
WRITTEN BY R.NANJAPPA
Post No.7844
Date uploaded in London – – 18 April 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஹிந்தி படப் பாடல்கள் – 10 – ஸ்வரமும் சாஹித்யமும்
R.Nanjppa
இசை – ஸ்வரமும் சாஹித்யமும்
இசைக்கு அடிப்படை ஸ்வரங்கள். ஆனால் இசை சாஹித்யத்துடன் சேரும்போதுதான் அதற்கு ஒரு முழுமை , நிறைவுத்தன்மை கிடைக்கிறது, மனதில் நிலைக்கிறது.
நமக்கு தித்திப்பு சாப்பிடவேண்டும். சர்க்கரை, வெல்லம் , தேன் இவற்றை நேரடியாகச் சாப்பிடலாமா? எவ்வளவு சாப்பிட முடியும்? ஒரு தின்பண்டமாகச் செய்தால் தான் அதிகம் சுவைக்கலாம்..
‘டைகர் ‘ வரதாச்சாரியார் ரயில் பயணத்தின் போது (சிதம்பரம்–சென்னை) ஸஹானா ராகத்தை எடுத்தால் விடியவிடிய , சென்னை வந்து சேரும் வரை ஆலாபனை செய்வாராம் –
இன்று இதை எத்தனை வித்வான்கள் செய்வார்கள்? எத்தனை பேருக்கு கேட்டு ரசிக்க இயலும்?
ராகத்தை ஸ்வரத்தால் உருவாக்குகிறோம். இது மனக் கற்பனை தான். இதைச் சிலர்தான் அனுபவிக்கமுடியும். இத்தகைய மன ஓட்டம் அமைவது அரிது. அதற்கே சாஹித்யம் என்ற சால்வையைப் போர்த்தினால் பலரும் தரித்துக் கொள்ளலாம்!
நமது புராதன சங்கீதம் அதிக வழக்கில்லாமல் இருந்தபோது, சாஹித்யமியற்றி ராகங்களை நிலைக்கச் செய்து, இசை மக்களிடையே பரவச்செய்தவர்கள் கர்னாடக இசையின் மும்மூர்த்திகள். அவர்களுக்கும் முன்பு வந்தவர் புரந்தரதாசர். இவர்கள் இயற்றிய சாஹித்யமில்லாமல் பல ராகங்கள் நமக்குப் புரியவே புரியாது. நம்மில் பலருக்கும் இன்றும் ஸ்வரங்களை மட்டும் வைத்தே ஒரு ராகத்தை அடையாளம் காண முடியாது. சக்கனி ராஜ என்றால் கரஹரப்ரியா என்போம். ஆரோஹணம்–அவரோஹணம் மட்டும் சொன்னால் என்ன புரியும்?
கர்னாடக–ஹிந்துஸ்தானி மரபுகள்
கர்னாடக இசை சாஹித்யத்தையே சார்ந்திருக்கிறது. ஹிந்துஸ்தானி இசை பெரும்பாலும் ஸ்வரத்தையே வைத்துப் பாடுவது. ஏன் இப்படி ஆயிற்று? ஹிந்துஸ்தானி இசையில் ஏன் சாஹித்யம் அதிகமில்லை? இதற்கு ரா.கணபதி ஒரு விளக்கம் தருகிறார், இந்திய இசைக்கு இரு பெரும் ஆதாரங்கள் நாரதரும் ஹனுமானும் ஆவர்.. நாரதர் சாஹித்யத்திற்கு முக்கிய இடம் தந்தார்– அவர்தான் கர்னாடக இசையின் ஆதி குரு. ( “நாரத குரு ஸ்வாமி” என்று தியாகையர் பாடுகிறார்.)
