சங்க இலக்கியத்தில் பிராக்ருத கவிஞர்கள்!

gss 2

கட்டுரையாளர் – லண்டன் சுவாமிநாதன்

ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1557 ; தேதி 8 ஜனவரி 2015

 

சங்க இலக்கியப் பாடல்களில் பல விநோதமான புலவர்களின் பெயர்கள் உள்ளன. ஏற்கனவே இருபதுக்கும் மேலான காரணப் பெயர்கள் இருப்பது பற்றி எழுதிநேன். விட்ட குதிரையார், மீனெறி தூண்டிலார்,கூவன் மைந்தன் குப்பைக் கோழியார் முதலிய பெயர்கள் அவர்கள் பாடிய சொற்களைக் கொண்டே அமைக்கப்பட்டன இதே போல ரிக்வேதத்திலும் இருப்பதைக் கண்டோம். இதுதவிர நிறைய புலவர்கள் சம்ஸ்கிருதப் பெயர்களாக இருப்பதையும் கண்டோம். இது தவிர பிராமணர்களின் கோத்திரங்கள் பல இருப்பதையும் கண்டோம். கவுணியன் (கௌண்டின்ய கோத்ரம்), கோசிகன் (கௌசிக), வாதுளி(வாதூல), கௌதமன் (கௌதம கோத்ர), காசிபன் (காஸ்யப கோத்ரம்), கார்க்கியர் (கார்க்ய) என்பன  சில சங்கப்புலவர்களின் பெயர்களில் உள்ள கோத்திரப் பெயர்கள்.

இதே போல இரண்டு பெயர்கள் பற்றி  நான் செய்த ஆராய்ச்சி அவர்கள் பிராக்ருதப் புலவர்கள் என்பதைக் காட்டுகின்றன. ஒருவர் பெயர் பாலியாதன். மற்றொருவர் பெயர் பிரம்மச்சாரி. இவ்விருவரும் பிராக்ருத கவிதை நூலான காதா சப்த சதியிலும் கவிதைகள் எழுதியுள்ளனர். இவை இரண்டும் தமிழ் சொற்கள் இல்லை என்பதை விளக்கத் தேவை இல்லை.

 

இதே போல கயமனார் (சப்த சதியில் கஜன், கஜதத்தன்) , கோவதத்தன் (சப்தசதியில் கைவர்த்தன்) , யாழ் பிரமதத்தன், பூதன் தேவனார் (சப்த சதியில் தேவன்) முதலிய புலவர்களும் ஆராயப்பட வேண்டியவர்களே.

 

காதா சப்த சதி என்பது அகத்துறை பாடல்கள் 700 உடைய நூல். இதே அகத்துறைப் பாடல்களைத் தான் இவர்கள் சங்க இலக்கியத்திலும் பாடியுள்ளனர்.

பிரமசாரி பாடிய ஒரு பாடல்   நற்றிணையில் (பாடல் 34) உள்ளது. இது அகத்துறைப் பாடலே.


குண்டுகட் பாலியாதன் பாடிய பாடல் நற்றிணை  220- ஆவது பாடலாக அமைந்துள்ளது. குண்டுகட் என்பது ஆந்திரப்பிரதேசத்தில் குண்டக்கல் என்ற ஊராக இருக்கலாம்.

gss3

இவ்விருவரும் பாடிய நிறைய பாடல்கள் சப்தசதியில் உள்ளன.

 

என்னுடைய கருத்துக்கு வலுச் சேர்க்கும் வேறு சில விஷயங்களும் உண்டு:

 

1.சிலப்பதிகாரத்தில் சேரன் செங்குட்டுவனின் நெருங்கிய நண்பன் நூற்றுவர்கன்னர் (சாதவாஹனர்) என்று கூறப்பட்டுள்ளது. சாதவாஹன மன்னர்களும் அவர்கள் வெளியிட்ட நாணயங்களில் பிராக்ருதப் பெயர்களுடன் தமிழிலும் எழுதினர். இதன் மூலம் தமிழ்- சாதவாஹன தொடர்பு உறுதிப்படுகிறது

 

2.காதா சப்த சதியின் பெரும்பாலான பாடல்கள் சங்க காலத்தைச் சேர்ந்தவை.

 

3.பாலியாதன் என்னும் புலவன் செல்வக்கடுங்கோ வாழியாதனையும் பாடி இருக்கிறான். இவை எல்லாம்  சேரன்- சாதவாஹன தொடர்பைக் காட்டுவன

 

4.ஹாலனின் மிக நெருங்கிய நண்பன் பாலியாதன் என்பதும் குறிப்பிடத் தக்கது.

கயமனார் என்பவர் ஒரு பாடலில் கயம் என்ற சொல்லைப் பயன்படுத்தியதே அவருக்குக் காரணப் பெயராக அமைந்திருக்கலாம் என்று உ.வே.சா. ஊகிக்கிறார். அது தவறு. இவர்   நிறையப் பாடல்கள் பாடி இருக்கிறார். அங்க்கெல்லாம் கயம் என்ற சொல் இல்லை. உண்மையில் இவர் பிராக்ருதப் புலவர் கஜன் என்பவராக இருக்க வேண்டும். காதா சப்த சதியில் இவருடைய பாடல்கள் உள.

 

யாழ் பிரமதத்தன் என்ற வடக்கத்திய அரசனையே தமிழ்ப் பாடல் இயற்றவைத்தார் கபிலர். அப்படி இருக்கையில் பிராக்ருதப் புலவர்கள் தமிழில்

பாடியது வியப்பில்லை. மேலும் தமிழுக்கும் சம்ஸ்கிருத மொழிக்கும் பாலமாக அமைந்தது பிராக்ருதம். இரு செம்மொழிகளும் ஒரே மூலத்தில் தோன்றியவை என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். மூலச் சொல் எப்படிக் கிளை விட்டுப் பிரிந்தது என்பதை அறிய பிராக்ருதம் மிகவும் அவசியம்.

contact swami_48@yahoo.com