
Post No 1029: Dated 8th May 2014
By ச.நாகராஜன் (Part-3)
“எல்லாமே எண்கள் தான்!”
-பிதகோரஸ்
இயற்கையில் உள்ள கணித ரகசியங்களையும் வடிவமைப்பு ரகசியங்களையும் கண்டுபிடிக்க விஞ்ஞானியாகத் தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. ஐன்ஸ்டீன் ஒளியின் வேகத்தைக் கண்டுபிடிக்க ஒளியின் மீது ஏறிச் செல்வது போலக் கற்பனை செய்து அதைக் கண்டு பிடித்தார். ஆனால் சாமானியராக இருந்த பலரும் கணித ரகசியங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
எடுத்துக்காட்டாக ‘குட் வில் ஹண்டிங்’ (Good Will Hunting) என்ற ஆங்கிலத் திரைப்படத்தில் வரும் கதாநாயகனான வில் ஹண்டிங் என்ற இருபது வயது இளைஞனைக் கூறலாம். இந்த ஆங்கிலப் படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. உள்ளூர் மதுபானக் கடையில் வேலை பார்த்து வந்த ஹண்டிங் மிகப் பெரும் மேதைகளாக இருந்த கணிதப் பேராசிரியர்களால் தீர்க்க முடியாத கணிதப் பிரச்சினைகளை அனாயாசமாக தீர்த்து விடுவான்.
ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதுகளில் அமெரிக்காவில் சாண்டியாகோவில் வாழ்ந்தவர் ஐந்து குழந்தைகளுக்குத் தாயாரான பெண்மணி மர்ஜோரி ரைஸ். அவர் கணிதப் பேராசிரியர்கள் கண்டுபிடிக்கவே முடியாது என்று நினைத்த ஜாமெட்ரி வடிவங்களை இல்லத்தில் இருந்தபடியே கண்டுபிடித்து அனைவரையும் பிரமிக்க வைத்தார். 1976இல் அவர் இப்படி 58 விசேஷ வடிவங்களை அமைத்துக் காட்டினார்.
1998ஆம் ஆண்டு கல்லூரி மாணவரான ரோலண்ட் க்ளார்க்ஸன் என்பவர் மிகப் பெரும் பிரைம் எண்ணை – பகா எண்ணைக் கண்டு பிடித்தார். (பகா எண் என்பது ஒன்றாலும் அதே எண்ணினாலும் மட்டுமே வகுக்கக் கூடிய ஒரு எண். உதாரணமாக 11 என்ற எண்ணை ஒன்றாலும் அதே பதினொன்றாலும் மட்டுமே வகுக்க முடியும்) இப்போது புதுப் புது பிரைம் நம்பர்களைப் பெரும்பாலும் கல்லூரி மாணவர்களே கண்டுபிடிக்கின்றனர்!
கயாஸ் (CHAOS) எனப்படும் குழப்பம் அல்லது சீரற்ற தன்மை பற்றிய கயாஸ் தியரி என்று ஒன்று உண்டு. இந்த குழப்பத்திலும் கூட ஒரு ஒழுங்கு இருக்கிறது என்பதை இப்போது கண்டு பிடித்துள்ளனர்.
வானத்தில் உள்ள மேகக் கூட்டங்கள் வெவ்வேறு வடிவத்திலும் அளவுகளிலும் சீரற்ற தன்மையில் இருப்பது போல நம் கண்களுக்குத் தோன்றினாலும் அதை உயர்த்திலிருந்து பார்க்கும் போது அதிலும் ஒரு ஒழுங்கு, லயம் இருப்பதைப் பார்த்து விஞ்ஞானிகள் பிரமிக்கின்றனர்.
