
புதிய பிள்ளையார் புராணம்- பகுதி-2; நம்பியின் உணவுண்ட பொல்லாப் பிள்ளையார்! (Post No 3119)
Written by London swaminathan
Date: 4 September 2016
Time uploaded in London: 5-55 AM
Post No.3119
Pictures are taken from various sources; thanks.
பகுதி ஒன்றில் மதுரை முக்குறுணி விநாயகர், கும்பகோணம் கரும்பாயிரம் பிள்ளையார் கதைகளை அறிந்தோம். நம்பியண்டார் நம்பியின் உணவை உண்டு அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்திய பொல்லாப் பிள்ளையார் திருநாரையூரில் வெள்ளாற்றங்கரையிலே வீற்றிருக்கிறரர்.

அவர் கதையையும் கேளுங்கள்!
சிதம்பரத்திலிருந்து 10 மைல் தொலைவில் திருநாரையூர் இருக்கிறது. ஆனந்தேச சிவாச்சாரியார் இங்கு பூஜை செய்து வந்தார். ஒருநாள் அவரால் பூஜைக்குச் செல்ல முடியாததால், தனது மகன் நம்பியாண்டார் நம்பியை அழைத்து, கணபதிக்குப் பூஜை செய்துவிட்டு இறைவனுக்கு அமுதும் படைத்து வா என்று அனுப்பிவைத்தார். கள்ளமில்லா உள்ளம் படைத்த நம்பி, பூஜையை முறைப்படி செய்துவிட்டு, பிள்ளையாருக்கான நைவேத்தியத்தைப் படைத்துவிட்டு பிள்ளையார் உண்ட பின் வீடு திரும்புவோம் என்று காத்திருந்தான். நெடு நேரம் ஆகியும் கல்லுப் பிள்ளையார் கல்லாகவே காட்சிதந்தார். ஒரு அங்குலம் கூட நகரவில்லை; வாயையும் திறக்கவில்லை.
தான் செய்த பூஜையில் தவறு இருந்ததால்தான், கணேசன் வாய் திறக்கவில்லை என்று அருகிலுள்ள கருங்கல்லில் தலையை மோதிக்கொள்ளத் துவங்கினார். தனது “தவற்றுக்கு” தானே தண்டனை கொடுத்தபோது, பிள்ளையார் அவர் முன் தோன்றி உணவு வகைகளை வாங்கி வயிறு புடைக்கத் தின்றார். பொல்லாப் பிள்ளையார் அல்லவா!! அந்தப் பிள்ளையாரின் அருளால்தான் சிதம்பரத்தில் இருக்கும் தேவாரப் பதிக ரகசியமும் அவருக்குத் தெரிய வந்தது.
தேவாரத் திருமுறைகளைத் தமிழ்கூறு நல்லுலத்துக்குக் காப்பாற்றிக் கொடுத்த பிள்ளையாரை நல்ல பிள்ளையார் என்றே சொல்ல வேண்டும்.
உச்சிப் பிள்ளையார்
தமிழ்நாடு முழுவதும் குன்றுதோராடுவது குமாரக் கடவுள்தான். ஆனால் திருச்சியில் மட்டும் மலை உச்சிக்குப் போய்விட்டார் குமரனின் அண்ணனான பிள்ளையார். ஆகையால் அவர் உச்சிப் பிள்ளையார் ஆகிவிட்டார்.

பாரதியார் பாடிய மணக்குள விநாயகர்!
சொற்தேரின் சாரதியாம் பாரதியின் வாயினால் வாழ்த்தப் படாத தெய்வம் இல்லை. ஆனால் அவை எல்லாம் பொதுவான பிரார்த்தனைகள். புதுச்சேரியிலுள்ள மணக்குள விநாயகர் மட்டும் ஊர்ப்பெயருடன் பாடப் பெற்றார். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.
புதுவை கடற்கரையில் கோயில் கொண்டுள்ள இந்தப் பிள்ளையாரைத் தரிசிக்க வரும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கவே, கோபம் கொண்ட அந்நிய ஆட்சியாளர்கள், விநாயகர் சிலையை அகற்றி கடலில் போட்டுவிட்டனராம். ஆனால் மறு நாளே பிள்ளையார், இருந்த இடத்துக்கே வந்துவிட்டார். இதைக் கண்டு வியந்த அந்நிய ஆட்சியாளர் அவருக்குக் கோயிலும் எழுப்பிச் சிறப்பித்தனரம்.
இதோ பாரதியின் பாடல்:-
வாழ்க புதுவை மணக்குளத்து
வள்ளல் பாத மணி மலரே;
ஆழ்க உள்ளஞ் சலனமிலா
தகண்ட வெளிக்கண் அன்பினையே
சூழ்க; துயர்கள் தொலைந்திடுக;
தொலையா (இன்பம் விளைந்திடுக)
வீழ்க! கலியின் வலியெல்லாம்!
கிருத யுகந்தான் மேவுகவே.

மாற்றுரைத்த பிள்ளையார்
விருத்தாசலம் (திரு முதுகுன்றம்) மாற்றுரைத்த பிள்ளையார், சுந்தரர்- பரவை நாச்சியார் வாழ்வுடன் தொடர்புடையவர். பரவை நாச்சியாருக்கென வேண்டி சுந்தரர், சிவ பெருமானிடமிருந்து பொற்காசுகளைப் பெற்றார். அவற்றை மணிமுத்தாற்றில் இடுவ்தற்கு முன் அப்பொன்னை மாற்றுரைத்து, அதற்கு இப்பிள்ளையாரைச் சாட்சியாக வைத்ததால், அவர் மாற்றுரைத்த பிள்ளையார் எனப் பெயர் பெற்றார்.
To be continued…………………………………………………….
You must be logged in to post a comment.