இந்து அரசர்களின் பட்டாபிஷேகக் காட்சிகள் (Post No.4936)
WRITTEN by London Swaminathan
Date: 21 April 2018
Time uploaded in London – 21-20 (British Summer Time)
Post No. 4936
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்து அரசர்கள் எப்படிப் பட்டாபிஷேகம் செய்து கொண்டனர் என்பதை ரிக் வேதத்துக்குருரிய பிராஹ்மண நூலான ஐதரேய பிராஹ்மணமும் மஹாபாரதமும் ராமாயணமும் படம் பிடித்துக் காட்டுகின்றன. சில சுவையான விஷயங்களை மட்டும் காண்போம்.
உலகின் மிகப்பழைய நூல் ரிக் வேதம் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. ஒவ்வொரு வேதத்துக்கும் யாக யக்ஞ முறைகளை விரிவாவக் கூறும் பிராஹ்மணம் என்ற துணை நூலும் உண்டு. ரிக் வேதத்தின் சாகல ஷாகாவின் நூல் ஐதரேய பிராஹ்மணம். அது ராஜசூய யக்ஞம் எப்படிச் செய்யப்படுகிறது என்று விளக்குகிறது.
அத்தி மர அற்புதம் புலித்தோல் மஹிமை, புனித நீர் அபிஷேகம் , பெண்கள் மாடி வீட்டு ஜன்னல்களின் வழியாகக் காணும் காட்சி முதலியன பட்டாபிஷேக வர்ணனையில் அடிபடுகின்றன.
பட்டாபிஷேகத்துக்கான ஆசனத்தை அத்தி மரம் கொண்டு செய்தனர். இதை உடும்பரா என்று ஸம்ஸ்க்ருத நூல்களும் விஷ்ணு சஹஸ்ர நாமமும் அழைக்கும். மூன்று புனித மரங்கள் — ஆல், அரசு, அத்தி– ஆகிய மூன்றும் விஷ்ணுவின் பெயர்களாக சஹஸ்ரநாமத்தில் வருகின்றன. பெரிய அற்புதம் என்னவென்றால் மூன்றும் FICUS பைகஸ் வகை மரங்கள் என்றும் அவை மூன்றும் மோரேஸி (Moraceae) என்னும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும் இன்றைய தாவரவியல் நூல்கள் இயம்பும். இதைப் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே கண்டுபிடித்த இந்துக்கள் அவைகளை தெய்வப் பட்டியலில் சேர்த்துவிட்டனர். அதர்வ வேதத்திலேயே அத்தி மரத்தின் (உடும்பர) அற்புத சக்திகள் வருணிக்கப்படுகின்றன.
ஐதரேய பிராஹ்மணம் செப்புவதாவது:
உடும்பர மரத்தைக் கொண்டு ஒன்பது அங்குல உயரத்துக்கு ஒரு ஆசனம் செய்ய வேண்டும்; அதற்கு நான்கு கால்கள் இருக்க வேண்டும் . அதன் மீது பல பலகைகள் அடுக்கப்படும். மூன்று புறமும் பலகைகள் அடிக்கப்படும் ஆசனத்தின் பல பகுதிகள் புனித மூஞ்சைப் புல்லினால் கட்டப்படும்; அதில் புலியின் தலைப் பகுதி கிழக்கு நோக்கிய வண்ணம் புலித்தோல் வைக்கப்படும்; அதில் மன்னன் மண்டியிட்டு ஏறுவார. அப்போது கடவுளரையும் அந்த ஆசனத்தில் ஏறும் படி பிரார்த்திப்பார்.
பின்னர் மன்னர் மீது தங்க சல்லடை வழியாக அபிஷேக நீர் ஊற்றப்படும்; இந்த நீர் புனித நீர் நிலைகளில் இருந்தும் நாற்கடல்களில் இருந்தும் கொணரப்படும்; மந்திர உரு ஏற்றப்பட்ட தண்ணீரை மன்னர் தலையில் அபிஷேகம் செய்வர். மன்னருக்கு மேலும் கீழும் தங்கத்தகடு வைக்கப்படும், இந்த தங்கத் தகடு அவருக்கு அழியாத் தன்மையை அளிக்கும் என்று மந்திரங்கள் சொல்லுகின்றன.
சிந்து சமவெளி- வேதகால நாகரீகம்
மன்னரின் தலை மீது உடும்பர மரக்கிளை வைக்கப்படும்; அது ஒரு தங்க வட்டத்தில் பொருத்தப்படும். சிந்து சமவெளி முத்திரைகளில் இப்படிக் கடவுளர்/ மன்னர் தலையில் கிளையைப் பார்க்கலாம்.
