சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்
- பிறக்காத பிள்ளைக்குப் பெயர்!
by ச.நாகராஜன்
Post No 1607; Dated 28th January 2015.
நியாயங்கள் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்கள்:
अजातपुत्रनामकरणन्यायः
ajataputranamakarana nyayah
அஜாதபுத்ர நாமகரண நியாயம்
அஜாதபுத்ர – பிறக்காத பிள்ளை நாமகரணம் – பெயர் சூட்டல்
பிறக்காத ஒரு பிள்ளைக்குப் பெயர் வைக்கும் நியாயம் இது. பயனற்ற முட்டாள்தனமான காரியம் ஒன்றைச் செய்பவனைச் சுட்டிக் காட்டப் பயன்படும் நியாயம் இது.
Proclaiming the name of a son before he is born. That is counting your chickens before they are hatched என்று ஆங்கிலத்தில் இதனை விளக்குகிறார் கர்னல் ஜி.ஏ. ஜாகோப் (G.A.Jacob).
(G,A.Jacob பற்றிய குறிப்பு :- A Handful of Popular Maxims (volumes 1 to 3) – A collection of Sanskrit Wisdom sayings – என்ற 3 பாகங்கள் அடங்கிய புத்தகத்தைத் தொகுத்து வெளியிட்ட அறிஞர்.1909ஆம் ஆண்டு இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.)
अन्धदर्पणन्यायः
Andha darpana nyayah
அந்த தர்பண நியாயம்
அந்த- அந்தகன்; தர்பணம் – கண்ணாடி
குருடனும் அவனது கண்ணாடியும் என்பது இந்த நியாயம். பயனற்ற ஒரு பொருளை ஒருவன் வைத்திருக்கும்போது இந்த நியாயம் வழங்கப்படுகிறது.
The maxim of a looking glass for a blind. யோக வாசிஷ்டம், ஹிதோபதேசம் உள்ளிட்ட பல நூல்களில் இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படுகிறது.
उष्ट्रलगुडन्यायः
ustralaguda nyayah
உஷ்ட்ர லகுட நியாயம்
ஒட்டகமும் தடியும் என்னும் நியாயம் இது. ஒட்டகத்தின் முதுகில் சுமந்து செல்லப்படும் தடியாலேயே அது அடிக்கப்படுகிறது. அதேபோல ஒரு முட்டாள் அவனது முட்டாள்தனமான செய்கையாலேயே துன்பப்படுவான் என்பதை இந்த நியாயம் சுட்டிக் காட்டும்.
The illustration of the camel and the stick என்று இந்த நியாயத்தை கர்னல் ஜி.ஏ. ஜாகோப் (G.A.Jacob). விளக்குவதோடு இதற்கு ஒப்புமையாக “Hoist with his own petard” என்று ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட்டில் வருவதையும் சுட்டிக் காட்டுகிறார்.(Hamlet Act 3; Scene 4)
ஆத்ம தத்வ விவேகம், வேதாந்த கல்ப தரு ஆகிய நூல்களிலும் இது எடுத்தாளப்படுவதை அவர் விளக்கங்களுடன் தருகிறார் தனது நூலில்!
चिन्तामणिंपरित्ज्यकाचमनिग्रहणन्यायः
cintamanim parityajya kacamanigrahana nyayah
சிந்தாமணிம் பரித்யஜ்ய காசமணிக்ரஹண நியாயம்
சிந்தாமணியை தியாகம் செய்து விட்டு செயற்கை கண்ணாடிக் கல்லை வாங்கினாற் போல என்னும் நியாயம் இது.
எவ்வளவு அரிய மணி சிந்தாமணிக் கல்! அதைக் கொடுத்து விட்டு சாதாரண கண்ணாடியால் ஆன ஒரு செயற்கைக் கல்லை ஒருவன் வாங்கினால் அவனை என்னவென்று சொல்வது! வெறும் பளபளப்பை நம்பி கண்ணாடிக் கல்லை சிந்தாமணிக்குப் பதில் பெறுவதைப் போல முட்டாளான ஒருவன் அரும் மதிப்பை உணராது மதிப்பற்ற ஒன்றை நாடுவதை இந்த நியாயம் சுட்டிக் காட்டுகிறது.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பது பழமொழி. All that glitters is not gold என்பது இதே கருத்தைச் சொல்லும் ஆங்கிலப் பழமொழி.
பிரம்ம ஞானம் அடைவதை விட்டு விட்டு சாதாரண உலகியல் புலன் இன்பங்களில் ஒருவன் மூழ்குவதை இந்த நியாயத்தைச் சுட்டிக் காட்டி ரகுநாதர் விளக்குகிறார்.
(ரகுநாத சிரோமணி பற்றிய குறிப்பு : பெரும் அறிஞரான இவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நவத்வீபத்தில் பிறந்தவர். இவரது காலம் கி.பி 1477-1547).
contact swami_48@yahoo.com



You must be logged in to post a comment.