தமிழில் சாதனை படைத்த ‘உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர்’ !
Part of “The Wonder that is Tamil” written by London Swaminathan
கட்டுரையாளர் லண்டன் சுவாமி நாதன்
ஆய்வுக்கட்டுரை எனண் 1568; தேதி 13 ஜனவரி 2015
இந்தியாவில் எழுத்து வேலைகளுக்காக நோபல் பரிசு பெறத் தகுதி உடையவர் வியாசர் என்னும் மாமுனிவன் என்று ஒரு கட்டுரை எழுதி னேன். தமிழில் எழுத்து, அதிலும் குறிப்பாக உரை எழுதியமைக்காக, ஒரு நோபல் பரிசு கொடுப்பதாக இருந்தால் உச்சி மேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர் என்று பாராட்டப்படும் நச்சி அவர்களுக்கே தரவேண்டும்.
அவர் ஒரு பிராமணன். வடமொழி தென் மொழி இரண்டையும் கரை கண்டவர் என்பது அவர் உரை வளத்தில் இருந்தே தெரிகிறது. சில நேரங்க்களில் வடமொழியையோ வடமொழி நூல் குறிப்பிடும் வழக்கங்களையோ மட்டம் தட்டிக் கூட தமிழைப் புகழ்ந்துள்ளார். இன்னும் சில இடங்களில் வேத, புராண, இதிஹாசக் கருத்துக்களை உரையின் கண் நுழைத்துள்ளார். ஆக மறத் தமிழர்களின் பாராட்டுக்கும், குட்டுக்கும் ஆட்படுகிறார். தமிழனைப் புகழும் இடங்களில் தமிழ் ஆர்வலர்கள் இவரை உச்சிமேற் வைத்துக் கொண்டாடுவர். சிலருக்கு ஒவ்வாத கருத்துக்கள் வரும்போது திட்டுவார்கள். இது திராவிட அரசியலின் தாக்கம். ஆயினும் அரசியலுக்கு அப்பாற்பட்ட அந்தக் கால சத்திய சந்தர்கள் —- உரைகாரர்களிலேயே அதிகம் புகழ்ந்தது இந்தப் பார்ப்பனரைத்தான்!!
அப்படி என்ன சாதனை படைத்தார் திருவாளர் நச்சி?
கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளுதல் என்னும் ஒரு புதிய உத்தியை அதிகம் கையாண்டது இவர்தான். அதாவது ஒரு செய்யுளில் முதல் வரியிலோ இரண்டாவது வரியிலோ வரும் சொல்லை வேறு எங்க்காவது கொண்டு இணைத்து (கூட்டி) பொருள் சொல்லுவார். அது கன கச்சிதமாக இருக்கும். கவிதை பாடியவரே நேரில் வந்தாலும் அட நான் எழுதிய கவிதையில் இப்படியும் பொருள் இருக்கிறதா என்று வியப்பார்.
எல்லாப் பெண்களும் ஏற்கனவே சந்திரன், கந்தருவன், அக்னி ஆகியோரை மணந்த பின்னரே நாலாவது நாள் மணமகனை மணக்கிறான் என்ற வேதக் கருத்தை இவர் தொல்காப்பிய சூத்திர உரையில் கையாண்டது பற்றிய விமர்சனத்தை நேற்று ஆளவந்தார்- ஆக்கியாழ்வான் கதையுடன் தந்தேன்.
நச்சி. தமது உரைகளில் எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை மேற்கோளாகக் காட்டுகிறார் என்றால் இவருடைய மேதாவிலாசம் எத்தகையது என்பது விளங்கும். அந்தக் காலத்தில் இண்டெர்னெட் கிடையாது. நூலகங்களோ மிகக் குறைவு!
இவரை வடமொழியில் சிறந்த உரைகளைத் தந்த மல்லினாதருடன் ஒப்பிடுகிறார் தமிழ் தாத்தா உ.வே.சா.
