ச.நாகராஜன்
ஷிகியாகி ஹினோஹரா என்பது அந்த ஜப்பானியரின் பெயர். அவருக்கு வயது 97 வருடம் 4 மாதங்கள். உலகையே அதிசயப்பட வைக்கும் இந்த அதிசய மனிதர் “நமக்கில்லை குறைவான ஆயுள் எல்லை” என்று முழங்குகிறார். அவர் ஒரு டாக்டர். கல்வியைப் பரப்பும் கல்வியாளர்.
1941 ஆம் ஆண்டிலிருந்து டோக்கியோவில் உள்ள செயிண்ட் ல்யூக்ஸ் இண்டர்நேஷனல் ஹாஸ்பிடலில் அவர் பணி புரிந்து வருகிறார். செயிண்ட் ல்யூக்ஸ் காலேஜ் ஆ•ப் நர்ஸிங்கில் ஆசிரியராகவும் பணி புரிகிறார். இந்த இரு பெரும் நிறுவனங்களையும் நிறுவியவரே இவர் தான்! இரண்டாவது உலக மகா யுத்தத்திற்குப் பிறகு உலகில் அனைவராலும் பேசப்படும் விதத்தில் தரம் வாய்ந்த மருத்துவ மனை ஒன்றை டோக்கியோவில் அமைப்பது பற்றி அவர் யோசிக்க ஆரம்பித்தார்.அதை செயல் படுத்தவும் செய்தார்.
உறுதி வாய்ந்த மனம், எப்போதும் உற்சாகம்,சேவை புரியத் துடிக்கும் மனப்பான்மை,வணிகம் செய்வதில் திறமை எல்லாவற்றிற்கும் மேலாக மருத்துவம் செய்வதில் திறமை எல்லாமாகச் சேர்ந்து அவர் அமைத்த மருத்துவ மனையும் நர்ஸிங் கல்லூரியும் இன்று உலக அளவில் பேசப்படும் ஒன்றாக அமைந்து விட்டன.இந்த இரு நிறுவனங்களுக்கும் அவர் தான் சேர்மன்.
அவரது 75வது பிறந்த நாளிலிருந்து இன்று வரை 150 சிறந்த புத்தகங்களை அவர் எழுதியுள்ளார்.அதில் ஒரு புத்தகத்தின் பெயர் “லிவிங் லாங், லிவிங் குட்” (Living Long Living good) என்பது. இந்த நூல் இது வரை 12 லட்சம் பிரதிகள் விற்பனையாகி விட்டது. ‘புதிய மூத்தோர் இயக்கம்’ என்ற இயக்கத்தை நிறுவி மூத்த குடிமக்களிடம் நீண்ட நாள் வாழ்வது எப்படி, மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்பதைச் சொல்லி அவர்களுக்கு ஊக்கமூட்டுகிறார் அவர்.
நீண்ட நாள் வாழும் இந்த அதிசய அபூர்வ மனிதர் மனித குலத்திற்கு தன் வாழ்வைப் பற்றியும் நீண்ட நாள் வாழ்வதைப் பற்றியும் நல்ல செய்தி ஒன்றைத் தருகிறார்.
அதைப் பார்ப்போமா? அவரது செய்தி இது தான்:-
“நலமாக இருக்கிறோம் என்று உணர்வதிலிருந்தே சக்தி பிறக்கிறது; நன்கு சாப்பிடுவதாலோ அல்லது நீண்ட நேரம் உறங்குவதாலோ அல்ல! சிறு குழந்தைகளாக மகிழ்ச்சியுடன் விளையாடிய அந்த நாட்களில் நாம் சாப்பிடவோ தூங்கவோ எத்தனை நாட்கள் மறந்திருக்கிறோம்! இதே மனப்பான்மையை வயதானோரும் கடைப்பிடிக்கலாம் என்று நான் நம்புகிறேன். உணவு உண்ணும் நேரம் இது, தூங்கும் நேரம் இது என்று ஏராளமான விதிகளைப் போட்டுக் கொண்டு நம்மை நாமே களைப்படையச் செய்து கொள்ள வேண்டாமே!
