President of USA, Obama, laughing
சிரிப்பது எவ்வளவு அவசியம் என்று இப்போது மருத்துவர்களும் உளவியல் அறிஞர்களும் சொல்லுகின்றனர். வள்ளுவன் இதை 1500 ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லிவிட்டான. அது மட்டுமல்ல சிரிப்பில், புன்முறுவலில் எத்தனை வகை இருக்கிறது என்பதையும் வெவ்வேறு குறளில் வெவ்வேறு பொருளில் பயன்படுத்திக் காட்டுகிறான்.
காதலியின் புன்முறுவல், நண்பனின் சிரிப்பு, எள்ளி நகை ஆடுவோரின் ஏளன, இளக்காரச் சிரிப்பு, பகைவர்களின் பொய்யான சிரிப்பு, உண்மையான சிரிப்பு என்று பல இடங்களில் பல பொருள் தொனிக்கப் பாடுகிறான். வள்ளுவனுக்கு ‘காமெடி’ என்றால் என்ன என்பது நன்றாகவே தெரிந்திருக்கிறது. கஷ்டம் வந்தாலும் சிரியுங்கள். அதுதான் சிறந்த மருந்து என்று சொல்லுகிறான். அவன் பெரிய மன நோய் நிபுணன் என்றும் தெரிகிறது.
நகல் வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும் பாற் பட்டன்று (999)
மற்றவர்களோடு சந்தோஷமாகப் பேசிப் பழகாதவர்களுக்கு இந்தப் பெரிய உலகம், பகல் நேரத்திலும் கூட இருட்டாகவே இருக்கும்.
இந்தக் குறள் மூலம் சிரிப்பு என்பது வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமானது என்பதை வள்ளுவர் வலியுறுத்துகிறார்.
இடுக்கண் வருங்கால் நகுக !!
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்பது இல் (621)
வேலை செய்கையில் கஷ்டம் வந்தால் அதை மகிழ்ச்சியாக வரவேற்க வேண்டும். அந்த சந்தோஷம்தான் சிறந்த ஆயுதம். அதைவிடச் சிறந்த துணை வேறு ஒன்றும் இல்லை. வள்ளுவன் பெரிய ‘சைக்காலஜிஸ்ட்’ என்பது இதில் தொனிக்கிறது.
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு (786)
வெளியே சிரித்துச் சிரித்துப் பேசினால் அது உண்மையான நட்பு ஆகிவிடாது. மனதில் மகிழ்ச்சி நிலவ பழக வேண்டும்.
குடிகாரன் காமெடி
அந்தக் காலத்திலேயே குடிகாரன் காமெடி நிறைய உண்டு என்றும் தெரிகிறது. இன்று சினிமாவிலும் நிஜ வாழ்விலும் பார்க்கிறோம்.
உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண் சாய்பவர் (927)
எங்கே கள் கிடைக்கும் என்று மறைவாக அறிந்து, யாருக்கும் தெரியாமல் அதைக் குடித்துவிட்டு மயங்கிக் கிடப்பவனைக் கண்டு ஊரே சிரிக்கும்.
போலிச் சிரிப்பு !
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப்படும் (824)
வெளியிலே சிரித்து சிரித்துப் பேசி, பின் பக்கமாக நமக்கு குழிபறிக்கும் வஞ்கர்களிடம் மிகவும் பயப்படவேண்டும். நேருக்கு நேர் குறைகூறுவோர் நல்ல எதிரிகள்! மறைவாக எதிரி வேலை செய்பவர்களைக் கண்டால் மிக மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது வள்ளுவர் வாக்கு. குறள். 817-ல் இதையே சொல்கிறார்.
பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றாதவர் (187)
சந்தோஷமாகப் பேசி நண்பர்களாக ஆவது சிறந்தது. இது தெரியாத புறங்கூறுவோர் —- (நமக்குப் பின்னால் நம்மைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லுவோர்) — உறவினர்களைக் கூடப்பிரித்து விடுவார்கள்.
மிகச் செய்து தம் எள்ளுவாரை நகச் செய்து
நட்பினுள் சாப்புல்லற்பாற்று (829)
வெளியே நண்பர் போல நடித்து உள்ளத்தில் வெறுப்பு வைத்து இருப்பவரை சிரித்துக் கொண்டே விலக்கிவிட வேண்டும்.
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு (782)
சிரித்து மகிழ்வதற்கு மட்டும் நண்பர்கள் அல்ல;
நண்பர்கள் தப்பு செய்தால் இடித்துரைத்து நல்வழிப்படுத்த வேண்டும்.
பூமாதேவியும், பஞ்சபூதங்களும் சிரிக்கும் !
