by ச.நாகராஜன்
Written by S Nagarajan
Post No. 1617; Dated 2nd February 2015
உலகின் ஒப்பற்ற மொழி தமிழ்
தாய் மொழியின் மீது பற்று கொள்ளாதவனை மனிதனாகவே கருத முடியாது. அதே சமயம் இதர மொழிகளின் மீது காழ்ப்புணர்ச்சி கொள்பவனையும் மனிதனாகக் கருத முடியாது.
உலகின் ஒப்பற்ற தனி மொழியான தமிழின் பெருமையைச் சொல்ல வல்லவர்கள் பல மொழியையும் அறிந்திருக்க வேண்டும். குறிப்பாக சம்ஸ்கிருதத்தை அறிந்திருக்க வேண்டும்.
சம்ஸ்கிருதமும் அறிவோம்
பாரதப் பண்பாட்டின் ஆணி வேராக விளங்கும் வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், இராமாயண, மஹாபாரத இதிஹாஸங்கள் ஏராளமான காவியங்கள், மற்றும் கலைகளை விளக்கும் நூல்கள் எனப் பல்லாயிரக்கணக்கில் சம்ஸ்கிருத அறிவுக் களஞ்சியம் விரிந்துள்ளது. ஆகவே காழ்ப்புணர்ச்சி அற்ற சமரஸ நோக்கில் எதையும் கற்று ஏற்றம் பெறுவதே சிறப்பு.
வெகுஜன கவர்ச்சியாக இன்றைய நாட்களில் விளங்கும் திரைப்படங்களில் சம்ஸ்கிருதம் நிறையவே இருக்கிறது. இதில் தப்பு ஏதும் இல்லை. காலம் காலமாக நாம் தமிழகத்தில் அன்றாடம் வழங்கி வரும் சில சொற்களின் ஆணி வேரை சம்ஸ்கிருத மூலத்தில் பார்க்க முடியும்.
நடிகர் திலகம், நடிகையர் திலகம், மக்கள் திலகம்
எடுத்துக் காட்டாக சடங்கு பற்றிய திரைப்படக் காட்சிகளை எடுத்துக் கொள்வோம். எத்தனை பாடல்கள் உள்ளன! இந்த சடங்கை எந்த ஜாதியினராவது விட்டு விடுவார்களா, இன்றும் கூட!
சடங்கு என்ற சொல் ஷட் +அங்கம் = ஷடங்கம் என்ற சம்ஸ்கிருத சொல்லில் இருந்து எழுந்த ஒன்று.
திரைப்படங்களில் அபாரமாக நடிக்கும் நடிக நடிகையரைக் கூட திலகம் என்று தான் சொல்கிறோம். நடிகர் திலகம், நடிகையர் திலகம், மக்கள் திலகம் என நம் மனம் கவர்ந்த சிறப்பு நடிக நடிகையரை யாராலும் மறக்க முடியுமா, என்ன?
உச்ச கட்ட போற்றுதலாக நாம் கொடுக்கும் திலகம் ஒரு சம்ஸ்கிருதச் சொல் தான்!
தமிழ்க் கம்பன் சீதையை வனிதையர் திலகம் என்று தான் வர்ணிக்கிறான்!
சூப்பர்ஸ்டார் பாடும் சிவ தாண்டவ ஸ்தோத்திரம்
காட்சி அமைப்புகளையும் பாடல்களையும் எடுத்துக் கொள்வோம். இப்போது சமீபத்தில் வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படமான லிங்காவில் சிவன் கோவில் திறப்பு என்னும் ஒரு அருமையான காட்சி வருகிறது. அதில் அவர் சிவனைத் துதிக்கும் தோத்திரப் பாடல் ராவணனால் செய்யப்பட்ட சிவ தாண்டவ ஸ்தோத்திரம். இது பல தெலுங்குப் படங்களில் இடம் பெற்ற ஒன்று. ஏராளமான பாடகர்களால் பாடப்பட்ட ஒன்று. அருமையான இசை அமைப்பாளர்கள் கம்பீரமான இந்த ஸ்தோத்திரத்திற்கு இசை அமைத்துள்ளனர்.
ஜடாடவீகலஜ்ஜலப்ரவாஹபாவிதஸ்தலே
கலேவலம்ப்ய லம்பிதாம் புஜங்கதுங்கமாலிகாம்.
டமட்டமட்டமட்டமன்னிநாதவட்டமர்வயம்
சகார சண்டதாண்டவம் தனோது ந: ஸிவ: ஸிவம்.