ஹனுமாரோ, சுத்த ஸ்வரத்தை மட்டுமே வைத்து இசையை வளர்த்தார்–இது வட இந்தியாவில் நிலைபெற்றது, இதன் விவரத்தை ரா.கணபதி எழுதிய “ஜய ஹனுமான்” என்ற புத்தகத்தில் காணலாம். ஸ்வாமி விவேகானந்தரின் கருத்து வேறு. ]
ஒன்று மட்டும் தெளிவு. ராகத்தைப் பாடுவதில்–ஆலாபனை செய்து வளர்ப்பதில் ஹிந்துஸ்தானிப் பாடகர்களுக்கு இணை இல்லை. சாஹித்யம் இல்லாமல் நம்மவர்களால் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியாது! ஹிந்துஸ்தானி இசையில் கற்பனைக்கு அதிக இடம் இருக்கிறது, நம்மவர் இசையில் கணக்கு அதிகம். அதனால்தான் ஹிந்தி இசையமைப்பாளர்கள் ஒரே ராகத்தை வைத்து அனேக மெட்டுக்கள் அமைக்கிறார்கள். ஆவாரா, ஸ்ரீ420 படங்களில் பெரும்பாலான மெட்டுக்கள் பைரவி (ஹிந்துஸ்தானி) ராகத்தின் அடிப்படையில் அமைந்தவை என்பதை எத்தனை பேர் நம்புவார்கள்?
இன்னொரு காரணமும் உண்டு.இந்திய பாரம்பரிய இசை நமது சமய, புராண–இதிஹாசங்களூடன் நெருங்கிய தொடர்புடையது. அதனால் ஸாஹித்யமும் அப்படித்தான் இருக்கும் இந்த நிலையை இன்று வரை கர்னாடக இசையில் காணலாம். ஹிந்துஸ்தானி இசையும் அப்படித்தான் இருந்தது. ஆனால் வட இந்தியாவில் முஸ்லிம் சுல்தான்கள் வந்தபிறகு நிலை மாறியது. சங்கீத வித்வான்கள் அரசர்கள்–பிரபுக்கள் ஆதரவை நம்பியே பிழைக்கவேண்டிய நிலையில் இருந்தனர்–ஆனால் சுல்தான்களுக்கு நமது தெய்வ சம்பந்தமுள்ள இசை ஒத்துவராது. [இஸ்லாம் மதம் இசையை அனுமதிப்பதில்லை.]
அதனால் ஸாஹித்யம் அதிகமில்லாத வழக்குகளைப் பின்பற்றினர். இருக்கும் ஸாஹித்யமும் சிருங்கார ரசத்துடன் கூடியது அதனால் ஹிந்துஸ்தானி இசை அவ்வளவாக பொதுமக்களிடையே பரவவில்லை. சாது–சன்துக்கள், பக்திமான்கள் வாயிலாக பக்தி சங்கீதம் பரவலாக மக்களைச் சென்றடைந்தது. ஹிந்தி சினிமா இசையின் வாயிலாகத்தான் சங்கீதத்திற்கு பொதுமக்களிடையே பெரும் ஆதரவு கிடைத்தது.
[ இங்கே ஒரு செய்தி. முஹம்மது ரஃபி ஹிந்தித் திரையிசையில் முன்னணியில் இருந்தவர். ஒரு சமயம் இவர் மெக்கா யாத்திரை போனார். சில முல்லாக்கள், சினிமாவிற்குப் பாடிப் பிழைப்பது இஸ்லாம் மதத்திற்கு எதிரானது என்று ரஃபியிடம் சொன்னார்கள். நல்ல மனிதர் ரஃபிக்கு இது மன உளைச்சலைத் தோற்றுவித்தது. ரஃபி பாடத் தயங்கினார்–அவர் மார்க்கெட் சரிந்தது என்று சொல்வார்கள்.]
ஹிந்தி திரை இசைக் கவிஞர்களின் பணி
ஹிந்தியில், 50,60களில் இருந்த பாடலாசிரியர்கள் எல்லோருமே உண்மையிலேயே கவிஞர்களாக இருந்தவர்கள். இலக்கிய மரபு சிதையாமல், இலக்கணம் வழுவாமல் எழுதியவர்கள்.They were not mere wordsmiths, but wove real poetry and philosophy through words. இவர்கள் உருது–ஹிந்தி கவிச் சம்மேளனங்களில் கலந்துகொண்டு பெயர் வாங்கியவர்கள். பாடல்களில் படச் சூழ்நிலையை மீறிய கருத்துக்களைச் சொன்னவர்கள். அதனால் தான் சினிமா பார்க்காதவர்கள் கூட அப்பாடல்களை இன்னமும் ரசிக்கமுடிகிறது.
