ஸ்ரீரங்கபட்டிணம்- ஆலயம் அறிவோம்! (Post No.8881)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 8881

Date uploaded in London – –2 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

2-11-2020 அன்று ஞானமயம் சேனலில் ஒளிபரப்பப்பட்ட ஆலயம் அறிவோம் உரை! FACEBOOK.COM/GNANAMAYAM

ஞானமயம் வழங்கும் புதிய பகுதி ஆலயம் அறிவோம்!

வழங்குவது பிரஹன்நாயகி சத்ய நாராயணன்.

பாரத நாடெங்கும் பரவி இருக்கும் பல்லாயிரக் கணக்கான ஆலயங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. ரிஷிகள், மகான்கள், சித்தர்கள், அருளாளர்கள், யோகிகள் என ஏராளமானோர் வழிபட்ட தலங்கள் இவை.

அவதார புருஷர்கள் காலடி பதித்த தலங்கள் இவை. ராமாயண, மஹாபாரத இதிஹாஸங்களுடன் தொடர்பு கொண்ட தலங்கள் இவை. புராண சம்பவங்கள் நிகழ்ந்த இடங்கள் இவை.

ஒவ்வொரு தலமும் நமக்கு தர்மார்த்த காம மோக்ஷம் எனப்படும் நான்கு புருஷார்த்தங்களையும் – அதாவது அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு பேறுகளையும் – தரும் என்பதில் ஐயமில்லை.

இனி இதோ,  ஸ்ரீவைகுண்டத்தில் பாயும் விரஜா நதிக்கு சமானமான பெருமை உடைய காவிரி நதி தீரத்தில் அமைந்துள்ள தலமான  ஸ்ரீரங்கபட்டிணம் பற்றிய  ஒரு சிறிய அறிமுகம்.

பங்களூரிலிருந்து சுமார் 140 கிலோமீட்டர் தொலைவிலும் மைசூரிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள புனித தலம்

ஸ்ரீரங்கபட்டிணம்.

கோயிலின் மூலவர் ரங்கநாதர்; தாயார் ரங்கநாயகி.

காவிரி, ரங்கநாதரை நோக்கித் தவமிருந்து அவரது தரிசனம் பெற்ற தலம் இது.

ஸ்ரீரங்கநாதரை நோக்கி ஸ்ரீரங்கபட்டிணத்தில் காவிரி பாய்கின்ற முக்கூடலில் காவிரி தேவியானவள் தவம் செய்ய, காவிரியின் தவத்தை மெச்சிய பெருமாள் அவளுக்கு தரிசனம் தந்து மூன்று வரங்களைத் தந்தார்.

முதலாவது வரம் – கங்கா நதியை விட காவிரி நதியானவள் புனிதத் தன்மை உடையவளாகட்டும்.

இரண்டாவது வரம் – ஸ்ரீரங்கபட்டிணம் பல புண்ணியவான்கள் யாத்திரை செய்யும் புனிதத் தலமாகட்டும்.

மூன்றாவது  தன்னுடைய பக்தர்களுக்கு இஷ்ட வரங்களைத் தந்தருள தானே இங்கே எழுந்தருளுவது.

இந்த மூன்று அரிய வரங்களையும் பெற்ற காவிரி ஸ்ரீரங்கநாதரை பூஜித்து அவரை அங்கேயே சிலையாக ஆதிசேஷனில் சயனம் கொண்டுள்ள ரூபத்தில் எழுந்தருளச் செய்தாள்.

அங்கே அரங்கநாதரை சேவிக்க வந்த லட்சுமி தேவி காவிரியில் ஸ்நானம் செய்து, அவரை தரிசித்து தானும் அங்கேயே தென்கிழக்கு மூலையில் ஒரு கற்சிலையாக எழுந்தருளினாள்.

இந்த தலத்தின் மஹிமையை உணர்ந்த பிரம்மா, ருத்திரன் உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் இங்கு வந்து எம்பெருமானைப் பூஜித்தனர்.

ஆலயத்தைச் சுற்றி காவிரி பாய்வதால் இது ஒரு தீவு ஆனது. பிரம்மா நாரதருக்கு உபதேசித்த  பாஞ்சராத்திர வழிபாட்டு முறை இங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மிகுந்த தவ வலிமை உடைய கௌதம மஹரிஷி இங்கு வசித்து வந்தார்.

கௌதம ரிஷியைப் பற்றிய பல வரலாறுகள் இந்த க்ஷேத்திரத்துடன் தொடர்பு கொண்டவையாகும்.

ஒருமுறை மஹரிஷிகள் அத்திரி, யாக்ஞவல்க்யர், கண்வர், போதாயனர், சுகர், பராசரர் ஆகியோர் கௌதம முனிவரின் ஆசிரமத்திற்கு வந்தனர். அவர்களை வரவேற்ற கௌதமர் ரங்கநாதரை வழிபட்டு ஒரு யாகத்தைச் செய்தார். யாகத்தின் முடிவில் பெருமாள் அவர்கள் முன் தோன்றி, அருகில் உள்ள ஒரு துளசிச் செடிகளின் மத்தியில் எறும்புப் புற்றினுள் தான் சிலா ரூபமாக இருப்பதாகக் கூறியருளினார். உடனே கௌதமர் அந்த புதர் மத்தியில் சென்று பிரம்மா, ருத்திரன் உள்ளிட்ட அனைத்து தேவர்களையும் காமதேனுவையும் அழைத்தார். காமதேனு அந்த எறும்புப் புற்றின் மீது தன் பாலை வர்ஷித்தது. புற்று மண் கரைந்தது; உள்ளே இருந்த பெருமாளை அனைவரும் கண் குளிரக் கண்டு சேவித்தனர்.

இது நிகழ்ந்த புண்யகாலம் மேஷ மாதம் சுக்கில பக்ஷம் சப்தமி திதி சனிக்கிழமையாகும்.

அன்றிலிருந்து இந்த க்ஷேத்திரம் கௌதம் க்ஷேத்திரம் என்ற பெயரைப் பெற்றது. கோவில் பிரம்மானந்த விமானம் என்று அழைக்கப்படலாயிற்று.

பஞ்ச ரங்கத் தலங்கள்

கௌதமர் ரங்கநாதரை முதன்முதலாக தரிசித்து வழிபட்ட தினமானது ஸ்ரீரங்கஜெயந்தி என்று இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தத் தலம் பஞ்ச ரங்கத் தலங்களில் ஒன்று. ஸ்ரீரங்கபட்டிணம் ரங்கநாதர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், கும்பகோணம் சாரங்கநாதர், திருப்பேர்நகர் எனப்படும் கோவிலடி அப்பால ரங்கநாதர், மாயவரம் பரிமளரங்கநாதர் ஆகிய ஐந்து ரங்கநாதர் ஸ்தலங்களும் பஞ்ச ரங்கத் தலங்களாகும்.

இந்தக் கோவிலுக்கு கங்க அரசர்கள், ஹொய்சாள அரசர்கள் உள்ளிட்ட ஏராளமான மன்னர்கள் காணிக்கைகள் பலவற்றை அளித்துள்ளனர். நூற்றுக்கணக்கான சுவையான வரலாறுகளைக் கொண்டது இந்த அபூர்வ ஆலயம்.

காலம் காலமாக மக்கள் பக்தியுடன் வணங்கி வரும் ஸ்ரீரங்கபட்டிணம் ரங்கநாதர், அனைவருக்கும் சர்வ மங்களத்தை தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.   

நன்றி. வணக்கம்.

 tags – ஸ்ரீரங்கபட்டிணம்,  ஆலயம் அறிவோம்,