இப்படி கணித மர்மங்களை ஏன் கண்டுபிடிக்க வேண்டும் என்பதை விஞ்ஞானிகள் விளக்குகின்றனர். முதலாவதாக பிரபஞ்சத்தில் உள்ள புதிர்கள் அனைத்திற்கும் விடைகளை கணித எண்களே தருகின்றன! பிரபஞ்சத்தில் உள்ள மர்மங்களைக் கண்டுபிடித்து விட்டால் நாளை என்ன நடக்கும் என்ற கணிப்பைச் சரியாகச் செய்ய முடியும். ஒரு விண்கல் நம் பூமியின் மீது மோத வருகிறது என்றால் அதைத் தடுக்கும் தற்காப்பு நடவடிக்கையிலும் ஈடுபட முடியும்.
அத்தோடு இந்த இயற்கை கணித ரகசியங்களைக் கண்டுபிடித்து விட்டால் மிக உயரிய நாகரிகத்தை அடைந்து வளமுடன் அனைவரும் வாழும் வழியையும் கண்டு பிடிக்கலாம்.
இந்துமத ரகசியங்கள்
நமது முன்னோர்கள் இந்த அரிய ரகசியங்களைக் கண்டு பிடித்து அவற்றை யந்திரங்களாக மாற்றி வழிபட வழி வகுத்தனர்.ஸ்ரீ சக்ர யந்திரம் என்பது பிரபஞ்ச தத்துவத்தையும் ரகசியத்தையும் சிறு யந்திரத்தில் அடக்கிக் காண்பிக்கப்பட்ட வழியே என்றும் அதிக ஆற்றலைக் கொண்ட இந்த யந்திரத்தை இப்போது ‘டீ- கோட்’ செய்ய விஞ்ஞானிகள் முயல்கின்றனர் என்பதும் சுவையான செய்தி அல்லவா! நான்காம் தலைமுறை கணினி கூட ஸ்ரீயந்திரத்தின் சிக்கலான அமைப்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை இதுவரை!
பெயரில் உள்ள எழுத்துக்களுக்கும் எண்களுக்கும் உள்ள தொடர்பை முதலில் பிதகோரஸ் கூறினார் என நம்புகின்றனர். ஆனால் வடமொழியில் உள்ள ‘கடபயாதி சங்க்யா’ என்ற முறை எதையும் கணித சூத்திரத்தில் அடக்கி விடும் ஒரு வழி முறையாகத் தொன்று தொட்டு நம் நாட்டில் இருந்து வருகிறது. பெயரில் உள்ள எழுத்துக்களுக்கும் எண்களுக்கும் உள்ள தொடர்பை -இந்த கடபயாதி வழிமுறை உள்ளிட்ட விஷயங்களை – பல சம்ஸ்கிருத நூல்கள் விளக்குகின்றன!
எடுத்துக்காட்டாக ஆதி சங்கரரின் பெயரிலேயே அவர் பிறப்பு பற்றிய அனைத்து விவரங்களும் அமைந்துள்ளன. சம்-க-ர என்பதற்கு உரிய எண்களாக 5-1-2 ஆகியவை அமைகின்றன. கடபயாதி முறைப்படி இந்த எண்களைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டு விவரங்களை அறிய வேண்டும். அதன் படி இந்த எண்கள் 2-1-5 என்ற வரிசையில் மாற்றி அமைத்துப் பார்த்தால் 2 என்பது அவர் பிறந்த மாதமான வைகாசி மாதத்தையும் ஒன்று முதல் பக்ஷமான வளர்பிறையையும் ஐந்து என்பது அவர் பிறந்த திதியான பஞ்சமியையும் குறிக்கும். வைகாசி மாதம் சுக்லபட்சம் பஞ்சமியில் சங்கரர் அவதரித்தார் என இதன் மூலம் அறிய முடிகிறது.
