by ச.நாகராஜன்
ராமாயணம் உருவாகக் காரணமான மஹரிஷி
ஹிந்து வாழ்க்கை முறையில் இதிஹாஸ, புராணங்களுக்கு ஒரு தனி இடம் உண்டு என்றால் அந்த இதிஹாஸ புராணங்களில் நாரத மஹரிஷிக்குத் தனி இடம் ஒன்று உண்டு.
மாபெரும் அறிஞரும் வேத விற்பன்னரும் இசைப் புலவரும் பக்தி சாஸ்திரத்தை நுணுக்கமாக அலசி ஆராய்ந்து விளக்கியவருமான நாரதர் சிறந்த ஜோதிட மேதையும் கூட!
வால்மீகி ராமாயணத்தில் வரும் “தபஸ்ஸ்வாத்யாயநிரதம் தபஸ்வீ வாக்விதாம் வரம் நாரதம் பரிப்ரச்ச வால்மீகிர் முநி புங்கவம்” என்ற சுலோகம் ஒன்றே போதும் நாரதரின் பெருமைப் பற்றிக் கூற! நாரத முனிவர் தவத்திலும் வேதத்திலும் ஆழ்ந்தவர்; வாக்கு வன்மையுள்ளவர், பகவானை தியானம் செய்பவருள் உத்தமர். அவரை தபஸ்வியான வால்மீகி கேட்டார் என்பது மேலே கண்ட சுலோகத்தின் பொருள்.
வால்மீகி தர்ம நாயகனும் பொய்பேசாதவரும் இன்னும் இப்படிப் பல்வேறு நற்குணங்கள் பொருந்தியுள்ள நாயகன் யார் என்று நாரதரைக் கேட்ட போது அவர் ராமரைப் பற்றிக் கூற, ராமாயணம் எழுந்தது. நாரதர் பாண்டவர்களின் உற்ற நண்பரும் கூட! தேவைப்பட்ட போதெல்லாம் அவர்களைச் சந்தித்து அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதலையும் அறிவுரைகளையும் தந்ததை மஹாபாரதத்தில் வியாஸர் வெகுவாக விரித்துரைப்பதைக் காணலாம்.
வேத வியாஸர் மனம் கலங்கி இருந்த போது அவரை பாகவதத்தை இயற்றுமாறு கூறி அவரின் கலக்கத்தைப் போக்கி பாகவதம் எழக் காரண புருஷராக இருந்தவரும் நாரதரே!
திரிலோக சஞ்சாரி
நாரத பாஞ்சராத்ரத்தின் படி நாரதர் பிரம்மாவின் புத்திரர்.இவரைப் பற்றி பதினெட்டு புராணங்களும் ஏராளமான சம்பவங்களை எடுத்துக் கூறுகின்றன. அவரது பல பிறவிகள் பல்வேறு சுவையான செய்திகளைத் தருகின்றன.நாரதர் பிரபஞ்சத்தின் முதல் சுற்றுப் பயணி. திரிலோக சஞ்சாரி என்ற பெயர் கொண்ட அவர் மூன்று லோகங்களுக்கும் தேவைப்பட்ட போதெல்லாம் க்ஷண நேரத்தில் சென்று விடுவார்.
நாரதர் கலகப் பிரியர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இது அவரது பல்முக பரிமாணங்களில் ஒரு சிறிய பரிமாணம் தான். ஆனால் சென்ற நூற்றாண்டில் பிரபலமடைந்த நாடகங்களில் ஹாஸ்ய ரசம் தேவைப்பட்டதால் இரவு முழுவதும் நடந்த நாடகத்தில் அவ்வப்பொழுது நாரதர் தோன்றி சிரிக்க வைத்து மக்களை ‘விழிப்புடன்’ இருக்குமாறு செய்வது வழக்கமாகிப் போனது. அதனால் தேவரிஷியான மிகப் பெரிய மஹரிஷியின் ஒரு சிறிய அம்சத்தையே நாம் வெகுவாக ரசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டு விட்டோம்!