ஒவ்வொரு உரையின் இறுதியிலும் மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் செய்தவுரை முற்றிற்று — என்று கூறுவதால் இவர் பாரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்தவர், மதுரைக்காரர் என்பது தெரிகிறது.
வண்டிமிர் சோலை மதுரா புரிதனில்
எண்டிசை விளங்க வந்த வாசான்
பயின்ற கேள்விப் பாரத்துவாசன்
என்று உரையின் பாயிரத்தில் உளதால் இவர் குலம், கோத்திரம் முதலியவற்றை அறிகிறோம்.
தொல்காப்பியம், பத்துப் பாட்டு, கலித்தொகை, சீவக சிந்தாமணி, குறுந்தொகையில் பேராசிரியர் உரை எழுதாத 20 பாடல்கள் ஆகிய அனைத்துக்கும் இவர் உரைகண்டார்.
பாரத் தொல்காப்பியமும் பத்துப் பாட்டுங் கலியும்
ஆரக் குறுந்தொகையுள் அயன் நான்கும் — சாரத்
திருத்தகு மாமுனிசெய் சிந்தா மணியும்
விருத்தி நச்சினார்க்கினியமே – என்று ஒரு வெண்பா உளது.

நச்சி. இன்னும் சில நூல்களுக்கு உரை கண்டார் என்றும் அவை எவையெனப் புலப்படவில்லை என்றும் உ.வே.சா. கூறுகிறார்.
நச்சி எழுதியதாகக் கூறப்படும் உரையிலும் குறுந்தொகை உரையும், தொல்காப்பியத்தின் மெய்ப்பாட்டியல், உவமவியல், மரபியல் ஆகிய பகுதிகளுக்கான உரைகளும் கிடைக்கவில்லை.
இன்று, நச்சி. உரையை மற்றவர் உரையுடன் ஒப்பிட்ட சில இடங்களைக் காண்போம். கீழேயுள்ள பகுதி தொல்காப்பியக் கடல் என்ற அற்புத நூலை எழுதிய வ.சுப மாணிக்கம் சொல்லும் கருத்துக்கள்:
“நச்சினார்க்கினியர் தமிழ் இலக்கியத்துக்கும் இலக்கணத்துக்கும் உரை எழுதற்கென்றே பிறந்த பெருமகனாவார் இலக்கியங்களில் உரை நயம் கண்டவராதலின் இவர்தம் இலக்கண உரையிலும் நயக்காட்சிகளைக் காணலாம். இவர்தம் நடை இளம்பூரணத்துக்கும் சேனாவரையத்துக்கும் இடைப்பட்டதாகும். சேனாவரையரை இவர் மறுத்த இடங்களும் உண்டு.இளம்பூரணர்க்குப் பின் தொல்காப்பியத்திற்குப் பெரும் பாகம் உரை கண்ட பெருமையுடையவர் நச்சினார்க்கினியர்.
“சொற்கிடந்தாங்கு பொருள் கொள்ளாது தாம் நினைத்தாங்குச் சொற்களைக் கொண்டு கூட்டிப் பொருள் கொண்டமையால் இவர் தம் உரை உரையறங் கடந்த உரை ஆயிற்று. பொருளறை செய்த இப்பெருங்குறை இவ்வுரையில் இல்லாதிருப்பின் நச்சினார்க்கினியர் உரை ஞாயிறாகப் பெரும் புகழ் பெற்றிருப்பர்.

பெண்மை யடுத்த மகனென் கிளவியும் — தொல்.649
பெண்ணைப் பெண்மகன் என்று ஆண்பால் படச் சொல்லுகின்ற வழக்கை இத் தொல்காப்பிய அடி குறிக்கின்றது. இப்பகுதிக்கு வரைந்த உரை வளர்ச்சியைக் காண்போம்:
(அ)இளம்பூரணர்:
புறத்துப் போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண்பாலரைப் பெண்மகன் என்று வழங்குப.
(ஆ)சேனாவரையர்
புறத்துப் போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண் மகளை மாறோக்கத்தார் இக்காலத்தும் பெண்மகன் என்று வழங்குப.
