அதிசய மேதை சுப்பராய சாஸ்திரி! – Part 2

ச.நாகராஜன்
ஜோதிடம் மட்டுமல்லாமல் வானவியல், பௌதிகம், இரசாயனம், உலோகவியல் உள்ளிட்ட ஏராளமான துறைகளில் ரிஷிகள் இயற்றிய நூல்களை அப்படியே ப்ரஹ்ம ஸ்ரீ சுப்பராய சாஸ்திரி கூறியது அனைவரையும் வியக்க வைத்தது. அவர் சுட்டிக் காட்டிய நூல்கள் கணக்கில் அடங்கா. சில நூல்களின் தலைப்பையும் அவற்றில் என்ன அடங்கி உள்ளது என்பதையும் கீழே பார்ப்போம்.
1)அக்ஷர லக்ஷ கணித சாஸ்திரம் :- வால்மீகி முனிவர் அருளியது. இதில் 64 கணித சித்தாந்தங்கள் விளக்கப்படுகின்றன.
2) அனுகரன சப்த சாஸ்திரம் :- கண்டிக ரிஷி அருளியது.எதிரொலிகள் பற்றியும் ஒவ்வொரு சப்தமும் என்ன பிரதிபலிப்பை உருவாக்குகிறது என்பது  பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.
3) ஸ்த்ரீ¢ லக்ஷண சாஸ்திரம் :- சகதாயன ரிஷி அருளியது.உலகில் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளிலும் பெண் பாலை எப்படிக் கண்டுபிடிப்பது?இதை அற்புதமாக விளக்கும் நூல் இது.
4) புருஷலக்ஷண சாஸ்திரம் :- பப்ரு ரிஷி அருளியது. மிருகங்களில் ஆண் பாலை எப்படிக் கண்டுபிடிப்பது. இதை விளக்கும் நூல் இது.
5) கன்யா லக்ஷண சாஸ்திரம்:- பப்ரு ரிஷி அருளியது.ஒரு பெண் கன்னித் தன்மையுடன் இருக்கிறாளா என்பதை எப்படி அறிவது? இதை விளக்கும் நூல் இது.
6)சகுன சாஸ்திரம்:- கர்க மஹரிஷி அருளியது. பறவைகளின் வெவ்வேறு ஒலிகளாலும் அவை பேசுகின்ற பாஷைகளின் மூலமும் மனிதர்களுக்கு நன்மை உண்டாகுமா அல்லது தீமை உண்டாகுமா என்று விளக்கும் சகுன சாஸ்திரம் இது.
7)சில்ப சாஸ்திரம்:- மயன் அருளியது.32 விதங்களாகக் கூறப்படும் தேவ சில்பி,கந்தர்வ சில்பி, யக்ஷ சில்பி, பைசாசிக சில்பி,அசுர சில்பி, மானுஷ சில்பி, முதலிய சில்பிகளை விவரிப்பதோடு  முழு விவரங்களையும் தரும் நூல் இது.
8)சுப சாஸ்திரம்:- சுகேசர் அருளியது.128 விதமான சுவையான சமையல்களைப் பற்றி விவரிக்கும் ருசியான நூல் இது.சுவையான நூல் மட்டுமல்ல இது; செய்முறையைச் சொல்லித் தரும் நூலும் கூட!
9)மாலினி சாஸ்திரம்:- ரிஷ்ய சிருங்க முனி அருளியது.உருமாற்றம், மாயத் தோற்றம், கானல் நீர் மாயைகள் ஆகியவை பற்றி விளக்கும் நூல் இது.
10) ப்ரளய சாஸ்திரம்:- மஹரிஷி வியாஸர் அருளியது.மஹா பிரளயங்கள் நான்கைப் பற்றியும் சிறு பிரளயங்களில் உள்ள 64 வகைகளையும் விளக்கும் நூல் இது.
