

Post No. 9870
Date uploaded in London –19 JULY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழவேண்டும் என்று சொல்லி உபநிஷத முனிவர்களைப் போல வாழ்ந்தவர் அமெரிக்க தத்துவ ஞானி, எழுத்தாளர், கட்டுரையாளர், கவிஞர் ஹென்றி டேவிட் தொரோ (HENRY DAVID THOREAU) . அவர் எழுதிய இரண்டு நூல்களில் பகவத் கீதையையும், கங்கை நதியையும் யோகத்தையும் பாராட்டினார். இந்து தெய்வங்களைப் பெயர் குறிப்பிட்டு எழுதியுள்ளார் .
200 ஆண்டுகளுக்கு முன்னர் , சுவாமி விவேகானந்தர் போன்றோர் அமெரிக்காவுக்குச் செல்வதற்கு முன்னர் , அங்கு கிறிஸ்தவப் பாதிரியார்கள் பரப்பிய பொய்யுரைகளே அதிகம் நிலவின . அந்த சூழ்நிலையில் இந்து மதம் பற்றிய சரியான பார்வை கொண்டவராக வாழ்ந்தவர் தொரோ; அவர் கல்யாணம் செய்துகொள்ளவில்லை. கிட்டத்தட்ட சந்நியாசி வாழ்வுதான்.
இவருடைய அரசியல் கொள்கைகள் இவரை சர்ச்சைக்கும், புகழுக்கும் உரியவர் ஆக்கின. இவர் ஒரு பென்சில் தயாரிப்பாளரின் மகன். மாசசுசெட்ஸ் பகுதியில் கான்கார்ட் (CONCORD) நகரில் பிறந்தார். ஹார்வர்ட் பல்கலையில் பயின்றார். 1837 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார். அந்த ஆண்டுதான் அமெரிக்காவின் மற்றோர் சிந்தனையாளரான ரால் ப் வால்டோ எமர்சன் (RALPH WALDO EMERSON) பெரும் அறைகூவல் விடுத்தார். ஐரோப்பிய செல்வாக்கிலிருந்து விடுபட்டு அமெரிக்கா தனக்கென புதிய கலாசாரத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்ற எமர்சனின் முழக்கம் சங்க நாதமாகப் பரவிய தருணம் அது. தொரோவும் எமர்சனும் நண் பர்கள் ஆயினர்.
பிறந்த தேதி – ஜூலை 12, 1817
இறந்த தேதி – மே 6, 1862
வாழ்ந்த ஆண்டுகள் – 44
இவருடைய எழுத்துக்கள் 20 தொகுதிகளாக வந்திருக்கிறது என்றால் இவர் எவ்வளவு எழுதினார் என்பது விளங்கும் .
கன்கார்ட் நகருக்கு அருகில் வால்டன் பாண்ட் (WALDEN POND) என்னும் இடத்தில் ஒரு குடில் அமைத்து இரண்டு ஆண்டுகளுக்கு அதில் தொரோ வாழ்ந்தார். ஒவ்வொரு நாளும் தன சிந்தனையில் உதித்த அரிய பெரிய கருத்துக்களை சொல்லோவியமாகத் தீட்டினார். அந்த இடத்தைச் சுற்றியுள்ள இயற்கை வனப்பையும் வருணித்தார். இவை அனைத்தையும் அடித்தளமாக வைத்து 37 வயதில் வால்டன் (WALDEN) என்னும் நூலை வெளியிட்டார். இதை அவர் எழுதிய நாட் குறிப்பேடு என்று எண்ணிவிடக் கூடாது .
மக்கள் எளிமையாக வாழ வேண்டும். அதிக சொத்து சுகம் சேர்க்கக்கூடாது. இயற்கையை ரசித்து, மதித்து வாழவேண்டும் என்ற அறிவுரை அடங்கியது வால்டன்.
அமெரிக்காவில் கறுப்பின மக்களை அடிமைகளாக நட த்தியத்தைக் கண்டித்து தொரோ போராட்டம் நடத்தினார். அடிமைத் தனத்தை அகற்றும் வரையில் வரிகள் கொடுக்க மாட்டேன் என்றார் . இதனால் 29 வயதிலேயே சிறைவாசமும் கிடைத்தது. இதன் விளைவாக ஒத்துழையாமை இயக்கம் (CIVIL DISOBEDIENT MOVEMENT) பற்றி எழுதி அரசாங்கத்தைவிட தனிமனிதன் (INDIVIDUAL) சக்தி வாய்ந்தவன், முக்கியமானவன் என்று எழுதினார் (இவை அனைத்தையும் பிற்காலத்தில் இந்தியாவில் மஹாத்மா காந்தி செய்தது குறிப்பிடத்தக்கது.)
அரசாங்கத்தின் கொள்கைகள் தவறு என்று மக்கள் கருதினால் சட்டங்களை மதிக்கக்கூடாது என்றும் தொரோ பரப்புரை செய்தார். அவருக்கு 100 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த மக்கள் தலைவர்கள் இதைப் பின்பற்றினர். அமெரிக்காவில் 1960-களில் மக்கள் உரிமைக்காகப் போராடிய மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் போன்றோர் இந்தக் கொள்கையைப் பின்பற்றினர். 44 வயதில் காச நோய் கண்டு இறந்தார். அவரது படைப்புகளில் பல தொரோ இறந்த பின்னரே வெளியாகின.
அவரது நூல்கள் :-
1849- A WEEK ON THE CONCORD AND MERRIMACK RIVERS
1849- CIVIL DISOBEDIENCE
1854- WALDEN
PUBLISHED AFTER HE DIED:-
1865- CAPE COD
1866 – A YANKEE IN CANADA
1884 – SUMMER
1887 – WINTER



–SUBHAM –tags- அமெரிக்க கவிஞர், ஹென்றி டேவிட் தொரோ , HENRY DAVID THOREAU,