இதிலும் தனி மரபுகள் உண்டு. ஸாஹிர் லுதியான்வி. ஷகீல் பதாயுனி, மஜ்ரூஹ் ஸுல்தான்புரி, ஹஸ்ரத் ஜய்புரி போன்றோர் பெரிய உருதுக் கவிகள். பரத் வியாஸ் இலக்கண ஹிந்தி எழுதியவர். ஷைலேந்த்ரா பழகு ஹிந்தி–ஹிந்துஸ்தானியில் எழுதியவர். ராஜேந்த்ர கிஷனும் அப்படித்தான். இவர்கள் அனைவரின் பாடல்களுமே இலக்கிய வளம், சமுதாய நோக்கு, ஆன்மீக நாட்டம் [ அல்லது உலகியல் மீறிய நிலைப்பாடு] ஆகிய அம்சங்கள் அமைந்தவை. இவர்கள் எழுதிய பாடல்கள் கவிதைகள், இன்றுவரை அறிஞர்களால் பாராட்டப் படுகின்றன.மக்களால் ரசிக்கப்படுகின்றன.
இவர்கள் இசைக்கு ஆற்றிய பணியின் இன்னொரு பரிமாணம் குறிப்பிடத்தக்கது.
ஹிந்தி சினிமா தொடங்கியது முதல் இசை அதன் முக்கிய அங்கமாகத் திகழ்ந்து வருகிறது. இந்தப் பாடலாசிரியர்கள் எளிய சாஹித்யம் இயற்றி நல்ல கருத்துக்கள் மக்களைச் சென்றடைய வழிவகுத்தார்கள். இசை இயக்குனர்களின் திறமையுடன் கவித்திறமையும் சங்கமித்து இசை ஆறு வெள்ளமெனப் பாய்ந்தது! இதுவே ஹிந்தித் திரைப் பாடல்களீன் ஜனரஞ்சகத் தன்மைக்கு முக்கிய காரணம். இதில் திரைக் கவிஞர்களீன் பங்கை குறைத்து மதிப்பிட முடியாது.
கவிஞர்கள் காட்டும் கற்பனை உலகு !
உலகை விமர்சித்த, ரசித்த கவிகளைச் சில கட்டுரைகளில் பார்த்தோம். இவர்கள் சொல்லும் மாற்று என்ன? சில உரைகளைப் பார்ப்போம்.

வேறு இடம் நாடு!
ऐ मेरे दिल कहीं और चल
ग़म की दुनिया से दिल भर गया
ढूँढ ले अब कोई घर नया
ஏ மேரே தில் கஹீ(ன்) ஔர் சல்
கம் கீ துனியா ஸே தில் பர் கயா
டூன்ட் லே அப் கோயீ கர் நயா
மனமே, வா இங்கிருந்து கிளம்பி விடுவோம்
வேறு எங்காவது புதிய இடம் தேடிக் கொள்வோம்
உலகத் துன்பங்கள் மனதை நிறைத்துவிட்டன
चल जहाँ ग़म के मारे न हो
झूठी आशा के तारे न हो
उन बहारों से क्या फ़ायदा
जिस में दिल की कली जल गयी
जख्म फिर से हरा हो गया
சல் ஜஹா(ன்) கம்ஸே மாரே ந ஹோ
ஜூடி ஆஷா கே தாரே ந ஹோ
உன் பஹாரோ(ன்) ஸே க்யா ஃபாய்தா
ஜிஸ்மே தில் கீ கலீ ஜல் கயீ
ஜஸ்ம் ஃபிர் ஸே ஹரா ஹோகயா
துன்பத்தின் அடி விழாத அந்த இடத்துக்குப் போவோம், வா
பொய்யான ஆசைகள் இல்லாத அந்த இடத்திற்குப் போவோம் வா
மொட்டுக்களைக் கருக்கி விடுகிறதே– அத்தகைய வசந்தத்தினால்
என்ன பயன்?
பழைய புண்களை மீண்டும் திறக்கும் அதனால் என்ன பயன்?
வேறு இடத்திற்கும் போவோம், வா
चार आँसू कोई रो दिया
फेर के मुँह कोई चल दिया
लूट रहा था किसी का जहां
देखती रह गयी ये ज़मीन
चूप रहा बेरहम आसमान
சார் ஆஸூ(ன்) கோயீ ரோ தியா
ஃபேர் கே முஹ் கோயீ சல் தியா
லுட் ரஹா தா கிஸீ கா ஜஹா(ன்)
தேக்தீ ரஹ கயீ ஏ ஃஜமீன்
சுப் ரஹா பே ரஹம் ஆஸ்மான்
சிலர் கண்ணீர் விடுகிறார்கள்
சிலர் முகத்தைத் திருப்பிக்கொள்கிறார்கள்
சிலர் இடம் இங்கே கொள்ளை போகிறது
இந்தப் பூமி அதைக் கண்டவாறே இருந்துவிட்டது
இரக்கமற்ற வானமும் பேசாமல் இருந்துவிட்டது
Song: Ae mere dil kahin aur chal Film: Daag 1953 Lyricist: Shailendra
Music: Shankar-Jaikishan Singer: Talat Mahmood. This song was a top hit, is popular still.