11) கால சாஸ்திரம்:-ஷண்முகர் அருளியது.ஜோதிடம், வானவியல், பௌதிகம் ஆகிய துறைகளுக்கு ஆதாரமான மனித குலத்திற்கு மிகவும் முக்கியமான நூல் இது.காலம் என்றால் என்ன என்பதை பிரமிக்கத் தக்க விதத்தில் விளக்கும் இது அறுபத்திநான்காயிரம் காலபுருஷர்களின் விவரத்தையும் தருகிறது!
12)மாயா வாத சாஸ்திரம்:-ஆஞ்சனேயர் அருளியது. பெயர் சுட்டிக்காட்டுகின்ற படியே மாயா வாதத்தை விளக்கும் நூல்.
13) தாது வாதம்:- அஸ்வினி தேவர்கள் அருளியது.கனிமங்கள், கூட்டுப் பொருள்களைப் பற்றி விளக்கும் நூல்!அதிலிருந்து என்னென்ன பொருள்களை உருவாக்கலாம் என்பதையும் கூட இது விளக்குகிறது!
14)விஷ வாதம்:- அஸ்வினி தேவர்கள் அருளியது. வெவ்வேறு விதமான விஷங்களைப் பற்றியும் அதில் அடங்கிய விஷத்திற்கான மூலப் பொருளையும் விளக்கும் நூல் இது.செயற்கை விஷம் எது, இயற்கை விஷம் எது என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.
15) காருடம்: வைல ரிஷி அருளியது.இந்திய மாயாஜால நிபுணர்களால் உலகெங்கும் காண்பிக்கப்பட்டு அனைவரையும் வியக்க வைக்கும் 32 விதமான மாயாஜாலங்களை விளக்கும் நூல் இது. எந்த விஷத்தை எப்படி முறிப்பது என்பதையும் கற்றுத் தருகிறது!
16)சித்ர கர்மா:பீமர் அருளியது. வர்ணம் பூசுவது, ஓவியம் வரைவது, போட்டோ எடுப்பது எப்படி என்பதைக் கற்றுத் தரும் நூல் இது.
17)மல்ல சாஸ்திரம்:-மல்லர் அருளியது. மல்யுத்தம் மற்றும் உடல் பயிற்சிகள் பற்றி விளக்கும் நூல் இது.
18)பரதம்:-கணபதி அருளியது. நாட்டியம், அதற்கான இசை, தாளம்,அதற்கான கால நுட்பம் ஆகியவற்றை விளக்கும் நூல் இது.
19)பரகாய ப்ரவேசம்:-வால்கீய ரிஷி அருளியது.இன்னொரு உடலில் எப்படிப் புகுவது என்பதை விளக்கும் நூல் இது!
20)அஸ்வ ஹ்ருதயம்:-சுக்ரீவர் அருளியது. குதிரைகள் பற்றிய அனைத்து நுட்பமான விஷயங்களையும் விளக்கும் அற்புத நூல் இது. (சரஸ்வதி மஹால் நூல்நிலையம் வெளியிட்டுள்ள அஸ்வ சாஸ்திரத்தைப் படிப்பவர்கள் பிரமித்துப் போவார்கள் என்பதை இங்கு நினைவு கூரலாம்.)
21)கஜ ஹ்ருதயம்:- குமாரசுவாமி அருளியது.யானைகள் பற்றிய அனைத்து நுட்பமான விஷயங்களையும் விளக்கும் அற்புத நூல் இது.
22)ரத்ன பரிக்ஷ¡:-வாத்ஸாயன மஹரிஷி அருளியது.நவரத்னங்களை இனம் பிரித்து அறிந்து அவற்றை சோதிக்கும் முறையைக் கூறும் அபூர்வ நூல் இது!
23)இந்த்ரஜாலம்:-வீரபாகு முனிவர் அருளியது.மாயாஜால வித்தைகள், மாஜிக், புதிய பொருள்களை உருவாக்கிக் காட்டல் ஆகியவற்றை விளக்கும் நூல் இது.
24)மஹேந்திரஜாலம்:- வீரபாகு முனிவர் அருளியது ஜல ஸ்தம்பனம், அக்னி ஸ்தம்பனம் உள்ளிட்ட116 விதமான ஸ்தம்பங்கள் இதில் விளக்கப்படுகிறது.
