நட்சத்திர அதிசயங்கள் -Part 2


Written by S Nagarajan

ரிக் வேதத்தில் உள்ள உபமன்யுவின் அஸ்வினி தேவர்களைக் குறித்த துதி :-

வாசகர்களுக்குப் பயன்படும் வகையில் உபமன்யு அஸ்வினி தேவர்களை துதித்த ரகசியமான மறைந்த அர்த்தங்களுடன் கூடிய ரிக் வேதத்தில் உள்ள முழு துதியும் கீழே தரப்படுகிறது:
“நீங்கள் பிரபஞ்ச சிருஷ்டிக்கு முன்னே இருந்தவர்கள்.நீங்களே ஆதியில் பிறந்த ஜீவர்கள்.பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்ட இந்த அதிசயமான பிரபஞ்சத்தை நீங்கள் வியாபித்துக் கொண்டிருக்கிறீர்கள்.கேள்வியினாலும், சிந்தனையினாலும்,எனக்குக் கிடைத்திருக்கும் ஞானத்தில் உதவியினால், நான் உங்களை அடைய விரும்புகிறேன். ஆனால் நீங்களோ ஆதியும் அந்தமும் இல்லாதவர்கள்.இந்தப் பிரபஞ்ச இயற்கையும் அதை வியாபித்திருக்கும் பரமாத்மாவும் மரம் போல விளங்கும் இந்த தேகத்தில், அமர்ந்திருக்கும் அழகான இறகுகளுடன் கூடிய பக்ஷ¢கள் நீங்களே.ஒவ்வொரு ஆத்மாவுக்கும் உள்ள பொதுவான குணங்கள் உங்களுக்கு இல்லை.நீங்கள் ஒப்பற்றவர்கள்.நீங்கள் உலகத்திலுள்ள ஒவ்வொரு ஜீவன்களுடைய ஆத்மாவின் மூலமாய் இந்த உலகத்தை வியாபித்திருக்கிறீர்கள்.

தங்க நிறம் போன்ற கழுகுகள் நீங்களே.உலகத்திலுள்ள வஸ்துக்கள் யாவும் எதை அடைகின்றனவோ, அந்த சத்தும் நீங்களே.

நீங்கள் எந்த வித குற்றமும் இல்லாதவர்கள்.க்ஷ£ணித்தல் என்பது உங்களுக்குக் கிடையாது. நியாய விரோதமாய் ரணப்படுத்தாதனவும், அழகியவையுமான மூக்குகளை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள்.எந்த யுகத்திலும் ஜெயசீலர்கள் காலத்தின் அளவைக் கடந்தவர்கள். சூரியனை சிருஷ்டித்து, பகல் என்ற வெள்ளை நூலினாலும், இரவு என்ற கறுப்பு நூலினாலும், வருஷமாகிற அற்புத வஸ்திரம் உங்களால் நெய்யப்படுகிறது! அவ்விதமான வஸ்திரத்தால், தேவர்களுக்கும்,பிதுர்களுக்கும் உரிய இரண்டு விதமான பிரவர்த்திகளை நீங்கள் ஏற்படுத்தி இருக்கிறீர்கள். அளவிடமுடியாத பரமாத்மாவின் சக்தியைக் குறிக்கும் காலம் என்ற அளவால் பீடிக்கப்பட்டுள்ள, ஜீவாத்மாக்களாகிய பக்ஷ¢களை, நீங்கள் அவைகள் பேரானந்தம் அடையும் பொருட்டு சுயேச்சையாக விடுதலை செய்கிறீர்கள். அஞ்ஞானிகளாக இருப்பவர்கள், இந்திரியங்களுடைய மயக்கங்களுக்கு வசப்பட்டவர்களாய், பந்த சம்பந்தமில்லாமல் பரிசுத்தர்களாக இருக்கும் உங்களை ஏதோ ரூபத்துடன் இருப்பது போல மதிக்கிறார்கள்.

முன்னூற்றறுபது நாள்கள் ஆகிற முன்னூற்றறுபது பசுக்கள் ஒரு வருஷம் என்கிற கன்றை உண்டாக்குகின்றன.எல்லாவற்றையும் சிருஷ்டிப்பதும் அழிப்பதும் அக்கன்று தான். சத்தியமானதை அறிய விரும்புபவர்கள் அநேக வழிகளை அனுசரித்து அக்கன்றினுடைய உதவியால் உண்மை ஞானமாகிற பாலை அடைகிறார்கள்.ஹே! அஸ்வினி தேவர்களே!! அக்கன்றுக்கு சிருஷ்டிகர்த்தாக்கள் நீங்களே!