எந்த தேசத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் எந்த இனம், பால் என்று இருந்தாலும் சரி ஒரே ஒரு விஷயம் அனைவருக்கும் பொது. யாரும் அதிக எடையைக் கொண்டிருக்கக் கூடாது என்பது தான் அது! காலை உணவில் காப்பி, ஒரு கோப்பை பால், ஆரஞ்சு பழச்சாறு ஆகியவற்றை ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து நான் சாப்பிடுகிறேன். ஆலிவ் ஆயில் ரத்த நாளங்களுக்கும் தோலுக்கும் மிகவும் நல்லது. ஆரோக்கியமாக வைத்திருப்பது. மதிய உணவில் சில குக்கீஸ் மற்றும் பால் மட்டும் சாப்பிடுகிறேன்.மிகவும் வேலை இருந்தால் சாப்பிடவே மாட்டேன். வேலையிலேயே எப்போதும் கவனத்துடன் இருப்பதால் எனக்குப் பசி உணர்வே தோன்றுவதில்லை. இரவு உணவில் சில கறிகாய்கள், ஒரு துண்டு மீன், சிறிது சாதம் எடுத்துக் கொள்வேன். வாரம் இரு முறை 100 கிராம் இறைச்சி சாப்பிடுவதுண்டு.
எப்போதுமே முன்னாலேயே திட்டமிடுங்கள். 2014 வரை எனக்கு மருத்துவ மனை வேலைகள், விரிவுரை செய்வது என நிறைய வேலை இருக்கிறது. 2016ம் ஆண்டு வேண்டுமானால் சிறிது ஓய்வு எடுக்க முடியும்.அப்போது டோக்கியோ ஒலிம்பிக் பார்க்கலாமே!
ஓய்வு எடுப்பது அதாவது ரிடயர்மெண்ட் என்பதே அவசியம் இல்லை. ஆனால் ஒவ்வொருவரும் ஓய்வு பெற்றுத் தான் ஆக வேண்டுமென்றால் 65 வயதுக்கு பின்னரும் நீண்ட காலம் கழித்துத் தான் ஓய்வு எடுக்க வேண்டும். இப்போதைய ஓய்வு பெறும் வயது 65 என்ற நியதி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நிர்ணயிக்கப்பட்ட ஒன்று.அந்தக் காலத்தில் ஒருவன் வாழும் ஆயுள் 68 ஆக இருந்தது. அப்போது ஜப்பானில் நூறு வயதைத் தாண்டியவர்கள் 125 பேர் தான்! இன்றோ ஆயுளின் எல்லை அதாவது ஒருவரின் சராசரி வயது பெண்களுக்கு 86 ஆகவும் ஆண்களுக்கு 80 ஆகவும் உள்ளது. 36000 பேர் இன்று ஜப்பானில் நூறு வயதுக்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.இன்னும் இருபதே வருடங்களில் ஜப்பானில் இது 50000 என்ற எண்ணிக்கையைத் தாண்டப் போகிறது.
உங்களுக்குத் தெரிந்ததைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நான் ஒரு வருடத்திற்கு 150 சொற்பொழிவுகள் ஆற்றுகிறேன். சில ஆரம்ப நிலைப் பள்ளியில் படிக்கும் நூறு குழந்தைகளுக்காக. மற்றும் சில வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் 4500 பேருக்காக! 60 முதல் 90 நிமிடங்கள் வரை நான் பேசுகிறேன். மிக்க வலிமையுடன் நின்று கொண்டே தான் பேசுகிறேன்.
ஒரு டாக்டர் உங்களை அறுவை சிகிச்சை செய்யுமாறோ அல்லது ஒரு சோதனையை எடுத்துக் கொள்ளுமாறோ ஆலோசனை சொல்லும் போது அவரிடம் அவரது மனைவிக்கோ அல்லது அவரது குழந்தைக்கோ இதை பரிந்துரை செய்வாரா என்று கேளுங்கள்.
அனைவரும் நம்பிக்கொண்டிருப்பதற்கு மாறாக உண்மை என்னவெனில் டாக்டர்கள் எல்லோரையும் குணப்படுத்தி விட முடியாது.ஆகவே ஏன் அறுவை சிகிச்சை செய்து கொண்டு வலியுடன் அவதிப் படுகிறீர்கள். இசையும் அனிமல் தெராபியும் டாக்டர்கள் நினைப்பதை விட மேலான உதவியை அனைவருக்கும் செய்யும் என நான் நம்புகிறேன்.
