ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

peaceRainbow

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
“ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்
உலகின்பக் கேணி என்றே—மிக
நன்று பல் வேதம் வரைந்த கை பாரத
நாயகி தன் திருக் கை” —தேசிய கவி சுப்ரமண்ய பாரதி—

இந்து மதத்தில் வேத மந்திரங்கள் அனைத்தும் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தில் துவங்கி ஓம் சாந்தி என்ற வாழ்த்துடன் முடிவடையும். அந்த ஓம் சாந்தி என்ற சொல்லையும் மூன்று தடவை சொல்லி நிறைவு செய்வார்கள். அது மட்டுமின்றி “ லோகாஸ் ஸமஸ்தோ சுகினோ பவந்து” என்ற மந்திரத்தையும் சொல்லி முடிப்பார்கள். உலகெங்கும் மக்கள் பேரின்பத்தோடு வாழ வேண்டும் என்பதே அவர்களின் பிரார்த்தனை. சில மந்திரங்கள் இன்னும் குறிப்பாக இரண்டு கால் பிராணிகள், நாலு கால் பிராணிகள் அனைத்தும் நலமோடு வாழவேண்டும் என்றும் கூறும்.

உலகையே இன்பக் கேணியாக மாற்றும் வேதம் ஏன் இப்படி உலக அமைதிக்காக பிரார்த்திக்கிறது? அதுவும் மூன்று முறை சாந்திக்காக ஏன் பிரார்த்திக்கிறோம்? இதன் தாத்பர்யம் (கருத்து) என்ன?
எந்த மனிதனும் முதலில் தனக்கு அமைதி இருந்தால்தான் குடும்பத்தில் அமைதியை உண்டாக்கமுடியும். குடும்பத்தில் அமைதி இருந்தால்தான் நாட்டிலும் உலகிலும் அமைதியை உண்டாக்கமுடியும். மூன்று முறை சாந்தி (அமைதி) சொல்லுவது தனக்கும், குடும்பத்திற்கும் உலகிற்கும் அமைதி உண்டாகவேண்டும் என்று பிரார்த்திப்பதாகும்.

ஒரே மனிதனிலும் மனோ, வாக், காயம் (உள்ளம், சொல், உடல்) மூன்றும் அமைதியாக இருக்கவும் ஓம் சாந்தி, ஓம் சாந்தி ஓம் சாந்தி என்று சொல்லுவது அவசியமாகும்.

ஒரு மனிதன் நிம்மதியாக வாழ அவனது சுற்றுப் புறம் அமைதியாக இருக்கவேண்டும். அவனது குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும். இந்தக் கருத்து எல்லாம் வேத காலத்திலேயே இருந்ததைப் பார்க்கையில் அவர்களது அறிவு முதிர்ச்சி எந்த அளவுக்கு உயர்ந்திருந்தது என்பது தெரிகிறது.
ஏன் மூன்று முறை சொல்லுகிறார்கள்? இந்துக்கள் எதையும் உறுதி செய்ய மூன்று முறை செய்வது வழக்கம். கோவிலைச் சுற்றுவதில் இருந்து கோர்ட்டில் பெயர் சொல்லி அழைப்பது வரை எல்லாம் மூன்று முறை செய்கின்றனர். ஏலம் போடுவோர் கூட மூன்று முறை அழைத்துவிட்டு ஏலம் போடும் பொருளைக் கேட்டவருக்கே கொடுத்துவிடுவர்.

வேதத்தின் பல பகுதிகளில் சாந்தி பற்றிப் பேசினாலும் அதர்வ வேதத்தில் 19-ஆவது காண்டத்தில் இருக்கும் சாந்தி மந்திரம்தான் மிகவும் புகழ் பெற்றது. அதில் சில பகுதிகளை மட்டும் காண்போம்:

international day of peace 2012

வானம் (நமக்கு) அமைதி வழங்கட்டும்
பூமி அமைதி வழங்கட்டும்
காற்றுமண்டலம் அமைதி வழங்கட்டும்
கடல் அலைகள் அமைதி வழங்கட்டும்
மூலிகைகள் அமைதி வழங்கட்டும்
கடந்தகாலமும் எதிர்காலமும் அமைதி வழங்கட்டும்
எல்லாப் பொருட்களும் அமைதி வழங்கட்டும்.
இதற்குப் பின், எல்லா கடவுளரும், வான மண்டலத்தில் வலம் வரும் எல்லா கிரகங்களும் நட்சத்திரங்களும் அமைதி நல்க பிரார்த்திக்கப்படுகிறது.
பூமி நமக்கு அமைதியை நல்கும்
காற்றுமண்டலமும் வானமும் நமக்கு அமைதியை நல்கும்
தண்ணீர் நமக்கு அமைதியை நல்கும்
தாவரங்கள் நமக்கு அமைதியை நல்கும்
எல்லாக் கடவுளரும் நமக்கு அமைதியை நல்கும்
எங்கும் அமைதி நிலவட்டும்
பிரபஞ்சம் முழுதும் அமைதி நிலவட்டும்
நலங்கள் பெருகட்டும்.

இப்படிப் பல பிராத்தனைகள் வருகின்றன. யஜூர் வேதத்திலும் த்யௌ சாந்தி: அந்தரிகஷம் சாந்தி:– என்ற மந்திரம் இதே பொருளைக் குறிக்கும்.

அந்தக் காலத்தில் இப்படி மந்திரம் சொல்லும் பார்ப்பனர்களுக்கு மன்னர்கள் பொன்னையும் பொருளையும் நிலத்தையும் கொடுத்து உதவினார்கள். ஆக்கபூர்வமான எண்ணங்களைப் பரப்ப அவர்களுக்கு இப்படி வாரி வழங்கப்பட்டது. உலகம் முழுதும் நலமுடன் வாழ அவர்கள் அல்லும் பகலும் பிரார்த்தித்தனர். எல்லோரும் இப்படி செய்யமுடியாதென்பதால் அவர்களுக்கு சமுதாயத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.

why no peace

எப்போதும் ஆக்கபூர்வமான சொற்களைக் கேட்பதும் சொல்லுவதும் ஒருவருடைய நம்பிக்கையைப் பலமுறை பெருக்குகிறது. கஷ்ட காலங்களில் எதையும் தாங்கும் இதயத்தைக் கொடுக்கிறது. மனநோய் அருகில் வராமல் காக்கிறது. மோட்டார் வாஹனங்களில் உள்ள ‘ஷாக் அப்சார்பர்’ போல செயல்படுகிறது. எந்நிலையிலும் சம நிலை தவறாமல் வாழ்க்கை என்னும் வண்டி ஓட வகை செய்கிறது.
இந்துக்கள் எல்லா பூஜைகள், விழாக்கள், பண்டிகைகள், யாக யக்ஞங்கள் ஆகியவற்றை முடிக்கும்போது ‘காலே வர்ஷது பர்ஜன்ய:’ என்ற ஸ்லோகத்தையும், “ஸ்வஸ்தி ப்ரஜாப்ய பரிபாலயந்தாம்” என்ற ஸ்லோகத்தையும், சொல்லி நிறைவு செய்வர். வீழ்க தண்புனல், வேந்தனும் ஓங்குக,ஆழ்க தீயது எல்லாம், வையகமும் துயர் தீர்கவே என்பது இதன் பொருள்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Contact swami_48@yahoo.com
Pictures are used from other websites;thanks.

Leave a comment

Leave a comment