

Post No. 9854
Date uploaded in London –15 JULY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆங்கில நாவல்களைப் படிப்போருக்கு ஜேன் ஆஸ்டின் JANE AUSTEN என்ற நாவல் ஆசிரியை நன்றாகவே தெரியும். மேலும் அண்மைக்காலத்தில் அவருடைய எம்மா EMMA புதினமும், ப்ரைட் அண்டு ப்ரிஜடீஸ் PRIDE AND PREJUDICE புதினமும்டெலிவிஷன் தொடர்களில் சக்கைப் போடு போட்டதால் அம்மணியின் புகழ் மேலும் பரவிவிட்டது.

பெண் எழுத்தாளர்களில் 200 ஆண்டுகளுக்கு முன்னரே புகழ் கொடி நாட்டினார் ஜேன் . சாமான்ய மக்களை , நம்பத் தகுந்த வகையில் வருணித்தவர் இவர்.ஜேன் எழுதிய நாவல்களில் அழகிய இளம் கதாநாயகிகளை சந்திக்கலாம். அவர்கள் தங்கள் சுற்றுவட்டாரத்தில் பீடும் பெருமையும் காட்டி அகந்தையுடன் வலம் வருவதையும் காணலாம். வான மயிலாடக் கண்டிருந்த வான் கோழி தானும் அதுவாகப் பாவித்து நடை போடுவதை அவருடைய கதாநாயகிகள் சித்தரிக்கின்றனர்.
ஜேன் ஆஸ்டின் ஒரு பாதிரியாரின் மகள் . தெற்கு இங்கிலாந்தில் ஒரு கிராமத்தில் பிறந்தவர். பெரும்பாலும் வீட்டிலும் கொஞ்சம் பள்ளிக்கூடங்களிலும் கல்வி கற்றார். அக்காலப் பெண்களிடையே இது நல்ல படிப்பு என்றும் சொல்லலாம்.
அவருடைய குடும்பத்தினர் புஸ்தகப் புழுக்கள். வாசிப்பதே அவர்களின் பொழுதுபோக்கு. சர்ச்சிலும் நாடகங்களை நடித்துக் காட்டினார்கள் .
ஜேன் திருமணம் செய்துகொள்ளவில்லை. பெற்றோருடனே வசித்தாள் . அதிகம் பயணம் செய்ததும் இல்லை. லண்டன் மற்றும் பாத் BATH ஆகிய இரு நகரங்களுக்கே சென்றார் .41 வயதில் இறந்தார்.
நண்பர்களுடனும், உறவினர்களுடனும் கொண்ட தொடர்புகள் மூலம், நிலம் வைத்திருக்கும் பணக்காரர்கள், நாட்டுப்புற மதப் பிரச்சாரகர்கள், மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் பற்றி அறிந்ததை புதினங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார்.
14 வயதிலேயே லவ் அண்ட் ப்ரண்ட்ஷிப் LOVE AND FRIENDSHIP என்ற நாவலை எழுதினார். சில நூல்கள் வெளியாவதற்கு முன்னரே எதையும் எதிர்பார்க்காமல் நாவல்களை எழுதி முடித்தார். 35 வயது ஆனபோதுதான் சென்ஸ் அண்ட் சென்சிபிலிட்டி SENSE AND SENSIBILITY நாவல் அச்சாகியது. தன்னுடைய உண்மைப் பெயரை அப்போது வெளியிடாமல் ரஹசியம் காத்தார். ஏனெனில் அக்காலத்தில் எழுத்து த் தொழில் ஆண்களின் உடைமையாக இருந்தது. ஒரு பெண் எழுதியதாகத் தெரிந்தால் என்ன சொல்வார்களோ ஏது செய்வார்களோ என்ற அச்சம் அவரிடம் குடிகொண்டது.
EMMA எம்மா என்ற நாவலும் ப்ரைட் அண்ட் ப்ரிஜடீஸ் PRIDE AND PREJUDICE என்ற நாவலும் இவருக்கு பெரும்புகழ் சம்பாதித்துத் தந்தன.
ப்ரைட் அண்ட் ப்ரிஜடீஸ் நாவலில் ஒரு யுவதியும் ஒரு இளைஞனும் ஒருவரை ஒருவர் வெறுத்து, பின்னர் காதல் வலையில் விழுகின்றனர். எம்மா என்னும் புதினத்தில் ஒரு கர்வமும் பிடிவாத குணமும் உள்ள இளம்பெண் , இறுதியில் காதல் என்னும் உணர்வினால் கனிவு அடைகிறாள். அவளுடைய கர்வமும் அஹம்காரமும் காதலுக்கு அடிமை ஆகின்றன. எல்லா நாவல்களும் சுபம் ஆகவே முடியும். இறுதியில் கல்யாண மேளம் கொட்டும்.
அவளுடைய நாவல்களை விமர்சிப்பவர்கள் அதிலுள்ள வறட்டு, அறுவை ஜோக்குகளை கவனித்துள்ளனர். ஆனால் உன்னத நடையையும் பாராட்டத் தவறவில்லை. சின்னச் சின்ன தப்பு அபிப்ராயங்கள் எப்படி பூதாகார உருவெடுக்கும் என்பதையும் குடும்பப் பொறுப்புகளுக்கும், மன உணர்வுகளுக்கும் இடையே நடக்கும் மோதல் களையும் அவருடைய நாவல்களில் படித்து ரசிக்கலாம்.
பிறந்த தேதி டிசம்பர் 16, 1775
இறந்த தேதி – ஜூலை 18, 1817
வாழ்ந்த ஆண்டுகள் – 41
அவருடைய முக்கிய நாவல்கள் –

1811- SENSE AND SENSIBILITY
1813- PRIDE AND PREJUDICE
1814- MANSFIELD PARK
1816- EMMA
PUBLISHED AFTER SHE DIED
1818- NORTHANGER ABBEY
1818- PERSUATION
1922- LOVE AND FRIENDSHIP

–SUBHAM—
TAGS – எம்மா, ஜேன் ஆஸ்டின், EMMA, JANE AUSTEN