ஆரோக்கியத்துடன் வாழ உங்கள் பொருள்களை நீங்களே எடுத்துக் கொண்டு மாடிப்படி மேல் ஏறிச் செல்லுங்கள். நான் இரண்டு இரண்டு படிகளாகத் தாவி ஏறுகிறேன்! எனது தசைகளுக்கு இயக்கம் வேண்டும் அல்லவா!
எனக்கு ஊக்கம் தரும் கவிதை ஒன்று உண்டு. ராபர்ட் ப்ரௌன் எழுதிய “Abt Vogler” என்ற கவிதை தான் அது! அதை எனது தந்தையார் எனக்குப் படித்துக் காண்பிப்பது வழக்கம், அது என்னைப் பெரிதாக நினைக்கச் செய்கிறது. சிறிய கிறுக்கல்களைச் செய்ய விடாமல் பெரிய ஓவியத்தை உருவாக்க ஊக்குவிக்கிறது.அந்தக் கவிதை, ‘வட்டத்தை வரையும் போது அதை நம் வாழ் நாளில் அதை முடிக்க முடியாத அளவு பெரிதாகப் போடு’ என்று சொல்கிறது! நாம் பார்ப்பது வட்டத்தின் ஒரு பகுதியான வில்லைத் தான்! மற்றது நமது காட்சிக்கு அப்பாற்பட்டது, ஆனால் அது தொலைவில் இருக்கிறது!
வலி என்பது ஒரு மர்மமான விஷயம். ஆனால் அதை மறப்பதற்கு விளையாடுவது ஒன்று தான் வழி. ஒரு குழந்தைக்கு பல் வலித்தது என்றால் அதனுடன் நீங்கள் சேர்ந்து விளையாடுகிறீர்கள். அது தன் வலியை மறக்கிறது.
மருத்துவ மனைகள் நோயாளிகளின் அடிப்படை வசதியை நன்கு பராமரிக்க வேண்டும். நம் அனைவருக்கும் வேடிக்கை விநோதம் அவசியம் தேவை. செயிண்ட் ல்யூக்ஸில் நாங்கள் இசை , ஓவிய வகுப்புகள் அனிமல் தெராபி ஆகிய அனைத்தையும் கொண்டிருக்கிறோம்.
உலோகாயதமான பொருள்களில் அதிக ஆசை கொண்டு அதைச் சேர்க்க முயலாதீர்கள்.ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்: உங்கள் நேரம் எப்போது முடியும் என்பது உங்களுக்குத் தெரியாது. “சேர்த்த பொருள்களை” “அடுத்த இடத்திற்குக்” கொண்டு செல்ல முடியாது.
மருத்துவ மனைகள் பேரழிவுகளை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும். தங்கள் வாயிலில் வந்து நிற்கும் ஒவ்வொரு நோயாளியையும் வரவேற்க வேண்டும். செயிண்ட் ல்யூக்ஸை எப்படி வடிவமைத்திருக்கிறோம் தெரியுமா? ஆபரேஷனை எந்த இடத்தில் வேண்டுமானாலும் அங்கு செய்ய முடியும்! அடித்தளத்த்தில், நடை பாதையில், அறைகளில், எங்கு வேண்டுமானாலும்!
பேரபாயத்தை எதிர்கொள்ளும் என் கொள்கையைப் பற்றி தவறாகப் புரிந்து கொண்ட சிலர் என்னை ஒரு கிறுக்கன் என்று நினைத்தனர்.ஆனால் 1995 ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதி டோக்கியோ சப்வே ஒன்றில் ஆம் ஷின்ரிக்யூ மத அமைப்பைச் சார்ந்தவர்கள் ஒரு தீவிரவாத தாக்குதலைச் செய்த போது நான் சொன்னது சரி தான் என அனைவரும் உணர்ந்தனர்.அதில் பாதிக்கப்பட்ட 740 பேரை நாங்கள் அட்மிட் செய்து கொண்டோம். இரண்டே மணி நேரத்தில் அவர்கள் சரின் வாயுவால் பாதிக்கப்பட்டார்கள் என்பதைக் கண்டு பிடித்தோம். ஒரே ஒரு நோயாளியைத் தான் துரதிர்ஷ்டவசமாக இழக்க நேர்ந்தது. 739 பேரின் உயிர்களைக் காப்பாற்றி விட்டோம்!