நாரதரின் கலகம் நன்மையில் முடியும். ஒரே ஒரு பிரச்சினையை எழுப்பி அதன் மூலம் அவர் பல பெரிய விஷயங்களுக்குத் தீர்வு காண்பதை ஏராளமான கதைகள் விளக்குவதை நாம் அறிவோம்.
ஜோதிடத்தின் மூலகர்த்தா
தேவரிஷியான நாரதரைப் பற்றி மட்டுமே உள்ள புராணம் நாரத புராணம். அதில் வேதத்தின் ஆறு அங்கங்களும் விரிவாக எடுத்துரைக்கப்படுகின்றன. ஜோதிடத்தை எப்படி அன்றாட வாழ்க்கையில் உபயோகப்படுத்துவது என்பதைத் தெளிவாக நாரத புராணம் எடுத்துரைக்கிறது. இதில் சிக்ஷ¡ பகுதி வேத சம்ஹிதைகளை நன்கு விளக்குகிறது. எப்படி வேதத்தை உச்சரிப்பது என்பதை அற்புதமாக விளக்கும் போது நன்கு உச்சரிக்கப்படும் மந்திரங்களே பலன் அளிக்கும் என்பதைத் தெளிவாக நாம் உணர முடிகிறது.
ஒரு கீதத்தின் பத்துக் குணங்களையும் இந்த புராணமே நன்கு விளக்குகிறது. இசைக் கருவிகளில் வீணையையும் வேணுவையும் இந்தப் புராணம் விளக்குவது போல வேறு எந்த நூலும் விளக்கவில்லை!
பிரம்மா ஜோதிடத்தைப் பற்றி நான்கு லட்சம் சுலோகங்களில் விளக்கியுள்ளார்! இதன் சுருக்கத்தை நாரதர் விளக்கியுள்ளார். இந்த ஜோதிடப் பகுதி வானவியல், ஜாதகம் பார்த்தல். ஜோதிட சாஸ்திரம் என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு விளக்கப்படுகிறது. வானவியல் பகுதியில் கிரகணம், நிழல்கள், கிரக சேர்க்கைகள். கணித மூலங்கள் போன்றவையும் ஜாதகப் பிரிவில் ராசிகள் பிரிக்கப்பட்ட விதமும் அதன் அடிப்படைக் கருத்துக்களும் கிரக சேர்க்கைகளும் விளக்கப்படுகின்றன. சூர்ய சித்தாந்த கருத்துக்களை இங்கு காணலாம்.வராஹமிஹிரரின் பிருஹத் சம்ஹிதாவில் உள்ள பல கருத்துக்கள் இங்கு உள்ளன. நாரத சம்ஹிதையில் உள்ள பல சுலோகங்கள் அப்படியே ப்ருஹத் சம்ஹிதாவிலும் இருப்பது வியப்பூட்டும் ஒரு விஷயம்! நாரத புராணத்தில் நவீன விஞ்ஞானத்தின் பல இயல்களைப் பார்த்து வியக்கலாம்! ஒரு முக்கியமான விஷயம், ஜோதிடம் உள்ளிட்ட அனைத்துக் கலைகளிலும் நாரதரின் பார்வை தனிப்பார்வையாக உள்ளது!
த்ரி ஸ்கந்த ஜோதிஷம்
‘ஜோதிஷம் சூர்யாதி க்ரஹணம் போதகம் சாஸ்த்ரம்’ என்பது ஜோதிடம் என்றால் என்ன என்பதை விளக்குகிறது.
கிரஹ சஞ்சாரங்களைத் துல்லியமாக நிர்ணயிக்க உதவும் கணக்குகளும் அதையொட்டி நல்ல காரியங்களை நல்ல நேரங்களில் ஆரம்பித்து நற்பயன் காண்பதையும் நாரத சம்ஹிதா, ஸ்கந்த த்ரியா என்று மூன்று பகுதிகளாக விளக்குகிறது! த்ரிஸ்கந்த ஜோதிஷம் என்ற பெயரில் இன்று பிரபலமாக இது விளங்குகிறது.