Talat had a unique voice, with vibration. It was silky smooth, mellifluous. His Urdu diction was superb, the best in the industry. His rendering was always sensitive to the lyrics. He was the original king of Ghazals. Soaked in the culture of Lucknow, he did not run after music directors for chance. In the 60s, changes in recording technology worked against his voice, as the vibrato was magnified and appeared as tremolo. The kind of gentle songs he sang went out of fashion. In his day, he was the top voice. He can never be imitated.
நாம் எல்லோரும் கலப்பற்ற சந்தோஷத்தையே நாடுகிறோம், ஆனால் அதைத் தவறான இடத்தில் தேடுகிறோம் என்பார்கள் ஞானிகள்.

உலகை எப்படி எதிர்கொள்வது?
புதிய இடம் தேடவேண்டுமானால், முதலில் இருக்கும் இடத்தின் குறைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த உலகம் ஏன் வேண்டாம்?
உலோகாயதமாக என்ன சொன்னாலும் நமது ஆன்மீக மரபில், இந்த உலகம் நமது சாஸ்வதமான இடம் அல்ல என்பதை வலியுறுத்துகிறார்கள்.
naliniidalagata jalamatitaralaM
tadvajjiivitamatishayachapalam
viddhi vyaadhyabhimaanagrastaM
lokaM shokahataM cha samastam .
நளினீ தளகத ஜலம் அதி தரளம்
தத்வத் ஜீவிதம் அதிஶய சபலம்
வித்தி வ்யாத்யபி மான க்ரஸ்தம்
லோகம் ஷோக ஹதம் ச சமஸ்தம்
வாழ்க்கை தாமரையிலைத் தண்ணீர் போல சஞ்சலமானது. இது நோய், தன்னலம், துக்கம் ஆகிய வற்றுக்கு இருப்பிடமானது என்பார் ஆதி சங்கரர். இது கஷ்டம் –துக்கம் வந்தபோது சொன்னதல்ல. பொதுவாகவே இதுதான் உலகின் இயல்பு.
பகவான் கிருஷ்ணர் கீதையில் இந்த உலகின் இயல்பை ஆறு இடங்களில் சொல்கிறார்.
–துக்காலயம் அஸாஸ்வதம் 8.15
–ம்ருத்யு ஸம்ஸார வர்த்மனி 9.3
–அனித்யம் அஸுகம் லோகே 9.33
– ம்ருத்யு ஸம்ஸார ஸாகராத் 12.7
–ஜன்ம ம்ருத்யு ஜரா வ்யாதி துக்க தோஷானு தர்சனம் 13.8
–ஜன்ம ம்ருத்யு ஜரா துக்கைர் 14.20
புத்தர் இந்த விஷயத்தையே தன் அடிப்படைக் கொள்கையாக்கினார். உலகம் துக்க மயம்,அதற்குக் காரணம் இருக்கவேண்டும், பரிகாரம் இருக்கவேண்டும், அதை அடைய மார்க்கம் இருக்கவேண்டும்–இவையே புத்தரின் மதம்.
[ஆனால் கிருஷ்ணருக்கும் புத்தருக்கும் ஒரு முக்கிய வித்தியாசம். கிருஷ்ணர் யாரையும் உலகைத் துறக்கச் சொல்லவில்லை! அர்ஜுனன் சன்னியாசியாவேன் என்ற போது அவனைக் கடிந்து கொண்டார்! இந்த உலகின் உண்மை நிலையை அறிந்து , நம் இறுதி லட்சியத்தையும் உணர்ந்து அதற்குத் தக்கபடி வாழ்க்கை நடத்தவேண்டும் என்பதே கிருஷ்ணரின் உபதேசம். உலக வாழ்கையை விட்டுசன்னியாசம் மேற்கொள்ளவேண்டும் என்பது புத்தரின் முக்கிய போதனை. இது ஹிந்து தர்மத்தின் வழியல்ல.]