மஹாபாரதத்தின் உண்மைப் பெயரான ஜய என்பதை 8-1 என்ற எண்கள் குறிக்கின்றன. இதை கடபயாதி முறைப்படி திருப்பிப் போட்டால் வருவது 18. ஆகவே பதினெட்டுப் பர்வங்களைக் கொண்ட இந்த நூலில் பதினெட்டு என்ற எண் முக்கியத்துவத்தைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. இவை எளிய உதாரணங்கள். ஆனால் சிக்கலான பல மர்மங்களை இந்த முறைப்படி சம்ஸ்கிருத நூல்களில் மறைத்து வைத்துள்ளனர். இதை ஆராய்வோர் பிரமித்து மலைக்கின்றனர்.
பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து மர்மங்களையும் ஆராய்ந்து பார்த்து விட்டு, “எல்லாமே எண்கள் தான்” என்ற பிரபலமான தத்துவத்தைச் சொன்னார் பேரறிஞர் பிதகோரஸ். ஆனால் இதையே தொலைக்காட்சி, ரயில், கார் போன்ற நவீன வசதிகள் இல்லாத தமிழக குக்கிராமத்தைச் சேர்ந்த சாதாரண பாமரன் ஒருவன் “எல்லாம் ஒரு கணக்குத் தான்” என்று சர்வ சாதாரணமாகச் சொல்லும் போது பிரபஞ்சம் பற்றிய பேரறிவை அவனது அனுபவபூர்வமான வார்த்தைகளில் கண்டு பிரமிக்க வேண்டி இருக்கிறது! ஆராய்ந்து பார்த்தால் எல்லாமே எண்கள் தான்!!
அறிவியல் அறிஞர் வாழ்வில்.. ..
பிரபல கணித மேதையான நேபியரைப் பற்றி சுவையான சம்பவங்கள் ஏராளம் உண்டு. ஆன்மீகத்திலும் கணிதத்திலும் அளவற்ற ஆர்வம் கொண்டவர் நேபியர். அவர் ஒரு பிரபலமான மாஜிக் நிபுணரும் கூட! ரஸவாதத்திலும் ஆவிகளுடன் தொடர்பு கொள்வதிலும் கூட அவருக்கு ஆர்வம் அதிகம். சின்ன பெட்டி ஒன்றில் ஒரு சிலந்தியையும் கூடவே எடுத்துக் கொண்டு எங்கும் போவது அவரது வழக்கம். அவருடன் இருக்கும் கறுப்புச் சேவல் தான் அவருக்குக் குறி சொல்லும் பரிச்சயமான ஆவி!
இந்தச் சேவலை வைத்துக் கொண்டு தான் தன்னுடைய பணியாளர்களில் யார் தன் வீட்டிலிருந்து திருடிக் கொண்டு போகிறார் என்பதை திருட்டு நடக்கும் போது அவர் கண்டுபிடிப்பார். தன்னுடைய பணியாளர்களை ஒவ்வொருவராக வரச் சொல்லி ஒரு அறையில் பூட்டுவது அவர் வழக்கம். தன்னுடைய சேவலைத் தடவுமாறு அவர்களிடம் கூறுவார். பின்னர் சேவல் யார் திருடன் என்பதை அவரிடம் கூறும். ஆனால் உண்மையில் நடப்பது என்னவெனில் கறுப்பு வண்ணச் சேவலின் மீது கறுப்புப் பொடியை அவர் தடவி விடுவார்..பணியாளர் ஒவ்வொருவராக சேவலைத் தொட்டுத் தடவ வேண்டும். குற்றம் இழைக்காதவர்கள் கள்ளம் கபடமின்றிச் சேவலை நன்கு தடவுவார்கள். உண்மையான குற்றவாளியோ அதைத் தடவுவது போலப் பாசாங்கு செய்வார். நேபியர் ஒவ்வொருவரின் கையையும் சோதிக்கும் போது எவர் கை மிகவும் சுத்தமாக இருக்கிறதோ அவர் தான் குற்றவாளி என்று கண்டுபிடித்து விடுவார்.
‘ மதி ‘ பாதி, ‘மாஜிக்’ பாதி!! எப்படி கணித மேதையின் தந்திரம்!
Contact swami_48@yahoo.com
*****************


You must be logged in to post a comment.