Written by S Nagarajan
Article No.1671; Dated 24 February 2015.
தமிழ் திரைப்படங்களில் ராமர் – 6
ச.நாகராஜன்
அனுமனைப் பற்றிய படம்!
இதே கால கட்டத்தில் வந்த இன்னொரு படம் ஶ்ரீ ராம பக்த ஹனுமான். இந்தப் படமும் சம்பூர்ண ராமாயணம் மற்றும் லவகுச ஆகிய படங்கள் அடைந்த வெற்றியைப் பெற்றது. ஹோமி வாடியா ‘பவன் புத்ர’ என்ற படத்தை ஹிந்தியில் எடுத்தார். அதை ஶ்ரீ ராம பக்த ஹனுமான் என்ற பெயரில் தெலுங்கிலும் தமிழிலும் (தமிழில் டப்பிங்) எடுத்தனர்.
தமிழில் எடுத்த படத்திற்கு ஆரூர்தாஸ் டப்பிங்கிற்கான வசனத்தை எழுதினார். இது ஒரு கடினமான கலை. உதட்டசைவிற்கு ஏற்ப சரியான சொற்களை அர்த்தம் மாறாமல் தருவது என்றால் மொழிப் புலமை, முக பாவங்கள், உச்சரிப்பு, இதர மொழியில் உள்ள நுட்பங்கள், கதைப் போக்கு, ஒலியில் எத்தனை வினாடிகளில் சொற்களைத் தர வேண்டும், திரைப்படத்தைப் பார்ப்பவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன ஆகியவை உள்ளிட்ட ஏராளமான அம்சங்களில் தேர்ச்சி பெற்ற நிபுணராக இருத்தல் வேண்டும்.
ஆரூர்தாஸ் அப்படிப்பட்ட நிபுணராக இருந்து பல நூறு படங்களுக்கு வசனம் எழுதினார். இவற்றில் பல படங்கள் டப்பிங் படங்கள். ஜேசுதாஸ் என்ற பெயரை அவர் திருவாரூரைச் சேர்ந்தவர் என்ற காரணத்தினால் சுருக்கமாக ஆரூர்தாஸ் என்று மாற்றியவர் திரைப்படக் கவிஞர் தஞ்சை ராமையாதாஸ். தஞ்சை ராமையாதாஸ் தான் ஶ்ரீ ராம பக்த ஹனுமான் படத்தின் அருமையான பாடல்களை எழுதியவர்.
அழுங்கா மனத்து அண்ணல்
மஹாகவி கம்பன் ‘அழுங்கா மனத்து அண்ணல்’ என்று உற்சாகத்தின் ஊற்றாக அனுமனை விவரிப்பான். வால்மீகியோ “அநிர்வேத ஹி ச்ரியோ மூலம்” என உற்சாகமே அனைத்து நலத்திற்கும் அடிப்படை என்பதை அனுமன் வாயிலாகத் தெரிவிக்கிறான்!
அப்படிப்பட்ட அனுமனைப் பற்றிய முழு நீளப் படம் என்றால் எத்துணை சுவையாக உற்சாகத்துடன் அதை அமைக்க வேண்டும்! பொறுப்பைச் சரியாக நிறைவேற்றியதால் மக்கள் கூட்டம் தியேட்டர்களில் அலை மோதியது.
மஹிமை அற்புதம் தான்!
மஹிமை அற்புதம் தான் மற்றும் மனமதன் மேலே ராம் ஆகிய இரு பாடல்களை தஞ்சை ராமையாதாஸ் எழுதினார். இரண்டுமே ஹிட்!
மஹிமை அற்புதம் தான் எல்லோராலும் வரவேற்கப்பட்டு இன்றளவும் விரும்பிப் பாடப்படும் ஒரு பாடலாக அமைகிறது.
வலுவான காட்சி அமைப்பு. சபையில் ராமபக்தனை கேலி செய்யவே அனுமன் கூறுகிறான்:
“மஹாசபையில் ராம பக்தனை கேலி செய்தல் தகாதே
மனதில் எந்நாளும் அகலாதே நிற்கும் ராமனே எனக்கே சகாயம்
மஹிமை அற்புதம் ஆகும் ராமனின் மஹிமை அற்புதம் ஆம்
மஹிமை அற்புதம் ஆகும் ராமனின் மஹிமை அற்புதம் ஆம்
அபயம் என்று அழைத்தால் துயரம் வராது
ஆஹா புவிமேல் இவன் போல் ஏது
ராமனின் மஹிமை அற்புதம் தான்!
பாடல் 5 நிமிடம் 33 விநாடிகள் ஒலிக்கிறது.
ராமனின் மஹிமையைக் கூறும் அனுமன் தன் இதயத்தைப் பிளக்க அங்கே ராமர், சீதையின் திருவுருவங்கள் தெரிய அனைத்து சபையினரும் பிரமித்து ஒரே குரலில்
“ரகுபதி ராகவ ராஜாராம் பதித பாவன சீதாராம்” என்று பக்தியுடன் பாடுகின்றனர்.
பிரமிக்க வைக்கும் காட்சியின் முத்தாய்ப்பு அனைவரையும் பரவசப்படுத்தும் ஒன்று.
மனம் – அதன் மேலே ராம்!
அடுத்த பாடல்:
மனமதன் மேலே ராம்
நினைவதன் மேலே ராம்
பாரில் என்றும் நிலைத்திடும் நாமம் ராமனே
மனமதன் மேலே ராம்
நினைவதன் மேலே ராம்
மஹாராம நாமம் தன்னை
ராம ஶ்ரீ ராம் என்றேன்
மஹாராம நாமம் தன்னை
ராம ஶ்ரீ ராம் என்றேன்
ஓயாது அன்பால் பாடு
உள்ளம் தன்னில் இன்றே
என்று இப்படித் தொடர்கிறது பாடல்!
ராம நாம மஹிமையைக் கூறும் பாடலைத் தன் அற்புதக் குரல் வளத்துடன் பாடி மனதை உருக வைப்பவர் டி.எம்.சௌந்தரராஜன்!
ஆரம்ப கால கட்டத்தில் பெரும்பாலும் புராணக் கதைகளையே திரை உலகம் சார்ந்திருந்த போதும் அக்கதைகளின் அடிப்படையிலான படங்கள் வெற்றியைப் பெற்றன.
மாறி வந்த சூழ்நிலையில் சமூகப் படங்கள் என்று புதிய அலை வீசிய போதும் கூட இதிஹாஸப் படங்கள் வெளி வந்த போது அவை மகத்தான வெற்றியையே பெற்றன.ராமாயணம் தொன்று தொட்டு நமது நாடிகளில் ஊறி இருக்கும் இதிஹாஸம். அது திரைப்படங்களில் இடம் பெற்ற போதெல்லாம் வெற்றியையே பெற்றது!
சிரத்தையுடன் எடுக்கப்பட்ட படங்களுக்கு ராமரின் அருள் இருந்தது என்று தானே இதற்கு அர்த்தம்!
********






You must be logged in to post a comment.