பாட்டன்,பூட்டன்,ஓட்டன் = பாட்டி, பூட்டி, ஓட்டி: தேவாரம் தரும் அதிசய தகவல்

கட்டுரையாளர்; லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண். 910 தேதி 16 மார்ச் 2014

Nehru_family
Motil,Jawaharlal Nehru and Indira Gandhi

அப்பர் தேவாரத்தில் பல அதிசயச் செய்திகள் உள்ளன. அப்பர் என்னும் திருநாவுக்கரசர் (வாகீசர்) பாடிய 4900 பாடல்களும் தேவாரத்தில் 4,5,6 ஆம் திருமுறைகளில் அடுக்கி வைக்கப் பட்டுள்ளன. இவர் பயன் படுத்தும் உவமைகளும் பழமொழிகளும் தமிழ் மொழியின் தனிப்பெரும் தன்மைக்குச் சான்று பகர்கின்றன. ‘’உவமோ காளிதாச:’’ = உவமைக்குக் காளிதாசன்- என்று வடமொழியில் ஒரு பொன் மொழி உண்டு. தமிழில் அவருக்கு இணையாக ஒப்பிட ஒருவர் உண்டு என்றால் அது அப்பர் பெருமானே என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமே இல்லை!

(உலகப் புகழ்பெற்ற கவிஞன் காளிதாசன் தான் உலகிலேயே அதிகமான உவமைகளைப் பயன்படுத்தியவன். ஏழே நூல்களில் ஆயிரத்துக்கும் மேலான அற்புதமான உவமைகளைப் பயன்படுத்தினான். ஒவ்வொன்றும் ஒரு ரத்தினக் கல்லுக்குச் சமம். மஹாபாரதம் ராமாயணம் ஆகியவற்றில் எண்ணிக்கையில் இதைவிடக் கூடுதல் உவமைகள் உண்டு. ஆனால் அவைகள், காளிதாசன் தரத்துக்கு இல்லை. ஏனெனில் அவர்கள் சொல்ல வந்த விஷயமே வேறு.)

காளிதாசனுக்கு இணையான ‘’உவமை மன்னன்’’ தமிழில் அப்பர் பெருமானே. அதனால்தான் அவர் வாகீசர் ( சொல்லுக்கு அரசன்) என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார் போலும்!

இதோ தமிழுக்கு வளம் சேர்க்கும் ஒரு பாடல்:

சந்தணி கொங்கையாளோர் பங்கினார் சாமவேதர்
எந்தையும் எந்தை தந்தை தந்தையும் ஆய ஈசர்
அந்தியோடு உதயம் அந்தணாளர் நெய்யால் வேட்கும்
வெந்தழல் உருவர் வீழிமிழலையுள் விகிர்தனாரே (4-625)

பொருள்: சந்தனம் பூசிய கொங்கைகள் உடைய உமா தேவியை இடப்பக்கம் வைத்திருப்பவர சிவ பெருமான்,. சாமவேதம் இசைப்பவர். எங்கள் பாட்டன் பூட்டன் ஓட்டன் (கால) உறவால் திகழ்பவர் என் ஈசன் காலையிலும் மாலையிலும் அந்தணர்கள் நெய் ஊற்றி ஹோமம் செய்யும் தீயாகத் தோன்றுபவர்.அவரே திருவீழிமிழலை கோவிலிலும் குடிகொண்டுள்ளார்.

grand-children-

எந்தை தந்தை=பாட்டன் ,தாத்தா (பாட்டி)
தந்தை தந்தை= பூட்டன் (பூட்டி)
அவனுக்குத் தந்தை= ஓட்டன் (ஓட்டி)

‘’ஓட்டிக்கு மேல் உறவில்லை’’ என்று நாங்குநேரிப் பக்கத்தில் ஒரு பழமொழி வழக்கத்தில் உள்ளது. தேவார உரையில் தருமபுர ஆதீனப் புலவர் வித்துவான் திரு முத்து சு. மாணிக்கவாசக முதலியார் பாட்டி,பூட்டி,ஓட்டி பற்றிய இந்த அரிய செய்தியை நமக்குத் தந்துள்ளார்.

பிராமணர்கள் உறவுமுறை

பிராமணர்கள் ஆண்டுக்கு குறைந்தது 96 முறை தர்ப்பணம் செய்யவேண்டும். அதாவது இறந்தோருக்கு நீர்க்கடன் செலுத்தல் வேண்டும். அப்போது இறந்து போன மூன்று தலைமுறைகளை நினைவு கூர்ந்து எள்ளும் நீரும் இரைப்பர் (தெளிப்பர்). அதைப்போல அப்பர் பெருமான் கூறுகிறார். அவர் பாட்டின் நயத்துக்காகக் கூறும் ‘’எந்தையும் எந்தை தந்தை தந்தையும்’’ என்பதன் பொருள் பாட்டன், பூட்டன், ஓட்டன் என்பதே. இதற்கு இணையான பெண்பால் சொற்களை (பாட்டி, பூட்டி, ஓட்டி) நாம் அறவே மறந்துவிட்டோம்.

பித்ரு வர்கம்

1.பிதா = தந்தை
2.பிதாமஹர்= தந்தைக்கு தந்தை (தாத்தா)
3.ப்ரபிதாமஹர்= கொள்ளுத் தாத்தா
4.மாதா தாய்
5.பிதா மஹி= பாட்டி
6.ப்ரபிதா மஹி=கொள்ளுப் பாட்டி

மாதாமஹ வர்கம் (தாய் வழி உறவினர்கள்)
7.மாதாமஹர்= தாயின் தந்தை (தாத்தா)
8.மாது: பிதாமஹர்= தாயின் தந்தைக்கு தந்தை
9.மாது: ப்ரபிதாதாமஹர் = தாயின் தந்தைக்கு தந்தைக்கு தந்தை
10.மாதாமஹி (தாய்வழிப்பாட்டி)
11.மாது: பிதாமஹி= தாயின் தந்தைக்கு தந்தையின் மனைவி
12. மாது: ப்ரபிதாதாமஹி= தாய் பாட்டனாருக்குப் பாட்டி

இந்த 12 பேரும் இறந்திருந்தால் குறைந்தது, அமாவாசை, மாதப் பிறப்பு காலங்களில் எள் நீர் வார்ப்பது வழக்கம். இந்த அதிசயமான முறை உலகில் வேறு எந்த சமுதாயத்திலும் இருப்பதாக யாம் அறியோம்.
இப்போதெல்லாம் வெளிநாடுகளில் ஒருவரின் குலம், கோத்திரம், அவர்கள் யார் சந்ததியில் உதித்தனர், ‘’வேர் மூலம்’’ எங்கே என்பதை ஆராய்வது பெரிய ‘’பேஷன்’’ ஆகிவிட்டது. இந்தத் துறையில் புதிய ‘’பிஸினஸ்’’களும் பெருகி வருகின்றன. உங்கள் தாத்தாவுக்கு தாத்தாவுக்குத் தாத்தாத்தாவுக்குத் தாத்தாவுக்கு……………. கண்டுபிடித்துத் தந்துவிடுவார்கள். எல்லாவற்றுகும் துட்டு!!!

thatha peran

நம் ஊர் ஆட்களைவிட 10,15 தலைமுறை ரிகார்டுகளைப் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். இந்த ஊரின் பருவநிலையும் இதற்கு மிகவும் அணுசரணையானது.

swami_48@yahoo.com

Leave a comment

Leave a comment