Cat carrying its kitten
சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்
- குரங்குக் குட்டி நியாயமும் பூனைக்குட்டி நியாயமும்!
Post No 1629; Dated 7th February 2015
by ச.நாகராஜன்
நியாயங்கள் வரிசையில், எல்லா ஆன்மீகச் சொற்பொழிவுகளிலும் இறைவனுடனான பக்தியை விளக்கும் போது பேசப்படும் இரு நியாயங்களை இங்கு காண்போம்:
मर्कटन्याय
MARKATANYAYA
மர்கட நியாயம்
குரங்கு நியாயம்
மர்கடம் – குரங்கு
இது மர்கட கிஷோர நியாயம் (குரங்குக் குட்டி நியாயம்) என்றும் வழங்கப்படுகிறது.
மிகவும் பிரபலமான இந்த நியாயத்தைச் சொல்லாத ஆன்மீகவாதியே இருக்க முடியாது. குரங்குக் குட்டியானது தனது பாதுகாப்பிற்காகத் தன் தாயின் மார்பை நன்கு அணைத்துக் கொண்டிருக்கும். எந்த ஆபத்து என்றாலும் கூட அது தாயை விடாது.
இதை, பக்தனான ஒருவன் பகவானை நன்கு பற்றிக் கொள்வதற்கு உதாரணமாக எடுத்துச் சொல்வர்.
मार्जालन्याय
MAARJAALANYAYA
மார்ஜால நியாயம்
பூனை நியாயம்
மார்ஜாலம் -பூனை
இது மார்ஜால கிஷோர நியாயம் (பூனைக் குட்டி நியாயம்) என்றும் வழங்கப்படும். இதுவும் மிகவும் பிரபலமான நியாயம். மர்கட நியாயத்துடன் எப்போதுமே இது இணைத்து உதாரணமாகக் காட்டப்படுவதால் இரண்டையும் இணைத்தே அர்த்தம் புரிந்து கொள்ள வேண்டும். எப்படி ஒரு பூனைக் குட்டியை அதன் தாய் வாயில் கவ்விக் கொண்டே தான் செல்லும் இடமெல்லாம் அதை எடுத்துச் சென்று அதைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாக்கிறதோ அதே போல பக்தன் ஒருவனை பகவான் எப்போதுமே தன் பொறுப்பில் வைத்துப் பாதுகாக்கிறான் என்பதைச் சொல்ல இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படுகிறது.
இந்த இரு நியாயங்களும் ஏராளமான நூல்களில் எடுத்தாளப்படுகின்றன.
ராமகிருஷ்ண உபதேச மஞ்சரியில் அவர் இந்த இரு நியாயங்களையும் உபதேசிப்பதைக் காணலாம்.
இது பற்றி நிலவி வரும் கதைகளில் ஒரு கதையை மட்டும் இங்கு பார்க்கலாம்.
கர்நாடகத்தில் வாழ்ந்த பிரபலமான மகான் கனகதாஸர். இவர் வாழ்ந்த காலத்திலேயே சமகாலத்தவராக வாழ்ந்த இன்னொரு பெரும் மகான் வைகுந்ததாஸர். ஒரு நாள் வைகுந்ததாஸர் வாழ்ந்து வந்த பேலூருக்கு வந்த கனகதாஸர் அவரைப் பார்க்கும் ஆவலுடன் அவர் வீட்டிற்கு வந்தார். வந்த நேரம் நள்ளிரவு ஆகி விட்டது. ஆகவே அவரை எழுப்பி தொந்தரவு தர மனம் இல்லாததால் கனகதாஸர் வைகுந்ததாஸர் வீட்டுத் திண்ணையிலேயே படுத்து உறங்கி விட்டார். காலையில் கதவைத் திறந்த வவைகுந்ததாஸர் வீட்டுத் திண்ணையில் கனகதாஸர் உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்துத் திடுக்கிட்டு பெரிதும் வருத்தமடைந்தார். அப்போது விழித்துக் கொண்ட கனகதாஸரை நோக்கி அவர், “இப்படி வாசல் திண்ணையில் உறங்கலாமா? என்னை எழுப்பி இருக்கக்கூடாதா? என்று ஆதங்கத்துடன் கேட்டார். அதற்கு கனகதாஸர், “உங்களை எழுப்பித் தொந்தரவு தர மனமில்லை. ஆகவே திண்ணையிலேயே படுத்து விட்டேன்” என்று சமாதானம் சொன்னார்.
உடனே, வைகுந்ததாஸர்,”ஆஹா! நீங்களோ ஒரு மார்ஜால நியாயி. நானோ சாதாரண மர்கட நியாயி! நீங்கள் சாதனையில் என்னை விட எங்கோ எட்டாத உயரத்தில் இருக்கிறீர்கள். இப்படி வீட்டு வாயிலில் படுத்தால் பகவான் என்னை விட்டு இன்னும் அதிக தூரம் போய் விடுவார்” என்றார்.
இதிலிருந்து மர்கட நியாயம் பற்றியும் மார்ஜால நியாயம் பற்றியும் நண்ன்கு புரிந்து கொள்ளலாம்.
வைஷ்ணவ சம்பிரதாயத்தில் உள்ள இரு பெரும் பிரிவுகள் தென்கலை மற்றும் வடகலை. இவற்றிக்கு இடையில் சில வேறுபாடுகள் உண்டு. அவற்றில் ஒன்று மர்கட மார்ஜால நியாயம் பற்றியதாகும்.
வடகலையார் பக்தன் தனது முயற்சியைச் செய்ய வேண்டும் என்பர். அதாவது மர்கட நியாயம் போல பகவானைப் பற்றிக் கொள்ளல் வேண்டும். எல்லா சாஸ்திர, சம்பிரதாயங்களையும் அனுஷ்டிக்க வேண்டும் என்பது வடகலையார் முடிபு.
ஆனால் தென்கலையாரோ கடவுள் நிபந்தநையற்ற கருணையைப் பொழிபவர். அவரே பக்தரை மார்ஜால நியாயம் போல பரிபாலித்து தேவையானதைத் தருவார் என்பர்.
Monkey with its baby
இன்னொரு உண்மையைச் சுட்டிக் காட்டவும் இநத் இரு நியாயங்கள் பயன்படும். ஒரு நல்ல குருவானவர் தனது சீடனை மார்ஜால நியாயம் போலத் தானே பாதுகாப்பார். ஒரு நல்ல சீடனானவன் மர்கட நியாயம் போலத் தன் குருவைத் தானே பிடித்துக் கொள்வான்!
ஆக இப்படி ஆன்மீகத்தில் முக்கிய இடம் பிடித்துள்ள இந்த இரு நியாயங்களைப் பற்றி ஒரு தனி நூலே எழுதி விடலாம். அவ்வளவு உதாரணங்கள் உள்ளன. இதை எடுத்தாளும் ஏராளமான பாஷ்யங்கள், நூல்கள் உள்ளன. விரிப்பின் பெருகும்.
Monkey and Cat: Kindness
***********





You must be logged in to post a comment.