சங்கம், டையமண்ட் போதி மண்டலா ஆகியவற்றிற்கு பல்வேறு சங்கடங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தன.

கண்சுவில் உள்ள அதிகாரிகள் தேவையற்றவர்கள் எல்லோரும் ஸு யுன்னிடம் குவிகிறார்கள் என்ற குற்றத்தைச் சாட்டியது.

இதைக் கேள்வியுற்ற அவர் எதிர்வரும் தொந்தரவுகளைத் தவிர்க்க எண்ணினார்.

அரசோ ஒழுங்கு நிலைமையைச் சீரமைக்க போலீஸ் படையை அங்கு அனுப்பியது.

தற்போதைய சூழ்நிலையில் அனைவருக்கும் உபதேசம் செய்வதும் இயலாது. அதே சமயம் அங்கு குழுமி இருப்பவர்களுக்கு அது இல்லை என்று சொல்வதும் உசிதமாகாது.

மாஸ்டர் பிரஹ்ம நெட் சூத்ரத்தில் உள்ள ஒரு அத்தியாயத்தை பின்பற்றி அனைவரையும் தானே இப்படி உரிமை பெற வழி வகுத்தார்.

பத்து நாட்கள் இது தொடர்ந்து நடை பெற்றது. பின்னர் அனைவரையும் தம் தம் இடங்களுக்குச் செல்லுமாறு அவர் உத்தரவிட்டார். பின்னர் ஒரு வார சான் தியானம் நடை பெற்றது.

 

அந்த வருடம் சுமார் 21.2 ஏக்கர் தரிசு நிலம் பண்படுத்தப்பட்டு பயிரிடப்பட்டது.

இதைப் பார்த்த உள்ளூர் அரசு அதிகாரிகள் (கம்யூனிஸ்டு குண்டர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும் – மொழிபெயர்ப்பாளர்) அவற்றைத் தாங்க்ளே மேற்கொண்டு உற்பத்தியைப் பெருக்குவோம் என்று  கூறி அவற்றைக் கையகப்படுத்தினர்.

மாஸ்டர் ஸு யுன் இதைப் பொறுமையுடன் சகித்தார். ஆனால் அந்த (அயோக்கிய) அதிகாரிகள் மாஸ்டரின் பசுந்தொழுவத்தையும் கையகப்படுத்தவே மாஸ்டரால் பொறுக்க முடியவில்லை.

பீஜிங்கிற்கு நிலைமையைத் தெரிவித்து தந்தியை அனுப்பினார்.

மேலதிகாரிகள் உரிய விசாரணையை நடத்தி பசுந்தொழுவத்தையும் கையகப்படுத்தப்பட்ட அனைத்து நிலங்களையும் திரும்பத் தருமாறு உத்தரவிட்டனர்.

இதைத் தர உள்ளூர் அதிகாரிகள் சற்று இழுத்தடித்தனர். அவர்களுக்கு மாஸ்டரின் மீது ஒரு தீராத வெறுப்பு உருவானது. பல சிரமங்களை அளிக்கலாயினர்.

நாடெங்கிலுமிருந்து 1500 துறவிகள அங்கு வந்து சூத்ரங்களை இசைக்கலாயினர். வேய்ந்த கூரைகளைக் கொண்ட ஷெட்களில் அவர்கள் தங்கினர். தினசரி பேட்டிகளை மாஸ்டர் வழங்கலானார்.

பின்னர் தினமும் உரைகளை ஆற்றத் தொடங்கினார்.

அவை அனைத்தும் முறையாக ஒலிப்பதிவு செய்யப்பட்டன.

116ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

-தொடரும்

***

குறிப்பு : கம்யூனிஸ்ட் வன்முறையில் கலாசார புரட்சி என்ற பெய்ரில் சீனாவில் நல்லோர்க்கு எத்தனை கொடுமைகள் இழைக்கப்பட்டன என்பதை இங்கு எண்ணிப் பார்க்க வேண்டும் – மொழி பெயர்ப்பாளர்