
Written by S.NAGARAJAN
Date: 29 September 2017
Time uploaded in London- 6-10 am
Post No. 4254
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
பாக்யா 28-9-2017 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் (ஏழாம் ஆண்டு 32வது கட்டுரை) வெளியாகியுள்ள கட்டுரை
உலகின் ஒப்பற்ற வைரம் கோஹினூர், மீட்கப்படுமா? – 1
ச.நாகராஜன்

“இயற்கையில் கிடைப்பதில் மிகவும் கடினமானது வைரமே. வைரத்தை வைரத்தால் மட்டுமே அறுக்க முடியும்” – அறிவியல் தகவல்
இயற்கை நமக்கு அளிக்கும் செல்வத்தில் தங்கத்திற்கு அடுத்தபடியாக அனைவரும் விரும்புவது வைரத்தையே. இதில் மதம், ஜாதி, மொழி, நாடு, இனம், பால் என்ற பாகுபாடே இல்லை.
அனைவரும் விரும்பும் ஜொலிக்கும் வைரத்தைக் கண்டு அறிவியல் கூட வியக்கிறது.
வைரம் பல பில்லியன் ( ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி) ஆண்டுகள் பழமையானவை. சில சமயம் 300 கோடி ஆண்டுகள் பழமையான வைரங்கள் கிடைக்கின்றன.
நூறு மைல் ஆழத்தில் பூமியில் புதைந்து கிடைக்கும் வைரம் எரிமலை வெடிப்புகளினால் மேலே வருகிறது.
வைரத்தில் இருப்பது ஒரே ஒரு பொருள் தான் – கார்பன் தான் அது. நூறு சதவிகிதம் கார்பன்!!
பூமியின் கீழே உள்ள அதீத வெப்பத்தினாலும் அழுத்தத்தினாலும் கார்பன் அணுக்கள் தனித்தன்மையினால் ஒன்றிணைகின்றன. அதிசயமான வைரமாக ஆகின்றன.
அடமாஸ் (adamas) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து உருவான ஆங்கில வார்த்தை தான் டயமண்ட். இதன் பொருள் அழிக்க முடியாதது, ஜெயிக்க முடியாதது என்பதாகும். வைரத்தை முதன் முதலில் உலகில் கொண்டிருந்த ஒரே நாடு இந்தியா தான்.
கிறிஸ்துவுக்கு முன் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே வைரத்தை இந்திய மக்கள் அணிந்திருந்தனர். தாங்கள் வணங்கும் தெய்வச் சிலைகளிலும் அதை அணிவித்திருந்தனர்.
வைரத்தை அணியாத பெரிய மன்னனே கிடையாது. ஆடைக்கும் மேலாக வைரத்தை மன்னர்கள் மதித்து அதை அணிந்து வந்தனர். அரசவைகளில் எந்த அந்தஸ்து உள்ளவர் எப்படிப்பட்ட நவரத்ன மணியை எந்த விதத்தில் பதித்து அணிய வேண்டும் என்பதற்கு கடுமையான விதி முறைகள் இருந்தன.
வைரத்தைப் பற்றி அக்னி புராணம் உள்ளிட்ட பல நூல்கள் பல அரிய, இரகசியமான கருத்துக்களைத் தெரிவிக்கின்றன.
இந்திய வைரங்களை உலகினர் போட்டி போட்டுக் கொண்டு வாங்கினர். வைர நாடு என்றே இந்தியா அழைக்கப்பட்டது. வெனிஸ் நகரிலும் ஐரோப்பாவில் பல நகரங்களிலும் இந்திய வைரங்களை விற்கும் வைரச் சந்தைகள் இருந்தன.
1725ஆம் ஆண்டு தான் பிரேஜிலில் ஒரு வைரச் சுரங்கம் கண்டு பிடிக்கப்பட்டது.
ஆயிரத்தி எண்ணூறுகளில் தான் தென் ஆப்பிரிக்காவில் வைரம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இப்போது கனடா, போட்ஸ்வானா, நமீபியா, ரஷியா உள்ளிட்ட நாடுகளிலும் வைரம் கிடைக்கிறது.
உலக வைரங்களில் பெரிய வைரம் தென் ஆப்பிரிக்காவில் எடுக்கப்பட்ட கல்லினன் வைரம் தான். இதன் எடை 3106 காரட், (ஒரு காரட் என்பது 0.2 கிராம்). இது எட்வர்ட் மன்னனுக்கு அளிக்கப்பட்டது. பின்னர் இது ஒன்பது பெரிய துண்டுகளாகவும் நூறு சிறிய துண்டுகளாகவும் வெட்டப்பட்டது. மூன்று பெரிய துண்டுகளை டவர் அஃப் லண்டனில் உள்ள கண்காட்சியில் காணலாம்.
ஆனால் இந்த வைரங்களில் எல்லாம் மிகச் சிறந்த வைரமாக இந்தியர்களின் உரிமைச் சொத்தாகக் கருதப்படுவது கோஹினூர் வைரம் தான்.
அதன் கதையே விசித்திரமானது; சுவையுடன் சோகம் கலந்த ஒன்று.
கோஹினூர் வைரம் இந்தியாவின் பரம்பரைச் சொத்து. அது இன்று இங்கிலாந்தில் இருக்கிறது.
வெள்ளையர் அடித்த கொள்ளையில் கோஹினூரும் ஒன்று. அதை மீட்டு இந்தியாவிற்குக் கொண்டு வர வேண்டும் என்று நீண்ட காலமாகப் பெரும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