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும் (271)
பொய்யான ஒழுக்கம் (போலி சந்யாசி) உடையவனைக் கண்டு, அவன் உடம்பில் இருக்கும் ஐம்பூதங்களும் சிரிக்கும்.
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும் (1040)
உழைக்காமல், என்னிடம் பணமே இல்லையே, என்று வருந்தும் சோம்பேறிகளைக் கண்டு பூமாதேவி சிரிப்பாள்.
கோபம் என்பது, முகத்தில் சிரிப்பினையும், உள்ளத்தில் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும். இதைவிடப் பெரிய பகைவன் யார்? (304)
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற
நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகை என்ப வாய்மைக் குடிக்கு (953)
முக மலர்ச்சி, தயாள குணம், இனிமையாகப் பேசுதல், மற்றவர்களை மட்டம் தட்டாமல் பழகுதல் ஆகிய நான்கு குணங்களும் நல்ல குடியில் பிறந்தோருக்கு அடையாளங்கள்.
பெரியவர்கள் முன்னிலையில் சிரிக்காதீர்கள் !
மன்னர்கள் ( இப்போது பெரியவர்கள், அரசாங்கத்தில் பதவியில் உள்ளவர்கள், முதலமைச்சர்கள் ) முன்னிலையில் சிரிக்கக்கூடாது, பிறர் காதில் ரகசியமாக எதுவும் சொல்லக்கூடாது என்றும் வள்ளுவர் எச்சரிக்கிறார் (694)
தொகச் சொல்லி தூவாத நீக்கி நகச் சொல்லி
நன்றி பயப்பதாம் தூது (685)
ஒரு தூதன் சொல்ல வேண்டியதை மட்டும் சொல்ல வேண்டும். சொல்லக் கூடாதவற்றை நீக்க வேண்டும். பகை அரசர் மகிழும் படி பேச வேண்டும். தனது அரசனுக்கு நன்மை கிடைக்கும்படி செய்ய வேண்டும்.
காதலிகளின் புன்முறுவல்
காமத்துப் பாலில் குறிப்பறிதல் என்னும் அதிகாரத்தில் மூன்று குறள்களில் (1094, 1095, 1098) நகும் என்ற சொல் வருகிறது.
நான் அவளைப் பார்க்கும் போது வெட்கத்தால் நிலத்தைப் பார்ப்பாள். நான் பார்க்காத சமயத்தில் என்னைப் பார்த்து புன்முறுவல் செய்வாள் (1094)
நேராகப் பார்க்காமல், காணாதவள் போல ஓரக் கண்களால் என்னைப் பார்த்துப் புன்முறுவல் செய்வாள் (1095)
நான் அவளை ஆசையோடு பார்ப்பேன். அவள் என் மீது கருணை கொண்டு ஒரு மாதிரியாக சாய்த்துப் பார்த்துப் புன்முறுவல் செய்வாள். அப்போது அவள் மயில் போல இருப்பாள் (1098)
கதுமெனத் தாம் நோக்கி தாமே கலுழும்
இதுநகத் தக்கது உடைத்து (1173)
முன்பு காதலரைத் தேடி என் கண்கள் ஓடின. இப்போது காதலரைக் காணாது கண்ணீர் விடுகிறன. எனக்கே சிரிப்பு வருகிறது.
யாங்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு (1140)
என் கண்களுக்கு முன்னாலேயே என்னைப் பார்த்து சிரிக்கின்றனர். எனக்கு வந்த கஷ்டம் இவர்களுக்கு வந்தால்தான் தெரியும்! (ஒரு பெண்ணின் புலம்பல்)
குறளில் சிரிப்பு, புன்முறுவல், முகமலர்ச்சி பற்றி வரும் இடங்கள்:–
நக=மகிழ 187, 685, 829 மலர 786, சிரிக்க 1173
நகப்படுவர் = இகழப்படுவர் 927
நகல் = மனத்தில் மகிழ்தல் 999
நகா அ = சிரித்து 824
நகுக = மகிழ்க 621
நகுதல் = நகையாடி மகிழ்தல் 784
நகுப = நகைக்கின்றார் 1140
நகும் = இகழ்ந்து சிரிக்கும் 271; மகிழும் 774, இகழ்ந்து தனக்குள் சிரிக்கும் 1040, மகிழும் 1094, 1095, 1095(புன்முறுவல்
World Laughing Day, Mumbai
நகை = சிரிப்பு 182, 304, 694, 817, விளையாட்டு 871, 878, 995 முகமலர்ச்சி 953, சிரிப்பு 1274
வள்ளுவர் காலத்தில் சிரிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருந்தது என்பதை இவை காட்டும்.
–சுபம்–








You must be logged in to post a comment.