
WRITTEN BY S NAGARAJAN
Post No.7797
Date uploaded in London – – 8 April 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
பாக்யா 16-3-2020 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள பத்தாம் ஆண்டு இரண்டாம் கட்டுரை -அத்தியாயம் 444
சாடலைட்டுகளையும் ஹாக் செய்யும் அபாயம்!
ச.நாகராஜன்

ஹாகிங் என்ற வார்த்தை கணினி உலகில் இன்று சர்வ சாதாரணமாகப் புழங்கப்படும் ஒரு வார்த்தை.
ஒருவர் செய்த புரோகிராமிங்கில் – மென்பொருளில் – உள்ளே புகுந்து தனது இஷ்டத்திற்குத் தக்கபடி மாற்றி குழப்படி செய்வது தான் ஹாகிங்.
அடுத்தவர் புரோகிராமைத் திருடுவதும் ஹாகிங் தான்!
ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் அமெரிக்காவில் எம்.ஐ.டியில் படிக்கும் மாணவர்கள் சிலர் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த கணினி அறைக்குள் சென்று மென்பொருளை மாற்றுவதை ஒரு பொழுது போக்காக ஆரம்பித்தனர். இது முதலில் ஜோக் ஆகவும் குறும்புத்தனமாகவும் தான் இருந்தது. ஆனால் ஆயிரத்தி தொள்ளாயிரத்து தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் லட்சக் கணக்கில் கணினி உலகெங்கும் பயன்படுத்தப்பட ஆரம்பித்த போது ஹாகிங் வேறு ஒரு புதிய பரிமாணத்தை எடுத்து கடைசியில் இன்று குற்றம் என்ற அளவில் வளர்ந்து விட்டது.
இந்த ஹாகிங்கிலிருந்து காப்பாற்றிக் கொள்ள பெரும் நிறுவனங்கள் சைபர்செக்யூரிடி துறை (கணினி மென்பொருள் பாதுகாப்புத் துறை) அமைக்கும் அளவு இது வளர்ந்து விட்டது.
2020 ஜனவரியில் ஸ்பேஸ் எக்ஸ் என்னும் பெரிய தனியார் நிறுவனம் 242 சாடலைட்டுகளை உற்பத்தி செய்து தனது உடமையாகக் கொண்டிருந்தது. அடுத்த பத்தாண்டுகளில் 42000 சாடலைட்டுகளை விண்ணில் ஏவத் திட்டமிட்டிருப்பதாக அது அறிவித்துள்ளது. இதன் மூலம் உலகெங்கும் பட்டி தொட்டி கிராமங்கள், காடுகள் உட்பட எங்கும் இண்டர்நெட் சேவை கிடைக்கும். இதற்குப் போட்டியாக அமேஸான், இங்கிலாந்தைச் சேர்ந்த ஒன் வெப் ஆகிய நிறுவனங்களும் தங்கள் பங்கிறகு ஆயிரக் கணக்கில் விண்ணில் சாடலைட்டுகளை ஏவப் போவதாகச் சொல்லி விட்டன.
இது உலகின் வாழ்க்கைப் போக்கையே நம்ப முடியாத அளவு மாற்றி விடப் போகிறது.
ஆனால் இப்போது ஒரு புதிய அபாயம் ஏற்படக்கூடிய சாத்தியம் வலுத்து விட்டது.
ஆயிரக் கணக்கில் சாடலைட்டுகள் விண்ணில் பறக்கும் போது ஹாக் செய்யும் ஹாக்கர்களுக்கு படு குஷி தான்! சைபர் அட்டாக் (Cyber Attack) எனப்படும் மென்பொருள் தாக்குதலை அவர்கள் மேற்கொள்வர். அதாவது விண்ணில் போகும் சாடலைட்டுகளின் புரோகிராமை மாற்றித் தங்கள் ‘வழிக்கு’ அதை வரச் செய்வர்.
பிடிக்காத நிறுவனங்களின் சாடலைட்டுகளைச் செயல் இழக்கச் செய்வர். சாடலைட்டுகள் அனுப்பும் சிக்னல்களை ஜாம் செய்து தடை செய்வர்.
போட்டி உலகில் எதுவும் சாத்தியம் தான்!