கோஹினூர் என்றால் பாரசீக மொழியில் ஒளி மலை என்று பொருள்.
இது எவ்வளவு பழமையானது என்பது யாருக்கும் தெரியாது.
இதன் பழைய காலப் பெயர் ஸ்மயந்தக மணி.சம்ஸ்கிருத நூல்கள் பலவற்றிலும் இதன் புகழ் மற்றும் அருமை பெருமைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. பகவான் கிருஷ்ணர் உள்ளிட்டோரால் இந்த மணி மதிக்கப்பட்டது என்பது பரம்பரையாக வழங்கி வரும் ஐதீகம்.
அத்துடன் இந்த கோஹினூருடன் கூடவே ஒரு சாபமும் உண்டு என்று நம்பப்படுகிறது.
ஆண்களிடம் இது இருந்தால் அது அவர்களுக்கு ஆபத்தையே தரும். பெண்கள் இதை அணியலாம். இது தான் சாபம்.
இதன் பழைய கால எடை 793 கிராம். இன்றோ வெட்டப்பட்டு வெட்டப்பட்டு சுமார் 105 கிராமாகச் சுருங்கி விட்டது.
காகதீய வம்சம் இந்தியாவில் ஆட்சி புரிந்த போது ஆந்திர பிரதேச்த்தில் கோல்கொண்டா பிரதேசத்தில் இது மீண்டும் கிடைத்ததாக ஒரு வரலாறும் உண்டு.
மத்திய ஆசியாவிலிருந்து கைபர் கண்வாய் (இன்றைய ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ளது இது) வழியே இந்தியாவினுள் 1526ஆம் ஆண்டு நுழைந்த பாபர் முகலாய சாம்ராஜ்யத்தை நிறுவினார். அதிலிருந்து சுமார் 300 ஆண்டுகள் இந்த முகலாய ஆட்சி தொடர்ந்தது.
முகலாய அரசரான ஷாஜஹான் 1628ஆம் ஆண்டு தனது சிம்மாசனத்தில் வைரங்களைப் பதித்தார். இதைச் செய்ய சுமார் ஏழு ஆண்டுகள் பிடித்தது.
இதன் விலையோ தாஜ்மஹாலுக்கு ஆன செலவைப் போல நான்கு ம்டங்கு அதிகம்! தாஜ்மஹால் கட்டப்பட்டு வந்த அதே காலகட்டத்தில் தான் இந்த சிம்மாசனமும் உருவாகிக் கொண்டிருந்தது. இந்தச் செய்தியை அரசவை குறிப்புகளை எழுதி வந்த அஹ்மத் ஷா லாகூர் எழுதி வைத்துள்ளார்.
(கோஹினூரின் கதை தொடரும்)

அறிவியல் அறிஞர் வாழ்வில் . ..
பிரபல கணித மேதையான் ஆட்ண்ரூ வைல்ஸ் (Andrew Wiles) 358 ஆண்டுகளாக யாராலும் தீர்க்கப்பட முடியாமல் இருந்த ஃப்ரெமெட்டின் லாஸ்ட் தியரம் (Fermet’s Last Theorem) என்ற கணிதப் புதிரை விடுவித்தது உலகையே வியப்பில் ஆழ்த்திய ஒரு சம்பவம்.
1637ஆம் ஆண்டு பிரான்ஸை சேர்ந்த சட்ட வல்லுநரும் கணிதத்தைப் பொழுதுபோக்காகக் கொண்டவருமான ஃபெர்மெட் ஒரு சாதாரணப் புதிர் கணிதத்தை கணித மேதைகள் முன்னர் சவாலாக தீர்வுக்காக வைத்தார். அதை யாராலும் தீர்க்க முடியவில்லை.
ஆண்ட் ரூ வைல்ஸ் பத்து வயதில் சிறுவனாக இருந்த போதே இந்த தீர்க்கப்பட முடியாமல் இருந்த புதிர் மீது ஒரு கண்ணை வைத்தார். அதற்கான விடையை எப்படியாவது கண்டு பிடித்து விடுவது என்று தணியாத வெறியைக் கொண்டார். 1986ஆம் ஆண்டு பிரின்ஸ்டனில் கணிதத்துறையில் சேர்ந்தவுடன் மிகவும் இரகசியமாக இந்தப் புதிரை ஆராய ஆரம்பித்தார்.ஏழு வருடங்கள் ஓடின.
இங்கிலாந்தில் 1993இல் நடந்த ஒரு கணித மாநாட்டில் திடீரென்று தனது உரையின் மூன்றாவ்து பகுதியில் இந்தக் கணிதப் புதிரை தான் விடுவித்து விட்டதாகக் கூறவே உலகமே பரபரப்படைந்தது. மறு நாளே நியூயார்க் டைம்ஸ் இதைப் பெரிதாக வெளியிட்டது.
தனது 200 பக்க உரையை அவர் வெளியிடவே அது சரிதானா என்று ஆராய ஆறு மதிப்பீட்டாளர்கள் நியமிக்கப்பட்டனர். அனைவரின் சந்தேகங்களுக்கும் பொறுமையாக் விடையளித்தார் வைல்ஸ். உலகமே அவரைக் கொண்டாட ஆரம்பித்தது. எந்த ஒரு விஷயத்தையும் தணியாத ஏகாக்கிர சிந்தையுடன் அணுகினால் அதில் வெற்றி பெறலாம் என்பதை நிரூபித்து விட்ட மாமேதையாக இலங்குகிறார் வைல்ஸ்
***