(இ)கல்லாடர்:
நாணுவரை இறந்தாள் தன்மையளாகிப் புறத்துப் போய் விளையாடும் பெண் மகளைப் பெண்மகன் என்பது முற்காலத்து வழக்கம். அதனை இப்போது மாறோக்கத்தார் வழங்குவர். மாறோக்கம் என்பது கொற்கை சூழ்ந்த நாடு
(ஈ) தெய்வச்சிலையார்
விளையாடு பருவத்துப் பெண்மகளை பெண்மகன் என்றல் பண்டையோர் வழக்கு.
(உ)நச்சினார்க்கினியர்
பெண்மகன் என்பது அத்தன்மையாரை அக்காலம் அவ்வாறே வழங்கினார் ஆயிற்று.
இங்ஙன ம் கூறலின் ,
பெண்மகன் என்பது இளம்பூரணர் காலத்து நாடு முழுதும் பரவலாக வழங்கியிருந்தது என்பதும் சேனாவரையர், கல்லாடர் காலங்களில் திசை வழக்காயிற்று என்பதும் சிலையார், இனியார் காலத்து அத்திசை வழக்கும் அருகிற்று என்பதும் பெறப்படும்”

மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி — பனம் பாரனார் பாயிரம்
இப்பாயிரத்தில் எழுத்து முறை என்பது நூல் எழுதும் முறை எனப்பொருள்படும். உரை ஆசிரியர்கள் இதற்கு வேறு வேறு பொருள் எழுதியுள்ளனர். பிற நூல்கள் எழுத்திலக்கணத்தைச் சொல் இலக்கணத்தோடு மயங்கிக் கூறின எனவும் , அங்கனமின்றி மயங்காத முறையானே எழுத்திலக்கணத்தை வேறு தெரிவித்தார் தொல்காப்பியர் எனவும் உரை செய்குவர் இளம்பூரணர்.
நச்சினார்க்கினியர், மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி என்னும் பன்னிரெண்டாம் அடியை ‘’ புலந்தொகுத்தோனே’’ என்ற எட்டாவது அடியோடு கொண்டு கூட்டிக்கொள்வர். மேல் யான் விளக்கியபடி , எழுத்திலக்கணம் ஒன்றை மட்டும் மயங்காதபடி தொல்காப்பியர் மொழிந்தார் என்ற இளம்பூரண உரை குறையுடைத்து என்று கண்டு கொண்ட நச்சினார்க்கினியர் கீழதை மேலதொடு கொண்டு கூட்டி,மூன்று இலக்கணங்களையும் மயங்காத முறையில் செய்தார் தொல்காப்பியர் என்று நிறுவ முயல்வர். தானம் மாற்றிச் செய்யும் கணக்குக் கூட்டு போல , அடிமாற்றும் இவ்வகைக் கொண்டு கூட்டும் முறை குற்றம் உடையது. முவ்விலக்கணங்களையும் ஒழுங்குறச் செய்தார் ஆசிரியர் என்பதற்கு ‘முறைப்பட எண்ணி’, போக்கறு பனுவல்’, ‘அரில்தப’ என்ற செந்தொடர்களே சாலப்போதும். கொண்டு கூட்டும் நச்சினார்க்கினியம் வேண்டா.”
-தொல்காப்பியக் கடல், வ.சுப. மாணிக்கம், மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம்
எனது கருத்து: நச்சியின் கொண்டு கூட்டும் உத்தி தான் அவருக்குப் புகழை ஈட்டித் தந்துள்ளது. ஆகவே இந்த விமரிசனம் சரியன்று. இளம் பூரணரைவிடப் பொருத்தமான — தொல்காப்பியரை பாராட்டும் உரையையே — நச்சி. இங்கே எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
-சுபம்–
contact swami_48@yahoo.com

Posted by Tamil and Vedas on January 13, 2015
https://tamilandvedas.com/2015/01/13/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%9a/