க்யூப்சாட்ஸ் (CubeSats) என்ற நிறுவனம் வெளியில் சந்தையில் தயாராக இருக்கும் பாகங்களை உபயோகித்து சாடலைட்டைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான காரணம் மலிவான விலையில் இவற்றைத் தயாரித்தால் நிறைய விற்க முடியும் என்பது தான்.
இதனுடைய பாகங்களை மிக எளிதாக ஹாக் செய்பவர்கள் பிரித்துப் பார்த்து அதில் எப்படியெல்லாம் “கோளாறுகளை’ உருவாக்கலாம் என்று பார்த்து விடுவர். அதில் தங்கள் புரோகிராமை சொருகி விடுவர்.
விளைவு கேட்கவே வேண்டாம்!
சாடலைட்டுகள் அனைத்துமே தரை நிலையங்கள் அனுப்பும் ஆணைகளுக்கு இணங்கவே செயல்படுகின்றன. ஆகவே தரை நிலைய கணினிகளை ஹாக் செய்வோர் அணுகி அதில் பல தவறான, ‘கமாண்ட்’ எனப்படும் ஆணைகளைச் சேர்த்து விட்டால் ஏராளமான குழப்பம் விண்ணிலும் மண்ணிலும் ஏற்படும்.
1998ஆம் ஆண்டு நடந்த சம்பவம் இது. அமெரிக்க- ஜெர்மானிய எக்ஸ்-ரே சாடலைட்டான ரோஸாட்டை (ROSAT) ஹாக்கர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மேரிலாந்தில் இருந்த தரைநிலையக் கணினியை அவர்கள் ஹாக் செய்து சாடலைட்டைப் ‘பிடித்தனர்’. பின்னர் அதில் பொருத்தப்பட்டிருந்த சோலார் பேனல் எனப்படும் சூரியத் தகடுகளை சூரியனை நோக்கி நேராகத் திருப்பி விட்டனர். என்ன நடந்திருக்கும் என்பதை எளிதில் ஊகிக்கலாம். அதன் பேட்டரிகள் வறுத்தெடுக்கப்பட்டு, சாடலைட் தனது செயல்பாட்டை இழந்தது. அங்கும் இங்கும் சுற்றி, 2011இல் அது பூமியில் வந்து விழுந்து மோதியது.
2008ஆம் ஆண்டு சீனாவைச் சேர்ந்த சில ஹாக்கர்கள் அமெரிக்க நாஸா ஏவிய இரண்டு சாடலைட்டுகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். முதல் சாடலைட்டை இரண்டு நிமிடமும் அடுத்த சாடலைட்டை ஒன்பது நிமிடமும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து காண்பித்தனர். இப்படிச் செய்யாமல் இருக்கவோ அல்லது “பிடித்து வைத்த சாடலைட்டைத் திருப்பித் தரவோ” ஏராளமான பிணைய தொகையை அவர்கள் கேட்க முடியும் என்பது தான் புதிய அபாயம்.
2018இல் இன்னொரு சீன ஹாக்கிங் குழு சாடலைட்டுகளை ஹாக் செய்ய ஒரு தனித் திட்டத்தையே தயாரித்தது.
ஈரானோ இதே போல ஒரு குழுவை உருவாக்கியது. திவிரவாதிகள் இதற்குள் புகுந்தால் உலகம் என்ன பாடுபடும் என்பதை எளிதில் ஊகிக்கலாம்.