இந்த விஷயத்தையே நமது கவிகள் சினிமாவுக்கு உகந்த முறையில் பாடுகிறார்கள்.
யாருக்கு என்ன நடக்கிறது?
दुनिया वही, दुनियावाले वही
कोई क्या जाने किसका जहां लुट गया
துனியா வஹீ, துனியா வாலே வஹீ
கோயீ க்யா ஜானே கிஸ்கா ஜஹா(ன்) லுட் கயா
Song: Ramayya vastavayya Film: Shri420 Lyricist: Shailendra
Music: Shnakar Jaikishan Singer : Mukesh (this stanza)
வெளிப்பார்வைக்கு உலகமும் அதில் வசிக்கும் மக்களும் ஒரே மாதிரி தான் தென்படுகிறார்கள். உலகம் அதன் வழியில் வழக்கம் போல் சென்றுகொண்டே இருக்கிறது.ஆனால் யார் வீட்டில் என்ன கொள்ளை நடந்தது என்பது யாருக்குத் தெரியும் என்று கேட்கிறார் ஷைலேந்த்ரா..
ஆனாலும் உலகைக் கொளுத்து என்று எல்லோரும் சொல்வதில்லை! மனதை மேம்படுத்து என்று சொல்கிறார்கள். கவிஞரின் கற்பனை பாருங்கள்.
हमसे न छुपाओ बच्चों हमें तो बताओ
आने वाली दुनिया कैसी होगी समझाओ
आने वाली दुनिया में सबके सर पे ताज होगा
न भूखों की भीड़ होगी, न दुखों का राज होगा
बदलेगा ज़माना ये सितारों पे लिखा है
..
ஹம்ஸே ந சுபாவோ பச்சோ ஹமே தோ பதாவோ
ஆனே வாலீ துனியா கைஸே ஹோகீ ஸம்ஜாவோ
ஆனே வாலீ துனியா மே சப்கே ஸர் பே தாஜ் ஹோகா
ந பூகோ(ன்) கீ பீட் ஹோகீ, ந துக்கோ (ன்) கா ராஜ் ஹோகா
பத்லேகா ஜமானா யே தாரோ(ன்) பே லிக்கா ஹை
குழந்தைகளே! என்னிடம் மறைக்காமல் சொல்லுங்கள்
வரப்போகும் உலகம் எப்படி இருக்கும்?
வரப்போகும் உலகில் எல்லோர் தலையிலும் கிரீடம் இருக்கும்!
பசித்து வாடுபவர்களின் கூட்டம் இருக்காது,
துன்பம் அங்கே ஆட்சி செலுத்தாது!
இந்த உலகம் மாறும் என்பது நிச்சயம்–
இது நட்சத்திரத்தில் (வானில்) எழுதப்பட்டிருக்கிறது!
Song: Nannhe Munnhe bachche Film: Boot Polish 1954 Lyricist: Shailendra
Music: Shankar -Jaikishan Singers: Manna Dey and Asha Bhonsle

எத்தனை நம்பிக்கயுடன் குழந்தைகள் சொல்கின்றனர்! இத்தகைய நம்பிக்கை ஊட்டுவதுதானே நல்லோர்களின் செயல்? எல்லோரும் இந் நாட்டு மன்னர் என பாரதியார் பாடவில்லையா? அப்படித்தானே பாரத சமுதாயம் வாழவேண்டும்?
எதிர்காலத்தில் நம்பிக்கையூட்டும் இன்னொரு பாடல்,
तुझे अपने पास बुलाती है, तेरी दुनिया
कबसे बाँहें फैलाती है, तेरी दुनिया
तुझे अपने पास बुलाती है
वहाँ छोटे–बड़े सब एक–से
नहीं कोई जो तेरे दुख पे हँसे
वहाँ रिश्ते न होंगे झूठ के
सबको सीने से लगाती है, तेरी दुनिया
तुझे अपने पास बुलाती है
துஜே அப்னே பாஸ் புலாதீ ஹை தேரீ துனியா
கப் ஸே பாஹே(ன்) ஃபைலாதீ தை தேரீ துனியா
துஜே அப்னே பாஸ் புலாதீ ஹை தேரீ துனியா
வஹா(ன்) சோடே படே ஸப் ஏக் ஸே
நஹீ கோயீ ஜோ தேரே துக் பே ஹஸே
வஹா(ன்) ரிஷ்தே ந ஹோங்கே ஜூட் கே
ஸப்கோ ஸீனே ஸே லகாதீ ஹை தேரீ துனியா
துஜே அப்னேபாஸ் புலாதீ ஹை தேரீ துனியா
உன்னுடைய உலகம் உன்னைத் தன்னிடம் அழைக்கிறது
எப்போழுதிலிருந்தோ கதவைத் திறந்து வைத்திருக்கிறது!
