
Picture of King and Queen (Raja and Raja patni)
சம்ஸ்கிருதச் செல்வம்– 7
தாயார், தந்தையர் யார் யார்?
ச.நாகராஜன்
பெற்றால் தான் தாயா என்ன? யார் யார் தாய்க்குச் சமானம் என்று கவிஞர் தெளிவாகக் கூறுகிறார் இப்படி:-
ராஜபத்னி – அரசனின் மனைவி
குரு பத்னி – குருவின் மனைவி
ப்ராத்ரு பத்னி – (மூத்த) சகோதரனின் மனைவி
பத்னி மாதா – தனது மனைவியின் தாயார்
ஸ்வ மாதா – பெற்றெடுத்த தாயார்
ஆகிய இந்த ஐவரும் பெற்ற தாயாருக்குச் சமம்.
பாடலைப் பார்ப்போம்:
ராஜபத்னி குரோ: பத்னி ப்ராத்ரு பத்னி ததைவ ச I
பத்னிமாதா ஸ்வமாதா ச பஞ்சைதா மாதர: ஸ்ம்ருதா: II
சுபாஷித ரத்னாகர பாண்டாகாரம் என்ற சுபாஷித தொகுப்பு நூலில் இந்தப் பாடல் உள்ளது.
சரி, தந்தையர் பற்றியும் ஒரு கவிஞர் தெளிவாகக் கூறுகிறார் இப்படி:-
ஜனிதா – பெற்ற தந்தை
உபநீதா – மந்திரங்களை உபதேசிப்பவர்
வித்யா தாதா – வித்தையைக் கற்றுக் கொடுப்பவர்
அன்ன தாதா – அன்னம் அளிப்பவர்
பய த்ராதா – பயத்தைப் போக்குபவர்
ஆகிய இந்த ஐவருமே ஒருவருக்குத் தந்தைக்குச் சமானம்.
பாடலைப் பார்ப்போம்:

Picture of Ramakrishna and Sarada Devi (Guru and Guru Patni)
ஜனிதா சோபநீதா ச யஸ்ச வித்யா ப்ரயச்சதி I
அன்னதாதா பயத்ராதா பஞ்சைதே பிதர: ஸ்ம்ருதா: II
நினைவில் இருத்திக் கொள்ள வேண்டிய கருத்தல்லவா இது!

Picture of Mahatma Gandhi and Kasturbai Gandhi
*********
சம்ஸ்கிருதச் செல்வம்- 6
சிதையும் சிந்தையும்!
By ச.நாகராஜன்
சிதையையும் சிந்தையையும் பற்றிச் சிந்தித்தார் கவிஞர் ஒருவர்.
அற்புதமான ஒற்றுமை அவருக்குத் தோன்றியது. பாடலாக வடித்து விட்டார்.
சிதை என்பது இறந்த உடலை வைத்துத் தீ மூட்டும் இறுதி யாத்திரையின் இருப்பிடம்.
சிந்தை என்பதோ ஒரு காரியத்தைப் பற்றித் தீவிரமாக எண்ணுவது.
இரண்டு எழுத்துக்களுக்கும் ஒரு சின்ன வித்தியாசம் தான்!
ஒரு அனுஸ்வரம் அதாவது ஒரு ‘ந்’ இடையில் வருகிறது.
சிதா சிந்தா சமா ஹ்ருத்கா பிந்து மாத்ரம் விசேஷத: I
சஜீவம் தஹதே சிந்தா நிர்ஜீவம் தஹதே சிதா II
சிதா சிந்தா சமா ஹ்ருத்கா பிந்து மாத்ரம் விசேஷத: – சிதை, சிந்தை இரண்டு எழுத்துக்களுக்கும் உள்ள ஒரு வித்தியாசம் ஒரு பிந்து (ந் என்ற புள்ளி தான்!)
நிர்ஜீவம் தஹதே சிதா – உயிர் போனவுடன் சிதை எரிக்கிறது
சஜீவம் தஹதே சிந்தா – உயிருடன் இருக்கும் போதே எரிக்கிறது சிந்தை!
எப்படிப்பட்ட கவலையில் இருந்திருந்தால் இந்தப் பாடல் எழுதப்பட்டிருக்கும்!
ஆனால் எப்போதுமே மனித சிந்தை கவலைக்கு இருப்பிடமாகத்தானே இருக்கிறது. ஆகவே ஒரு புள்ளி மாத்திரமே வித்தியாசமாக இருந்தால் கூட சிதையும் சிந்தையும் ஒரே வேலையைத் தான் செய்கிறது.
கவிஞரின் கருத்து பெரும்பாலும் உலகத்தில் சரியாகத் தானே இருக்கிறது!
******