2 கதைகள்: ‘வேண்ட முழுதும் தருவோய் நீ’ (Post No.3467)

Written by London swaminathan

 

Date: 20 December 2016

 

Time uploaded in London:- 10-20 am

 

Post No.3467

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

எனது சொற்பொழிவின் இரண்டாம் பகுதி இது.

 

 

லண்டன் உயர்வாசற் குன்று முருகன் கோவிலின் (LONDON HIGH GATE MURUGAN TEMPLE) திருவாசக விழாவில் பேசுவதற்கு என்னை அழைத்திருந்தார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை 18-12-2016 அந்த விழா நடந்தது. பலர் சொற்பொழிவாற்றினர். மாணவ மாணவியர் தேவார திருவாசக இன்னிசை விருந்து அளிததனர்.

 

“நீண்ட நாள் வாழ ஒரு யோஜனை”– என்ற தலைப்பில் நேற்று முதல் பகுதியை வெளி யிட்டேன்.

 

என்னுடைய சிற்றுரையின் சுருக்கம் இதோ.

 

முதல் கதை

 

 

திருவாசகத்தை நமக்கு அருளிய மாணிக்க வாசகர் பாடுகிறார்:-

 

 

வேண்டத்தக்கது அறிவோய் நீ

வேண்ட முழுதும் தருவோய் நீ

வேண்டும் அயன்மாற்கு அரியாய் நீ

வேண்டி என்னைப் பணிகொண்டாய்

வேண்டி நீயா தருள் செய்தாய்

யானும் அதுவே வேண்டின் அல்லால்

வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில்

அதுவும் உன்றன் விருப்பன்றே

–குழைத்தபத்து, திருவாசகம்

 

பொருள்:-

எனக்கு வேண்டிய எல்லாவற்றையும் நீயே அறிவாய். நான் எதைக் கேட்டாலும் அருளும் கருணை வள்ளல் நீ. உன்னிடம் பல பொருள்களை வேண்டும் திருமாலுக்கும், பிரம்மாவுக்கும் அரியவன் நீ;  எனக்கு வேண்டியவற்றை கொடுத்து , நீயே என்னை ஏற்று அருளும் செய்தாய்; நானும் அதைத்தான் விரும்பினேன். இப்போது நான் வேண்டுவது ஏதாவது இருக்குமானால், அதுவும் உன்னுடைய விருப்பமே.

 

திருவாசகத்திலுள்ள 656 பாடல்களுக்கும் ஒரு கதை சொல்லி விளக்கமுடியும். சொல்லப்போனால் சிவபுராணம், கீர்த்தித் திரு அகவல் போன்ற நீண்ட பாடல்களுக்கு  ஒவ்வொரு மூன்று வரிகளுக்கும் ஒரு கதை சொல்லலாம். எனக்குள்ள சிறிது நேரத்தில் வேண்டியது முழுதும் அருள்வோய் நீ — என்ற வரிக்கு ராமகிருஷ் ண பரமஹம்சர் சொன்ன கதையை சொல்லுகிறேன்:

ஒரு வழிப்போக்கன் நீண்ட நெடுந்தூரம் பயணம் செய்து களைத்துப் போனான். ஒரு மரத்தின் நிழலில் படுத்துக் கொண்டு சிந்திக்கத் துவங்கினான். அடடா! இங்கு மட்டும் ஒரு மெத்தை இருந்தால் எவ்வளவு சுகமாக இருக்கும் என்று நினைத்தான். அடுத்த கணத்தில் அவன் உடல் மெத்தை மீது இருந்தது. அவனுக்கு ஒரே ஆச்சரியம்; சிறிது நேரம் அதில் விழுந்து புரண்டு ஆனந்தித்தான். அடடா! இபோது மட்டும் என் உடல் வலி தீர ஐந்தாறு அழகான பெண்கள் வந்து என் கால்களைப் பிடித்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணினான்.

என்ன அதிசயம்! அடுத்த நொடியில் அங்கே சில அழகிகள் வந்து அவனுக்கு ‘மஸாஜ்’ செய்யத் துவங்கினர். சிறிது நேரம் ஆனபின்னர் பசி, வயிற்றைக் கிள்ளியது. நல்ல அறுசுவை உண்டி கிடைத்தால் சுகமாக இருக்குமே என்று நினத்ததுதான் தாமதம்! ஆவி பறக்க அறுசுவை உண்டி கிடைத்தது. எல்லா தேவைகளும் கிடைத்துவிட்டால் தேவையற்ற பயம் வந்துவிடும்.

 

பாருங்கள் நாம் கூட நிறைய பணம் சேர்ந்தால் அதைப் பாதுகாத்து வைப்பது பற்றிக் கவலைப் படுகிறோம். லாக்கரில் கொண்டு நகைகளைப் பாதுகாப்பாக வைப்பதற்குப் பயம். அதை யாராவது வழிப்பறி செய்துவிடுவானோ என்று நகைகளை எடுக்கும் போது பயம். வீட்டில் அரிசிப் பானைக்குள் நகைகளை வைத்தால் Metal Detector மெடல் டிடெக்டர் வைத்து எடுத் துக்கொண்டு போய்விடுவானோ என்று பயம்! இது போலவே அந்த வழிப்போக்கனுக்கும் வேண்டாத ஒரு பயம் வந்தது அடடா! நம் நடுக்காட்டில் அல்லவா மரத்துக்கு அடியில் படுத் துக் கொண்டிருக்கிறோம் இப்போது ஒரு புலி வந்து நம்மை அடித்துக் கொன்றுவிட்டால் நான் என்ன செய்வது என்று நினைத்தான். அடுத்த வினாடி, புலி தோன்றி அவனைக் கடித்துக் குதறி கொன்றுவிட்டது.