உன் உலகம் உன்னை அழைகிறது!
அங்கு சிறியவன்–பெரியவன் எல்லாம் ஒன்றுதான்
உன் துக்கத்தைக் கண்டு சிரிப்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்
அங்கே போலி உறவினர்கள் எவரும் இருக்கமாட்டார்கள்
எல்லோரையும் தன் மார்புடன் அணைத்துக் கொள்ளூம் உன் உலகம்
உன் உலகம் உன்னை அழைக்கிறது.
Song: Tujhe apne paas bhulaati hai Film: Daag 1953 Lyricist: Shailendra
Music: Shankar-Jaikishan Singer. Talat Mahmood
சிறியவன்-பெரியவன் விஷயம் ” பெரியோரை வியத்தல் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” என்ற புறநானூற்று வரிகளை நினைவுபடுத்துகிறது.

மேலும் ஒரு கற்பனை
दुनियावालों से दूर, जलनेवालों से दूर
आ जा, आ जा चले कहीं दूर, कहीं दूर, कहीं दूर
वो प्यार का जहाँ हैं, हर दिल पे मेहरबाँ हैं
कुछ और वो ज़मीं हैं, कुछ और आसमाँ हैं
ना ज़ुल्म का निशाँ हैं, ना ग़म की दास्ताँ हैं
हर कोई जिसको समज़े वो प्यार की ज़ुबाँ हैं
துனியா வாலோ(ன்) சே தூர் ஜல்னே வாலோ(ன்) ஸே தூர்
ஆஜா ஆஜா சலே(ன்) கஹீ (ன்) தூர் கஹீ (ன்) தூர் கஹீ(ன்) தூர்
வோ ப்யார் கா ஜஹ(ன்) ஹை, ஹர்தில் பே மெஹர்பா(ன்) ஹை
குச் ஔர் யே ஃஜமீன் ஹை, குச் ஔர் ஆஸ்மான் ஹை
ந ஃஜுல்ம் கா நிஷா(ன்) ஹை, ந கம் கீ தாஸ்தான் ஹை
ஹர் கோயீ ஜிஸ்கோ சம்ஜே ஓ ப்யார் கீ ஃஜுபான் ஹை
இந்த உலகத்தவரிடமிருந்து, பொறாமை பிடித்த இவர்களிடமிருந்து
வா, நாம் வேறு எங்கோ செல்வோம்
அது அன்பு நிறைந்த இடம், ஒவ்வொருவர் மனதிலும் கருணை இருக்கும்
அங்கு பூமியும் வானமும் வேறு தன்மை கொண்டவை !
அங்கு குற்றத்தின் குறியே இருக்காது
துன்பத்தின் சாயையே இருக்காது
அங்கு யார் எது பேசினாலும் அது அன்பின் மொழியாகவே இருக்கும் !
Song: Duniya walon se duur Film: Ujala 1959 Lyricist: Shailendra
Music: Shankar-Jaikishan Singers: Mukesh & Lata Mangeshkar
நம்மால் இப்படிக் கற்பனையாவது செய்யமுடிகிறதா?
பாரதியாரின் கற்பனையூர்

ஜான் ஸ்கர் John Scur (?)என்ற ஆங்கிலக் கவிஞர் “The Town of Let Us Pretend” என்று எழுதிய கவிதையை மஹாகவி பாரதியார் தமிழில் மொழிபெயர்த்தார். அதில் சில பத்திகள்:[ மூல ஆங்கிலக் கவிதையோ, எழுதியவர் பற்றிய குறிப்போ கிடைக்கவில்லை.]
கற்பனையூரென்ற நகருண்டாம்–அங்குக்
கந்தர்வர் விளையாடுவாராம்
சொப்பன நாடென்ற சுடர் நாடு–அங்குச்
சூழ்ந்தவர் யாவர்க்கும் பேருவகை
எக்காலமும் பெரு மகிழ்ச்சி–யங்கே
எவ்வகைக் கவலையும் போருமில்லை.
