காதா சப்த சதியிருந்து சில சுவையான கவிதைகள்

and1

Godavari basin scenery

கட்டுரையாளர் லண்டன் சுவாமி நாதன்

கட்டுரை எண் — 1564; தேதி  ஜனவரி 11, 2015

 

நானும் எனது தம்பி சூரியநாராயணனும் ஆந்திரத்தில் உள்ள மந்திராலயம் என்னும் தலத்துக்குச் சென்று ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் சமாதியைத் தரிசித்தோம். அப்பொழுது வரிசையில் நின்று கொண்டிருந்தபோது  தமிழில் பல கதைகளைப் பேசிக்கொண்டிருந்தோம் அருகில் இருந்த ஒரு பெண்மணி நீங்கள் தமிழ் நாட்டில் இருந்து வருகிறீர்களா என்று கேட்டார். எங்களுடைய தூய மதுரைத் தமிழை — செந்தமிழை — அவர் கேட்டு மதுரையா என்று பேச்சைத் தொடர்ந்தார்.

 

நாங்களும் விடுவதாக இல்லை. உங்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்றோம். பிறகு தெரிந்தது அவர் பள்ளத்தூர் கல்லூரி முதல்வர் டாட்டர் சரசுவதி ராமநாதன் என்று. மதுரையில் தினமணிப் பத்திரிக்கையில் எனது தந்தை  வெ.சந்தானம் ஆண்டுதோறும் சுதந்திர தின பட்டி மன்றம் நடத்தி தமிழ் நாடு முழுதும் — பட்டி தொட்டிகள் எல்லாம் — பட்டிமன்றம் என்பதைப் பரப்பினார். அப்பொழுது பெரிய தமிழ் அறிஞர் கூட்டம் மதுரையில் எங்கள் தினமணி அலுவலகத்தில் கூடும். அதில் பல முறை பங்கேற்றவர் டாக்டர் சரசுவதி ராம நாதன். இதை அறிந்தவுடன் அவருக்குப் பெரிய மகிழ்ச்சி. நல்ல தமிழ் பேச்சாளர். அதிக புலமை மிக்கவர்.

நாங்கள் ஆந்திர மண்ணில் இருந்து கோதாவரி , துங்கபத்திரை நதிக்கரை நாகரீகம் பற்றிப் பேச ஆரம்பித்தோம். நான்,  காதா சப்தசதி என்னும் நூலை ஆங்கில மொழிபெயர்ப்பாக லண்டன் பலகலைக் கழக நூலகத்தில் எடுத்துப் படித்தைச் சொல்லி இது தமிழில் வந்தால்  ந ன்றாக இருக்குமே என்றேன். மு.கு ஜகன்நாதராஜா என்ற பேரறிஞர் இந்த பிராக்ருத நூலை  தமிழில் மொழி பெயர்த்து இருப்பதாகவும் அதன் பிரதி தன்னிடம் இருப்பதாகவும் சொல்லி அதை மதுரை சென்ற உடனே எனது சகோதரர் சூரிய நாராயணனுக்கு அனுப்பி வைத்தார்.

and3

எனது சகோதரன் மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரி முதல்வராக இருந்ததால் அதை அந்த முகவரிக்கு  அனுப்புவது  அவருக்கு  எளிதாக இருந்தது. அவர் சொன்ன சொல் தவறாமல் எந்த வேகத்தில்  அனுப்பினாரோ அதே வேகத்தில் என் தம்பி அதை லண்டனுக்கு வருவோர் மூலம் எனக்கு அனுப்பி வைத்தான். இது எல்லாம் நடந்தது 15 அல்லது, 20 ஆண்டுகளுக்கு முன். அப்போது படித்து நான் எடுத்திருந்த சில நோட்ஸ்களை — குறிப்புகளை கடந்த சில நாட்களில் நான்கு கட்டுரையில் கொடுத்தேன். டாக்டர் சரஸ்வதி ராமனாதனுக்கு நன்றிகள்!!

