
Written by London Swaminathan
Date: 22 October 2016
Time uploaded in London: 6-19 AM
Post No.3276
Pictures are taken from Facebook and other sources; thanks. (Pictures are used only for representational purpose; no connection with the current article.)
Contact swami_48@yahoo.com

நோய்களுக்கு, பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் இடும் கட்டளை மிகவும் அதிகார தோரணையில் அமைந்திருக்கிறது.
‘நாமார்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம்’ என்று அப்பர் பாடும் பாடலையும் ஞான சம்பந்தர் பாடிய ‘கோளறு திருப்பதிக’த்தையும் நினைவு கூறுவதாக அமைந்துள்ளது இப்பாடல்.
உற்ற உறுபிணி நோய்காள்!
உமக்கு ஒன்று சொல்லுகேன் கேண்மின்
பெற்றங்கள் மேய்க்கும் பிரானார்
பேணும் திருக்கோயில் கண்டீர்
அற்றம் உரைக்கின்றேன் இன்னம்
ஆழ்வினைகாள்! உமக்கு இங்கோர்
பற்றில்லை கண்டீர் நடமின்
பண்டன்று பட்டினம் காப்பே!
—பெரியாழ்வார் திருமொழி பாடல் 447
பொருள்:-
என்னைத் தொடர்ந்து வருத்தும் நோய்களே! உங்களுக்கு ஒன்று சொல்லுகிறேன்; கேளுங்கள். பசுக்களை மேய்த்த கண்ணபிரான் என் உடலைக் கோவிலாகக் கொண்டுவிட்டான். காணுங்கள். பிறவிக்கடலில் ஆழ்த்துகின்ற வினைகளே! இன்னும் உறுதியாகச் சொல்லுகிறேன் உங்களுக்கு இங்கு ஒரு வேலையும் கிடையாது. வெளியே போங்கள்.GET OUT! எம்பெருமானுடைய பட்டினமான இவ்வுயிர், அவனால் காக்கப்படுகிறது.

‘உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பே ஆலயம்’ – என்று திருமூலர் சொன்னதும் இங்கே நினைவுக்கு வருகிறது.
பண்டன்று, பட்டினம் காப்பே என்ற தலைப்பில் பெரியாழ்வார் பாடிய பத்து பாசுரங்களும் படிக்கப்படிக்கத் தெவிட்டாதது.
நெய்க்குடத்தைப் பற்றி ஏறும்
எறும்புகள் போல் நிரந்து எங்கும்
கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள்!
காலப் பெற உய்யப் போமின்
என்று பாசுரம் துவங்குகிறது.
அடுத்த பாடலில் எமனுடைய கணக்குப்பிள்ளைகளான சித்திரகுப்தனும் அவனது தூதர்களும் பாவ புண்ணியக் கணக்குப் புத்தகத்தையே கிழித்துப்போடுவிட்டு ஒளிந்துகொண்டனர் என்று ஆணித்தரமாகக் கூறுகிறார்:-
சித்திரகுத்தன் எழுத்தால்
தென்புலக்கோன் பொறி ஒற்றி
வைத்த இலச்சினை மாற்றித்
தூதுவர் ஓடி ஒளித்தார்
–என்கிறார்.

அதைத் தொடர்ந்து வரும் பாடல்களில் அவர் பயன்படுத்தும் மாணிக்கப்பண்டாரம், வங்கக் கடல் வண்ணன், பீதகவாடைப் பிரானார் என்ற சொற்றொடர்கள் ரசித்துப் படிக்க வேண்டிய சொற்றொடர்கள்.
பெரியாழ்வார் சொல்லும் நோய்கள் ‘பிறவிப்பிணி’ என்னும் “புனரபி மரணம் புனரபி ஜனனம்! புனரபி ஜனனி ஜடரே சயனம்” — ஆகியதாகவும் இருக்கலாம். அல்லது அப்பரைப் பற்றிய குடல் நோய் போன்று உடலை வருத்தும் நோய்களாகவும் இருக்கலாம். அதனாலன்றோ அப்பர் பிரானார் “கூற்றாயினவாறு” என்று பாடத் துவங்கி 4000 பாடல்களுக்கு மேல் பாடித்தீர்த்தார்.
நாள் என் செய்யும் வினைதான் என்செய்யும் என்று அருணகிரிநாதர் பாடினார். அல்லல் என் செய்யும்? அருவினை என் செய்யும்? என்று அப்பர் பிரான் பாடினார். இவற்றையெல்லாம் பெரியாழ்வார் பாசுரங்களுடன் ஒப்பிடுவது இன்பம் பயக்கும்.

–சுபம்–
You must be logged in to post a comment.