25)அர்த்த சாஸ்திரம்:-மஹரிஷி வியாஸர் அருளியது. தர்ம வழியில் செல்வம் சேர்க்கும் முறையை விளக்கும் நூல் இது. இதே துறையில் இன்னும் 24 சாஸ்திரங்கள் தனியே உள்ளன. அவற்றை முற்றிலுமாக விளக்க இங்கு இடம் இல்லை.ஆகவே அதி நுட்பமான சிலவற்றை மட்டும் இங்கு காண்போம்.
அ) அகஸ்திய மஹரிஷி அருளிய சக்தி தந்திரம்:-மூல பிரகிருதியில் அடங்கியுள்ள 32 விதமான ஆற்றல்கள் அல்லது சக்திகளைப் பற்றி விளக்கும் நூல் இது.
ஆ)மஹரிஷி மதங்கர் அருளிய சௌதாமினி கலா:-அயல் கிரகவாசிகள், வானில் உள்ள வஸ்துக்கள் மற்றும் தேவதைகளை எப்படி போட்டோ எடுப்பது என்பதை விளக்கும் நூல் இது.இன்று நாம் கூறும் எலக்ட்ரானிக்ஸ் நூல் இது!
இ)மஹரிஷி ஆஸ்வாலயனர் அருளிய சுத்த வித்யா கலா:- பிரபஞ்சம் தோன்றியது எப்படி,நம்முடைய பிரபஞ்சம் தவிர வேறு எத்தனை பிரபஞ்சங்கள் உள்ளன, எங்கே உள்ளன, பிரபஞ்சத்தை உருவாக்கியது யார் என்பதை விளக்கும் ஆச்சரியமான நூல்.
உ) மஹரிஷி ஆங்கிரஸ் அருளிய மேகோற்பத்தி ப்ரகரணம்:- 12 விதமான மேகக் கூட்டங்கள், அவை ஒன்பது விதமாக உருவாகும் விதம் உள்ளிட்ட ஏராளமான மேக ரகசியங்களை விளக்கும் அபூர்வ நூல் இது!
ஊ) மஹரிஷி ஆங்கிரஸ் அருளிய காரக ப்ரகரணம்:- சூரிய கிரணங்கள் மேகங்களின் ஊடே செல்லும் போது அண்டஜம், ஸ்வேதஜம்,உத்பிஜம் ஆகிய வித்துக்கள் உருவாகின்றன.நவரத்தினங்கள், சங்கு,முத்து ஆகியவையும் உருவாகின்றன. இவை எப்படி உருவாகின்றன என்பதை விளக்கும் அபூர்வ நூல் இது.
எ)மஹரிஷி பாரத்வாஜர் அருளிய ஆகாச தந்த்ரம்:- ஆகாசத்தில் இல்லாத மர்மங்களே இல்லை.ஏழு விதமான ஆகாயங்கள் மனித குலத்தின் மீது என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை விளக்கும் நூல் இது.
1940ம் ஆண்டு தனது 74ம் வயதில் மறைந்த ப்ரஹ்ம ஸ்ரீ சுப்பராய சாஸ்திரி அவர்களின் மேதைத் தன்மை ஆகாயம் போல விரிந்தது, கடலை விட ஆழமானது. சூரியனை விட பிரகாசமானது, சந்திர ஒளியை விட மனதிற்குக் குளுமை தருவது. பாரத அறிவை முற்றிலும் ஜொலிக்க வைப்பது. சில ஜோதிட நூல்களுக்கு அவர் விளக்கவுரைகளும் எழுதியுள்ளார். அவரைப் பற்றிய நூல்களும் வெளி வரத் தொடங்கி உள்ளன. இந்த மாமேதை அருளிய நூல்கள் அனைத்தையும் படிக்க முயன்று அதில் நமக்கு உகந்த துறையில் நாம் திறமை பெற்று உலக அரங்கில் அதை ஜொலிக்கச் செய்வது ஒன்றே அவருக்கு நாம் செய்யும் சிறந்த கைம்மாறாகும்.

This is written by my brother S Nagarajan.
*****************

Leave a comment

Leave a comment