இந்தக் கதையை சொன்ன ராமகிருஷண பரமஹம்சர் நம்மை எச்சரிக்கிறார்:- இறைவன் கருணைக்கடல்; கற்பக விருட்சம்; கேட்டதை எல்லாம் கொடுத்துவிடுவான்; நாம்தான் கேட்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

அன்பர்களே!

பாருங்கள், மாணிக்கவாசகரும் இதைத்தான் மேற்கூறிய பாட்டில் எதிரொலிக்கிறார். நாம் கடவுளை வேண்டும் போது எனக்கு நல்லன எல்லாவற்றையும் கொடு என்று வேண்டினால் போதும்.

 

இரண்டாம் கதை

 

நாடகத்தால் உன்னடியார்

போல் நடித்து நான் நடுவே

வீடகத்தே புகுந்திடுவான்

மிகப் பெரிதும் விரைகின்றேன்

ஆடகச் சீர் மணிக்குன்றே

இடையறா அன்புனக்கென்

ஊடகத்தே நின்றுருகத்

தந்தருளும் எம்முடையானே

திருச்சதகம் 11

பொருள்:-

தங்கத்துக்கு நடுவே எழுந்த மாணிக்க மலையே! எம்மை ஆட்கொண்ட இறைவா! உன்னுடைய அடியார்களைப் போலவே நடிக்கிறேன். அவர்களிடையே இருந்து மோட்ச உலகத்துக்குச் செல்ல விழைகின்றேன். நான் உன் அடிமை என்பதால், நீங்காத அன்பு அகலாதபடி எனக்கு அருள்புரி.

 

நாடகத்தால் நடித்து — என்ற வரியைப் பார்த்டவுடன் ராமகிருஷ்ணர் சொன்ன இன்னும் ஒரு கதை நினைவுக் கு வருகிறது.

 

நாடகத்தில் நடிப்பதுபோல நடித்தாலும் கூட இறைவன் அருள்புரிந்த கதை இதோ: ஒரு திருடன் ஒருநாள், ராஜாவின் அரண்மனைக்குள் புகுந்து திருடுவதற்காக ஒளிந்திருந்தான். அப்போது மன்னன், தன்னுடைய மகளின் கல்யாணம் பற்றி மந்திரியுடன் விவாதித்துக் கொண்டிருந்தான். தன்னுடைய மகளுக்கு நல்ல ஆன்மீக நாட்டம் கொண்ட ஒருவனையே மணம் முடிக்க விரும்புவதாகவும் மந்திரி, ஒரு நல்ல மாப்பிள்ளையை கண்டுபிடித்துவர வேண்டும் என்றும் சொன்னான்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த திருடனுக்கு ஒரு யோஜனை மின்னல் போலப் பளிச்சிட்டது. நாம் ஏன் இங்கே திருட வேண்டும்? அகப்பட்டுவிடால் தலை போய்விடும். இதற்குப் பதிலாக நாம் ஒரு சந்யாசி போல நடிதால், ஒரு வேளை மன்னன் மகள் தன்னைக் கல்யாணம் செய்துவிடால் முழு ராஜ்யத்தையுமே அமுக்கிவிடலாமே என்று எண்ணி, சந்யாசி வேடம் போட்டுக் கொண்டு ஊருக்கு வெளியே சந்யாசிகள் எல்லாம் தங்கி இருக்கும் மடத்துக்குப் போனான்.

 

இதற்கிடையில்  மந்திரிக்கும் கவலை; மன்னன் கட்டளை ஆயிற்றே. மாப்பிள்ளைக் கிடைக்காவிடில் தன் தலை போய்விடுமே என்று மறு நாள் ஊருக்கு வெளியே மரத்தடியில் வசிக்கும் சந்யாசிகளிடையே போனான்

 

ஒவ்வொரு சந்யாசியையும் மந்திரி கேட்ட போது அவர்கள் எல்லாம் திருமணத்துக்கு சம்மதம் தரவில்லை. புதிய சந்யாசியாக வந்த திருடன் மட்டும் முதலில் ஒப்புக்கொண்டான். அவனுக்கு உடனே கிடைத்த ராஜ உபசாரத்தைப் பார்த்தவுடன் அவன் எண்ணினான்: சந்யாசியாக வேடம் போட்டதுக்கே இவ்வளவு மதிப்பு என்றால், உண்மையான சந்யாசியானால் எவ்வளவு மதிப்பும் சுகமும் கிடைக்கும் என்று எண்ணி அவனும் சந்யாசி ஆகிவிட்டான்.

 

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் அல்லவா?

 

அடுத்த முறை வரும்போது ஒரு மணி நேரம் சங்கீத உபந்யாசம் செய்ய ஆசை. ஒவ்வொரு திருவாசகப் பாடலுக்கும் ஒரு கதை சொல்கிறேன்.

நன்றி வணக்கம்.

 

–சுபம்