 

இதோ ஐந்தாவது கட்டுரை:

 

இந்த சப்த சதி 700 காதல் கவிதைகள் அடங்கியது என்பதால் படிக்காமல் இருந்து விடாதீர்கள். அதில் சங்கத் தமிழ் இலக்கியத்தோடு ஒப்பிட்டு ஆராய ஏராளமான விஷயங்கள் உள்ளன. அக்கால சமுதாய சூழ் நிலை பற்றி அறியவும் நிறைய செய்திகள் உண்டு.

 

விரசமில்லாத சில செய்திகளை மட்டும் காண்போம். பிராக்ருதக் கவிதைகளை தமிழில் மொழி பெயர்த்தவர்  மு.கு.ஜகன்னாதராஜா:

1)அந்திமாலை அஞ்சலி நீரில்

உமையவள் தன் நிழலுருவெழில் கண்டே

இதழ் முணு முணுப்புறும் விதம்பொய் காட்டி

மந்திரம் மறந்த மகேசனை நினைவாம் (700)

அந்தி மாலைப் பொழுதில் சந்தியாவந்தன நீரில் உமாவின் உருவம் பிரதிபிம்பமாகத் தெரிந்தவுடன் காயத்ரி மந்திரம் சொல்வது  போல பொய்யாக சிவன் வாய் அசைந்தது.

 

இதுதான் கடைசி கவிதை. முதல் கவிதையிலும் கவி —  மன்னர் ஹாலன்— சிவனை நினைவு கூர்ந்தார். கடைசியிலும் அவரை நினைத்து கவிதை நூலை முடிக்கிறார். கடவுள் வாழ்த்தும், மங்களமும் சிவன் பெயரில்!


Indian women carry drinking water in the Medak district of Andhra Pradesh

2)மானுடர் உலகில் வாழ்வோருள்ளே

குருடரும் செவிடரும் பெறும்பேருடையர்!

தீயவர் பால் வளர் செல்வம் காணார்

புறம் பழிப்பார் சொல் அறவே கேளார்.(695)

 

இவ்வுலகில் குருடரும் செவிடரும் கூட ஒருவகையில் பாக்கியசாலிகளே! ஏனெனில் கயவர்கள் இடத்தில் செல்வம் வளர்வதைக் குருடர்கள் காண மாட்டார்கள். முதுகுக்குப் பின்னால் புறம்பேசுவார் பேச்சு  — செவிடர்கள் காதில் விழாது

3)மக்கள் குரலிடைத் தொக்குள தேனும் நின்

இன்குரல் தனைத்தன் இருசெவியாரப்

பருகும் நீருடன் பால் கலந்திருந்தும்

குருகு பிரித்திடும் கொள்கையினிவளே

 

பாலையும்  நீரையும் சேர்த்து வைத்தால் அன்னப் பறவை அதில் பாலை மட்டும் பிரித்து உண்ணும். அது போல நமது தலைவி எவ்வளவு இரைச்சலுக்கு  நடுவிலும் காதலநுடைய  குரலை மட்டும் பிரித்துக் கேட்டு மகிழ்கிறாளே என்று வியக்கிறாள் தோழி.


andhar painting 1

4)இங்கே துயில்வள் என் மாமி!

 

இங்கே யானே! இங்கே சுற்றம்!

 

பயணி! இரவில் பார்வையிலாதோய்

என் படுக்கையில் வீழ்ந்திடல் வேண்டா!

கணவன் இல்லாத நேரத்தில் ஒரு வழிப்போக்கன் வீட்டில் வந்து தங்கினான் இதோ பார் இரவில் கண் தெரியாமல் என் மீது விழுந்து விடாதே. இங்கே  நான் படுப்பேன். அங்கே படுப்பவள் என் மாமி. அங்கே  மற்ற உறவினர்கள் படுப்பர்.

 

வழிப்போக்கனுக்கு அவளது ரகசிய மொழி புரிந்தது! அதை தொனிப்பொருள் என்பர். தொன்யாலோகம்  முதலிய வடமொழி அலங்கார சாத்திர பேரசிரியர்கள் இதை எடுத்துக் காட்டாகக் காட்டுவர்.