கள்ளரவ் வீட்டினிற் புகுந்திடவே– வழி
காண்பதி லாவகை செய்திடுவோம்– ஓ!
பிள்ளைப் பிராயத்தை இழந்தீரே! – நீர்
பின்னுமந் நிலைபெற வேண்டீரோ
குழந்தைக ளாட்டத்தின் கனவையெல்லாம்–அந்தக்
கோலநன் னாட்டிடைக் காண்பீரே;
இழந்த நல் லின்பங்கள் மீட்குறலாம் – நீர்
ஏகுதிர் கற்பனை . நகரினுக்கே.
இதில் நாம் கள்ளம்–கபடை விட்டு மனதில் தூய்மையாகி குழந்தைபோலாகிவிடல் வேண்டும் என்கிறார்,
இதற்கு எழுதிய குறிப்பில், ” கவலைகளை முற்றும் துறந்துவிட்டு உலகத்தை வெறுமே லீலையாகக் கருதினாலன்றி மோக்ஷம் எய்தப் படாது” என்று எழுதியிருக்கிறார்.
உலகம் லீலை–விளையாட்டு, கனவல்ல. விளையாட்டு எனில், அதில் ஈடுபடுவோரெல்லாம் குழந்தைகளல்லவா? மக்கள் குழந்தை போன்ற கள்ளமில்லா மன நிலையைப் பெறவேண்டும்.
இந்த உலகின் கவலை–கஷ்டங்களை மறக்க ஒரே வழி இந்த உலகை நடத்தும் சக்தியின் துணையை நாடுவதுதான். வள்ளுவர் சொல்லிவிட்டார்:
தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார்
இறைவன் அடி சேராதார்,

Reach and Grasp!
இத்தகைய நம்பிக்கைதான் இவ்வுலக வாழ்க்கைக்கு ஆதாரம். ஆங்கிலக் கவிஞர் ராபர்ட் ப்ரௌனிங்க்
எழுதினார்:
I, painting from myself to myself,
Know what I do, am unmoved by men’s blame
Or their praise either. Somebody remarks
Morello’s outline there is wrongly traced
His hue mistaken; what of that ? or else,
Rightly traced and well ordered; what of that?
Speak as they please, what does the mountain care?
Ah, but a man’s reach should exceed his grasp,
Or what is a heaven for?
[Robert Browning: Andrea del Sarto 1853
இந்த உலகை மீறிய சக்தி ஒன்றின் மீது வைத்த நம்பிக்கையால்தான், இந்த உலகில் வாழமுடியும். [ Reach will exceed the grasp by faith in heaven!]
திரைக்கவிகள் இதைக் கற்பனையில் காண்கின்றனர். Poetry takes us to philosophy.
[இன்று எல்லா பாடல்களும் கவி ஷைலேந்த்ராவினுடையதாக அமைந்து விட்டன! இது தற்செயலாக நிகழ்ந்தது.. ஷைலேந்த்ரா உண்மையான கவி ஆர்வம் கொண்டவர். பெரிய கவியாக வேண்டுமென்று நினைத்தவர். 1947-48ல் ஒரு கவி சம்மேளனத்தில் இவர் வாசித்த கவிதையைக் கண்டு ரசித்த ராஜ்கபூர் இவரை சினிமாவிற்கு பாடல் எழுதும்படி அழைத்தார். சினிமாவுக்கு பாடல் எழுதுவது அகௌரவம் என்று நினைத்த ஷைலேந்த்ரா மறுத்துவிட்டார். பின்னர், பம்பாயில் மதுங்கா ரயில்வே பட்டறையில் வேலை பார்த்துவந்த ஷைலேந்த்ரா 1949ல் பணக்கஷ்டத்தால் வருந்தி, தானே ராஜ்கபூரிடம் சென்று படத்திற்குப் பாட்டெழுத சான்ஸ் கேட்டார். ‘பர்ஸாத்” படத்தில் முதலில் எழுதத்தொடங்கி 1966 வரை பல சிறந்த பாடல்களை எழுதினார்.]
tags – ஹிந்தி படப் பாடல்கள் – 10 , ஸ்வரம் , சாஹித்யம், Shree 420, Daag,R Nanjappa
****