இரவுகளும் பகல்களும் .ஆகிய எழுநூற்றிருபது ஆரக்கால்கள், அமைந்த சக்கரத்திற்கு, வருஷமானது, ஒரு ஆதாரக்கட்டையாக இருக்கின்றது.பன்னிரண்டு மாதங்களாகிற இந்த சக்கரச்சுழல்களுக்கு முடிவு கிடையாது.இச்சக்கரம் மாய்கைகள் நிறைந்தது.அதற்கு அழிவு கிடையாது.இவ்வுலகத்திலும் மற்றெந்த உலகத்திலும் இருக்கும் எல்லா ஜீவன்களையும் அது பிரிக்கின்றது.ஹே! அஸ்வினி தேவர்களே!! இக்காலச்சக்கரத்தை சுழலச் செய்கிறவர்கள் நீங்களே!
வருஷமாகிற இந்த காலச்சக்கரத்துக்கு ஆறு ருதுக்களாகிய வட்டக் கைகள் ஏற்பட்டிருக்கின்றன.அந்த வட்டக் கைகளில் பொருந்தி இருக்கின்ற பன்னிரண்டு ஆரக்கால்களும் பன்னிரண்டு மாதங்களைக் குறிக்கின்றன.இந்தக் காலச்சக்கரமானது எல்லா கர்மபலன்களைத் தெரிவிக்கிறது.காலத்துக்குக் கர்த்தாவாக இருக்கும் தெய்வங்கள் அச்சக்கரத்தில் உறைகின்றார்கள்.அந்தச் சக்கரத்தின் நிர்ப்பந்தத்துக்குள் கட்டுப்பட்டிருக்கிற என்னை அதிலிருந்து விடுவியுங்கள். ஹே! அஸ்வினி தேவர்களே!! நீங்களே பஞ்ச பூதங்கள் நிறைந்த இந்த பிரபஞ்சமாயிருக்கின்றீர்கள்.இம்மையிலும், மறுமையிலும் அனுபவிக்கப்படும் வஸ்துக்களும் நீங்களே. பஞ்சபூதங்களுக்கு வசப்படாமல் என்னைச் செய்யுங்கள். நீங்கள் பரப்பிரம்ம மூர்த்தியேயாகிலும் இந்திரியங்களால் அடையக் கூடிய, இன்பங்களை அனுபவிக்கும் ரூபங்களை எடுத்துக்கொண்டு , இவ்வுலகத்தில் சஞ்சரிக்கிறீர்கள்.

ஆதியில் இப்பிரபஞ்சத்தினுடைய பத்து திக்குகளையும் சிருஷ்டித்தீர்கள்.பிறகு சூரியனையும் ஆகாயத்தையும் உயர விளங்கும்படி அமைத்தீர்கள்.ரிஷிகளும் சூரியனுடைய மார்க்க முறையை அனுசரித்தே யாகாதிகளை செய்கிறார்கள்.தேவர்களும், மனிதர்களும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் விதிப் பிரகாரம் யாகங்களைச் செய்து அவைகளின் பலன்களை அனுபவிக்கின்றார்கள்.
மூன்று வித வர்ணங்களையும் கலந்து கண்ணுக்குத் தோன்றும் எல்லா வஸ்துக்களையும் நீங்கள் சிருஷ்டித்திருக்கிறீர்கள். அந்த வஸ்துக்களிலிருந்து தான், இந்தப் பிரபஞ்சமானது உற்பவித்திருக்கின்றது.அப்பிரபஞ்சத்தின் மீது தேவர்களும், மனிதர்களும், மற்றெல்லா ஜீவராசிகளும் அவரவர்களுக்கு ஏற்பட்ட கர்மங்களைச் செய்து வருகிறார்கள்.
ஓ! அஸ்வினி தேவர்களே!! நான் உங்களை வணங்குகிறேன். உங்களால் நியமிக்கப்பட்டிருக்கும் இந்த ஆகாயத்தையும் வணங்குகிறேன்.தேவர்களும் கூட தப்ப முடியாத எல்லாக் கர்மங்களுக்கும் பலன்களை நீங்களே விதிக்கின்றவர்களாய் இருக்கிறீர்கள்!ஆனால் உங்களின் செய்கைகளால் ஏற்படும் பலன்கள் உங்களைச் சார்வதில்லை.

நீங்களே எல்லோருக்கும் பெற்றோர்களாயிருக்கின்றீர்கள். நீங்களே ஆணும் பெண்ணுமாக இருந்து பின்னால் ரத்தமாகவும் ஜீவாதாரமான திரவியமாயும் ஆகிற அன்னத்தைப் புசிக்கிறீர்கள். புதிதாய் பிறந்த குழந்தை தாயின் பாலை உண்ணுகிறது. உண்மையில் குழந்தை ரூபமாக இருப்பவர்கள் நீங்களே! ஹே! அஸ்வினி தேவர்களே! என்னுடைய ஜீவனை ரக்ஷ¢ப்பதற்கு ஆதாரமாக உள்ள கண் பார்வையை எனக்கு அனுக்ரஹம் செய்யுங்கள்.”

(இந்தக் கட்டுரை ஸ்ரீ ஜோஸியம் வார இதழில் வெளி வந்தது. இதை விரும்பியோர் ச.நாகராஜன் எழுதிய இதர நட்சத்திரக் கட்டுரைகளையும் படிக்கலாம்.)

****************

Previous Post
Leave a comment

Leave a comment