5)காணின் இன்பம் கண் கட்காகும்

நினைத்தால் மனத்தில் நிலைத்த இன்பம்

உரையாடலிலோ உண்ர்செவிக் கின்பம்

அன்பினர் என்றும் இன்பினராமே

 

அன்புடையாரைக் கண்டாலும் நினைத்தாலும் அவரோடு உரையாடினாலும் இன்பம். அன்புடையார் நட்பை கைவிடக் கூடாது.

 

இதே கருத்து அவ்வையார் வாக்கிலும் வருகிறது:

நல்லாரைக் காண்பதும் நன்றே நலமிக்க

நல்லார் சொல் கேட்பதும் நன்றே

இணங்கி இருப்பதுவும் நன்றே


andhra vendor

Andhra vendor

6)மரணப் படுக்கையில் வலிமை கூட்டி

மகனை அழைத்துத் தகவுடன் கூறும்

நின்செயல் அமைதல் நீர்க! நீ என்

நாம முரைத்திட நாணுறா வாறே

 

தலைவன் மரணப் படுக்கையில் கிடந்தான். பேசமுடியவில்லை. மிகவும் கஷ்டப்பட்டு மகநை அழைத்து நீ எந்தச் செயல் செய்தாலும் அதை என் பெயர் சொல்ல வெட்கப்படாதபடி செய்யவேண்டும். அதாவது என் பெயருக்கு இழுக்கு வராத செயல்களைச் செய்யவேண்டும்.

7)விலகி நிற்கும் உலுக்கும் கிளையை

நகத்தால் கீறிக் குதிக்கும் குரங்கு!

பண்டு கடித்த வண்டெனக் கருதி

நாவற் கனி தொடாதே கிடந்திடுமே

 

ஒரு குரங்கை வண்டு கடித்தது. ஒரு மரம் முழுதும் நாவல் பழங்கள். அவைகளை வண்டு என்று பயந்து குரங்கு அந்த மரத்தை உலுக்கி அட்டஹாசம் செய்தது!

 

நாவல் பழத்தை வண்டு என்று கருதும் நகைச் சுவை காட்சி தமிழ் இலக்கியத்திலும் உண்டு. (தமிழ் இலக்கியத்தில் நகைச் சுவை என்ற எனது கட்டுரையைக் காண்க)

8)நாவினிலே இனிமை நல்கி உள்ளே

மீவிச் செயலற்று அமைந்து மேலும்

துயர்தரச் சுவைதரும் இயல்பினதாய

கரும்பு போல்வர் கயவருமீங்கே

 

கரும்பு — நாவுக்கு மட்டும் இனிக்கும். உள்ளே போனவுடன் இனிக்காது. அதுவும் பல்லால் கடித்துச் சாறு எடுத்தால்தான் இனிக்கும். அதுபோல கீழோரும் நாவில் இனிப்பாகப் பேசுவர். செயலில் ஒன்றும் செய்யார். கரும்பு போல அவர்களைக் கசக்கினால்தான் பயன்  தருவர்.

 

வள்ளுவரும் இதே கருத்தை வலியுறுத்தும் குறள் இதோ:

 

சொல்லப் பயன்படுவர் மேலோர் கரும்பு போல்

கொல்லப் பயன்படும் கீழ் (குறள் 1078)

ndhra village

9)கோதுறு மனமுடைக் கொழுந்தனை நோக்கி

மாதவள் தினமும் போதனை செய்தாள்

இராமனுடன் செல்லும் இலக்குவன் சரிதம்

சுவரில் வரைந்த சுடர் ஓவியத்தே! — (ஹாலன் 1-35)


இந்த ஓவியச் செய்தியைத் தனிக் கட்டுரையாக கொடுத்துவிட்டேன். கணவன் இல்லாத நேரத்தில் கொழுந்தன் ஒரு விதமாகப் பார்க்கவே, அவள் லெட்சுமணன் போல இருங்கள் என்று ஓவியத்தின் மூலம் செய்தி கொடுக்கிறாள்.

 

இது போல பல கவிதைகளைப் படித்து ரசிக்கலாம்.

 

-சுபம்-

kolluru bird

River Godavari, Kolluru