ஆகவே அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இப்படி ஹாக் செய்ய முடியாதபடி தங்கள் சாடலைட்டுகளைத் தயாரிக்கும் நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளன.
சைபர் செக்யூரிடி என்னும் துறை ஒரு பிரம்மாண்டமான அளவில் உருவெடுத்து விட்டது.
சொன்னால் நம்ப முடியாது, இந்திய நகரங்களில் சைபர் செக்யூரிடி அமைப்பு ஆயிரக்கணக்கான கணினி தொழில்நுட்ப அறிஞர்களைக் கொண்டு, ஒரு குற்றம் நடந்த சில நிமிடங்களில் குற்றவாளியைப் பிடிக்கும் திறன் கொண்டதாக இயங்குகிறது.
ஒரு சாடலைட்டைத் தயார் செய்யும் தயாரிப்பு செலவை விட இந்த பாதுகாப்புக்காக் ஆகும் செலவு கூடுகிறதே என்பது தான் பெரிய நிறுவனங்களின் இப்போதைய கவலை!
ஆகவே உலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து விண்ணில் ஏவப்படும் சாடலைட்டுகளுக்கான விதிமுறைகளை வகுப்பதோடு அவற்றின் பாதுகாப்பையும் உறுதி செய்ய முனைந்துள்ளன.
இந்தச் செய்தியிலிருந்து நாம் கற்க வேண்டிய ஒரு முக்கிய பாடமும் உண்டு! அனாவசியமாக நமது மொபைல் போன் நம்பரையோ அல்லது மின்னஞ்சல் முகவரி மற்றும் பாஸ்வோர்டையோ யாருக்கும் கொடுக்கக் கூடாது. இப்படிப்பட்ட விவரங்களை போன் மூலமாக, பெரிய நிறுவனத்தின் பெயரைச் சொல்லி அதன் சார்பாக யாராவது கேட்பதாகச் சொன்னால் நேரில் வாருங்கள் என்றோ நானே நேரில் வருகிறேன் என்றோ சொல்லி நம்மைக் காத்துக் கொள்ள வேண்டியது தான். ஹாக்கர் ஜாக்கிரதை!

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..
உலகில் முதன் முதலாக அமெரிக்காவில் உள்ள பென்ஸில்வேனியாவில் எட்வின் எல். ட்ரேக் (Edwin L.Drake) என்பவர் 1859ஆம் ஆண்டு எண்ணெயைத் தோண்டி எடுத்து பெட்ரோலியத் துறையை ஆரம்பித்து வைத்தார். உலகெங்கும் பெட்ரோல் உபயோகத்திற்கு வந்தது. இந்தியாவில் 1889ஆம் ஆண்டு அஸ்ஸாமில் முதன் முதலாக டிக்பாய் என்னும் இடத்தில் முதல் எண்ணெய்க் கிணறு தோண்டப்பட்டது.
ஆயிலை பேரல் (Barrel) என்று அழைக்கப்படும் மரப் பீப்பாயில் வைத்து அனுப்புவது வழக்கமானது. ஒரு பேரல் என்றால் அதில் 42 கேலன் பெட் ரோல் இருக்கும் என்பது வழக்கமானது. இதுவே நடைமுறைப் பழக்கமாக ஆகவே அனைவரும் எனக்கு 12 பேரல் வேண்டும் , 20 பேரல் வேண்டும் என்று ஆர்டர் தர ஆரம்பித்தனர். அதாவது 12 பேரல் என்றால் 504 கேலன்; 20 பேரல் என்றால் 840 கேலன் என்று அர்த்தம்.
பேரலை bbl என்று குறிப்பது வழக்கம். முதலில் பேரல்கள் நீல நிறக் கலரில் மட்டுமே இருந்தன. ஆகவே Blue Barrel என்பது சுருக்கப்பட்டு bbl ஆனது. பின்னால் பெட்ரோலியத் துறை பெரிதும் வளர்ந்த நிலையில் பேரல்களே இல்லாமல் போய்விட்டது.
என்றாலும் கூட இன்றும் ஆர்டர் செய்வதும் சப்ளை செய்வதும் பேரல் கணக்கில் தான்.
ஒரு பேரல் 42 அமெரிக்க காலனுக்குச் சமம் அல்லது 35 இம்பீரியல் கேலனுக்குச் சமம் அதாவது 159 லிட்டர்கள்!
உலகெங்கும் 8.2 கோடி பேரல்கள் செலவழிக்கப்படுகிறது என்பது பிரமிக்க வைக்கும் ஒரு உண்மை!
ட்ரேக் ஆரம்பித்த எண்ணெய்க் கிணறு உலக பொருளாதாரத்தையே மாற்றி விட்டது!

எட்வின் எல். ட்ரேக், சாடலைட்டுகள், ஹாகிங்

****