(Post No.726 dated 29th November 2013)
உங்களை எல்லோரும் தொழ வேண்டுமா?
ராம பிரான், கண்ண பிரான் போல நீங்களும் தெய்வமாகலாம் என்று வள்ளுவர் கூறுகிறார். அது மட்டுமா? எல்லோரும் உங்களை கை கூப்பித் தொழவும் வழி சொல்கிறார். நீங்கள் கடவுள் ஆக இது ஒரு சுருக்கு வழிப் பாதை! வள்ளுவர் காட்டும் பாதை. ‘சொல்லுதல் யார்க்கும் எளிது. அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்’!! இருந்தாலும் முயன்று பார்க்கலாமே!
1.வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும் ( குறள் 50)
யார் ஒருவன் இந்த பூவுலகில் முறையாக வாழ்கிறானோ அவன், வானத்தில் உறையும் தெய்வங்களில் ஒருவராகக் கருதப்படுவான். இதனால்தான் நாம் ராமன், கண்ணன் போன்ற மன்னர்களையும் அவதார புரிஷர்களாக வழிபடுகிறோம். வள்ளுவனின் அழகான சொற்களைக் கவனிக்கவும்.: “வான் உறையும் தெய்வம்”.
2.கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும் (260)
நீங்கள் வெஜிட்டேரியனாக இருந்து எந்த வகை உயிருக்கும் மனதாலும் தீங்கு செய்யாதவராக இருந்தால் உங்களை எந்த மிருகமும் தீண்டாது. இது விஞ்ஞானிகளும் ஓரளவுக்கு ஒப்புக்கொள்ளக்கூடிய விஷயமே. நாம் பயந்தவுடன் ‘அட்ரினலின்’ என்னும் ஹார்மோன் அதிக அளவில் சுரக்கிறது. மிருகங்களுக்கு மோப்ப சக்தி அதிகம். நாய்களுக்கு மனிதனைவிட 3000 மடங்கு மோப்ப சக்தி உண்டு. காட்டில் வாழும் மிருகங்களும் நாம் பயந்தவுடன் எங்கே தாக்கிவிடுவோமோ என்று அவைகள் நம்மைத் தாக்கும். நமது அட்ரினலினை அவை முகர்ந்து விடும்! சங்கரர், புத்தர் போன்ற ஞானிகளுக்கு மிருகங்களும் கீழ்ப்படிவதை கதைகளில் படித்திருக்கிறோம். பாம்பானாலும் நாம் தீங்கு செய்ய நினைத்தால்தான் நம்மைத் தாக்கும். வள்ளுவனின் அழகான சொற்களைக் கவனிக்கவும்.: “கை கூப்பித் தொழும்”. நம்மைப் பார்த்து நமஸ்தே சொல்லுமாம்!
3.தன்னுயிர் தான் அறப்பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும் ( குறள் 268)
சங்கராச்சார்யார் போன்றோர் சந்யாசம் வாங்கும் நாளன்று தண்ணீரில் நின்றுகொண்டு ஒரு சத்திய வாக்குப் பிரமாணம் செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். “இந்த நாள் முதல் மனம், மொழி, மெய் ( மனோ, வாக், காயம்) மூன்றாலும் எந்த உயிருக்கும் தீங்கிழைக்க மாட்டேன். எல்லோரும் சமம்” என்ற மந்திரத்தை முழங்குவார்களாம். ஆகையாலதான் அவர்களை கொடிய மிருகங்களும் விஷ ஜந்துக்களும் தாக்குவதில்லை. வள்ளுவர் ஒரு படி மேலே போய் அவர்களை உலக உயிரினங்கள் எல்லாம் தொழும் என்கிறார்.
கண்ணபிரானும் கீதையில் (5-18) “ஞானிகள் சமதர்சனம் உடையவர்கள். பிராமணன், பசு, யானை, நாய், நாயைத் தின்னும் புலையன் ஆகிய அனைவரையும் ‘ஒன்றாகக் காண்பதே காட்சி’ என்பது அவர்கள் கொள்கை” என்கிறான்.
4.முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப்படும் (388)
பழங்காலத்தில் சத்திய நெறி தவறாது ஆண்ட மன்னர்களையும் கடவுளாகவே மதித்தார்கள். திருவிளையாடல் புராணக் கதைகளைப் படிப்போருக்கு மன்னர்கள் செய்த அற்புதங்களின் பட்டியல் கிடைக்கும். காளிதாசனின் ரகுவம்ச காவியத்தைப் படிப்போருக்கு சூரியகுல வேந்தர்களின் அவதார மகிமை புரியும். தமிழில் மன்னருக்கும் கடவுளுக்கும் ஒரே சொல்தான். அரண்மனைக்கும் கடவுள் உறைவிடத்துக்கும் கோவில் என்றே பெயர்.
5.செவியுணவிற் கேள்வியுடையார் அவியுணவின்
ஆன்றாரோடொப்பர் நிலத்து (413)
சத் சங்கத்தில் இருப்போர், அதாவது ஆழ்வார்கள், நாயன்மார்கள், அடியார்கள் எல்லாம் தேவர்களுக்குச் சமம்.
6.ஐய படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல் (702)
பிறர் மனதில் உள்ளதைக் கூறவல்லவர்களும் தெய்வம் போன்றவர்கள் என்கிறான் வள்ளுவன். சுவாமி விவேகாநந்தர், காஞ்சி பரமாச்சார்ய சுவாமிகள், சத்திய சாய் பாபா போன்றோர் இவ்வாறு Thought Reading சக்தி உடையோர்.
7.உள்ளத்தால் பொய்யாதொழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன் (294)
பாரதியும் கூட வள்ளுவரை அடியொற்றி “உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும், பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடர் எல்லாம் விழிபெற்றுப் பதவி கொள்வார்” என்கிறார். யார் ஒருவனுடைய சொல், செயல், சிந்தனை எல்லாம் ஒன்றாக இருக்கிறதோ, அதுவும் நல்ல சிந்தனையாக இருக்கிறதோ அவன் சொற்களை உலகமே கேட்கும். பாரத நாட்டில் தோன்றிய ஆயிரக்கணக்கான சாது சந்யாசிகளும் மகா புருஷர்களும் இந்த வரிசையில் இடம்பெறுவர்.
உ.ம். ராமன், அரிச்சந்திரன்,
ஏழே திருக்குறட் பாக்களில் யார் தெய்வ நிலையை அடைந்தவர்கள், எப்படி தெய்வத் தன்மையை அடைய முடியும் என்பதை வள்ளுவன் எளிதில் சொல்லிவிட்டான்.
Contact swami_48@yahoo.com


You must be logged in to post a comment.