அறிவியல் மட்டும் அனைவரையும் குணப்படுத்த முடியாது, அனைவருக்கும் உதவி செய்ய முடியாது!ஒவ்வொரு தனி மனிதனும் தனித்தன்மை வாய்ந்தவன். வியாதிகள் அவர்களது இதயத்தோடு தொடர்பு கொண்டவை. நோயைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவி செய்ய, நமக்கு தாராளமான காட்சிக் கலைகள் (விஷ¤வல் ஆர்ட்ஸ்) வேண்டும், மருத்துவ சாதனங்கள் மட்டும் போதாது.
வாழ்க்கை என்பது சம்பவங்கள் நிறைந்த ஒன்று! 1970 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி எனக்கு 59 வயது முடிந்தது. நான் டோக்கியோவிலிருந்து •ப்யூகுவோகா போவதற்காக யோயோகோவில் விமானத்தில் ஏறினேன். அருமையான இளவெயில் அடிக்கும் காலை நேரம் அது.மவுண்ட் ப்•யூஜி எங்களுக்கு முன்னால் வந்தது. திடீரென்று எங்கள் விமானத்தை ஜப்பனிய கம்யூனிஸ் லீக் – ரெட் ஆர்மி பிரிவினர் ஹைஜாக் செய்து விட்டனர்.அடுத்த நான்கு மணி நேரம் நான் 40 டிகிரி செல்ஸியஸ் உஷ்ணத்தில் என் இருக்கையில் விலங்கு போடப்பட்டு அவதிப்பட்டேன். அதை ஒரு சோதனையாக நான் எடுத்துக் கொண்டேன். என் உடல் அந்த அபாய நிலைமையில் எப்படி ஈடு கொடுக்கிறது என்பதை ஆச்சரியத்துடன் பார்த்தேன்!
ஒரு நல்ல ரோல் மாடலாக ஒருவரைக் கொள்ளுங்கள் அந்த ‘மாதிரி மனிதரை’ விட இன்னும் அதிகமாக சாதிக்க குறிக்கோளைக் கொள்ளுங்கள் என்னுடைய தந்தை 1900ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள நார்த் கரோலினாவில் ட்யூக் பல்கலைக் கழகத்தில் படிப்பதற்காகச் சென்றார்.அவர் ஒரு முன்னுதாரண புருஷர். எனது ஹீரோக்களில் ஒருவர். பின்னால் இன்னும் சில வாழ்க்கை வழிகாட்டிகளையும் நான் கண்டேன். ஒரு பிரச்சினையில் நான் சிக்கிக் கொள்ளும் போது இது போன்ற அபாயகரமான கட்டங்களில் அவர்கள் பிரச்சினையை எப்படிச் சமாளிப்பார்கள் என்ற் என்னை நானே கேட்டுக் கொள்வேன்.
நீண்ட காலம் வாழ்வது அற்புதமான விஷயம். 60 வயது முடிய ஒருவர் தன் குறிக்கோளை எய்த முயல்வதிலும் தன் குடும்பத்திற்காகப் பணி புரிவதிலும் உழைப்பது சுலபம். ஆனால் பின்னால் உள்ள வருஷங்களில் சமூகத்திற்கு சேவை செய்ய முயல வேண்டும். 65ஆம் வயதிலிருந்து நான் ஒரு தன்னார்வத் தொண்டராக உழைக்கலானேன். வாரத்திற்கு ஏழு நாட்களும் நாள் ஒன்றுக்கு 18 மணி நேரம் உழைக்கிறேன். அதில் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் நேசிக்கிறேன்.”
ஒரு உன்னதமான மனிதரின் உள்ளத்திலிருந்து வரும் அற்புதமான அறிவுரையைத் தான் நாம் மேலே படித்தோம். அதன் படி வாழ்வது நம் கையில் தான் இருக்கிறது.
அப்படி வாழ்ந்தால் நமக்கில்லை இனி குறைவான ஆயுள் எல்லை!
ஹெல்த்கேர் மாத இதழில் ஏப்ரல் 2012 இதழில் வெளிவந்துள்ள கட்டுரை. இந்தக் கட்டுரையை விரும்புவோர் படிக்க விரும்பும் தொடர்புடைய கட்டுரை; வாழும்போதே தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியங்கள்! ஆசிரியரின் மின்னஞ்சல் முகவரி:snagarajans@gmail.com
*******************************

You must be logged in to post a comment.