பின்னால் இது விரிந்து சித்தாந்தம், ஹோரா (பராசரர்,ஜைமினி, யவனர் முறைகள்), வாஸ்து சாஸ்திரம் முஹ¥ர்த்தம் உள்ளிட்ட சம்ஹிதா, ப்ரஸ்னம் பார்த்தல், சகுனம் பார்த்தல் என ஐந்தாக விரிவடைந்தது.பிரம்மாவிடமிருந்து நாரதர் ஜோதிடத்தைக் கற்று அதை சௌனகாதி முனிவர்களுக்கு உபதேசித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.
நாரதரின் இசை
நாரதரைப் பற்றிய சுவையான ஒரு குட்டிக் கதையைப் பார்ப்போம்: தானே சிறந்த விஷ்ணு பக்தர் என்றும் இசைக் கலைஞர் என்றும் கர்வம் கொண்ட நாரதர், ஒரு முறை ஒரு நந்தவனத்தின் பக்கம் செல்கையில் பல பெண்கள் புலம்பி அழுவதைக் கேட்டார். யார் அவர்கள் என்று பார்த்த போது அவர் திகைத்துப் போனார். தேவதை போன்ற அழகிய முகங்கள் கொண்ட அவர்களில் சிலருக்கு கைகள் இல்லை; சிலருக்குக் கால்கள் இல்லை; சிலரோ சிதைந்த உருவத்தோடு இருந்தனர். சிலர் குள்ளமாக ஆகி இருந்தனர். இதைப் பார்த்துத் திகைத்த நாரதர் அவர்களை நோக்கி அதன் காரணத்தைக் கேட்டார். அதற்கு அவர்கள். “நாங்கள் ராக தேவதைகள். இன்று வைகுந்தத்தில் நாரதர் என்ற ஒருவர் அபத்தமாக இசையை இசைக்கவே நாங்கள் உருக்குலைந்து சீர் குலைந்து இப்படி ஆகி விட்டோம்” என்று பரிதாபமாகத் தங்கள் நிலையைக் கூறினர். நாரதரது கர்வம் ஒழிந்தது. அவர் தான் யார் என்பதை ஒப்புக் கொண்டு, இப்போது நான் ஹனுமானிடம் உண்மையான இசை என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காகப் போகிறேன்” என்றாராம். ஹனுமான் அவருக்கு உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரும் பக்தி இசையைப் பாடிக் கற்றுத் தந்தாராம்.
இப்படிப் பட்ட அனுபவங்களைக் கொண்ட நாரதர் ஜோதிடத்தை எவ்வளவு நுணுக்கமாகச் சொல்லி இருப்பார் என்பதை ஊகித்துத் தெரிந்து கொள்ளலாம்.
நாரதரின் வழிபாட்டு நூல்
108 பாஞ்சராத்ர நூல்களில் நாரத பாஞ்சராத்ரம் பிரபலமானது. இது கோவிலில் நடைபெறும் வழிபாடுகளைப் பற்றியும் சுத்திகள் பற்றியும், தேவதா பிரதிஷ்டை போன்றவற்றையும் பற்றி விளக்குகிறது. இவற்றின் அடிப்படையாக ஜோதிடம் இலங்குகிறது! நாடக வாயிலாகவும் நமது திரைப்படங்கள் வாயிலாகவும் நாம் பார்க்கும் நாரதர் வேறு; ஜோதிடம்,பக்தி, நாட்டியம், பூஜை முறைகள் இவற்றை உபதேசித்து உரைக்கும் மகத்தான ஞானமுடைய மஹரிஷி நாரதர் வேறு!
நல்ல பக்தராக வேண்டுமா, நல்ல ஜோதிடராக வேண்டுமா, நல்ல நாட்டியக் கலைஞராக வேண்டுமா..?
நாட வேண்டிய மஹரிஷி நாரதரே!
*******************


You must be logged in to post a comment.