மன்னரின் ராஜ சூய யக்ஜம் என்பது அவர் முடிசூட்டப்பட்ட காலத்தில் நடத்தப்பட்ட சடங்குகள் அனைத்தையும் மீண்டும் செய்வதாகும். சோழ மன்னன் பெருநற்கிள்ளியும் ராஜ சூய யாகம் செய்தான்; அதற்கு சேர- பாண்டிய மன்னர்கள் வந்தனர். மூவேந்தரும் அமர்ந்த அரிய காட்சியைக் கண்ட அவ்வையார் அசந்தே போனார். ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகச் சண்டைபோட்டே அழியும் தமிழ் மன்னர் மூவரும் அமர்ந்த காட்சியைக் கண்டு இன்று போல் என்றும் வாழ்க என்று பாடியது புறநானூற்றில் உளது.
யுதிஷ்டிரன் என்னும் தர்மர் செய்த ராஜசூயம் மஹாபாரதத்தில் மிகவும் விரிவாகக் காணப்படுகிறது. அப்போது பிற நாட்டு மன்னர்கள் வந்து பரிசுப் பொருள்களைக் குவிப்பர். இதன் பொருள் என்ன வென்றால் அந்த மன்னரின் இறையாண்மையை தாங்கள் ஏற்றுக் கொள்வதாகச் சொல்லுவதாகும்.
இந்த ராஜசூய யாகத்தில் முக்கியச் சடங்கு வேள்வியாகும். அதில் சோம பானம் பருகுதலும் உண்டு; சோமபானம் என்பது காப்பி போல, ஹெர்பல் டீ/ மூலிகை தேநீர் போல உற்சாகம் தரும் ஒரு மூலிகை பானம்; சுரா பானம் என்பது சாராயம். அது பற்றியும் வேதத்தில் உளது. சோமபானத்தைப் புகழும் வேதங்கள் சுரா பானத்தைக் கண்டிக்கின்றன.
மன்னரின் பட்டாபிஷேகத்தைக் காண பல நாட்டு மன்னர்களும் ரிஷி முனிவர்களும் பொது மக்களும் அலைகடல் எனத் திரளுவதால் பிரம்மாண்டமான பந்தல்கள் எழுப்பப்படும். அதுவும் வேள்விக்கூடமும், யாகம் முடிந்தவுடன் எரித்து அழிக்கப்படும்
ராஜசூய யாகத்தில் சுனஸ்சேபன் கதை வாசிக்கப்படும். சுனஸ்சேபன் என்பவன் புருஷமேதம் என்ப்படும் நரபலி யாகம் போல பலி கொடுக்கக் கட்டப்பட்டவன் அவனை விஸ்வாமித்ரர் மீட்ட கதையை ஒவ்வொரு சடங்கிலும் படிக்க வேண்டும் என்று வேதம் கட்டாயப்படுத்துகிறது; .ஆனால் மனிதனோ மிருகங்களோ பலியிடப்படாமல் விடுவிக்கப்பட்டதாகவும் வேதமே விளம்பும்; ஆகவே பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த வழக்கத்தை நினைவுபடுத்த மட்டுமே இச்சடங்குகள்- உண்மைப் பலி அல்ல என்பதும் தெளிவாகிறது.
பெண்கள் பார்வை
ராமாயணத்தில் முதலில் பட்டாபிஷேக ஆயத்தக் காட்சிகளும் கடைசி காண்டத்தில் உண்மையில் நடந்த ராமர் பட்டாபிஷேகக் காட்சிகளும் வருணிக்கப்படுகின்றன. மஹாபரதத்தில் யுதிஷ்டிரனின் பட்டாபிஷேகக் காட்சிகள் உள. அவனுக்குக் கிடைத்த நீண்ட பரிசுப் பட்டியலையும் காணலாம்
மனைவி இல்லாமல் ஒரு இந்து, எந்த வேதச் சடங்கையோ பூஜையையோ செய்ய முடியாது; பெண்களுக்கு அவ்வளவு முக்கியம் கொடுக்கும் மதம் இந்து மதம்; ராம பட்டாபிஷேகத்தில் வசிட்ட முனிவன் ராமனையும் சீதையையும் ஆசனத்தில் அமர்த்திய காட்சியை வால்மீகி பாடுகிறார்.
பட்டாபிஷேகத்துக்கு அருகில் வரமுடியாத பெண்கள் மாடிப் பலகணியின் வழியாகக் கண்டதை ராமாயணம் முதலியன காட்டும். சூழ்ச்சிமிக்க மந்தரை அதை மாடியில் இருந்து பார்த்தவுடன் சூழ்ச்சியில் இறங்கியதாக ராமாயணம் சொல்லும். சங்கத் தமிழ் இலக்கியத்திலும் ஏழு மாடி கட்டிடம் பற்றிய குறிப்புகள் வருகின்றன.
ஆக தங்கம், புலித்தோல், புனித நீர் அபிஷேகம், உடும்பர மர ஆசனம், ரிஷி முனிவர், அயல் மன்னர்கள் வருகை, மக்களின் பெருங்கூட்டம், பெண்களின் ஜன்னல் வழிப்பார்வை பற்றிய சுவையான செய்திகளை சம்ஸ்க்ருத நூல்கள் சுவைபட உரைக்கின்றன.
–சுபம்-