ஜடாகடாஹஸம்ப்ரமப்ரமன்னிலிம்பனிர்ஜரீ
விலோலவீசிவல்லரீவிராஜமானமூர்தனி.
தகத்தகத்தகஜ்வலல்லலாடபட்டபாவகே
கிஷோரசந்த்ரசேகரே ரதி: ப்ரதிக்ஷணம் மம.
என்று இப்படி ஆரம்பிக்கும் அற்புதமாக சிவ நடனத்தை விவரிக்கும் பாடலைக் கொண்டுள்ள காட்சி பொருத்தமான இடத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது லிங்கா படத்தில்!
இந்த சிவ தாண்டவ ஸ்தோத்திரம் நீளமான ஒன்று அர்த்தம் பொதிந்த ஒன்று. இது முழுவதுமாக படத்தில் இடம் பெறவில்லை.. ஆனால் ரங்காராவ் ராவணனாக நடித்து இந்த ஸ்தோத்திரத்தை கம்பீரமாகப் பாடும் காட்சி தெலுங்கு படத்தில் இடம் பெற்றுள்ளது.
துர்கா மற்றும் காயத்ரி மந்திரம்
தமிழ் படங்களில் வரும் கல்யாணக் காட்சிகளில் தவறாமல் இடம் பெறும் மந்திர ஸ்லோகம்
சர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த சாதிகே
சரண்யே த்ரியம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே
இது துர்கா ஸப்த சதியில் மையமாக உள்ள ஸ்லோகம். தாலி அணியும் போது சொல்லப்படும் இந்த ஸ்லோகத்தைப் பல்வேறு படங்களிலும் கேட்டிருக்கிறோம்.
“ஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன: ப்ரசோதயாத்”
என்ற காயத்ரி மந்திரத்துடன் ஆரம்பிக்கும் படங்கள் ஏராளம். மிக முக்கியமான காட்சிகளில் பின்னணியாக (அர்த்தமுடன் பொருந்தி இருக்கிறதோ இல்லையோ, அந்தக் காட்சியின் ‘எபெக்டைக்’ கூட்ட) பயன்படுத்தப்பட்டு வரும் இந்த மந்திரம் அபாரமான சக்தி உடைய மந்திரம்!
லஜ்ஜாவதியே! அசத்துற ரதியே!
இன்னும் பாடல்களில் வரும் வரிகளைப் பார்ப்போம்:
“சிநேகிதனே ரகசிய சிநேகிதனே” (ஸ்நேஹிதன் – நண்பன்)
“லஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே” (லஜ்ஜை – நாணம், வெட்கம்)
இப்படி எழுதிய கவிஞர்கள் தமிழ்ப் பற்று குறைந்த அல்லது இல்லாத கவிஞர்கள் என்று பட்டம் சூட்டி விடலாமா, என்ன? தேர்ந்தெடுத்த வார்த்தைகளை பொருத்தமான காட்சிகளுக்கென பாடல் வரிகளாக யாத்துள்ளனர், அவ்வளவு தான்!
ப்ரியா, ப்ரியமானவளே என்ற தலைப்பு போல எத்தனை தலைப்புகள்!
அன்புள்ளவளே என்று ஏன் தலைப்பு வைக்கவில்லை என்று சண்டை போடலாமா?
சர்வாதிகாரி என்ற வார்த்தையில் உள்ள ஆணவமும் கம்பீரமும் தக்க இடத்தில் திரைப்படத்தில் உபயோகப்படுத்துவதில் என்ன தவறு?
ஆழமுள்ள அர்த்தத்தைத் தரும் சில சொற்களை வசனகர்த்தாக்கள் (அடடா, இங்கு கர்த்தா வந்து விட்டது) பயன்படுத்துவது இயல்பு தான்!
திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் வரும் சம்பந்தி, த்ரோஹம், விஸ்வாசம் போன்ற வார்த்தைகளைத் தொகுக்க ஆரம்பித்தால் அதற்கு முடிவு தான் ஏது?
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தமிழர்கள் இயல்பாகவே உள்ள அருமையான பண்பாட்டில் ஊறி வளர்ந்தவர்கள்; வளர்பவர்கள்; இனியும் வளரப் போகிறவர்கள்.
“யாதும் ஊரே; யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா”
என்ற அருமையான வைர வரிகளை உலகிற்கு அளித்த தமிழ்ப் புலவன் தமிழர் தம் பரந்த மனோபாவத்தை அல்லவா சுட்டிக் காட்டி இருக்கிறான்!
இந்த வழி நல்ல வழி’ நம் தமிழர் வழி. வளரட்டும் இது.
-தொடரும்





You must be logged in to post a comment.